Published:Updated:

`மரத்தை ஒரே ஒரு போட்டோ எடுத்துக் கொடுங்களேன்!' மக்களிடம் உதவி கேட்கும் நாசா

GLOBE Observer என்ற இதன் மூலமாக பொது மக்களும் அவர்களது பங்களிப்பை அளிப்பதன் மூலமாக செயற்கைக்கோள் தரவுகளைச் சரிபார்க்க உதவலாம் எனத் தெரிவித்திருக்கிறது நாசா.

`மரத்தை ஒரே ஒரு போட்டோ எடுத்துக் கொடுங்களேன்!' மக்களிடம் உதவி கேட்கும் நாசா
`மரத்தை ஒரே ஒரு போட்டோ எடுத்துக் கொடுங்களேன்!' மக்களிடம் உதவி கேட்கும் நாசா

மெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவுக்குச் சொந்தமான பல செயற்கைக் கோள்கள் பூமியைச் சுற்றி வலம் வந்துகொண்டிருக்கின்றன. இவை பெரும்பாலும் தொலைத்தொடர்பு, ஆய்வு எனப் பல்வேறு தேவைகளுக்காக மேலே அனுப்பி வைக்கப்படுபவை. அதுபோல பூமியைப் பற்றி செயற்கைக்கோள் நடத்தும் ஆய்வு ஒன்றில் பொது மக்களும் அவர்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என விரும்புகிறது நாசா.

பக்கத்துல மரம் இருக்கா... ஒரே ஒரு போட்டோ எடுங்க அது போதும்!

கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ICESat-2 என்ற செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்தியது நாசா. ரிமோட் சென்ஸிங் வகை செயற்கைக்கோளான இது, பூமியின் மேற்பரப்பில் உள்ள சில விஷயங்களைப் பற்றி ஆய்வுசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த செயற்கைக்கோளில் ATLAS (Advanced Topographic Laser Altimeter System) எனப்படும் ஒரு முக்கியமான கருவி வைக்கப்பட்டுள்ளது. இதில் லேசர் கதிர்களை உமிழும் இரண்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் ஒன்று அவசர நிலையில் மாற்றுத் தேவைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி ஒரு நொடிக்கு 10,000 pulse என்ற வேகத்தில் லேசர் ஒளிக்கற்றைகளை பூமியை நோக்கி அனுப்பிக்கொண்டே இருக்கும். அவை பூமியின் மேற்பரப்பில் உள்ள பொருள்களின் மீது மோதும். அதேநேரம் சக்தி வாய்ந்த லேசர் கற்றைகளை உள்வாங்கும் அந்தப் பொருள்கள், அதைக் கொஞ்சம் எதிரொளிக்கவும் செய்யும். அப்படி பூமியில் உள்ள பொருள்களிலிருந்து திரும்பி வரும் கற்றைகளை உள்வாங்கிக் கொள்கிறது ICESat-2 செயற்கைக்கோள். பின்னர் அது திரும்பி வரும் நேரம் ஆகிய தகவல்களை வைத்து எதிரொளித்த பொருள்களின் உயரத்தைக் கணக்கிடுகிறது. இப்படி அது பயணிக்கும் பாதையில் 2.3 அடியில் உள்ள விஷயங்களின் உயரம் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும்.

இதே முறையில் உலகம் முழுவதுமுள்ள பனிப்பாறைகள், நீர்நிலைகள், காடுகள், கடல் நீர் மட்டம் மற்றும் நில அமைப்புகள் ஆகியவற்றை இந்த செயற்கைக்கோள் அளவிடும். மூன்று ஆண்டுகள் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இது பூமிக்கு மேலே 500 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. வெறும் உயரத்தை அளப்பது மட்டுமன்றி இதன் மூலமாக வேறொரு முக்கியமான ஆய்வையும் நாசா நடத்த திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியே உலகம் முழுவதும் பரவியிருக்கும் மரங்களின் உயரத்தை அளவிடுவது. செழிப்பான மரங்களை கண்டறிவதற்கு ஒரே வழி அவற்றின் உயரத்தையும் அடர்த்தியையும் அளவிடுவதுதான். அந்த தரவுகள் மூலமாகவே இது போல மரங்கள் எப்படி கரியமிலவாயுவின் அளவைக் குறைப்பதில் பங்கு வகிக்கின்றன என்ற மிக முக்கியமான விஷயம் ஆய்வு செய்யப்படும். தற்போது இந்த செயற்கைக்கோள் சேகரிக்கும் டேட்டாக்களின் துல்லியத்தை பரிசோதனை செய்ய விரும்புகிறது நாசா. அதற்காகவே GLOBE Observer என்ற இந்த ஆப்பை உருவாக்கியுள்ளது. இதை உலகம் முழுவதும் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் பயன்படுத்த முடியும். அதற்கேற்ற வகையில் எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. "எங்களுக்கு மரங்களின் உயரத்தைப் பற்றிய சில கூடுதல் தகவல்கள் எங்களுக்குத் தேவைப்படுகின்றன. அதற்காக விஞ்ஞானிகளை உலகம் முழுவதும் அனுப்புவது இயலாத காரியம். ஆனால் ஸ்மார்ட்போனில் இருக்கும் இந்த ஆப் மூலமாக மக்களிடமிருந்து கிடைக்கும் தகவல்கள் அந்த வேலையை எளிதாக்கும்" என்று தெரிவித்திருக்கிறார் இந்த ஆய்வுத் திட்டத்தில் பங்கு பெற்றுள்ள விஞ்ஞானியான டாம் நியுமேன் (Tom Neumann). இந்த ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டு இயங்குதளத்திலும் செயல்படும்.

இந்த ஆப்பைப் பயன்படுத்துவது எப்படி ?

இதை வழக்கமான ஆப்களைப் போலவே ப்ளே ஸ்டோரில் இருந்தோ அல்லது ஆப் ஸ்டோரில் இருந்தோ டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதைப் பயன்படுத்துவது தொடர்பாக விளக்க வீடியோ ஒன்றையும் நாசா வெளியிட்டுள்ளது. மெயில் ஐடி மூலமாகப் பதிவு செய்து கொள்ளலாம். நாசாவுக்கு உதவ விரும்பினால் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஓர் உயரமான மரத்தைப் பற்றிய அளவீடுகளைத் தரலாம். குறைந்தபட்சம் 15 அடி உயரம் இருக்கும் மரமாக இருந்தால் நல்லது. அதன் பிறகு ஆப்பில் டேட்டாவைக் கொடுப்பதற்காக இருக்கும் பகுதியைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். மரத்திலிருந்து 25 அல்லது 27 அடி உயரம் தள்ளி நின்றுகொண்டு அடிப்பகுதியிலிருந்து உச்சிவரை முதலில் போட்டோ எடுக்க வேண்டும். பின்னர், மரத்தின் அடிப்பகுதி வரை நடந்து செல்ல வேண்டும். அப்போதே மரத்தை நோக்கிச் செல்லும்போது எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறோம் என்பதைக் கணக்கிட்டு ஆப் உள்ளே அதற்காகக் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ளிட வேண்டும். மார்ச் மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆப்பில் தற்போது 20 நாடுகளிலிருந்து 700 அளவீடுகள் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என விரும்புவதாகவும் நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் நாசா நிஜமாகவே செயற்கைக்கோள் ஆராய்ச்சிக்காகத்தான் இந்த டேட்டாவை சேகரிக்கிறதா என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்பியுள்ளனர்.