Published:Updated:

`பல ஆண்டுகள் உழைப்பில் உருவாக்கப்பட்டவை' - பாராட்டு மழையில் கேத்தி போமன்!

`பல ஆண்டுகள் உழைப்பில் உருவாக்கப்பட்டவை' - பாராட்டு மழையில் கேத்தி போமன்!
News
`பல ஆண்டுகள் உழைப்பில் உருவாக்கப்பட்டவை' - பாராட்டு மழையில் கேத்தி போமன்!

`பல ஆண்டுகள் உழைப்பில் உருவாக்கப்பட்டவை' - பாராட்டு மழையில் கேத்தி போமன்!

பால் வீதியில் உள்ள வான் பொருள்களில், இதுவரை மனிதனால் நெருங்க முடியாததாக இருந்த கருந்துளையை, முதன்முறையாகப் படமெடுத்துக் காட்டியிருக்கிறது நம் விண் அறிவியல். சாட்டிலைட் பாய்ச்சலின் மைல்கல்லான இந்தச் சாதனையை உலகமே வியந்துகொண்டிருக்கிறது. இந்தத் தருணத்தில், 'கருந்துளையின் முதல் புகைப்படம் சாத்தியமானதன் இமேஜிங் அல்காரிதம் பங்களிப்பைச் செய்தவர் இந்தப் பெண்தான்' என்று இணையத்தில் கொண்டாடப்படுகிறார் 29 வயது இளம்பெண் கேத்தி போமன்

ஈவன்ட் ஹாரிஸான் டெலெஸ்கோப் வெளியிட்டுள்ள இந்த முதல் கருந்துளைப் படத்துக்குப் பின் உள்ள மூளையும் உழைப்பும் அபாரமானது. பூமியின் வெவ்வேறு இடங்களில் நிறுவப்பட்ட எட்டு ரேடியோ டெலஸ்கோப்புகள் ஒருங்கிணைந்து படமெடுத்துள்ள இந்தக் கருந்துளையின் நிறை என்ன தெரியுமா? நம் சூரியனைவிட 6.5 பில்லியன் மடங்கு பெரியது. மேலும் இது பால் வீதியில், நம் பூமியிலிருந்து 55 ஒளிஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கிறது. இப்படி நெருங்க முடியாத சாத்தியத்தில் இருக்கும் இந்தக் கருந்துளையின் புகைப்படம்தான் தற்போது எடுக்கப்பட்டிருக்கிறது. பல விஞ்ஞானிகளின், ஆராய்ச்சியாளர்களின், அறிவியலாளர்களின் இந்தக் கூட்டுழைப்பில், கேத்தி போமனின் பெயரை முதலில் அடிக்கோடிட்டுக் காட்டியது, மசாச்சுசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரிதான். காரணம், கேத்தி இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவி.

'மூன்று வருடங்களுக்கு முன் கேத்தி கருந்துளையின் முதல் புகைப்படத்தைச் சாத்தியப்படுத்துவதற்கான புதிய அல்காரிதத்தை வழிநடத்தத் தொடங்கினார். அந்தப் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது இன்று' என்று கேத்தியின் புகைப்படத்துடன் ட்வீட் செய்த மாசாச்சுசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி, இந்த வரலாற்றுச் சாதனையில் கேத்தியின் பங்களிப்புக்கு வெளிச்சம் பாய்ச்சியது. 'ப்ரஸ் ரிலீஸ்களில் கேத்தியின் பெயருக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவதாகத் தெரியவில்லை. வரலாற்றில் இடம்பெற வேண்டிய பெயர் உங்களுடையது' என்று கேத்திக்கு வாழ்த்துகள் தெரிவித்து ட்வீட்கள் கொட்ட ஆரம்பித்தன. நெட்டிசன்கள், கேத்தியை வைரல் ஸ்டாராக்கி அவர் உழைப்புக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தார்கள். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சூப்பர் மில்லினியலான கேத்தி உருவாக்கிய அல்காரிதம்தான், ஐந்து கண்டங்களில் நிறுவப்பட்ட எட்டு டெலஸ்கோப்களை ஒருங்கிணைக்கும் இதயமாகச் செயல்பட்டது. மூன்று வருடங்களுக்கு முன் ஒரு TED டாக் நிகழ்ச்சியில், 'கருந்துளையைப் படமெடுப்பது எப்படி' என்பது பற்றி, கண்களில் ஆர்வமும் துள்ளலும் மின்ன, கொஞ்சம் நகைச்சுவை உணர்வோடு அவர் பேசிய பேச்சு, இந்த புராஜெக்ட்டில் அவருடைய அர்ப்பணிப்பைச் சொல்கிறது. புரொகிராமிங், இமேஜிங், கருந்துளை இயற்பியல் என பிளாக்ஹோலை படமெடுப்பதில் உள்ள அசாத்தியங்களை எல்லாம் தனது எளிய உதாரணங்களால் அவர் அவிழ்த்துக்காட்டி எடுத்துச் சொன்னது அபாரம்.

கருந்துளையைப் புகைப்படமெடுக்கும் பணிக்காக டேட்டாக்கள் சேமிக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க்களுடன் கேத்தி இருக்கும் புகைப்படத்தை பிபிசி வெளியிட்டது. மக்களுக்கு, அது இன்னொரு சாதனைப் பெண்ணின் புகைப்படத்தை நினைவுபடுத்தியது. அது, மார்கரெட் ஹமில்ட்டனின் புகழ்பெற்ற போட்டோ. 1969-ல், மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்த பாய்ச்சலுக்காக, மார்கரெட் உருவாக்கிய அப்போலோ கைடன்ஸ் கம்ப்யூட்டர் சோர்ஸ் கோட் குறிப்புப் புத்தகங்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் அது. அமெரிக்காவைச் சேர்ந்த கணிணி அறிவியலாளரான மார்கரெட்தான், 'சாஃப்ட்வேர் இன்ஜினீயரிங்' என்ற பதத்தை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றின் முக்கியமான பக்கங்களில் பெண்கள் தங்களின் பெயர்களை அழுத்தமாக எழுதுவது இனியும் தொடரும்.

சரி, பாராட்டு மழைக்கு நடுவில் கேத்தி என்ன சொல்கிறார்..?

'இன்று நீங்கள் பார்த்த கருந்துளையின் படம் என்பது, பல்வேறு வகையில் எடுக்கப்பட்ட பல படங்களின் தொகுப்புப் படம். இது தனி ஒருவராலோ, ஒரு அல்காரிதத்தாலோ சாத்தியமான வெற்றி அல்ல. உலகம் முழுக்க உள்ள பல அற்புதமான ஆராய்ச்சியாளர்களின் உழைப்பு இதில் ஒருங்கிணைந்துள்ளது. இதற்கான கருவி, டேட்டா சேகரிப்பு, படமாக்கும் முறை, ஆராய்ச்சித் தொழில்நுட்பம் என இவையெல்லாம் பல ஆண்டுகள் உழைப்பில் உருவாக்கப்பட்டவை. சாத்தியமற்றதாக நம்பப்பட்ட ஒரு விஷயத்தை இன்று நிகழ்த்திக்காட்டியிருக்கிறோம். இந்தக் குழுவில் உங்கள் அனைவருடன் இணைந்து நானும் பணியாற்றியதில் மிகவும் பெருமைப்படுகிறேன்' என்று தன் குழுவின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் கேத்தி.

உலகின் வரலாற்றுத் தருணங்களில் பெண்களின் பெயர்களும் ஒன்றிணைந்தே இருக்கின்றன!