Published:Updated:

`ஸ்டாலின், பனை ஓலையை பானை ஓலை என்று உச்சரித்தது நல்லதே!’ ஹலோ... ப்ளூடிக் நண்பா!

`ஸ்டாலின், பனை ஓலையை பானை ஓலை என்று உச்சரித்தது நல்லதே!’ ஹலோ... ப்ளூடிக் நண்பா!
News
`ஸ்டாலின், பனை ஓலையை பானை ஓலை என்று உச்சரித்தது நல்லதே!’ ஹலோ... ப்ளூடிக் நண்பா!

திருமாவுக்கான பரப்புரையில் ஸ்டாலின் பனை ஓலையை பானை ஓலை என்று உச்சரித்து பரவலாய் கேலிக்குள்ளானதுகூட‌ நல்லதே. அவர் சரியாய் உச்சரித்திருந்தால் பானைச் சின்னத்துக்கு இவ்வளவு வெளிச்சம் கிடைத்திருக்குமா?

தமிழகத்தில், தேர்தல் பிரசாரத்துக்கு இன்றே கடைசி நாள். கெடு நெருங்க நெருங்க, எல்லாத் தரப்புகளிலும் பரப்புரை உத்திகள் எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, கட்சிச் சின்னங்களின் விளையாட்டு சுவாரஸ்யம். ராமதாஸ் மாங்கனிச் சின்னத்திலேயே இரட்டை இலை இருப்பதைச் சுட்டிக்காட்டிப் புள‌காங்கிதப்படுகிறார்.

தட்டில் வகுந்துவைத்த பெரிய வெங்காயத்தைக் காட்டி, `தாமரை மலர்ந்தே தீரும்!' எனத் தமிழிசை சிரிக்கிறார். (தமிழர்கள், தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார்கள்.)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`பூவும் பழமும் இலையும் இயற்கைக் கூட்டணி' என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். இவை மூன்றும் சூரியன் இன்றி அமையாது என்பதும் இயற்கையின் விதிதான் என்கிறது மற்றொரு தரப்பு!

அ.ம.மு.க-வுக்கு மதியூகத்துடன் பரிசுப்பெட்டியை வழங்கியுள்ளது ஆணையம். போன முறை சந்தோஷித்த குக்கர் வியாபாரிகளுக்கு இந்த முறை ஏமாற்றமே. நாம் தமிழர் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் என்பது மேலோட்டமாகவேனும் பொருத்தமானதே. அஃது இல்லையெனில், மாடு மேய்ப்பவர் சின்னம் கேட்டிருப்பார்கள் எனத் தோன்றுகிறது.

கமல்ஹாசன், ஓடிக்கொண்டிருக்கும் டிவியை ரிமோட் தூக்கி வீசி உடைக்கிறார். உலகிலேயே ரிமோட் கன்ட்ரோல் பட்டு உடைந்த ஒரே டிவி கமல் வீட்டில் இருப்பதுதான். டார்ச் லைட்டைத் தூக்கி எறிந்திருந்தாலாவது தர்க்க நெறியோடும் கற்பனை வளத்தோடும் பிரசார நுட்பத்தோடும் இருந்திருக்கும். கோட்டைவிட்டுவிட்டார்.

தி.மு.க-வை விமர்சிப்பதால் `சூரியனுக்கே டார்ச்சா?' போன்ற கேலிகள் எழுந்தாலும் சுனாமி முதலான பல விஷயங்களில் தீர்க்கதரிசியாய் அறியப்படும் கமல் `விருமாண்டி' உள்ளிட்ட பல படங்களில் டார்ச் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த முறை தி.மு.க கூட்டணியில் நிற்கிறது. இரண்டு தொகுதியில். இருவரும் வித்தியாசமாக வெவ்வேறு சின்னங்களில் நிற்கிறார்கள். விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் (பெயருக்கேற்ப) உதயசூரியன் சின்னத்திலும், திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்திலும் நிற்கிறார்கள். கட்சியின் தனித்தன்மை போய்விடக் கூடாது என்பதற்காக ரிஸ்க் என்றாலும் திருமாவளவன் சொந்த சின்னத்தில் நிற்கிறார். அதுவுமே தேர்தல் ஆணையம் பல நாள் இழுத்தடித்து அந்தச் சின்னத்தை வழங்கியது. என்னதான் தொகுதி மக்கள் நன்கு அறிந்த முகம் என்றாலும், மக்களிடம் ஒரு புதிய சின்னத்தைக் கொண்டுபோய்ச் சேர்ப்பது எளிதான காரியமல்ல. அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் எனும்போது அதனுள் அடங்கியிருக்கும் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் போய்ச் சேர வேண்டும். ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில்.

அந்த வகையில் திருமாவுக்கான பரப்புரையில் ஸ்டாலின் பனை ஓலையை, `பானை ஓலை' என்று உச்சரித்துப் பரவலாய் கேலிக்குள்ளானதுகூட‌ நல்லதே. அவர் சரியாய் உச்சரித்திருந்தால், பானை சின்னத்துக்கு இவ்வளவு வெளிச்சம் கிடைத்திருக்குமா!

பானை, தமிழகத்துக்குப் புதிதல்ல. அதுவும் தேர்தல் நடக்கும் கோடையில் அதன் அத்தியாவசியத்தைச் சொல்ல வேவேண்டியதில்லை. `நம் மண் கலங்கள்’ என்ற தலைப்பில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ப.அருளி எழுதிய கட்டுரையில் (நற்றமிழ் இதழ் - நளி 2039) தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த, இருக்கும் 60-க்கும் மேற்பட்ட பானைகளைப் பட்டியலிடுகிறார். அஃகப் பானை, அஃகுப் பானை, அகட்டுப் பானை, அடிசிற்பானை, அடுக்குப் பானை, அரசாணிப் பானை எனத் தொடங்கி வடிநீர்ப் பானை, வழைப் பானை, வெள்ளாவிப் பானை வரை போகிறது.

பெண்களின் உடைகளைவிட பானை வகைகள் அதிகமோ என எண்ணவைக்கிறது!

***

ஸ்ரீஅன்னபூர்ணா ஸ்ரீகௌரிசங்கரின் பொன்னிறமாகச் சுட்ட மெதுவடை அல்லது Krispy Kreme-ன் Original Galzed Doughnut போல் தோற்றமளித்த எளிய படம் ஒன்றைப் பிரசுரித்து கருந்துளையைப் (Black Hole) படம் பிடித்துவிட்டோம் என விஞ்ஞான உலகம் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது. கருந்துளை என்பது, காலம்கொண்ட வெளி (Specetime). மஹா ஈர்ப்பு விசை கொண்டது. அதிலிருந்து ஸ்தூல வடிவப் பொருள்கள் மட்டுமல்ல; ஒளிகூட தப்ப முடியாது. உறிஞ்சி விழுங்கி சமர்த்தாய் நிற்கும்.

அதனால்தான் அதை இதுகாறும் படம்பிடிக்க முடியாமல் இருந்தது. ஒளி ஒன்றின் மீது விழுந்து, அது பிரதிபலிப்பதைத்தான் காட்சி என்கிறோம்; புகைப்படம் எடுக்கிறோம்.

இதற்கு Interferometry என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மொத்தம் எட்டுத் தொலைநோக்கிகள். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, அன்டார்டிகாவில் வைக்கப்பட்டவை. இவை இணைந்து ஒற்றைத் தொலைநோக்கியாய்ச் செயல்படும். எம் 87 என்ற 55 மில்லியன் ஒளியாண்டு தொலைவிலிருக்கும் கேலக்ஸியில் இருக்கும் கருந்துளையின் எல்லைக் கோட்டிலிருந்து துப்பப்பட்டிருந்த‌ மின்காந்த அலைகளைக் கிரகித்து, சுமார் 4 பேட்டாபைட் தரவுகளை உருவாக்கின இந்தத் தொலைநோக்கிகள். (இளையராஜாவின் பாடல்களை சுமார் 8,000 ஆண்டுகள் தொடர்ச்சியாய்க் கேட்பதற்கு இணையான தரவு இது.) இது நடந்தது, சரியாய் ஈராண்டுகள் முன். இந்தத் தரவுகள் இருக்கும் ஹார்டு டிஸ்குகள் பாஸ்டனில் இருக்கும் எம்.ஐ.டி-க்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதுதான் பரிசோதனையை முன்னெடுக்கும் நிறுவனம். அங்கு கணினி நிரல் மூலம் இவை ஒன்றுசேர்க்கப்பட்டு இன்று ஒற்றைப் புகைப்படமாக உருவாகி இருக்கிறது!

இதைச் செய்தது கேட்டி பௌமன் என்கிற 29 வயது இளம்பெண் என ஊடகங்கள் கொண்டாடுகின்றன. உண்மையில் அந்தக் கணிப்பொறி நிரலில் கணிசமான வரிகளை எழுதியது அதே ஈவண்ட் ஹொரைஸான் டெலஸ்கோப் குழுவில் இருக்கும் ஆண்ட்ரூ சால் என்பவரே என்று எதிர் முணுமுணுப்புகள் கிளம்பின. பிறகு கேட்டி ``இது ஒருவரின் வெற்றி அல்ல” என்று ஃபேஸ்புக் பதிவிட்டும், ஆண்ட்ரூ ``நிரலின் எட்டரை லட்சம் வரிகளை எழுதியது நான் அல்ல” என்று ட்விட்டரில் பதிலளித்தும் விக்ரமன் படம்போல் சர்ச்சையை முடித்துவைத்தனர். எப்படியோ பெண்கள் கேட்டியின் அடியொற்றி மேலும் விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஆர்வம்காட்டத் தொடங்கினால் நல்லதே!

மற்றபடி, யோசித்துப் பார்த்தால் இன்று நவீன இயற்பியலின் வேலைப் பிரதானமாய் ஒன்றுதான். ஐன்ஸ்டைன் நூற்றாண்டு முன் சொல்லிப்போனதை பல பில்லியன் டாலர் செலவழித்து பரிசோதனைகள் மூலம் உண்மை என நிரூபணம் செய்வது!

***

மனோ, தமிழ் ஊடகம் ஒன்றில் பணிபுரியும் துடிப்பான இளைஞர். ம‌னோ ரெட் என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் செயல்படுபவர். அவர் `தமிழறிவோம்’ என்ற தலைப்பில் அவ்வப்போது தமிழ் இலக்கண விஷயங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் மீம்களாகப் போட்டுவருகிறார். முன்பு எழுத்தாளர் என்.சொக்கன் சந்திப் பிழையின்றி எழுதுவது பற்றித் தொடர் கார்டூன்கள் மூலம் விளக்கியது போன்ற முயற்சிதான் இது. அன்றைய தினத்துக்கான அரசியல் பகடி எனக் காணாமல்போய்விடாது, சமூக ஊடகங்களில் இயங்கும் நமது இளைஞர்களுக்கு சிரித்தபடி தமிழ் பயிற்றுவிக்கும் வேலை. இன்று சில‌ தொழில்முறை ஊடகங்களுமே இலக்கணப் பிழையோடுதான் படைப்புகளை வெளியிடுகின்றன எனும்போது மொழி காக்கும் இம்முனைப்பு அரிது.

உதாரணமாய், உம்மைத் தொகையை `இதுல எப்படின்னே லைட் எரியும்?' என்ற செந்தில், கவுண்டமணி காமெடியின் மூலம் சொல்கிறார். தெரிநிலை வினைமுற்றைக் கரடியின் மீது அம்பெறியும் புலிக்கேசிகொண்டு விளக்குகிறார். உவமைத்தொகை - `அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்...' என்ற வடிவேலு காமெடியை வைத்துப்பேசுகிறார்.

தொடர் குறித்த உங்கள் கருத்துகளை, பரிந்துரைகளை, விமர்சனங்களைக் கேட்க ஆர்வமாக இருக்கிறேன். bluetick@vikatan.com-ல் உரையாடுவோம்!

முந்தைய பாகங்கள்