Published:Updated:

`` `வீட்ல தங்கிக்கிறேன்' அமலா, `கார் வேண்டாம்' கிஷோர், `பெர்மிஷன்' வரலட்சுமி..." - கிருஷ்ணா

`` `வீட்ல தங்கிக்கிறேன்' அமலா, `கார் வேண்டாம்' கிஷோர், `பெர்மிஷன்' வரலட்சுமி..." - கிருஷ்ணா
`` `வீட்ல தங்கிக்கிறேன்' அமலா, `கார் வேண்டாம்' கிஷோர், `பெர்மிஷன்' வரலட்சுமி..." - கிருஷ்ணா

வெப் சீரிஸ் மூலம் தயாரிப்பாளராகக் களமிறங்கியிருக்கிறார், நடிகர் கிருஷ்ணா.

டிகர் கிருஷ்ணா `ஹை ப்ரீஸ்டெஸ் (high priestess)' என்ற வெப் சீரிஸ் மூலமாகத் தயாரிப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார். நடிகை அமலா நடித்திருக்கும் இந்த வெப் சீரிஸ் குறித்து கிருஷ்ணாவிடம் பேசினேன்.  

``தயாரிப்பாளர் ஆகணும்னு முடிவெடுத்த காரணம்?" 

``இந்திய அளவுல டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்ல வெப் சீரிஸுக்கு ரெஸ்பான்ஸ் அதிகம். இதுல க்ரியேட்டிவா பல கதைகளைச் சொல்லலாம். பல கதைகள் என்னைத் தேடி வர்றப்போ, இது பெரிய திரைக்கு செட்டாகாது, வெப் சீரிஸா பண்ணா நல்லாயிருக்கும்னு தோணும். `ஹை ப்ரீஸ்டெஸ்' அப்படி ஒரு கதை. இது டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்ல சூப்பரா வொர்க் அவுட் ஆகும்னு தோணுச்சு, தயாரிச்சுட்டேன்." 

``இந்த டீம் செட் ஆனது எப்படி?"

``லயோலா காலேஜ்ல எங்க அண்ணனோட க்ளாஸ் மேட் புஷ்பா. எனக்கும் நல்ல நண்பர். அவங்களுக்கு டைரக்‌ஷன் மேல பெரிய ஆர்வம் உண்டு. இவங்க எடுத்த இரண்டு நிமிடக் குறும்படம் ஒண்ணு கான் ஃபிலிம் ஃபெஸ்டிவெல்ல செலக்ட் ஆகியிருந்தது. ஒருநாள் `ஹை ப்ரீஸ்டெஸ்' கதையைச் சொன்னாங்க. ரொம்ப சூப்பரா இருந்தது. ஜீ5 நிறுவனத்திடம் சொன்னோம். அவங்களுக்கும் பிடிச்சிருந்தது. உடனே களமிறங்கிட்டோம். 

இந்த வெப் சீரிஸை தமிழ்ல எடுக்கலாம்னுதான் நினைச்சோம். ஜீ5 நிறுவனம்தான் தெலுங்குல எடுக்கலாம்னு ஐடியா சொன்னாங்க. அப்டீன்னா, அமலா மேடம் லீடு கேரக்டர் பண்ணா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. இயக்குநர் புஷ்பாவுக்கும் அவங்கதான் சாய்ஸ். கதையைக் கேட்டு ஓகே சொன்ன அமலா மேடம், இதைத் தமிழ்ல எடுக்கப்போறதாதான் நினைச்சுக்கிட்டு இருந்தாங்க. தெலுங்குல எடுக்கிறோம்னு சொன்னப்போ, கொஞ்சம் யோசிச்சாங்க. பிறகு, கதை நல்லா இருக்கிறதால சரினு சொல்லி நடிச்சுக் கொடுத்தாங்க." 

``அமலாவுக்கு என்ன கேரக்டர்?" 

``டேரட் கார்டு ரீடரா நடிச்சிருக்காங்க. அதாவது,  ஜோசியம் பார்க்கிற மாதிரி ஒரு கேரக்டர். யாராவது பிரச்னைனு வந்தா, அதுக்கு என்ன காரணம், எதனால ஆகியிருக்கும், அதுக்கும் பூர்வ ஜென்மத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கானு கண்டுபிடிச்சு காரணம் சொல்ற கேரக்டர். அசாத்தியமான மூணு திறமைகள் அமலா மேடம்கிட்ட இருக்கும். அவங்க வாழ்க்கையில சந்திக்கிற க்ளைன்ட்ஸ் எல்லோருக்கும் ஒரு பின்னணிக் கதை இருக்கும்ல... அதைத்தான் வெப் சீரிஸ்ல சொல்லியிருக்கோம். அமலாவின் கணவரா ஆடுகளம் கிஷோர் நடிச்சிருக்கார். தவிர, பிரம்மா ஜி, விஜயலட்சுமி, சுனைனா, வரலட்சுமி பலரும் இருக்காங்க." 

``எத்தனை எபிசோடு பிளான் பண்ணியிருக்கீங்க?"

``எட்டுப் பகுதிகளாக வரும். ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள். இந்த மாதம் 25-ம் தேதி ஜீ5 தளத்தில் ரிலீஸ் ஆகப்போகுது. கிஷோருக்கும், அமலாவுக்கும் இடையே ஒரு கதை தனியா இருக்கு. அதுதான், இந்த வெப் சீரிஸோட பெரிய லிங்க. த்ரில்லர் ஜானரில் எடுத்திருக்கோம். தமிழ், தெலுங்கு, மராத்தி, இந்தி, மலையாளம்னு பெரும்பாலான மொழிகள்ல ரிலீஸுக்குப் பிளான் பண்ணியிருக்கோம்." 

``நடிகர், தயாரிப்பாளர் ரெண்டையும் எப்படி பேலன்ஸ் பண்றீங்க?"

``இந்த வெப் சீரிஸ் ஷூட்டிங் முடியிறவரைக்கும் நான் ஸ்பாட்டுக்குக்கூட போகல. ஃபைனான்ஸ் பொறுப்பை எங்க அம்மா பார்த்துக்கிட்டாங்க; நண்பர் ராம் கணேஷ் நிர்வாகத் தயாரிப்பாளரா இருந்தார். இணை தயாரிப்பாளர் சண்முகராஜன் மற்ற வேலைகளையெல்லாம் பார்த்துக்கிட்டார். என் டீம் ரொம்ப ஸ்ட்ராங். எனக்கு எந்தப் பிரச்னையும் வைக்கலை. ஷூட்டிங் விஜயவாடாவுல நடந்தது. சம்பளம் பற்றிப் பேசும்போதுதான், அமலா மேடமை நேர்ல பார்த்தேன். அவுங்க ரொம்ப எளிமையான ஆர்ட்டிஸ்ட். 'பட்ஜெட் அதிகமாச்சுனா சொல்லுங்க, பக்கத்துலதான் வீடு. அங்கேயே தங்கிக்கிறேன்'னு சொன்னாங்க. கிஷோர் சார், `கார்லாம் அனுப்ப வேண்டாம் தம்பி. நான் பறக்கும் டிரெய்ன்ல வந்துட்றேன்'னு சொன்னார். நான்தான் கட்டாயப்படுத்தி கார் அனுப்பினேன். ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானிஶ்ரீ இந்த வெப் சீரிஸ்ல நடிச்சிருக்காங்க. இப்படி எல்லோருமே எனக்குப் பெரிய சப்போர்ட்டா இருந்தாங்க. வரலட்சுமி எனக்கு நல்ல தோழி. நடிக்கிறதுக்குக் கால்ஷீட் கேட்டதும், மற்ற ஷூட்டிங்ல எல்லாம் பெர்மிஷன் போட்டு இதுல நடிக்க வந்தாங்க. நானே இவங்க ஒத்துழைப்பைப் பார்த்து மிரண்டுட்டேன்."

``படங்களைத் தயாரிக்கிற ஐடியாவும் இருக்கா?"

``கண்டிப்பா பண்ணுவேன். ஆனா, அதையும் டிஜிட்டல் பிளாட்ஃபார்முக்குத்தான் பண்ணணும். நிறைய நல்ல கதைகளை இங்கே சொல்லலாம்னு நினைக்கிறேன். ஏன்னா, இங்கே சென்சார் பிரச்னை இல்லை. போல்ட்டான கதைகளைப் படமாக்கணும்னு நினைக்கிறவங்க இதைப் பயன்படுத்திக்கணும். இதுக்கும் ஆடியன்ஸ் அதிகமா இருக்காங்க." 

அடுத்த கட்டுரைக்கு