Published:Updated:

டெஸ்ட்டிங்கில் டாடா அல்ட்ராஸ்... இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் என்ன ஸ்பெஷல்?

மற்ற ப்ரீமியம் ஹேட்ச்பேக்குகளுடன் ஒப்பிடும்போது, 17 இன்ச் அலாய் வீல்களைக் (205/50 R17) கொண்ட கார், டாடா அல்ட்ராஸ்தான்! டெயில்கேட்டில் இருக்கும் கறுப்பு வேலைப்பாடுகள் நைஸ்.

டெஸ்ட்டிங்கில் டாடா அல்ட்ராஸ்... இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் என்ன ஸ்பெஷல்?
டெஸ்ட்டிங்கில் டாடா அல்ட்ராஸ்... இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் என்ன ஸ்பெஷல்?

போல்ட் வழியாக ஏற்கெனவே முயன்றிருந்தாலும், பக்காவான செட்டிங்கில் ஒருவழியாக ப்ரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளது டாடா மோட்டார்ஸ். கடந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட 45X கான்செப்ட்தான், அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்காக உயிர்பெற்றிருக்கிறது. இது உதகையில் டெஸ்ட் செய்யப்பட்டபோது படம்பிடித்திருக்கிறார், மோ.வி வாசகரான என்.சந்திரசேகரன்.

இந்த நிறுவனத்தின் Impact Design 2.0 கோட்பாடுகளின்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த காரின் புரொஃபைல் செம ஸ்போர்ட்டியாக உள்ளது. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அல்ட்ராஸ் 3,988மிமீ நீளம்/1,505மிமீ உயரம் ஆகியவற்றில் சமநிலை நீடிக்கிறது. அதேபோல அகலத்தில் (1,754மிமீ) முன்னிலை பெற்றாலும், இது வீல்பேஸில் (2,501மிமீ) பின்தங்கிவிடுகிறது. 

முன்பக்கத்தில் உள்ள Smiling பாணி கிரில், ஹெட்லைட்களுடன் இணையும் விதம் அழகு. கதவுகள் மற்றும் கதவுக் கண்ணாடிகளுக்குக் கீழே இருக்கும் பாடி லைன்கள் செம. தனது வகையிலே 17 இன்ச் அலாய் வீல்களைக் (205/50 R17)கொண்ட கார் இதுவாகத்தான் இருக்கும். டெயில்கேட்டில் இருக்கும் கறுப்பு வேலைப்பாடுகள் நைஸ். டாடாவின் புதிய ALFA பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட உள்ள அல்ட்ராஸ், எலெக்ட்ரிக் அவதாரத்திலும் களமிறங்கவிருக்கிறது. வழக்கமான மாடலுடன் ஒப்பிடும்போது EV வெர்ஷனின் கிரில், பம்பர், வீல்களைத் தாண்டி வெளிப்புறத்தில் எந்த மாற்றமும் இல்லை.

கேபினில் முழுக்க கறுப்பு நிறம் வியாபித்திருந்தாலும், பார்க்க ரிச்சாக உள்ளது. சென்டர் கன்சோலில் Floating முறையில் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் வீற்றிருக்கிறது. ஹேரியர் போலவே இங்கும் அனலாக் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இருப்பது வாவ் ரகம்! புதிய ஸ்டீயரிங் வீலில் அனைத்து கன்ட்ரோல்களும் இருப்பதுடன், இதன் வடிவமைப்பும் நன்று. எலெக்ட்ரிக் மாடலில் ஜாகுவார் கார்களில் இருப்பதுபோன்ற Rotary கன்ட்ரோல் கியர் லீவர் இருப்பது ஸ்டைலிஷ் டச். கேபின் டூயல் டோன் ஃபினிஷில் இருப்பதுடன், சென்டர் கன்சோலில் வித்தியாசம் தெரிகிறது. 

டியாகோவில் இருக்கும் 1.2 லிட்டர் Naturally Aspirated பெட்ரோல் இன்ஜின் தவிர, நெக்ஸானில் இருக்கும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல்/1. 5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் அல்ட்ராஸ் அறிமுகமாகலாம். ஜெனிவாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட காரில் இருந்த 1,198சிசி - 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 102bhp@5,500rpm பவர் மற்றும் 14kgm@1,750rpm டார்க்கை வெளிப்படுத்தியது. நெக்ஸானுடன் ஒப்பிடும்போது இது 8bhp குறைவான பவர் என்பதுடன், 3kgm டார்க்கும் குறைவு! டீசல் இன்ஜின் 90bhp பவரை வெளிப்படுத்தும் எனத் தகவல் வந்திருக்கிறது.

இந்தச் செயல்திறன் குறைபாடுக்கு, டியாகோவில் இருக்கும் 5 ஸ்பீடு TA-65 கியர்பாக்ஸ், இந்த இன்ஜின்களுடன் இணைக்கப்பட்டிருப்பதே காரணம். ஏனெனில், இது அதிகப்படியான டார்க்கைத் தாங்கக்கூடியது அல்ல என்பதுடன், இந்த காரின் காம்பேக்ட் பேக்கேஜிங்கு இந்த கியர்பாக்ஸ்தான் ஏற்றதாக இருந்திருக்கிறது. எனவேதான், நெக்ஸானிலிருந்து இன்ஜின்கள் பெறப்பட்டிருந்தாலும், அதன் Heavy Duty - T6300 கியர்பாக்ஸ் இங்கே மிஸ்ஸிங்! இன்ஜின் விவரங்கள் போட்டியாளர்களைப் (i20, ஜாஸ், பெலினோ) போலவே இருந்தாலும், அங்கேதான் ட்விஸ்ட் வைத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். 

ஆம், டியாகோவைவிட அல்ட்ராஸ் 15 கிலோ எடை குறைவாக இருக்கும் என்பதுதான் அந்த சர்ப்ரைஸ் (980 கிலோ)! எனவே, இவ்வளவு பெரிய காருக்கு, டியாகோவின் சிறிய இன்ஜினா என்ற ஐயம் எழுந்திருந்தாலும், அதன் நோக்கம் இதுதான். ஆனால், அதிர்வுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய Counter Balancer Shaft இந்த இன்ஜினில் இடம்பெறும் என்பதால், டியாகோவைவிட அல்ட்ராஸின் Refinement மற்றும் NVH அளவுகளில் முன்னேற்றம் தெரியும் எனத் தோன்றுகிறது.

இன்னும் சொல்லப்போனால், நெக்ஸானைவிட 200கிலோ எடை குறைவான காராக, டாடாவின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் இருக்கும் எனத் தெரிகிறது. எனவே, பவர்/டார்க்கில்விட்டதை, காரின் குறைவான எடையில் இந்த நிறுவனம் மேட்ச் செய்திருக்கிறது. இதன் EV வேரியன்ட்டைப் பொறுத்தவரை, அது சிங்கிள் சார்ஜில் 250-300கிமீ தூரம் செல்லக்கூடியது என்பதுடன், Fast Charging இருப்பது ப்ளஸ். எனவே, பேட்டரியின் 80 சதவிகிதம் பவர், ஒரு மணி நேர சார்ஜிங்கிலேயே பெற்றுவிட முடியும். இந்த நிறுவனத்தின் மற்ற கார்களைப்போலவே, இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அசத்தலான விலையில் அல்ட்ராஸ் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.