Published:Updated:

"மாடு பிடிச்சா பரிசு... பிடிக்கலைன்னா பொங்கல் வாழ்த்து!"

கலகலப்பு விறுவிறுப்பு ஜல்லிக்கட்டு...

"மாடு பிடிச்சா பரிசு... பிடிக்கலைன்னா பொங்கல் வாழ்த்து!"

கலகலப்பு விறுவிறுப்பு ஜல்லிக்கட்டு...

Published:Updated:

'ஜல்லிக்கட்டு ஆரம்பமாக இருப்பதால், மாடுபிடி வீரர்கள் எங்கு இருந்தாலும் உடனே களத்தில் இறங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'- அறிவிப்பு வெளியானது தான் தாமதம், சீருடை அணிந்த வீரர்கள் கைகளை ஆட்டியபடி களம் இறங்க, பார்வை யாளர் மாடத்தில் இருந்து விசில் சத்தம் காதைப் பிளந்தது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு களை கட்டத் தொடங்கியது.

"மாடு பிடிச்சா பரிசு... பிடிக்கலைன்னா பொங்கல் வாழ்த்து!"
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''யப்பா முதல்ல கோயில் மாட்டை அவுத்து விடுவோம்ப்பா. அடுத்து நாட்டாமையோட மாடு. யாரும் மாட்டைப் பிடிக்கக் கூடாது. பிடிக்காதே... பிடிக்காதே...' என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே, மாட்டைப் பிடித்தார் கள் ரெண்டு பேர். ''ஏண்டா பிடிக்கக் கூடாதுனா கேட்க மாட்டீங்களா?'' என்ற மைக் வசவுகளையும் காதில் வாங்காமல் மாட்டைப் பிடித்த சந்தோஷத் தில் பார்வையாளர்களைப் பார்த்து கை காட் டிக்கொண்டு இருந்தார்கள் அந்த நபர்கள்.

ஆளைப் பார்த்து எடை போடுவது என்பார் களே, அதே பாணியில் மாட்டின் தோற்றத்தைப் பார்த்து பரிசு அறிவித்துக்கொண்டு இருந்தார்கள் உபயதாரர்கள். மாடு வாடிவாசலை விட்டு வெளியே வரும் முன்பே, வீரர்களும் மாட்டை எடைபோட்டுவிடுகிறார்கள். நல்லமாட்டைப் பிடித்து அதிக பரிசு பெறத் துடிக்கும் வீரர் கூட்டத்தைப் போலவே, சொங்கி மாட்டைப் பிடித்து 'நானும் பிடிகாரன்தான்’ என்று பேர் வாங்குவதற்காக ஒரு கூட்டமே பாய்ந்தது. கூட்டத்தைப் பார்த்து மிரண்டுபோய், வாடிவாசலை விட்டு வெளியே வர மறுத்த ஒரு சின்ன மாட்டை வெளியேற்ற 10 நிமிடத்துக்கு மேல் போராடினார்கள் விழாக் கமிட்டியினர். கடைசியில், 'வீரர்கள் எல்லாம் தள்ளிக்கோங்கப்பா. மாடு வெளியேறட்டும். யாரும் பிடிக்காதீங்க. பிடிச்சாலும் பரிசு கிடையாதுப்பா' என்றது மைக் வாய்ஸ். ரொம்ப கஷ்டப்பட்டு வெளியேற்றப்பட்ட அந்த மாட்டைப் பிடிக்க நாலு பேர் பாய, 'இங்க கன்னுக்குட்டியைப் பிடிக்கிறதுக்குனே நாலு பேர் இருக்காங்கய்யா. அதுவும் பிரைஸ் இல்லைனு சொன்ன மாட்டைத்தான் பிடிப்பாய்ங்க' என்று லந்து கொடுத்தார்அறிவிப்பாளர். நிறைய பேர் மாட்டைப் பிடிக்காமல் கீழே படுத்துப் படுத்துத் தப்பிப்பதைக் கண்ட அவர், 'மாடு பிடிக்கிறதுக்கு டிரெயினிங் எடுத்தாய்ங்களோ, இல்லையோ. எப்படி குப்புறப் படுக்கிறதுனு தெரிஞ்சிருக்கு இவிய்ங்களுக்கு' என்றார் கிண்டல் குறையாமல்.

நேரம் ஆக ஆக உண்மையிலேயே மாட்டைப் பிடிக்கும் ஆட்களின் எண்ணிக்கை குறைந்தது. பாதி பேர் ஓரமாக ஒதுங்கி நின்று, கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இன்னும் சில பேருக்கு நோக்கு வர்மம் தெரி யுமோ என்னவோ, ரொம்பத்தூரம் தள்ளி நின்று மாட்டை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். 'பாருய்யா. டி-ஷர்ட்டு கூட அழுக்கு ஆகாம நின்னுக்கிட்டு இருக்கவங்களை. டி.வி.காரத் தம்பி, அவிய்ங்களைப் படம் எடுத்து காட்டுய்யா. அப்பவாச்சும் ரோசப்பட்டு மாட் டைப் பிடிக்கிறாய்ங்களான்னு பாப்போம்'' என் றார் விழாக் கமிட்டியில் ஒருவர்.

அடுத்து அலங்காநல்லூருக்குப் போனோம். அங்கே வீரர்களோடு மாடுகளையும் சேர்த்து கலாய்த்தார் வர்ணனையாளர். 'மாடு பிடிச்சா பரிசு. பிடிக்கலைனா பொங்கல் வாழ்த்து' என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் மைக் பார்ட்டி. அதன்படியே, மாட்டைப் பிடிக்க முயன்று மண்ணைக் கவ்விய வீரர்களின் பனியன் எண்களைச் சொல்லி, '286-ம் நம்பர் தம்பிக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!' என்று அவர் நக்கலாகச் சொல்ல, சிரிப்பலை.

"மாடு பிடிச்சா பரிசு... பிடிக்கலைன்னா பொங்கல் வாழ்த்து!"

வாடிவாசலுக்குள் இருந்து சீறிக்கொண்டு வெளியே வந்த ஒரு காளை, கூட்டத்தைப் பார்த்து மிரண்டு மீண்டும் வாடிவாசலுக்குள் புகுந்தது. போராடி வெளியே கொண்டுவந்தால் மறுபடியும் உள்ளே போய்விட்டது. முதுகில் சிவப்பு, மஞ்சள் பொடிகள் தூவப்பட்ட வழக்க மான மாடுகளுக்கு மத்தியில், கும் மென்று பாண்ட்ஸ் பவுடர் மணக்க ஒரு காளை வெளியே வந்தது. திமிலில் அதிகம் பவுடர் இருந்ததால் வீரர்களின் கைகள் வலுக்கி தப்பிவிட்டது காளை. 'மாட்டைப் பிடிக்கச் சொன்னா, தடவித் தடவியே தூங்கவெச்சிடுவாய்ங்க போல. யப்போய்... இனிமே பாண்ட்ஸ் பவுடர் போடாதே, பசங்க மூடு மாறுது' என்று அவர் கலகலக்க வைத்தார் மைதானத்தை.

எல்லைக் கொடியைத் தாண்டிப் போய்விட்ட மாடு ஒன்று எங்கெங்கோ ஓடித் திரிந்துவிட்டு, மீண்டும் மீண்டும் களத்துக்குள் வந்து மிரட்டியது. அதைத் துரத்திச் சென்ற  மாட்டின் உரிமையாளர் தொலைந்து போய்விட்டார். போலீஸார், விழாக் கமிட்டியார், மேடையில் இருந்த எம்.எல்.ஏ-க்கள், வீரர்கள் எல்லோரும் கயிற்றில் சுருக்குப் போட் டுக்கொண்டு மாட்டைத் துரத்த, கடைசியில் மேலூர் எம்.எல்.ஏ. சாமியின் சுருக்கில் சிக்கியது காளை. உடனே மேலும் சில கயிறுகள் வீசப் பட்டு, 'மனோகரா’ சிவாஜிகணேசன் மாதிரி இழுத்துச் செல்லப்பட்டது அந்த மாடு. 'யப்பா இனிமே அந்த மாடு வந்தா பிடிச்சிக் கட்டுப் போட்டுருங்கப்பா. ஏலம்விட்டு காசு பார்த்தி ருவோம்'' என்றார் அறிவிப்பாளர். அதன் பிறகு அது வரவே இல்லை!

- கே.கே.மகேஷ்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism