Published:Updated:

`அவமானம்' - `அங்கீகாரம்'... டிக் டொக் தடைக்கு பெண்களின் கருத்து என்ன...?

"கலாசாரத்தின் மீது நமக்கு இருக்கிற அக்கறையை ஆற்றாமையை எப்போதெல்லாம் வெளிப்படுத்துகிறோம் என்பதை கவனமாகப் பாருங்கள். ஒரு பெண் தன்னை சுதந்திரமாக வெளிப்படுத்திக்கொள்ளும்போதுதான் இந்தச் சமூகம் கலாசாரம் பண்பாடு என பதற்றம் கொள்கிறது."

`அவமானம்' - `அங்கீகாரம்'... டிக் டொக் தடைக்கு பெண்களின் கருத்து என்ன...?
`அவமானம்' - `அங்கீகாரம்'... டிக் டொக் தடைக்கு பெண்களின் கருத்து என்ன...?

டந்த சில மாதங்களாகவே டிக் டொக் செயலிக்குத் தடைவிதிக்க வேண்டுமெனக் குரல்கள் தொடர்ந்து எழுந்து வந்தன. கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில்கூட எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மணிகண்டன் 'அதற்கு வலியுறுத்துவோம்' என்று பதில் அளித்திருந்தார்.

இதற்கிடையே, 'டிக் டொக்’ செயலியால் நம்முடைய கலாசாரம் சீரழிவதுடன், ஆபாசம் அதிகரிக்கிறது என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அது குறித்து முடிவு எடுக்க மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் பரிந்துரை செய்தது. இதுகுறித்த வழக்கு விசாரணை வரும் 22-ம் தேதி நடக்கவிருக்கிறது. இதனிடையே அதற்கு முன் தற்காலிகமாக அந்த ஆப்பை நீக்குமாறு கூகுள் நிறுவனத்துக்கும் ஆப்பிள் நிறுவனத்துக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனையொட்டி, தனது 'ப்ளே ஸ்டோரில்'  டிக் டொக் செயலியைப் பதிவிறக்கம் செய்ய முடியாதவாறு நீக்கியிருக்கிறது கூகுள் நிறுவனம். இந்த நிலையில் டிக் டொக் தடை செய்யப்பட்டிருப்பது நியாயமான அணுகுமுறையா எனச் சில பெண்களிடம் கேட்டோம். 

ப்ரீத்தி, டிக் டொக் பிரபலம் - நடிகை :

"தனிமையாக உணரக்கூடிய பெண்களுக்கு இந்தச் செயலி ஒருவிதத்துல விடுதலையைக் கொடுக்குதுன்னு சொல்லலாம். அதோட, அவங்ககிட்ட இருக்கும் நடிப்பு, நடனம் ஆகிய திறமைகளை வெளிக்கொண்டுவர்ற ஒரு தளமாகவும் அது இருக்கு. ஆனா, அதுக்காக மட்டும் பயன்படுத்துறவங்க கம்மி ஆகிட்டு வர்றாங்க. லைக், கமெண்ட்ஸ் என எந்தலெவலுக்கும் இறங்கத் தயாராகிட்டாங்க. இன்னொரு பக்கம், பெண்களுக்குத் தெரியாம ஆண்களே பெண்களைப் படம் எடுத்துப் போடுற வீடியோக்களை இதுல அப்லோட் பண்றாங்க. இந்த அப்ளிகேஷன யூஸ் பண்றதுக்கு சில வரைமுறைகளைக் கொண்டுவரணும். அப்படி இயலாதபட்சத்தில் டிக் டொக்கைத் தடை பண்றதில் தப்பில்லைன்னு நினைக்கிறேன்". 

கண்மணி, ஆர்.ஜே. : 

"ஒரு கலாசாரம் சீரழியுதுன்னு சொன்னா, அதை ஒழுங்குபடுத்த பார்க்கணுமே தவிர, ஒட்டுமொத்தமா தடைங்கிற ஒரு இடத்துக்கு நாம போறது எதுக்குமே தீர்வாகாது. அது ஒரு பொழுதுபோக்குக்கான செயலி. அதை முறைப்படுத்தலாம். அந்தச் செயலியை நல்லவிதமாப் பயன்படுத்தி இன்னைக்கு நிறைய பேர் தங்களோட திறமைகளை வெளிக்கொண்டு வந்திருக்காங்க. இந்தச் செயலியால புகழ்பெற்றவர்கள் அடங்கிய தனி ஜானரே ஊடகங்களில் வந்திருக்கு. இன்னொரு பக்கம், குடும்பத்தில தினசரி ஒரேமாதிரி வாழ்க்கையை வாழ்ந்துட்டிருக்கிற பெண்கள், தங்களுக்கு ஏதாவதொரு அங்கீகாரம் கிடைக்காதான்னு எதிர்பார்த்திட்டு இருக்காங்க. அவங்கதான், இந்தச் செயலியை அதிகமா பயன்படுத்துறாங்க. ஆனா, அந்த அங்கீகாரத்துக்காக, அவங்க தங்களையே ஒரு காட்சிப்பொருளாக மாத்திக்கிறது அபாயகரமான விஷயம். குடும்ப அமைப்பை அது சிதைக்க வாய்ப்பிருக்கு. 

முதல்ல மூன்று வீடியோக்களை இலவசமா அப்லோட் பண்ணுவதற்கு அனுமதிக்கலாம், அதன் பின்னர் சந்தா கட்டணும்னு விதிமுறைகளைக் கொண்டுவரலாம். திறமை இருக்கிறவங்களும் திறமையை வெச்சு முன்னேறணும்னு ஆர்வம் இருக்கவங்க மட்டும் அதில் பங்கேற்று வீடியோ பண்ணுவாங்க. ஆனா, தடை செய்யுறது வீண்".

வழக்கறிஞர் அருள்மொழி: 

"டிக் டொக் காணொலிகளை நானும் பார்த்திருக்கிறேன். உண்மையிலேயே கொஞ்சம் அநாகரிகமாகத்தான் இருக்கிறது. ஆனால், 'அது கலாசாரத்துக்கு இழிவு, பண்பாட்டிற்குப் புறம்பானது' எனச் சொல்வது ஏற்புடையதாக இல்லை. கலாசாரத்தின் மீது நமக்கு இருக்கிற அக்கறையை, ஆற்றாமையை எப்போதெல்லாம் வெளிப்படுத்துகிறோம் என்பதைக் கவனமாகப் பாருங்கள். ஒரு பெண் தன்னை சுதந்திரமாக வெளிப்படுத்திக்கொள்ளும்போதுதான், இந்தச் சமூகம் கலாசாரம் பண்பாடு எனப் பதற்றம் கொள்கிறது.

ஆண்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு பெண் வேடிக்கைக்குக்கூட கையில் சிகரெட், பீர் பாட்டில்கள் வைத்திருந்தால் 'ஐயோ கலாசாரம் சீரழிகிறது' எனக் கூப்பாடு போடுகிறோம். ஆடை விஷயத்திலும் அதே நிலைதான். ஆண், பெண் இருதரப்பினரயும் சமமாகப் பார்ப்பதுதான் ஆரோக்கியமான கலாசாரம். எந்தவொரு கலாசாரத்தையும் சட்டம்போட்டு வளர்க்கவும் முடியாது. அது சீரழிகிறதென்று சட்டத்தினால் தடுக்கவும் முடியாது. இந்தச் செயலியைத் தடை செய்வதற்குப் பதிலாக அது எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டுமென வழிகாட்டலாம். குறிப்பாக, இதுதான் கலாசாரம் எனப் பெண்களுக்கு வழிகாட்டும் ஆண்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றி, எப்படி எச்சரிக்கையுடன் காணொலிகளைப் பதிவுசெய்ய வேண்டும் என்பதைப் பெண்களுக்குத் தெளிவுபடுத்தலாம்."