Published:Updated:

கைகள் துண்டாகி சாக்கடையில் கிடந்த மனிதரை மீட்டு மறுவாழ்வு அளித்த `பவானி' இளைஞர்கள்!

"எங்களப் பார்த்ததும் சாக்கடைக்குள்ள இறங்கி ஓட ஆரம்பிச்சுட்டாரு. நாங்களும் உள்ளே இறங்கிட்டோம். அங்கிருந்து கூட்டிக்கிட்டு வந்து  நல்லா குளிப்பாட்டி, முதலுதவி செஞ்சோம்.  திரும்பவும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய் சேர்த்துருக்கோம்."

கைகள் துண்டாகி சாக்கடையில் கிடந்த மனிதரை மீட்டு மறுவாழ்வு அளித்த `பவானி' இளைஞர்கள்!
கைகள் துண்டாகி சாக்கடையில் கிடந்த மனிதரை மீட்டு மறுவாழ்வு அளித்த `பவானி' இளைஞர்கள்!

''போன ஞாயிற்றுக்கிழமை காணாமப் போனவரு... ஈரோடு  முழுக்கத் தேடிட்டோம். கிடைக்கல. முகநூல்ல பதிவு போட்டோம். மூணு நாள் கழிச்சு, ஈரோடு சூளை பக்கம் இருக்குறதா தகவல் வந்துச்சு. அங்க போய் பார்த்தா, சாக்கடையில ஆடையில்லாம படுத்துக் கெடந்தாரு. அவர் நிலைமையைப் பாக்கும்போதே அழுகை வந்திருச்சு...'' தழுதழுக்க, அந்தத் தருணத்தை விவரிக்கிறார், 'அட்சயம்' குழுவைச் சேர்ந்த செவிலியர் மனீஷா.

ஈரோடு, பவானி வட்டாரத்தில் ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது 'அட்சயம்' அமைப்பு. கடந்த ஞயிற்றுக்கிழமை மாலை இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளருக்கு ஓர் அழைப்பு வந்திருக்கிறது. போனில் பேசியவர், 'பவானி, லட்சுமி நகர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வலது கை மணிக்கட்டோடு துண்டாகி புழுக்கள் வைத்து அழுகித் தொங்கிக்கொண்டிருப்பதாகவும் அவரை மீட்டு மறுவாழ்வு அளிக்கும்படியும் தெரிவித்தார்.  

உடனடியாக அங்கு விரைந்த அட்சயம் குழுவினர், அவரை மீட்டு ஈரோடு தலைமை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், மறுநாள் காலை, அவரைக் காணவில்லை. பின்னர், ஈரோடு முழுவதும் தேடி அலைந்திருக்கிறார்கள். மூன்று நாள்களுக்குப் பின்னர், ஈரோடு சூளை பக்கம் இருப்பதாகத் தகவலறிந்து, மிகவும் மோசமான நிலையில் மீட்டு மீண்டும் அவரை, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் அட்சயம் குழுவினர்.

அந்த அனுபவத்தை நெகிழ்வோடு பகிர்ந்துகொண்டார் மனிஷா.

''முதன்முதல்ல நாங்க அவருக்குப் பக்கத்துல போனப்ப, எழுந்து ஓட ஆரம்பிச்சுட்டார். ஒத்துழைக்கவேயில்லை. பக்குவமா பேசினபிறகு, 'பேரு சிவானந்தம், வயசு நாற்பது, கேரளாவுல இருந்து நாலு மாசத்துக்கு முன்னாடி இங்க வந்தேன்'னு சொன்னார். ஆன்மிகப் பற்று காரணமாக, பத்துக்கும் மேற்பட்ட கயிறுகளை வாங்கி கையில கட்டியிருந்திருக்கிறார். பல மாதங்களா இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்ததால செப்டிக்காகி, புண் வந்து படிப்படியா கையே துண்டாகுற நிலைக்கு வந்திருச்சு.  

அந்த காயத்தையோ, வலியையோ உணர்ற மனநிலையில அவர் இல்லை. அதனால, சரிவரப் பராமரிக்காததால சீழ் வச்சு புழுக்கள் உருவாகிடுச்சு. அந்தப் புண்ணுல இருந்தும், அவர் உடையில இருந்தும் வந்த நாற்றத்தை தாங்கவே முடியல. எங்க குழுவுல சிலபேர் வாந்தியே எடுத்துட்டாங்க. ஆனாலும், அவரைக் கைவிட நாங்க தயாராயில்லை. 

அரைமணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு ஆம்புலன்ஸ்ல ஏத்தினோம். அவர் இருந்த கோலத்துல அப்படியே அழைச்சுட்டுப் போனா மருத்துவமனைக்குள்ள அனுமதிக்க மாட்டாங்க. அதனால, ஆம்புலன்ஸ்க்குள்ள வச்சே அவருக்கு முடி வெட்டினோம். கையில இருந்த புழுக்களைச் சுத்தம் செஞ்சோம். ஆஸ்பத்திரியில இருந்த நர்ஸ்கள் பக்கத்துல வந்துகூடப் பார்க்கலே. 'சரி... நாமளே முதலுதவி பண்ணிடலாம்'னு முடிவுபண்ணினோம். அதுக்குப்பிறகுதான் மருத்துவர்கள் பக்கத்துல வந்து பாத்தாங்க. கை துண்டாகியிருக்கிறதால அறுவை சிகிச்சை செய்யணும்னு சொன்னாங்க. ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிட்டு வீட்டுக்கு வந்திட்டோம். 

அடுத்த நாள் காலையில போனப்ப அவர் அங்க இல்ல. ஆஸ்பத்திரியில கேட்டதுக்கு, 'இங்கதான் இருந்தாரு, எங்க போனாரு'னு தெரியலைனு ரொம்ப அலட்சியமாச் சொன்னாங்க. ஈரோடு முழுவதும்  தேடினோம். முகநூல்லயும் பதிவு போட்டோம். அதைப்பாத்துட்டு ஒருத்தர் தகவல் கொடுத்தார்... மூணு நாள் கழிச்சுதான் மீட்டோம்.  

அங்கேயும், எங்களப் பார்த்ததும் சாக்கடைக்குள்ள இறங்கி ஓட ஆரம்பிச்சுட்டாரு. நாங்களும் உள்ளே இறங்கிட்டோம். அங்கிருந்து கூட்டிக்கிட்டு வந்து  நல்லா குளிப்பாட்டி, முதலுதவி செஞ்சோம். திரும்பவும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய் சேர்த்துருக்கோம். ஆரம்பத்துல எங்களைப் பார்த்து பயந்தவரு, எங்க குழுவோட அணுகுமுறையால இப்போ அன்பா பேச ஆரம்பிச்சிருக்காரு. இப்போ வாழ்க்கை மேல ஒரு பிடிப்பு வந்திருக்கு. சிகிச்சை தொடங்கியிருக்கு. இன்னும் சில நாள்கள்ல அறுவை சிகிச்சை நடக்கப்போகுது...'' என்கிறார் மனீஷா. 

தன் சொந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு ஏதாவது ஒன்று என்றாலே உதவி செய்யவே தயங்கும் மனிதர்களுக்கு மத்தியில், முகமறியாத ஒரு மனிதரைச் சாக்கடையில் இருந்து மீட்டு வாழ்க்கை மீது பிடிப்பை உருவாக்கிய இவர்களைப் பாராட்ட வார்த்தைகளில்லை. எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை விதைக்கிறீர்கள் மனிஷா..!