Published:Updated:

"100 சதவிகித வாக்குப்பதிவில் நாங்களும் இருக்கோமில்லையா?" முதியோர் இல்லம் பாட்டிகள்

"100 சதவிகித ஓட்டு பதிவு வேணும்னு சொல்றாங்க இல்லையா... அதுல நாங்களும் இருக்கோம். அதனால நிச்சயம் ஒட்டு போட போவோம்!"

"100 சதவிகித வாக்குப்பதிவில் நாங்களும் இருக்கோமில்லையா?" முதியோர் இல்லம் பாட்டிகள்
"100 சதவிகித வாக்குப்பதிவில் நாங்களும் இருக்கோமில்லையா?" முதியோர் இல்லம் பாட்டிகள்

நாளை ஏப்ரல் 18. அனைவரும் எதிர்பார்க்கும் நாள். நமது தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க உள்ளோம். அதன் மூலமாக, நம் நாட்டின் பிரதமரை முடிவு செய்யவிருக்கிறோம். எனவே, தேர்தலில் பங்கேற்பு என்பது மிகவும் அவசியமானது. இந்திய அரசியலைப்புச் சட்டத்தில் ஓட்டு உரிமை என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதைப் பயன்படுத்துவதில் அக்கறையின்றி இருப்பவர்கள் ஏராளம். இங்கே நாம் சந்தித்தவர்கள் ஆவலோடு வாக்களிக்க விரும்புகிறார்கள். ஆனால், அவர்களின் ஆசை எளிதாக நிறைவேறிவிட வில்லை. 

கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வாழும் முதியோர்கள் ஓட்டு போட உள்ளார்கள். இவர்களில் பலர் முதன்முறையாக ஓட்டளிக்க உள்ளனர் என்பது ஆச்சர்யமான விஷயம்தானே! இங்கு வசிக்கும் பலர் கணவனால் கைவிடப்பட்டும், பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டும் வீட்டைவீட்டு வெளியேற்றப்பட்டும் எனத் துயரமான பின்னணிக் கொண்டவர்கள். இவர்களில் சிலர் எவ்வித உறவுகளும் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களை அரவணைத்து வாழ்கிறது ஈரநெஞ்சம் அறக்கட்டளை. உறவுகளையும் வீட்டையும் இழந்து நிற்கும் இவர்களிடம் எந்தவித ஆவணங்களும் இல்லை. அதனால், தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு இல்லை. அந்தக் குறை நீங்கி, இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளார்கள். எப்படிச் சாத்தியமானது என அந்தக் காப்பகத்தின் நிர்வாகி மகேந்திரனிடம் பேசினேன்.

"இந்த இல்லத்தில் இருப்பவர்களில் பலர், முதன்முறையாக ஜனநாயகத்தின் முதல் கடமையான ஓட்டு போட உள்ளார்கள். இதற்காக மாவட்டத் தேர்தல் பிரிவினர், தமிழ்நாடு தேர்தல் ஆணையர், குடியரசுத் தலைவர் ஆகியோருக்குச் சிறப்பு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தேன். அதன் வெற்றிதான் இவர்களுக்குப் பாராளுமன்றத் தேர்தலின் ஓட்டளிக்கும் உரிமையை அளித்துள்ளது. இவர்களுக்கான வாக்காளர் அட்டை இன்று வந்துள்ளது. அவற்றைப் பார்த்ததும் எல்லோர் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால், இது எளிதில் கிடைத்துவிடவில்லை. ஆதரவற்ற முதியோர்கள் 65 பேர் இங்கு தங்கியுள்ளார்கள். அவர்களுக்கு எங்கள் அறக்கட்டளையின் லெட்டர்பேடு மூலமாக முகவரி உறுதி செய்யும் கடிதம், அவர்களுக்கு நான்தான் பாதுகாப்பு என்ற ஆவணம் உள்ளிட்டவற்றை, மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தோம். அதன் பிறகு, வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் பரிசோதித்து அதிகாரபூர்வமாக வாக்காளர் பட்டியலில் 65 முதியவர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டன. இங்கு இருக்கும் அனைவரும் 60 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள். அடையாள அட்டை மூலம் இவர்களுக்கான சலுகைகள் வாங்கித்தரப்படும். இந்தக் காப்பகத்தில் கிருஷ்ணசாமி என்பவர் முதன்முறையாக ஓட்டளிக்க உள்ளார். கிட்டதட்ட 35 வருடங்களாகக் குப்பைத்தொட்டி அருகேதான் இருந்துள்ளார். அவரை மீட்டு மறுவாழ்வு கொடுத்துள்ளோம். அவருக்கும் வாக்காளர் அட்டை வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!" என்கிறார்.

இந்தக் காப்பகத்தில் வாழும் அமுதா பாட்டியிடம் பேச்சுக் கொடுத்தோம். "எனக்கு வயது 63. இரண்டு வருடங்களுக்கு முன், இந்தக் காப்பகத்துக்கு வந்தேன். நான் இதுவரை ரெண்டு முறைதான் ஓட்டு போட்டுருக்கேன். என் புள்ளைங்க கைவிட்டதும், போலீஸ்காரங்க மூலமாகத்தான் இங்கே வந்தேன். ரேசன் கார்டு, ஓட்டு போடுற அட்டைனு எதுவும் எங்கிட்ட இல்ல. நியூஸ் பேப்பர் படிப்பேன். நாட்டுல நடக்கிற விஷயங்களைக் கவனிச்சிட்டுத்தான் இருக்கேன். குழந்தைகளுக்குக்கூடப் பாதுகாப்பு இல்ல. குழந்தைங்க நல்லா இருக்கணும்னு போராடுறவங்களுக்குத்தான் என் ஆதரவு. 100 சதவிகித ஓட்டுப் பதிவு வேணும்னு சொல்றாங்க இல்லையா... அதுல நாங்களும் இருக்கோம். அதனால நிச்சயம் ஒட்டு போட போவோம்" என்கிறார். 

வாக்களிக்கும் அவசியத்தை நமக்கு இந்தப் பாட்டிகள் அழகாகவும் ஆழமாகவும் உணர்த்துகிறார்கள்.