Published:Updated:

1 ரன்னில் சதத்தை மிஸ் செய்த கெய்ல்... பெங்களூருக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்

1 ரன்னில் சதத்தை மிஸ் செய்த கெய்ல்... பெங்களூருக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்
1 ரன்னில் சதத்தை மிஸ் செய்த கெய்ல்... பெங்களூருக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்

ஐபிஎல் தொடரின் 28வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடி வருகிறது. தொடர் தோல்விகளால் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.  கோலி, டிவில்லியர்ஸ் இவர்கள் இருவரையே பெரிதும் நம்பியுள்ளது அந்த அணி. இதனால் சற்று தடுமாறி வருகிறது. பந்துவீச்சில் சாஹல் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். பார்த்தீவ் பட்டேல் இந்தத் தொடரில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற சுழலில் பெங்களூரு அணி களமிறங்கியுள்ளது. பஞ்சாப் அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. 


இவ்விரு அணிகளும் மோதும் போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட்கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் வீரர்கள் கெய்ல் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரிலே கெய்ல் அவுட்டாகி வெளியேற வேண்டியது. உமேஷ் யாதவ் முதல் ஓவரின் 5வது பந்தில் எல்.பி.டபிள்யூ அப்பில் செய்தார். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். பெங்களூரு அணி இதனை எதிர்த்து அப்பீல் செய்யவில்லை. அதன்பின்னர் காட்டப்பட்ட ரீப்ளேவில் பந்து ஸ்டெம்பை தாக்கியது தெரியவந்தது. இந்த கண்டத்தில் இருந்து தப்பிய கெய்ல் பவர்- ப்ளேவை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். பவர் ப்ளே முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்தது. சாஹல் ஓவரில் முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய ராகுல் இரண்டாவது பந்தில் இறங்கி வந்த ஆடமுயற்சித்தார். பந்து அவரை ஏமாற்றிவிட பார்த்திவ் பட்டேல் ஸ்டெம்பிங் செய்து ராகுலை வெளியேற்றினார். அடுத்து வந்த அகர்வால் 15 ரன்களில் வெளியேறினார்.


தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த கெய்ல் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 27-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். சர்ப்ராஸ் கான் , ஷாம் குரன் ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டினாலும் கெய்ல் நிலைத்து நின்று விளையாடினார். இறுதியில் அவருக்கு மந்தீப் சிங் நன்கு ஒத்துழைப்பு அளித்தார். உமேஷ் யாதவின் 19-வது ஓவரில் கெய்ல் கொடுத்த கேட்சை கேப்டன் கோலி வீணடித்தார். அடுத்த பந்திலே அட்டகாசமான சிக்ஸரை விளாசினார் கெய்ல். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்  இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கெய்ல் 99 ரன்களை எடுத்தார்.