Published:Updated:

குளோபல் வார்மிங் கடல் மட்டத்தை உயர்த்துவது மட்டுமா பிரச்னை? - ஓர் எளிய விளக்கம்

மகேஷ் சுப்ரமணியன்

பூமி வெப்பமடைவதன் விளைவாக இரண்டு இயற்கை மாற்றங்களை பொதுவாகச் சொல்வார்கள் : ஒன்று : கடல் மட்டம் உயர்வது. இரண்டு : உலகம் முழுதும் வெப்ப நிலை உயர்வது. இப்போது மூன்றாவதாக இன்னொன்றும் சேர்ந்திருக்கிறது.

குளோபல் வார்மிங் கடல் மட்டத்தை உயர்த்துவது மட்டுமா பிரச்னை? - ஓர் எளிய விளக்கம்
குளோபல் வார்மிங் கடல் மட்டத்தை உயர்த்துவது மட்டுமா பிரச்னை? - ஓர் எளிய விளக்கம்

அன்றாட வாழ்வில் நாம் எத்தனையோ விஷயங்களை மிக எளிதாகக் கடந்து போகிறோம். ஆனால், அதன் பின் இருக்கும் அறிவியலைப் பற்றி நாம் துளியும் அலட்டிக் கொண்டதில்லை, அதைப் பற்றித் தெரிந்து கொள்ள விருப்பப்பட்டதுமில்லை. இதற்கு நாம் மட்டும் காரணமில்லை, நம் மதிப்பெண் சார்ந்த கல்விமுறையும், பணத்தை மட்டுமே குறியாகக் கொண்டு படிக்கச் சொல்லும் இந்தச் சமூகமும் இதற்கு முக்கிய காரணம்.

இதனால் கற்றலின் சுவையை, புதிது புதிதாய்த் தேடிக் கற்கும் ஆர்வத்தை இழந்து விடுகிறோம். உதாரணத்திற்கு ஒன்று எடுத்துக் கொள்வோம்: எத்தனை முறை கடற்கரைக்குச் சென்றிருக்கிறோம். ஆனால், கடல் அலைகளைப் பார்த்து வியந்தவர்கள், அலைகள் எப்படி ஓயாமல் அடித்துக் கொண்டேயிருக்கின்றன என்று குழம்பியவர்கள் வெகு சிலரே. ஆம், இன்று கடல் அலைகள், அவற்றின் வீரியத்தைப் பற்றித்தான் பேசப் போகிறோம்.

அலைகள் எப்படி உருவாகின்றன ?

சுருக்கமாகச் சொன்னால் காற்றால் உருவாகுகின்றன. கொஞ்சம் விரிவாகச் சொன்னால், அலைகள் வருவதற்கும் அதன் இயக்கத்திற்கும் மூன்று காரணிகள் இருக்கின்றன.

1. காற்று எவ்வளவு வேகமாக வீசுகிறது  ?

2. காற்று எத்தனை மணி நேரமாக வீசுகிறது  ?

3. காற்று, கடற்பரப்பின் மேல் எவ்வளவு தொலைவில் வீசுகிறது ? 
 
இந்த மூன்றைப் பொறுத்துத்தான் கடல் அலைகளின் வேகம் இருக்கும் என அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக, காற்றின் ஆற்றல், சக்தி, கடல் நீருக்குள் செல்லும்போது அலைகள் வருகின்றன. எப்படி ஒரு சிறிய பாத்திரத்தில் உள்ள நீரை, நம் வாயால் ஊதினால், அதில், அதிர்வுகள் வருமோ அது போல.

பூமி வெப்பமடைவதன் விளைவாக இரண்டு இயற்கை மாற்றங்களை பொதுவாகச் சொல்வார்கள் : ஒன்று : கடல் மட்டம் உயர்வது. இரண்டு : உலகம் முழுதும் வெப்ப நிலை உயர்வது. இப்போது மூன்றாவதாக இன்னொன்றும் சேர்ந்திருக்கிறது. அதுதான், Wave Power-காற்றிலிருந்து வெளிப்படும் விசை(force) அல்லது ஆற்றல்(energy) அலைகளின் ஆற்றலாக மாறுகிறது. இதுதான் Wave Power.

இந்த Wave Power வெகுவாக உயர்ந்திருப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு ஒன்று கண்டுபிடித்திருக்கிறது. சரி, அலைகளின் ஆற்றல் அதிகமானால் நமக்கு என்ன பிரச்னை ?

``பூமி வெப்பமடைவதன் அறிகுறியை எப்படி இந்த அலைகளின் கால நிலை(Wave Climate) நமக்குக் காட்டுகிறது என்று முதல் முறையாக நாங்கள் கண்டு பிடித்திருக்கிறோம். உலகம் முழுதும் கடல் அலைகளின் ஆற்றல், 1948 ம் ஆண்டிலிருந்து, வருடந்தோறும் 0.4% உயர்ந்து வருகிறது" என்று இந்தக் குழுவில் உள்ள ஆய்வாளர் ஒருவர் சொல்கிறார். வெறும் 0.4%  என்று எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இது சராசரி அளவுதான். அன்டார்டிகா பகுதிகளில் இது வருடந்தோறும் 2% உயர்ந்து வருகிறது.

நாம் பருவ நிலை மாற்றத்தை(Climate Change) எதிர்கொள்ள வேண்டுமென்றால், இந்த அலைகளின் கால நிலையை(Wave Climate), ஆற்றலைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். இந்த அலைகளின் ஆற்றல் கூடுவதால், வட பசிபிக் மற்றும் தென் துருவக் கடல் அதிக பாதிப்பிற்குள்ளாகும். இது மட்டுமல்ல, உலகம் முழுதும் கரையோரப் பகுதிகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகும். இந்த அலைகளின் ஆற்றல்தான் புயல்களை மேலும் மூர்க்கமாக்குகிறது, கரையோரக் கட்டுமானங்களுக்கு அபாயத்தை உண்டாக்குகிறது, கரையோர மணல் அரிப்பைத்(Soil Erosion) துரிதமாக்குகிறது. 

என்ன செய்யலாம் ?

 சாட்டிலைட்டுகளின் உதவியைக் கொண்டு நாம் அலைகளின் போக்கை, வலிமையைக் கணிக்க முடியும். இது கால நிலை மாற்றத்தை எவ்வாறு பாதிக்கும் என்று முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப நாடுகள், தங்களின் கரியமிலவாயு உமிழ்வை(Carbon-di-oxide emission), வெப்பத்தைக் குறைத்துக் கொள்வது பூமியில் உள்ள உயிர்களுக்கு நல்லது.