Published:Updated:

உதயநிதி பேச்சு வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது! - திருவாரூர் சமூக ஆர்வலர்

உதயநிதி பேச்சு வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது! -  திருவாரூர் சமூக ஆர்வலர்
உதயநிதி பேச்சு வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது! - திருவாரூர் சமூக ஆர்வலர்

டெல்டா மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள உதயநிதி ஸ்டாலின், `திருவாரூரில் ஒரு வளர்ச்சியும் இல்லை.. ஒரு திட்டமும் மக்களுக்கு செய்யப்படவில்லை“ என தெரிவித்திருந்தார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. திருவாரூர் வளர்ச்சி அடையாததற்கு தி,மு.க. தான் காரணம் என சமூக ஆர்வலரும் தமிழர் தேசிய முன்னணியின் திருவாரூர் மாவட்டச் செயலாளருமான மன்னை ராஜகேரன் குற்றம் சாட்டுகிறார்.

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய அவர், ``உதயநிதி ஸ்டாலின் விவரம் அறிந்து பேசுகிறாரா, இல்லை தெரியாமல் பேசுகிறாரா என தெரியவில்லை. இவரது பேச்சு வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. திருவாரூர் வளர்ச்சி அடையாததற்கு தி.மு.க. தான் காரணம் என்பது இவருக்கு தெரியவில்லையா. அல்லது, தொடர்ந்து இங்கு வெற்றி பெற்று வரும் தன்னுடைய கட்சி இங்குள்ள மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறாரா. 1996 முதல் 2019 வரையிலும் தொடர்ந்து 23 ஆண்டுகள் திருவாரூர் தொகுதி தி.மு.க வசமுள்ளது. 1996, 2001 ஆகிய தேர்தல்களில் தி.மு.க.வைச் சேர்ந்த அசோகனும், 2006 தேர்தலில் மதிவாணனும் 2011, 2016 ஆகிய தேர்தலில் உதயநிதியின் தாத்தா கருணாநிதியும் இங்கு வெற்றி பெற்றார்கள்.

1996-ம் ஆண்டுக்கு முன் இத்தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வசம் இருந்தது. அக்கட்சி பெரும்பாலும் தி.மு.க.-வில்தான் இருந்தது. எப்படி பார்த்தாலும் திருவாரூர் தொகுதியில் கமலாபுரம் எருக்காட்டூர் முதல் அம்மையப்பன், திருவாரூர் நகரம் அடியக்கமங்கலம் வரை ஏகப்பட்ட இடங்களில் ஒ.என்.ஜி.சி. பெட்ரோல்-கேஸ் எடுக்கும் பணியில் ஈடுபடுவதற்கு இவர்கள் ஒத்துழைப்பே முக்கிய காரணமாக இருந்து வருகிறது. பெட்ரோல்-கேஸ் எடுக்கும் பணிகளால்தான் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் சீரழிந்து வருகிறது.

திருவாரூர் சுற்றுவட்டார மக்களில் பெரும்பாலானோர் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். இங்கே விவசாயம் சிதைந்து மதுபானக் கடைகள் அதிகளவில் குடி புகுந்ததால் இப்பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகவே உள்ளது. மேலும், மீத்தேன் திட்டத்தை செயல்படுத்துவதற்காகவே வலிமையான அரசியல் தளமாக காவிரிப்படுகை இருக்க வேண்டும் என்பதற்காக, தொகுதி சீரமைப்பு என்ற பெயரில், தனித்தொகுதியாக இருந்த திருவாரூர், பொது தொகுதியாக மாற்றிக்கட்டமைக்கப்பட்டது. அதனால் கருணாநிதியும் சொந்த தொகுதி என்ற பெயரில் களம்கண்டார். இந்த பிரமாண்டத்தின் காரணமாக, பெட்ரோல்-கேஸ் திட்டத்தின் பாதிப்புகள் இரண்டாம் நிலைக்கு சென்றது. இந்த இடத்தில் மேலும் ஒருவிஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் 1996, 2001, 2006-ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கத்தில் நின்றுதான் கருணாநிதி வெற்றி பெற்றார். அப்போது பத்திரிகையாளர்கள், `நீங்கள் மிகப்பெரிய தலைவர். தொடர்ந்து மூன்று முறையாக இந்த சிறிய தொகுதியில் நிற்பதற்கான காரணம் என்ன” என கேட்டதற்கு, `வயது முதுமையால் தமிழகத்தின் பிற பகுதியில் நின்று வெற்றி பெற்றாலும் என்னால் அந்தத் தொகுதியை சரிவர கவனிக்க முடியாது. அதோடு இல்லாமல் இதுவே எனது இறுதி தேர்தலாககூட இருக்கலாம். ஆகவே அருகில் உள்ள சிறிய தொகுதியில் நிற்கிறேன் என்று பதிலளித்தார்.

ஆனால் ஏனோ, தொகுதி சீரமைப்பு செய்து, முடியாத வயதிலும் திருவாரூரில் நின்றார். இந்த மண் சீரழிவதை தடுக்க, இவர்கள் இதுவரை எதுவுமே செய்ததில்லை. ஒத்துழைப்பாகதான் இருந்துள்ளார்கள். இதனால்தான் மக்களின் வாழ்வாதாரமும் சிதைந்துள்ளது. வாழ்வாதாரம் சிதைந்த பகுதிகள் எப்படி வளர்ச்சி அடைய முடியும். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் தி.மு.க தான் என்பது உதயநிதி ஸ்டாலினுக்குத் தெரியாதா” என கடுமையாகச் சாடுகிறார்.

அடுத்த கட்டுரைக்கு