Published:Updated:

``பைல பைசா இருக்காது... ஆனா வயிறும் மனசும் நிறைஞ்சிரும்...!" - சாலமன் பாப்பையாவின் சித்திரைத் திருவிழா #MaduraiChithiraiFestival

``பைல பைசா இருக்காது... ஆனா வயிறும் மனசும் நிறைஞ்சிரும்...!" - சாலமன் பாப்பையாவின் சித்திரைத் திருவிழா #MaduraiChithiraiFestival
``பைல பைசா இருக்காது... ஆனா வயிறும் மனசும் நிறைஞ்சிரும்...!" - சாலமன் பாப்பையாவின் சித்திரைத் திருவிழா #MaduraiChithiraiFestival

தன் இளம்வயதில் கண்ட சித்திரைத் திருவிழா குறித்த நினைவுகளில் தோய்ந்து, விழிவிரியப் பேசுகிறார்  தமிழறிஞர் சாலமன் பாப்பையா. 

``1945-கள்ல நான் ரொம்பச் சிறுபிள்ளை. பத்து வயசு இருக்கும். நண்பர்களோட சேர்ந்து மாசிவீதி பூராம் சுத்துவோம். அப்படியே யானைக்கல், சிம்மக்கல், தல்லாகுளம்ன்னு போய்க்கிட்டே இருப்போம். எங்க பார்த்தாலும் ஆட்டம் பாட்டம்தான். எந்த வயசு, எந்த மதம், என்ன சாதி.. எதுவுமே தெரியாது. திருவிழாவுக்கு வந்தியா... சந்தோசமா இருந்துட்டு போ. அந்தக் காலத்துலேர்ந்து இந்தக் காலம் வரைக்கும் சித்திரைத் திருவிழான்னா இப்படித்தான் இருக்கு, அதான், மதுரை!”  என்று தன் இளம்வயதில் கண்ட சித்திரைத் திருவிழா குறித்த நினைவுகளில் தோய்ந்து, விழிவிரியப் பேசுகிறார்  தமிழறிஞர் சாலமன் பாப்பையா. 

83 வயதாகிறது சாலமன் பாப்பையாவுக்கு. அவருக்குள் பசுமைபூத்துக்கிடக்கும் சித்திரைத் திருவிழா நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லிக்கேட்டோம். சிறுபிள்ளையின் உற்சாகத்தோடு சொல்ல ஆரம்பித்தார். ``இளம் பருவத்தில திருவிழாவைப் பார்த்து ரசிச்சிருக்கேன். படிச்சு வேலைக்கெல்லாம் வந்தப்போ  திருவிழா குறித்த வரலாறு படிச்சிருக்கேன். `மதுரைக்காஞ்சி'யில இந்தத் திருவிழா குறித்த பதிவுகள் எதுவுமேயில்லே. திருவிளையாடல்புராணத்தில், திருக்கல்யாணம் பத்திப் பேசப்பட்டிருக்கு. அப்போ, இதுக்கு அடுத்த காலகட்டத்தில் இருந்துதான் திருவிழா நிலைபெறத் தொடங்கியிருக்கும்ன்னு சொல்லலாம்.

சாதிகளும் சமயங்களும் பயங்கரமா கோலோசிக்கிட்டிருந்த காலத்தில் அதைமாற்றத் திருமலை நாயக்கர், அழகர் திருவிழாவில் எல்லாச் சாதிக்காரர்களுக்கும் மண்டகப்படி அமைச்சுக் கொடுத்து, சாதிகளிடையே சகோதரத்துவம் ஏற்படுத்தினார். வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற திருவிழாக்களை இணைத்து சைவத்துக்கும் வைணவத்துக்கும் இடையே சமயநல்லிணக்கம் ஏற்படுத்தினார். 

ஒவ்வொரு நாள் திருவிழாவையும் நான் ரசிப்பேன். ஆனாலும் நான் ரொம்ப விரும்பிப் பார்ப்பது, அழகர் ஆற்றில் இறங்குகிற திருவிழாவைத்தான். ரொம்பப் பிடிக்கும். மதுரையோட உயிரே, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்தானே! அழகர் வர்ணிப்புப் பாடல்கள் பாடுவாங்க. அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்! அந்தக் குதியாட்டமும், சலங்கை லயமும், ஏற்ற இறக்கத்தோடு பாடுகிற இசையும் என்னை அப்படியே மயக்கும். போகிற வேலையை விட்டுவிட்டு அப்படியே என்னை மறந்து நின்று கேட்டதுண்டு. வளத்தின் அடையாளமா, செழிப்பின் குறியீடா, மழை வேண்டுவோருக்கு அருள் தர்றவனா அழகரைத் தரிசிக்கிறாங்க, மக்கள். சித்திரைத் திருவிழா விவசாயத் திருவிழா, ஏழைகளின் பெருவிழா!

உழவுத்தொழில் வேலையெல்லாம் முடிஞ்ச ஓய்வு நாட்கள்லதான் இந்த திருவிழா நடக்கிறது. உழைப்பாளிகள் தங்கள் வருமானத்தை வச்சு இந்த திருவிழாவைக் கொண்டாடுறாங்க. கொஞ்சத்தை சாமிக்குக் காணிக்கை போட்டு, கொஞ்சத்தைப் பிள்ளை குட்டிகளுக்கு வாங்கிக் கொடுத்துன்னு பொழுதைக் கழிக்கிறாங்க. சாமிக்கும் திருவிழாவுக்கும் காசுசேர்த்து வைக்கின்ற பழக்கம், இன்னிக்கி வரையிலும் தலைமுறை தலைமுறையா நீடிக்குது.

வியாபாரிகளுக்கு இதனால் நல்ல வருமானம். பொருளாதாரம், ஒரே இடத்தில தேங்கி நின்றுடக்கூடாது, பரவலாக்கப்படணும்ங்கிற தொலைநோக்குப் பார்வையில் அமைந்ததுதான் இந்தச் சித்திரைத் திருவிழா. 


விழாக் காலத்துல, நிக்கிற இடத்திலெல்லாம் நீர்மோர் கிடைக்கும். கையில பத்துப் பைசா தேவையில்லை. வயிறும் மனசும் நிறையும். பசியோடு எது செஞ்சாலும் நிறைவாகாதுன்னு சொல்லுவாங்க இல்ல? அப்போ, பசியோடு தரிசனம் செய்யுறது மனநிறைவைத் தராதுதானே! அதைப் புரிந்து வைத்திருப்பவர்கள், மதுரை மக்கள்! 

தென்னங்கீத்து விசிறி, பனையோலை விசிறின்னு சின்னச் சின்னப் பொருள்கள் இலவசமாத் தருவாங்க. எல்லாமே வெயிலைப் போக்கக் கூடியதாகத்தான் இருக்கும். அப்படி ஏதும் கிடைச்சா அடிச்சுப் பிடிச்சுப் போய் வாங்கிட்டு வருவோம். அந்தக் கூட்டத்தில் போய் வாங்கிட்டு வர்றப்போ மனசுலயும் உதட்டுலயும் ஒருவிதப் பெருமிதம் தட்டுப்படும். எளிதா கிடைக்கிறதைவிட, கஷ்டப்பட்டுப் பெறுகிற எதுவுமே எண்ணி மகிழ்தற்குரியதுதானே.

கொடியேறுறதுக்கு கொஞ்ச நாளைக்கு முன்ன இருந்தே ஊரெல்லாம் திருவிழாப் பேச்சாதான் இருக்கும். முதல்நாள்ல இருந்து அழகர், கோயிலுக்குத் திரும்புற வரைக்கும் ஊரெல்லாம் கூட்டம் இருக்கும். இப்போவும் அந்தக் கூட்டம் இருக்கு. ஆனா, ரொம்ப டைட் செட்யூலோட இருக்கு. `வந்தாச்சு, சாமி கும்பிட்டாச்சு, போலாம்'ன்னு சொல்லிக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி விட்டுட்டு வந்த தங்களோட வேலைகளைத் தொடர ஆரம்பிச்சிடுறாங்க. வேற எந்த நெனப்பும் இல்லாம, நிம்மதியா திருவிழாவைக் கொண்டாடுற மனசு பெரியவங்களுக்குக் குறைஞ்சிட்டு வருது. இளசுங்க அதுல கெட்டி, எல்லாக் காலத்திலும் அதைத் தக்கவச்சிருக்காங்கன்னு தோணுது. 

மண்டகப்படி மண்டபங்கள் நிறைய மாறியிருக்கு, முன்ன போல இல்லை. நான் பார்த்த காலத்தில, அதிகமா நூறு மண்டபங்கள்தான் இருக்கும். இப்போ மூணு, நாலு மடங்கு பெருகிடுச்சு. எல்லாமே வணிகம்ன்னு ஆயிடுச்சில்ல! அதனுடைய தாக்கமாகத்தான் இதைப் பார்க்கிறேன். அந்தக் காலத்தில  'பிட்டுத் திருவிழா மைதானம்' ரொம்பப் பெருசா பிரமாண்டமா இருக்கும். வரிசையா மண்டபங்கள் நிறைஞ்சி இருக்கும். முந்தின நாளே திருவிழாக் கூட்டம் அலைமோதும்.

இப்போ அப்படியில்லை. வணிக நோக்கத்தில எல்லாத் திருவிழாக்களும் ரொம்பச் சுருங்கிடுச்சி. அந்த நிலைமை சித்திரைத் திருவிழாவுக்கும் வந்திடக்கூடாது" என்று தன் மகிழ்வையும் ஆதங்கத்தையும் ஒருசேர வெளிப்படுத்தினார் சாலமன் பாப்பையா.  

அடுத்த கட்டுரைக்கு