Published:Updated:

`டிரியன் கண்டிப்பா சாகமாட்டார்!' AI சொல்லும் `செம்ம' லாஜிக் #GameOfThrones

இதே பிரிவைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள்தாம் ஜான் ஸ்னோ கொலைக்குப் பிறகு ஆறாவது சீசனில் கண்டிப்பாக உயிர்த்தெழுவார் என்று சரியாகக் கணித்தனர்.

`டிரியன் கண்டிப்பா சாகமாட்டார்!' AI சொல்லும் `செம்ம' லாஜிக் #GameOfThrones
`டிரியன் கண்டிப்பா சாகமாட்டார்!' AI சொல்லும் `செம்ம' லாஜிக் #GameOfThrones

பிரபல டிவி தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸின் கடைசி சீசனான எட்டாவது சீசனின் முதல் எபிசோடு இன்று வெளியானது. அரசியல், யுத்தம், ஃபான்டஸி என அனைத்தும் இருக்கும் இந்தத் தொடரில் இதுவரை சிந்திய ரத்தம் எக்கச்சக்கம். முக்கிய கதாபாத்திரம் இவர், கடைசி வரை கதையில் இருப்பார் என நாம் நினைக்கும் பெரிய தலைகள் கூட எதிர்பாராத நேரத்தில் திடீரென உருளும். இப்படி யாராலும் கணிக்க முடியாத கதையோட்டம்தான் இந்தத் தொடரின் முக்கிய ஹைலைட். இப்போது இறுதி சீசன் தொடங்கிவிட்ட நிலையில், ஜெர்மனியின் முனிச் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன் இந்த சீசன் வரை உயிருடன் இருக்கும் கதாபாத்திரங்கள் நைட் கிங், போர்களைத் தாண்டி உயிர்பிழைப்பதற்காக வாய்ப்புகள் என்ன எனக் கணித்திருக்கின்றனர்.

இந்த புராஜெக்ட்டின் மேற்பார்வையாளர்களான கய் யச்தவ்வை (Guy Yachdev) மின்னஞ்சல் வழி தொடர்புகொண்டு பேசியதில் ``இந்த கதாபாத்திரங்களின் சர்வைவல் வாய்ப்பு என்பது `longevity analysis' என்ற முறையின் மூலம் கணிக்கப்படுகிறது. இது மருத்துவத்துறையிலும், நிதித்துறையில் பயன்படுத்தப்படுவதுதான். ஒரு சிகிச்சையின் விளைவுகள் என்னவென்று கணிக்க இவை மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படுகின்றன. அதே போலத்தான் ஒரு கதாபாத்திரம் உயிர்பிழைக்க இருக்கும் வாய்ப்புகள் என்னவென்று இதைக் கொண்டு எங்கள் அணியினர் கணிக்கின்றனர்." என்றார். இதற்கு முக்கியமாக இந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் உலகத்தின் கதாபாத்திரங்கள் தொடர்பான முக்கிய டேட்டாக்கள் அனைத்தும் எடுக்கப்படவேண்டும். இந்த டேட்டா இணையத்தில் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட பல இணையதளங்களில் கொட்டிக்கிடக்கின்றன. இந்தக் குழு உருவாக்கிய மென்பொருள் அந்த டேட்டாவை எடுத்து உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அல்காரிதங்களிடம் கொடுக்கும். 

மெஷின் லேர்னிங் என்றழைக்கப்படும் இந்த முறையில் ஏற்கெனவே இறந்த கதாபாத்திரங்கள் பற்றிய தகவல்கள் எல்லாவற்றையும் ஆராயும் அந்த அல்காரிதம். அதில் இருக்கும் தொடர்புகளை வைத்து தற்போது இருக்கும் கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட வருடத்தில் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் என்னவென்று கணிக்கும். தற்போதைய சீசன் நடக்கும் வருடம் 305 AC (After Conquest). அதாவது டார்கேரியன் ஆட்சி அமைத்ததிலிருந்து 305 ஆண்டுகள் ஆகிவிட்டன. இறந்த கதாபாத்திரங்கள் பற்றிய டேட்டா தகவல்கள் கிடைக்கக் கிடைக்க அல்காரிதத்தின் கணிப்பின் துல்லியமும் அதிகரிக்கும் என்கின்றனர் இந்தக் குழுவினர். இந்த முடிவுகளைத் தனி இணையதளம் ஒன்றில் பதிவிட்டுள்ளது இந்தக் குழு. தொடர் மட்டுமல்லாமல் `A Song of Ice and Fire' புத்தகத்திற்கும் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். புத்தகத்தில் இருக்கும் சில காரணிகளையும் தொடருக்கான கணிப்புகளில் சேர்த்துள்ளனர். இந்த `A Song of Ice and Fire' புத்தகத்தை மையப்படுத்தித்தான் கேம் ஆஃப் த்ரோன்ஸ் எடுக்கப்பட்டிருந்தாலும் பல மாறுதல்கள் இரண்டுக்கும் இடையில் உண்டு. இரண்டு புத்தகங்கள் இன்னும் வெளிவரவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் கணிப்பு எந்த அடிப்படையில் நிகழ்கிறது என்பதை ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தை ஆராய்ந்தால் புரிந்துவிடும். நாம்  உதாரணத்திற்கு மக்களின் அபிமான கதாபாத்திரமான டிரியன் லேனிஸ்டரை எடுத்துக்கொள்வோம். இந்தக் கதாபாத்திரம் உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு 97% இருக்கிறதாம். அதாவது எப்படியும் கரையேறிவிடுவார் டிரியன் என்று கணிக்கிறது இந்த அல்காரிதம். இதற்கு முக்கிய காரணிகளாக பார்க்கப்படுவது அவர் லேனிஸ்டர் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பதுதான். கேம் ஆஃப் த்ரோன்ஸ் உலகத்தில் லேனிஸ்டர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் சீக்கிரம் இறந்துவிடுவதில்லையாம். மேலும் அவர் திருமணம் செய்தவர். திருமணம் முடிந்தவர்கள் நீண்டநாள்கள் உயிர்வாழ வாய்ப்புகள் அதிகமாம். நிஜவாழ்க்கையில் இது எந்த அளவு உண்மை என்று தனி ஆய்வு நடத்தவேண்டும்(!). ஆனால், வெஸ்டெராஸில் அப்படிதானாம். மேலும் கதையின் முன்னணி கதாபாத்திரமாக இருப்பதும் இவரது உயிர்பிழைக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இவருக்கு இருக்கும் ஒரே ஒரு சிக்கல் ஆணாக இருப்பதுதான். வெஸ்டெராஸில் ஆண்களை விட பெண்களுக்குத்தான் பாதுகாப்பு அதிகமாம். இப்படி மேலும் பல காரணிகளை வைத்தே இந்தக் கணிப்பு நிகழ்த்தப்படுகிறது.

இந்தக் கணிப்பின்படி உயிர்பிழைக்க அதிகம் வாய்ப்புள்ள கதாபாத்திரம் டேனெரிஸ் டார்கேரியன்தான் (99%). உயிர்பிழைக்கக் குறைந்த வாய்ப்புள்ள கதாபாத்திரம் செர் ப்ரான் (Bronn) (6.5%). முன்னணி கதாபாத்திரங்களான சான்சா ஸ்டார்க் (26%), பிரண்டன் ஸ்டார்க் (42%) ஆகியோரின் வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளன.   

கேரக்டர் மேப்

மேலும் இவர்கள் வெளியிட்டுள்ள தளத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் எங்கு எங்கெல்லாம் சென்று இருக்கிறது என்பதைக் காண முடியும். வேண்டிய கதாபாத்திரத்தின் பெயரைத் தேடினால் அவர்கள் இந்தத் தொடரில் பயணித்த பாதை வெஸ்டெராஸ் மேப்பில் வரும்.

டிரியனின் கேரக்டர் மேப் ( got.show

முனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணினி பொறியியல் மாணவர்கள் ஒரு செமஸ்டரில் இப்படி `Survival chances algorithm' தொடர்பான ஏதேனும் வேளையில் ஈடுபடுவாராம். இதன்முலமாக எப்படி நுண்ணறிவுடைய கணினிகளை உருவாக்குவதென அவர்கள் கற்றுக்கொள்வர் என்கிறார் கய் யச்தவ். இதே பிரிவைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள்தாம் ஜான் ஸ்னோ கொலைக்குப் பிறகு ஆறாவதுசீசனில் கண்டிப்பாக உயிர்த்தெழுவார் என்று சரியாகக் கணித்தனர். அதே போல ஒரு கதாபாத்திரம் இறப்பதற்கான வாய்ப்பு 77% என்று இவர்கள் ப்ரெடிக்ட் செய்திருந்தார்கள். இன்று ஒளிபரப்பான எபிசோடில் அந்தக் கதாபாத்திரம் அவர்கள் கணித்தப்படியே இறந்துவிட்டது.

என்னதான் தொழில்நுட்பம் என்றாலும் இதுவும் ஒரு AI கணிப்புதான். இது அப்படியே நடக்கவேண்டும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லை. இவர்களே சில கதாபாத்திரங்களின் டேட்டாவை மறைத்துவைத்து அவர்கள் தற்போது உயிருடன் இருக்கிறார்களா என்பதை டெஸ்ட் செய்தனர். அதில் 80% கதாபாத்திரங்களின் நிலையைச் சரியாக கணித்திருந்தது இந்த அல்காரிதம். அதனால் ஓரளவுக்கு இது சரியாகத்தான் இருக்கவேண்டும். ஆனால், ட்விஸ்டுக்குப் பஞ்சமில்லாத கேம் ஆஃப் த்ரோன்ஸில் உண்மையில் யாரெல்லாம் உயிர்பிழைக்கப்போகிறார்கள் என்பதற்கான பதிலை தெரிந்துகொள்ள அடுத்த மாதம் வெளியாகும் கடைசி எபிசோடு வரை காத்திருக்கத்தான் வேண்டும். ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின் என்ன நினைக்கிறார் என்பதை யார் அறிவார்?