Published:Updated:

கோடைக்கால உணவில் இந்த இரண்டு விஷயங்களை மட்டும் தவிர்த்துவிடுங்கள்! #SummerTips

கோடைக்கால உணவில் இந்த இரண்டு விஷயங்களை மட்டும் தவிர்த்துவிடுங்கள்! #SummerTips
கோடைக்கால உணவில் இந்த இரண்டு விஷயங்களை மட்டும் தவிர்த்துவிடுங்கள்! #SummerTips

'உணவே மருந்து' என்பதுதான் நம் உடல் நலனைச் சீராக வைத்துக்கொள்ளும் அடிப்படை விதி. இது கோடைக்காலம். குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப உணவுகளைத் தருவதா, வெயிலின் வெம்மையை எதிர்கொள்ளும் உணவுகளைத் தருவதா... அதேபோல கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு என்னென்ன விதமான உணவுகளைத் தருவது உள்பட பல சந்தேகங்கள் எழுவது இயல்பு. அவற்றைச் சில கேள்விகளாகத் தொகுத்து ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணனிடம் கேட்டோம். 

"பெண்கள், கர்ப்பிணிகள் கோடைக்காலத்தில் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள் எதெல்லாம்?"

"பொதுவாக, நாம் காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பது வழக்கம். முன்பெல்லாம் குறைந்த அளவு இருந்தது இப்போது, 300 மி.லி. வரை அதிகமாகி விட்டது. ஆனால், 100 முதல் 150 மி.லி டீ அல்லது காபி போதும். அதற்கு ஒரு ஸ்பூன் சர்க்கரை போதும். காலை உணவைப் பொறுத்தவரை முந்தைய தலைமுறையினர், நேற்று சமைத்த கம்பு, அரிசி சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்ததைச் சாப்பிடுவார்கள். இதில், நல்ல பாக்டீரியா இருக்கும் என்பதால் உடலுக்கு நல்லது. இதன் மூலம் நீர் வறட்சியைச் சரி செய்யும். அதே போல நாமும் சாப்பிடலாம். அது பிடிக்காதவர்கள் இட்லி, தோசை, உப்புமா போன்றவற்றைச் சாப்பிடலாம். 11 மணியளில் காபி, டீக்குப் பதில் இளநீர், நீர், பானகம் குடிக்கலாம். ஏனென்றால், இது வெயில் ஏறும் நேரம் என்பதால் குளிர்ச்சியாகக் குடிப்பது நல்லது. மதியம், இரவு உணவுகளில் 3 விஷயங்கள் இருக்க வேண்டும். ஒன்று சாதம், ஒன்று அல்லது ஒன்றரை கப் சாதம், அடுத்து, அரை கப் பருப்பு. மூன்றாவது, ஒன்றரை கப் காய்கறிகள். அவரைக்காய், காராமணி, செளசெள. பூசணிக்காய் போன்றவை இருக்கலாம். எண்ணெய் அதிகம் பயன்படுத்தாமல் சமைக்க வேண்டும். மோர் இருப்பது நல்லது. மாலை நேரத்தில் பஜ்ஜி, பகோடா போன்ற அதிக எண்ணெய் பொருள்களைச் சாப்பிடாமல் இருப்பதே நல்லது. அதற்குப் பதில் ட்ரை ப்ரூட் சாப்பிடலாம். 

கர்ப்பிணிகளின் உடல்சூடு இயல்பாகவே அதிகமாக இருக்கும். இது கோடைக்காலம் என்பதால் இன்னும் அதிகரிக்கக்கூடும். அதனால், அவர்கள் இளநீர், நீர் மோர் போன்றவை அதிகம் குடிக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு அதிகம் பானகம் கொடுக்கக்கூடாது. எந்த உணவாக இருந்தாலும், காரமும் எண்ணெய்யும் குறைவாகச் சேர்த்து சமைத்ததைச் சாப்பிடலாம்."

"வெப்பகாலத்தில் சூடு தரும் உணவுப் பொருள்களை சாப்பிடுவதுதானே நியாயம்?"

"நல்ல கேள்வி. முள்ளை முள்ளால் எடுப்பதுபோலவே வெப்பமான நேரத்தில் சூடான உணவுகளைச் (சூடாகச் சமைத்தது அல்ல, சாப்பிட்டதும் உடலுக்குச் சூட்டைத் தரும் உணவுகள்) சாப்பிடுவது சரிதான் என்பதை எந்த ஆய்வும் நிருபிக்கவில்லை. உதாரணமாக, பப்பாளி சாப்பிட்டால் சூடு என்பார்கள். ஆனால், முந்தைய தலைமுறையினர் சாப்பிட்டது போல், சத்து நிறைந்த மரபணு மாற்றப்படாத பப்பாளி கிடைப்பதில்லையே. இப்போதுள்ள பப்பாளியில் நிறைய மாற்றம் வந்துவிட்டது. அதேபோல சிலர், 'சிக்கன் உடலுக்குச் சூடு, அதனால் சம்மரில் சாப்பிட மாட்டோம்' என்பார்கள். சிக்கன் அதைச் சமைக்கும் முறையில்தான் உடலுக்குச் சூடானதாக மாறுகிறது. வெளிநாடுகளில் சிக்கனின் க்ரீல் சிக்கனாகச் சாப்பிடுகிறார்கள். ஆனால், நாம் எண்ணெய், மசாலா என ஏகப்பட்ட பொருள்களைச் சேர்த்து ஜீரணமாவதையும் கெடுத்துவிடுகிறது. அதேபோல குளிர்ச்சியான பொருள்கள் எவை என்றும் தெரிந்துகொள்ள வேண்டும். குளிர்ச்சியான ஐஸ்கிரீம் சாப்பிட்டவுடனே தண்ணீரைத்தான் தேடுகிறோம். அப்படியெனில், ஐஸ்கிரீம் தாகம் தணிக்கவில்லை என்றுதானே அர்த்தம். பானையில் வைக்கப்பட்ட தண்ணீர் நல்லது, ஏனென்றால், அந்த அறையில் வெப்ப நிலையை விட, 2 டிகிரி குறைத்துக்கொடுக்கும். அதனால், தாகம் சட்டென்று அடங்கிவிடும். சுடு நீரும் குடித்தாலும் தாகம் தீரும்"     

"கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுப் பழக்கவழக்கம் எதெல்லாம்?"

"தவிர்க்க வேண்டிய பட்டியலில் முதலில் இருப்பது மசால் வடை, பக்கோடா போன்ற ஃப்ரைடு அயிட்டங்கள். அடுத்தது அதிகக் காரம் கொண்ட உணவுகள். பிரியாணியை ஏ.சி அறையில் உட்கார்ந்து சாப்பிட்டாலும் வியர்க்கும். ஏனென்றால், நமக்குப் பிடித்த உணவு என்பதால், அதிக அளவில் சாப்பிட்டுவிடுவோம். அதில் அதிகளவு சேர்க்கப்பட்ட எண்ணெய், மசாலா பொருள்கள் அஜீரணத்தைத் தந்துவிடும். நாம் வீட்டில் மாவு அரைத்து இட்லி சுட்டு, காலையில் சாப்பிட்டால் 11 மணிக்கெல்லாம் லேசாகப் பசிக்கும். ஆனால், இதே இட்லியை வெளியில் சாப்பிட்டால் நிலைமையே வேறு. உளுந்து மாவை மட்டும் புளிக்க வைத்து, அரிசி மாவை அரை மணிநேரம் போட்டு புளிக்க வைக்கிறார்கள். அதனால்தான் அது முழுமையாகத் தயாராகமலே சமைக்கப்படுகிறது. அதன்பின் அதிகமாக எண்ணெய் ஊற்றப்பட்ட தோசை, வடை எனச் சாப்பிடும்போது ஜீரணமாக அதிக நேரத்தையும் சக்தியையும் எடுத்துக்கொள்கிறது. ஜீரணத்துக்கே நம் உடலின் அதிக சக்தி செலவழிக்கப்பட்டால், சீக்கிரமே சோர்ந்து விடுவோம். அதன்பின், காரம் அதிகமான ஊறுகாய். இப்போது மாங்காய் சீசன் என்பதால், எண்ணெய் வழிய வழிய ஊறுகாய் போடப்படுகிறது. கடையில் வாழைப்பூ கிடைத்தால், அதையும் வடை செய்து சாப்பிடுகிறார்கள். வெயில் காலத்தில், வாழைப்பூ பொறியல் மாதிரி செய்து சாப்பிடலாம். தர்பூசணியைத் துண்டுகளாக்கிச் சாப்பிடலாம். ஜூஸாக்கிக்கூட குடிக்கலாம். ஆனால், சில பேர் அதை நறுக்கி, சீஸ் வைத்து சாப்பிடுகிறார்கள். இதுவும் ஜீரணமாக அதிக நேரமாகிவிடும். மொத்தத்தில் எந்த உணவாக இருந்தாலும் இரண்டு விஷயங்களில் கவனமாக இருங்கள். அதிக காரம், அதிக எண்ணெய் இருந்தால் கோடைக்காலத்தில் அதற்கு நோ சொல்லிவிடுங்கள்." 

எந்தப் பழங்கள், உணவுகள் இரவில் பெண்களும் குழந்தைகளும் எடுக்கக்கூடாது? ஏன்?

"பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் ஃபுட்ஸ் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதில் ஆவியில் வேக வைத்த உணவுகளைச் சாப்பிடலாம். பிடித்த உணவுதான் என்றாலும் பூரி போன்ற உணவுகளை இரவு 9 மணிக்கு சாப்பிட்டால், அது ஜீரணத்தைத் தொடங்கவே இரண்டு மணிநேரத்துக்கு மேல் ஆகும். அப்பறம் எப்போது தூங்குவது? தயிர் சாதம் என்றாலும், அதற்கு பகோடோ போன்ற எண்ணெய் பதார்த்தங்களைத் தொட்டுக்கொள்ள கூடாது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவம் சமைப்பார்கள். சாதாரணமாக, பொறியல் செய்ய கால் கிலோ, அரை கிலோ என்று அளவாக, காய்கறிகள் வாங்குவார்கள். அசைவம் என்றால், ஒரு கிலோ, ஒன்றரை கிலோ வாங்குவார்கள். மதியம், இரவு சாப்பிட்டு, அடுத்த நாள் காலையிலும் சாப்பிடுவார்கள். இது நல்ல பழக்கம் அல்ல. ஏனென்றால், குழம்பு எண்ணெய்யில் மிதக்கும் விதமாகச் சமைத்திருப்பார்கள். அதனால், அசிடிட்டி, அஜிரணம் எனச் சிக்கல்கள் வரும். இரவில் நெய் தோசை உள்ளிட்டவையும் தவிர்க்க வேண்டும்." 

பிளாஸ்டிக் பாட்டிலில் காலையில் மோரை ஊற்றி அலுவலகத்தில் வைத்து மாலை வரை இடைவெளிவிட்டு குடிக்கலாமா?

"கோடைக்காலத்துக்கு மிகவும் ஏற்ற பானம் மோர். ஆனால், மோரை பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி, கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் குடிப்பது தவறான பழக்கம். ஏனென்றால், புளிப்பு மிக்க உணவுப் பொருளை பிளாஸ்டிக்கில் ஊற்றும்போது, அது பிளாஸ்டிக்கையும் சேர்த்துக்கொள்ளும். எனவே, பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றப்பட்ட மோரைக் குடிக்கும்போது பிளாஸ்டிக்கையும் சேர்த்துக்குடிக்கிறோம். அதற்கு ஜீனோ பயாக்டிஸ் (xenobiotics) என்று பெயர். எந்தெந்த பொருள்களை பிளாஸ்டிக்கில் வைக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். உணவுப் பொருள்களைப் பொறுத்தவரை அரிசி, பருப்பு இவை மட்டுமே பிளாஸ்டிக் பொருளின் உள் வைக்கலாம் என்று அறிவியல் கூறுகிறது. உப்பு, ஊறுகாய் என எதுவும் வைக்கக்கூடாது. அப்படித்தான் மோரும். காலையில் வைக்கும் மோரில் நேரமாக, புளிப்பு ஏற, ஏற அது பிளாஸ்டிக்கையும் சேர்த்துக்கொள்ளும். அதற்குப் பதில் எவர்சில்வர் பொருள்களைப் பயன்படுத்தலாம்."