Published:Updated:

40 ஆண்டுகள்... 5 ஏக்கர் காடு... 2 தேசிய விருதுகள்... யார் இந்த 85 வயது தேவகி பாட்டி?

40 ஆண்டுகள்... 5 ஏக்கர் காடு... 2 தேசிய விருதுகள்... யார் இந்த 85 வயது தேவகி பாட்டி?
40 ஆண்டுகள்... 5 ஏக்கர் காடு... 2 தேசிய விருதுகள்... யார் இந்த 85 வயது தேவகி பாட்டி?

வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு விபத்தில் சிக்கினார் தேவகி. 3 வருடங்கள் அவரால் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

ரங்கள் வளர்ப்பது சிலருக்கு செயல், சிலருக்குப் பைத்தியம், சிலருக்குக் காதல், சிலருக்கு வாழ்க்கை. அந்த வரிசையில், இவருக்கு மரங்கள் வளர்ப்பது கடமை. அந்த 85 வயது பெண்மணியின் பெயர் தேவகி. கடந்த மாதம், இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடமிருந்து ’நாரி சக்தி புரஸ்கார்’ தேசிய விருது பெற்றுக் கொண்டபோது, அவர் சொன்ன வாசகம்தான் "இது எனது கடமை". 

ஆலப்புழாவில் உள்ள முத்துக்குலம் நகரைச் சேர்ந்தவர் தேவகி. 1970-ம் ஆண்டுக்குப் பின்னர், திருமணம் முடிந்து தனது மாமியாருடன் விவசாயம் செய்யத் தொடங்கினார். பல வருடங்களாக இவர்களின் குடும்பத்தில் பெண்கள்தான் விவசாய வேலைகளைக் கவனித்து வருகிறார்கள். ஆண்கள் பெரிய நிறுவனங்களில் வேலைகளில் இருந்தனர். சொல்லப்போனால், இவருக்கு மாமியாரைப் பார்த்த பின்னரே விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. விவசாயம் செய்யும்போது, மரம் செடி கொடிகளுடன் புழங்கும்போது இயற்கை மீது பற்றுதல் ஏற்பட்டு மரங்கள் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு சில மரங்களை வளர்த்து வந்தார். 

வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு விபத்தில் சிக்கினார் தேவகி. 3 வருடங்கள் அவரால் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் அவரது மாமியாருக்கும் வயது மூப்பு காரணமாக விவசாயத்தில் ஈடுபட முடியவில்லை. அதனால் நிலம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. 3 வருடங்கள் கழித்து மீண்டும் நடக்க ஆரம்பித்த அவர், தனது தோட்டத்தில் ஒரு மரத்தை நட்டார். ஒன்று இரண்டாகி இப்போது 5 ஏக்கரில் காடாக வளர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில் மனைவி மரத்தை நட ஆரம்பிக்கும்போது, அவரது ஆர்வத்தைக் கண்ட கணவர், அதிகமான மரக்கன்றுகளையும், விதைகளையும் வாங்கிக் கொடுத்து காடுகளை வளர்க்க உதவியுள்ளார். தனது எண்ணத்தில் இருந்து சற்றும் பின்வாங்காத தேவகி தொடர்ந்து மரங்களை நட்டுப் பாதுகாத்தார். இதற்கு அவரது உறவினர்கள் அதிக உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். 

Images Courtesy: filmfreeway

இன்று இந்த 5-ஏக்கர் காட்டிலுள்ள மரங்களைக் காண பல மாநிலங்களில் இருந்தும் அறிவியலாளர்கள் வருகின்றனர். அறிவியலாளர்கள் தேடி வரும் அளவுக்கு இவர் சுற்றுச்சூழல் விஞ்ஞானியோ,சூழலியல் நிபுணரோ அல்ல. காட்டை உருவாக்க எங்குச் சென்றும் பயிற்சி எடுத்தது கிடையாது. இவரது ஒரே நோக்கம், 'இது நம் கடமை. மரங்களால் மட்டுமே பூமியை பாதுகாக்க முடியும். அதனால் மரங்களை அதிகமாக வளர்க்க வேண்டும்' என்பதுதான். ஐந்து ஏக்கர் காட்டை சுமார் 40 ஆண்டுகள் தொடர்ந்து பாதுகாப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இந்த முயற்சியில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பயணம் செய்தாலும், தேவகி சந்தித்த தடைகளும் அதிகம்.

இவரது காட்டில் 200 இன அரிய வகை மரங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. இவற்றில் பல அரிய வகை மருத்துவ குணம் கொண்ட தாவரங்களும் இருக்கின்றன. மரங்கள் தவிர, 2 பண்ணைக் குட்டைகள், ஆடு, மாடு எனப் பல கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். இவரது தோட்டத்தில் வளரும் மரங்களில் தேக்கு, புளி, மாம்பழம், மூங்கில் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. இவரது தோட்டத்தில் இருந்து கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், பூக்கள் எனப் பலவற்றையும் சேகரித்து காட்டைப் பார்க்க வருபவர்களுக்கு வழங்குகிறார். இவரது காட்டில் தஞ்சமடைய அதிகமான பறவைகள் வருவதால், பறவை ஆர்வலர்களும் அவ்வப்போது வருகை தருகின்றனர். 

காட்டுக்கு எல்லோரும் வேலி அமைப்பது வழக்கம். இவர் எல்லையில் உள்ள இடங்களில் கூண்டுகளும், தண்ணீர் வசதிகளையும் செய்து வைத்திருக்கிறார். அதனால் காட்டில் குரங்குகள், மயில்கள், பலவிதமான பறவைகள் என உயிரினங்களின் சத்தமாக கேட்டுக் கொண்டிருக்கிறது. தினமும் அதிக நேரங்களைத் தனது காட்டில் செலவழிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார், தேவகி. இந்தக் காட்டைப் பாதுகாப்பதற்காகவே இவரது பேத்தி தாவரவியல் படித்துக் கொண்டிருக்கிறார். 

இயற்கை முறையில் காட்டை உருவாக்கி இருக்கும் இவர் இரண்டு தேசிய விருதுகளையும், பல மாநில விருந்துகளையும் பெற்றிருக்கிறார். தனது உடல்நிலை சவாலாக இருந்தாலும் இப்போதும், மரங்களை நடந்து கொண்டே தாய்போல மரங்களைப் பராமரிக்கிறார். வரும் அனைவருக்கும் மரங்களைப் பற்றி விளக்கி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கடமை என்ற நோக்கில் ஆரம்பித்த பயணம் சுற்றுச்சூழலுக்கும், இயற்கையைப் பற்றி படிப்போருக்கும் மிகப்பெரிய பொக்கிஷமாக இருக்கிறது. இவர் நட்ட மரங்களை இன்று மூன்றாம் தலைமுறையினர் பார்வையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு