Published:Updated:

'பறவைகளுக்கும் கொஞ்சம் தண்ணீர் வைங்க ப்ளீஸ்!' இளைஞர்களின் வேண்டுகோள்

வெப்பம், அனைத்து உயிர்களையுமே தாக்கக்கூடியது. அதையுணர்ந்து நாம் நமக்குத் தேவையான தற்காப்புகளைச் செய்துகொள்கிறோம். ஆனால், விலங்குகளுக்குத் தேவைப்படும் அளவுக்குப் போதுமான வாழிடத்தையோ வளங்களையோ நாம் விட்டுவைக்கவில்லை. அதனால், அவை பிழைத்திருக்கத் தேவையான சிறுசிறு உதவிகளைச் செய்ய மனிதர்கள் கடமைப்பட்டுள்ளோம்.

'பறவைகளுக்கும் கொஞ்சம் தண்ணீர் வைங்க ப்ளீஸ்!' இளைஞர்களின் வேண்டுகோள்
'பறவைகளுக்கும் கொஞ்சம் தண்ணீர் வைங்க ப்ளீஸ்!' இளைஞர்களின் வேண்டுகோள்

கோடை விடுமுறை என்றால் நம்மில் பலர் பகலில் வீட்டைவிட்டுக்கூட வெளியே வர மாட்டோம். அந்த அளவுக்குக் கோடையின் தாக்கம் இருக்கும். காலநிலை மாற்றத்தால் தற்போது வருடா வருடம் அந்தக் கோடையின் வீரியம் அதிகரித்துக்கொண்டே போவதும் விளைவுகளை மோசமாக்குகிறது. அவ்வளவு ஏன், அதிகப்படியான வெப்பத்தாலும் தண்ணீர் தாகத்தாலும் சில நேரங்களில் உயிரிழப்புகள்கூட நடக்கிறது. வெயிலின் தாக்கம் கடந்த நான்கு வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தமுறை அதிகமாக உள்ளது. மனிதர்களால்கூடத் தாங்க முடியாத வெப்பம் சின்னஞ்சிறு பறவைகளை மட்டும் எப்படி விட்டுவைக்கும்? ஆம், விட்டுவைப்பதில்லை. இந்த வெயிலின் தாக்கம் பறவைகள், வனவிலங்குகளின் உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது. 

உணவில்லாமல்கூட வாழலாம். ஆனால், ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்த யதார்த்தமான உண்மை. அது மனிதர்களுக்கு மட்டுமன்றி மற்ற உயிர்களுக்கும் பொருந்தும். அவற்றைக் காப்பாற்றுவதற்கான சிறிய முயற்சிகள்தான் பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பது. நமது சுற்றுப்புறங்களில் வீணாக வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் பறவைகளுக்கு ஆங்காங்கே தண்ணீர் வைத்து வருகிறார்கள் மதுரையைச் சேர்ந்த ஊர்வனம் என்ற தன்னார்வ அமைப்பினர். அந்தக் குழுவைச் சேர்ந்த விஸ்வாவிடம் பேசினோம், "நம்மால் வேண்டாமென்று தூக்கி எறியப்படும் பொருள்தான் பிளாஸ்டிக். அது பூமிக்கு அதிகக் கேடுகளை விளைவிக்கும் வேதிப்பொருள்களின் கூட்டு. நிலத்தில் போட்டாலும் மக்காது. எங்கு பார்த்தாலும் கிடக்கும் அவற்றைக் கோடையில் ஏற்படும் தாகத்தாலும் பசியாலும் விலங்குகளும் சாப்பிட்டுவிடுகின்றன. 

அழிவே இல்லாத மக்கவே மக்காத இந்தப் பிளாஸ்டிக்கை எப்படியாவது பயனுள்ளதாகத்தான் மாற்றியாக வேண்டும். அதிலிருந்து நீர் வைப்பதற்கான பாட்டில்களைச் செய்தோம். புதியதாக எந்தப் பொருளையும் வாங்குவதில்லை. முடிந்தளவு பழைய பொருள்களைக் கொண்டு செய்ததுதான். தயாரிக்கும் செலவும்கூடக் குறைவுதான். இது மக்களிடம் வரவேற்பு பெறுவதற்குச் சிறிது காலம் தேவைப்பட்டது. நம்மை சுற்றிச் செயற்கையாகவே இருந்துவரும் இவற்றுக்குச் சிறிதாவது இயற்கை வாசத்தைக் காட்ட முடிந்ததற்குப் பறவைகள் மட்டுமே முக்கிய காரணம். அவை மட்டுமே நம்மை இயற்கையுடனும் சுற்றத்துடனும் இணைய வைக்கிறது. முதன்முறையாகப் பறவைகளுக்குத் தண்ணீர் வைக்கும்போது எல்லோரும் வேடிக்கை பார்ப்பார்கள். அதன் பிறகு பறவை பெயர், இனம் எங்கிருந்து வருகிறது என்ற எண்ணம் பார்ப்பவரின் சிந்தனையில் கேள்விகளாக வந்துவிடுகிறது. அந்தக் கேள்விகளுக்கான தேடல் அவர்களையும் மாற்றும். அதன்பிறகு அவர்களிடமும் பறவைகளுக்குத் தண்ணீர் வைத்தல், இயற்கையை நேசித்தல், சுற்றுப்புறத்தைக் காத்தல் போன்ற எண்ணங்கள் வளர்ந்துவிடும்" என்று கூறினார்.

இந்த அமைப்பைச் சேர்ந்த குரு மற்றும் மனோவா, "நீர் இல்லாமல் பல பறவைகள் மயங்கி விழுவதை நாங்கள் நேரடியாகப் பார்க்கிறோம். அதை எடுத்து வந்து சிகிச்சை அளிக்கும்போது வல்லூறு, பச்சைக்கிளி, ஆந்தை போன்ற பறவைகளைக் காப்பாற்ற முடிகிறது. சிட்டுக்குருவி, தவிட்டுக் குருவி மற்றும் அவற்றைப் போன்ற உருவத்தில் சிறிய பறவைகள் இறந்துவிடுகின்றன. வீடுகளில் தண்ணீர் வைப்பவர்கள் முடிந்தளவு மண் பானையில் நீர் வைக்குமாறுதான் அறிவுறுத்துகிறோம். மண் பானையில் நீர் வைக்கும்போது அது வெகு நேரத்துக்குக் குளிர்ச்சியாக இருக்கும். பறவைகள் முங்கிக் குளித்து உடல் சூட்டைத் தனித்துக்கொள்ளவும் பயனுள்ளதாக இருக்கும். பொது இடங்கள் பலவற்றில் வைப்பதால் சின்னச் சின்ன பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிக்கத் தகுந்தவகையில் வைக்கிறோம். ரொம்ப இக்காட்டான சூழ்நிலையில்தான் பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் செய்து கொடுக்கிறோம். மிகவும் வறண்ட இடங்களில் இந்த பிளாஸ்டிக் பாட்டிகள் மூலம் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களை மரத்தில் கட்டி தொங்க விடுவோம். கிட்டத்தட்ட 4 முதல் 5 நாள்கள் வரை தண்ணீர் இருக்கும். நீர் தீர்ந்த பிறகு, நிரப்பிவிடுவோம். பெரும்பாலும் ஹோட்டல்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வீடுகளில் கிடைக்கும் பாட்டில்களைச் சுழற்சி முறையில் சேகரித்துக்கொள்வோம். அவற்றை ஒரு பொதுவான இடத்தில் சேர்த்து தரம் பிரித்து பாட்டில்கள்  செய்ய ஆரம்பித்துவிடுவோம். முடிந்தளவு இந்தச் சுற்றுப்புறத்தின் நிலையை மாணவர்களுக்குக் கொண்டு செல்வதுதான் எங்கள் நோக்கம். அதனால் பறவைகளுக்கு நீர் வைக்கும் பாட்டில்களை அவர்களுடன் சேர்ந்தே உருவாக்குகிறோம். நாங்கள் செய்வதைப் பார்த்து சிலர் வீடுகளுக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். பிற மாவட்டங்களில் இருந்தும் அழைப்பு வருகிறது, பயிற்சியும் தருகிறோம்" இந்தச் செய்முறை பயிற்சியைப் பற்றி மேலும் விரிவாக விளக்கினர்.

வெப்பம், அனைத்து உயிர்களையுமே தாக்கக்கூடியது. அதையுணர்ந்து நாம் நமக்குத் தேவையான தற்காப்புகளைச் செய்துகொள்கிறோம். விலங்குகளும் அவற்றுக்குத் தகுந்தவாறு தகவமைப்பு முறைகளைக் காலம் காலமாகக் கையாண்டு வந்தன. தற்போதும் அவை அதையே செய்கின்றன. ஆனால், அதற்குத் தேவைப்படும் அளவுக்குப் போதுமான வாழிடத்தையோ வளங்களையோ நாம் விட்டுவைக்கவில்லை. அதனால், அவை பிழைத்திருக்கத் தேவையான சிறுசிறு உதவிகளைச் செய்ய மனிதர்கள் கடமைப்பட்டுள்ளோம். சிட்டுக்குருவிகள் மட்டுமன்றி பல பறவைகளுக்கு நம் அக்கறை தேவைப்படுகின்றன. அந்தக் கடமையை உணர்ந்து, மனிதர்கள்பற்றிக்கூட கண்டுகொள்ளாத இந்த உலகத்தில் பறவைகளின் உயிரைக் காக்கச் சில உயிருள்ள அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவர்களுடைய முயற்சிக்கு நம் வாழ்த்துகள்.