Published:Updated:

இன்று புனித வெள்ளி... சிலுவைகளைக் கண்டு அஞ்சாமல் அவற்றைச் சுமந்துகொள்வோம்! #GoodFriday

இந்த நாளில் நாம் தேவனின் தியாகத்தைத் தியானிப்பதுடன் நமக்கான சிலுவைகளைக் கண்டு அஞ்சாமல் அவற்றைச் சுமந்துகொள்வோம். தேவசித்தத்துக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். ஒப்பில்லாத இடங்களுக்குத் தேவன் நம்மை உயர்த்துவார். 

இன்று புனித வெள்ளி... சிலுவைகளைக் கண்டு அஞ்சாமல் அவற்றைச் சுமந்துகொள்வோம்! #GoodFriday
இன்று புனித வெள்ளி... சிலுவைகளைக் கண்டு அஞ்சாமல் அவற்றைச் சுமந்துகொள்வோம்! #GoodFriday

தூய்மையான அந்த மனிதரைத் தேசாதிபதிக்கு முன்பாக ஒரு குற்றவாளியைப்போல அந்த அவையில் நிறுத்தியிருந்தார்கள். அவர் தலையில் முள்மகுடம் சூட்டப்பட்டிருந்தது. முள்ளால் உண்டான காயங்களிலிருந்து ரத்தம் உருவாகி அவர் முகத்தில் வழிந்துகொண்டிருந்தது. ஆனால், அவரது முகமோ அந்தக் கடுமையைச் சிறிதும் வெளிக்காட்டாமல் காருண்யம் பொழியும் விழிகளோடு தாழ்ந்திருந்தது. அவருக்கு எதிர்புறமாக அந்தக் கொள்ளையன் நிறுத்தப்பட்டிருந்தான்.

தேசாதிபதி மக்களை நோக்கி  'உங்களுக்கு யார் விடுதலை செய்யப்பட வேண்டும்?' என்று கேட்டபோது அவர்கள் கொள்ளையனின் பெயரையே சொன்னார்கள். `அப்படியானால் இந்தப் பரிசுத்தவானை...' என்ற கேள்விக்குப் பதிலாக மக்கள் `சிலுவையில் அறையுங்கள்... சிலுவையில் அறையுங்கள்' என்று முழக்கமிட்டனர். 

2,000 ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்த நிகழ்வு இது. இயேசு சிலுவையில் அறைய அனுப்பப்பட்டார். கொள்ளையன் பரபாஸோ விடுதலை செய்யப்பட்டான். இன்றும் அந்தக் காட்சி நம் கண்முன் விரிகிறது. தினமும் நமக்குள்ளாக நடக்கும் ஒரு காட்சி இது. ஒரு புறம் நீதி, மறுபுறம் அநீதி.  

இயேசு, வாழ்ந்த காலத்தில் அனைத்தையும் அனைவரும் அறியும்படி வெளியரங்கமாகவே செய்தார். எதையும் அவர் ரகசியமாகச் செய்யவில்லை. அவரின் அற்புதங்களை எருசலேமின் மக்கள் கண்களால் கண்டு சாட்சிகளாக இருந்தனர். வியாதியோடு இருந்தவனை அவர் தனது ஒரு சொல்லின் மூலம் குணப்படுத்தினார். அவரது ஒரு அதட்டலில் பேய்கள் விலகி ஓடின. மரணத்தில் மூழ்கிப்போன லாசரை பெயர் சொல்லி அழைத்து உயிர்கொடுத்தார். அவரின் அற்புதங்களையும் அடையாளங்களையும் கண்டும் கேட்டும் அவரை அநேகம்பேர் விசுவாசித்தனர். அவரோடிருந்து அவரின் மகிமையைக் கண்ட சீடர்கள் அவருடன் இருந்தார்கள். ஆனால், இவை அனைத்தும் அவர் ஒரு கள்வனைப்போல குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட அன்று அர்த்தமில்லாமல்போனது.

இயேசு தன் உடலை மனிதகுலத்துக்கான மீட்பாகப் பணயம் வைத்தார். `என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் ரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது' (யோவான் 6: 55) என்கிற வசனத்தின்படி தனது உடலை மீட்புக்கான ஆயுதமாக மாற்றினார். காரணம், பிசாசானவன் இந்த உலகத்தை மரணத்தை முன்வைத்து அடிபணிய வைக்கிறவனாக இருந்தான். இயேசுவோ, அவனது அதிகாரம் செல்லுபடியாகாத மரணத்துக்குப் பிறகான நித்திய வாழ்வை நமக்குத் தரும்பொருட்டு, தேவனின் சித்தப்படி சிலுவையை ஏற்றார். 

இயேசு தவமிருந்த நாள்களில் பிசாசானவன் அவரை, பலவிதமான ஆசைகளையும் காட்டித் தன் பாதங்களைப் பணிந்துகொள்ளச் சொன்னான். அதுபோலவே, எப்போதும் சகல மனிதர்களையும் அவன் ஆசையால் அலைக்கழிக்கிறான். இயேசு தன் வைராக்கியத்தாலும், தவத்தாலும், இறை விசுவாசத்தாலும் தன்னைக் காத்துக்கொண்டு அவனை வெட்கப்படுத்தினார். ஆனால், அது சாதாரண மனிதர்களுக்குச் சாத்தியமில்லை. அதனால் நிரந்தரமாகப் பிசாசை ஜெயித்துக்காட்டுவதுதான், எளிய மக்களை நித்தியத்தின் பாதையில் நடத்த ஒரே வழி என்பதை அவர் அறிந்துகொண்டார். தேவனின் சித்தமும் அதுவாக இருந்தது.

பிலாத்துவின் கருணையைப் பெற அவர் ஒரு சொல் சொல்லியிருந்தாலும், அவர் இயேசுவை விடுதலை செய்திருப்பார். ஆனால், அது பிதாவாகிய தேவனின் சித்தம் இல்லை என்பதை இயேசு அறிவார். சிலுவையில் அவர் பட்ட பாடுகள் அனைத்தும் அவருக்கானவை இல்லை. அது நமக்கானது. நம் மீறுதல்களுக்காகவும், நம் அக்கிரமங்களுக்குமானது. அவர் மீது வீழ்ந்த அடிகள் அனைத்தும் நமக்கானவை. நம்மை இறைவனின் சந்நிதிக்கு உயர்த்துவதற்காக, நித்தியத்துவத்தின் பாதையில் நடத்துவதற்காகத் தாங்கிக் கொள்ளப்பட்டவை. 

அவர் ஒரு தேவ ஆட்டுக்குட்டி. மனிதர்களின் பாவத்துக்காகக் கல்வாரிச் சிலுவையில் பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டி. தேவனுக்குப் பிரியமான அவரது ஒரே குமாரனுமான ஆட்டுக்குட்டி. மரணம் அந்தக் கணத்தில் பெருவெற்றி பெற்றுவிட்ட பெருமிதத்தில் இருந்தது. பிசாசானவன் வென்றதுபோல ஒரு மாயத் தோற்றமும் அந்த நாளில் உருவானது.

வாழ்வில் இயேசுவை அறிந்தோம் என்று சொல்கிறோம். அவர் வழியில் நடப்பதாகச் சொல்லிக்கொள்கிறோம். ஆனால், நாம் பாவத்தின் வழியிலேயே நிலைத்து நிற்பதாகப் பிசாசானவன் தொடர்ந்து குற்றப்படுத்தி நம்மை ஆண்டவனின் சந்நிதியில் நிற்கவிடாதபடிக்குச் செய்கிறான். நமக்குள்ளாக எப்போதும் நீதியும் அநீதியும் எதிரெதிர் திசைகளில் நின்று கேள்வி கேட்டவண்ணம் உள்ளன. நாம் அநீதியின் பக்கம் சாயும்போதெல்லாம் நாம் மீண்டும் இயேசுவைச் சிலுவையில் அறைகிறோம் என்று பிசாசானவன் நம்மைக் குற்றப்படுத்தி, சத்தியத்தின் பாதையில் இருந்து நம்மை விலகி ஓடச் செய்ய முயல்கிறான்.

ஆனால், அன்பே வடிவான தேவனோ, நாம் பிசாசானவனால் இடறல் அடையாதபடிக்கு அவர் தன் மரணத்தின் மூலம் ஒரு நிரந்தர மீட்பை ஏற்படுத்தியிருக்கிறார். தேவனை விசுவசித்து, தேவசித்தத்துக்கு தன்னை ஒப்புக்கொடுக்க ஒப்பில்லாத இடத்துக்கு உயர்த்தப்படுவோம் என்பதை அவர் வாழ்ந்து காட்டினார்.      

தேவன், அவரை மூன்றாம் நாள் மகிமைப்படுத்தினார். மரணத்தின் மேல் ஒரு ஜெயம் உண்டானது. பிசாசானவன் வெட்கித் தலைகுனிந்தான். இவையெல்லாம், அவரது பாடுகள்மூலம் மட்டுமே சாத்தியமானது. நமக்காக, அத்தனை துன்பங்களையும் சகித்துக் கொண்டு, அன்பை மட்டுமே பிரதியுத்தரமாக வழங்கிய தேவனின் தியாகத்தைப் போற்றும் புனித வெள்ளி இன்று. இந்த நாளில் நாம் தேவனின் தியாகத்தைத் தியானிப்பதுடன் நமக்கான சிலுவைகளைக் கண்டு அஞ்சாமல் அவற்றைச் சுமந்துகொள்வோம். தேவசித்தத்துக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். தேவன் ஒப்பில்லாத இடங்களுக்கு நம்மை உயர்த்துவார்.