Published:Updated:

"சித்திரைத் திருவிழா தாக்கத்தால்தான் அரூப ஓவியங்களிலிருந்து வெளியே வந்தேன்" - மனம் திறக்கும் டிராட்ஸ்கி மருது! #MaduraiChithiraiFestival

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"சித்திரைத் திருவிழா தாக்கத்தால்தான் அரூப ஓவியங்களிலிருந்து வெளியே வந்தேன்" - மனம் திறக்கும் டிராட்ஸ்கி மருது! #MaduraiChithiraiFestival
"சித்திரைத் திருவிழா தாக்கத்தால்தான் அரூப ஓவியங்களிலிருந்து வெளியே வந்தேன்" - மனம் திறக்கும் டிராட்ஸ்கி மருது! #MaduraiChithiraiFestival

எனக்குக் கிராமிய கலைஞர்களின் ஆடை வடிவமைப்பும், அவர்களது பாட்டும் ரொம்பப் பிடிக்கும்.  மதுரை அழகர் கோயில் சிற்பங்களைப்போல இவர்களுடைய நாட்டியமும் உடைகளும் இருக்கும். இதெல்லாம்தான் நான் ஓவியத்துறையைத் தேர்வுசெய்ய உந்துதலாக இருந்தன

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டிராட்ஸ்கி மருது... தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக வாழும் நுண்கலைக் கலைஞன். நாட்டார் தெய்வங்களையும், தமிழ் மரபுகளையும் வெகுசன ஊடகத்திற்குக் கொண்டு சென்றவர். மதுரையின் பண்பாட்டை தன் ஓவியங்களின் இழையாக மாற்றிக்கொண்டவர். மதுரை, கோரிப்பாளையம் இவரின் பூர்வீகம். தன் இளம் பருவத்தில் மதுரை சித்திரைத் திருவிழா என்னவிதமான தாக்கங்களை தனக்குள் ஏற்படுத்தியது என்பதையும், தான் வரையும் ஓவியங்களில் சித்திரைத் திருவிழாவின் பாதிப்பு எத்தகையது என்பது குறித்தும் இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

``என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமானது சித்திரைத் திருவிழா. நான் கோரிப்பாளையம், தல்லாகுளம் பகுதிகளில்தான் வளர்ந்தேன். எங்களுடைய வீடு அழகர் கோயில் சாலையில் இருந்தது. இந்தச் சாலை திருவிழாவினுடைய முக்கியமான பகுதியாக இருக்கும். வைகையாற்றில் கள்ளழகர் இறங்குவதற்கு முன்னர் இந்தப் பகுதியில்தான் சம்பிரதாயங்கள் நடக்கும்.

எனக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்தது, சித்திரைத் திருவிழாதான். 1950-க்கும் 60-க்கும் இடைப்பட்ட காலங்களில் திருவிழா குறித்த பல சித்திரங்கள் எனக்குள் உண்டு. சுமார் 200 கிலோ மீட்டருக்கு மதுரையைச் சுற்றியிருக்கிற கிராம மக்கள் எல்லோரும் வண்டி கட்டிக்கொண்டு சித்திரைத் திருவிழாவைப் பார்க்க வருவார்கள். மைதானங்கள் முழுக்க வண்டிகள் நிரம்பியிருக்கும் அந்தக் காட்சி, எப்போதும் மறக்க முடியாதது.

திருவிழாவை பார்க்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வருவார்கள். குறிப்பாக, மதுரையைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலிருந்து வரும் மக்களின் முகங்களில் மகிழ்ச்சி படர்ந்திருக்கும். பத்து நாள்கள் வைகை ஆற்றுக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் திருவிழா நடக்கும். சந்தோஷமான மனிதர்களுக்கு மத்தியில் சுற்றுவது என்பது மிக மிக முக்கியமானது.

திருவிழாவுக்கு முன்னரே, புது மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சுபவர்களுக்கான ஆடைகளைத் தைப்பது தொடங்கிவிடும். தொம்பையைப் போல தோற்றம் அளிக்கும் துணியில் அப்ளிக் வொர்க் டிசைன் (Aplic work design) மனதைக் கவரும். அதிலுள்ள நுண்ணிய ஓவிய வேலைப்பாடுகளைப் பார்த்துக்கொண்டேயிருப்பேன். நாயக்கர் காலத்தில் மதுரைக்கு வந்த, தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட மக்கள் திருவிழாவுக்கு தங்களுடைய பாரம்பர்ய இசைக்கருவிகளோடு வருவார்கள். அவர்களுடைய ஆட்டமும் பாட்டும் திருவிழாவைக் களைகட்ட வைக்கும்.

அதேபோல, மொழியெல்லாம் கடந்து சௌராஷ்டிரா இன மக்கள் பெருந்திரளாக வந்து கலந்துகொள்வார்கள். 
எனக்குக் கிராமியக் கலைஞர்களின் ஆடை வடிவமைப்பும், அவர்களது பாட்டும் ரொம்பப் பிடிக்கும். மதுரை அழகர் கோயில் சிற்பங்களைப்போல இவர்களுடைய நாட்டியமும் உடைகளும் இருக்கும். இதெல்லாம்தான் நான் ஓவியத்துறையைத் தேர்வுசெய்ய உந்துதலாக இருந்தன. எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனாலும், சித்திரைத் திருவிழா என்பது மதுரையின் ஒரு பண்பாட்டு விழா. அதனால் எப்போதும் அதன்மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. 

என் அம்மாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடையது கருப்பண்ணசாமி கோயில். சித்திரைத் திருவிழாவில் இந்தக் கோயில் மிக முக்கியப் பங்கை வகிக்கும். கள்ளழகர் வருவதிலிருந்து திரும்பிப்போகும் வரை இந்தக் கோயிலுள்ள இடத்தில் நிறைய ஆன்மிகச் செயல்பாடுகள் நடக்கும். அங்குக் கள்ளழகராக வேடமிட்டு வருகிற மக்களே என் ஓவிய வாழ்க்கைக்கு ஊக்கமளிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.

புராணக் கதைகளின் பாத்திரங்களிலிருந்து தனக்கான நாயகனைக் கடவுளாக மாற்றிக் கொண்டாடுவதுதான் சித்திரைத் திருவிழா. கடவுளுக்கு அணிவிக்கிற சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடைகள், அணிகலன்கள் எல்லாம் புராணக் கதைகளுக்கு இணையாக இருக்கும். அதையெல்லாம் கண்டு வியந்திருக்கிறேன். நாயக்கர் காலச் சிற்பங்கள், நாட்டியக்காரர்கள் பயன்படுத்தும் வாத்தியங்கள் இவையெல்லாம் சேர்ந்து என்னைப் பழைய காலத்துக்குள் ஒவ்வொருமுறையும் அழைத்துச் செல்லும். அதுவே எனக்குக் குறிப்பிடத்தக்க உத்வேகத்தை அளிப்பதாகவும் நம்புகிறேன். 

சித்திரைத் திருவிழா தந்த தாக்கத்தால்தான் அரூப ஓவியங்களிலிருந்து கொஞ்சம் விலகி தமிழ் மரபு சார்ந்த சித்திரங்களை வரைய ஆரம்பித்தேன். திரைப்படங்களிலும் அதையே செய்தேன். காலத்தை விரித்துப் பார்க்கிற ஆர்வம் அதிகமானதால் அரூப ஓவியங்களிலிருந்து வெளியே வந்துவிட்டேன். சென்னையில் வாழ்ந்தாலும் மதுரையும், அதைச் சார்ந்த பழைமையோடு கூடிய இந்தத் திருவிழாவும்தான் எப்போதும் என் கண்முன்னால் விரிந்து கிடக்கின்றன. 

சித்திரைத் திருவிழா குறித்த நிறைய ஓவியங்களை வரைந்திருக்கிறேன் என்றாலும் இரு படங்கள் மிகவும் முக்கியமானவை. அதில் ஒன்று, உலகமெங்கும் உள்ள என் நண்பர்களின் வீடுகளை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. சித்திரைத் திருவிழாவின் ஓவியம் உலகம் கடந்து நிற்பதில் எனக்குப் பெரிய சந்தோஷம். அதேபோல மற்றொரு ஓவியம் மதுரை குறித்த ஒரு கட்டுரைக்காக பிரபல நாளிதழுக்காக வரைந்தேன். அந்த ஓவியத்தையும் நான் முக்கியமானதாகக் கருதுகிறேன்!” என்கிறார்  டிராட்ஸ்கி மருது. 

வீடியோ: கிராபியென் ப்ளாக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு