Published:Updated:

`மக்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கணும்; அதனால தொடங்கிட்டோம்!' - அசத்தும் இயற்கை விவசாயிகள்

`மக்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கணும்; அதனால தொடங்கிட்டோம்!' - அசத்தும் இயற்கை விவசாயிகள்
`மக்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கணும்; அதனால தொடங்கிட்டோம்!' - அசத்தும் இயற்கை விவசாயிகள்

மனித ஆரோக்கியத்திற்கும் உணவுக்கும் முக்கியத் தொடர்பு இருக்கிறது. அந்தக் கால மனிதர்கள், 90 வயதுக்கு மேல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம், அவர்கள் உண்ட உணவு. மாட்டு எருவும்  சாம்பலும் போட்டு வளர்ந்த பயிர்கள்.,. அதிலிருந்து கிடைத்த உணவுப் பொருள்கள் ஆரோக்கியத்தை அன்லிமிடெட் ஆக வைத்தன. பசுமைப் புரட்சிக்குப் பிறகு வயல்களுக்குள் நுழைந்தது ரசாயனம். அதன்பிறகு விளைச்சல் அதிகரித்தது. ஆனால், மனித ஆரோக்கியம் குறையத் தொடங்கியது.

ரசாயன விவசாயத்திலிருந்து மீண்டு, பாரம்பர்ய இயற்கை விவசாயத்திற்கு வரவேண்டும் எனப் பெரும் போராட்டமே நடத்தினார் நம்மாழ்வார். அதன் பயனாக, இன்றைக்கு தமிழகத்தில் இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. நுகர்வோர் மத்தியிலும் இயற்கை விளைபொருள்களுக்கு மதிப்பு கூடியிருக்கிறது.

இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருள்களை வாங்க நுகர்வோர்கள் தயாராக இருந்தாலும், உண்மையில் இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த பொருள்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் விலை படுபயங்கரமாக இருக்கிறது. இதனால் வெறுத்துப்போகும் நுகர்வோர்கள், வேறு வழியில்லாமல் மீண்டும் ரசாயன விளைபொருள்களை வாங்கிவிடுகிறார்கள். நுகர்வோருக்கும், இயற்கை விவசாயிகளுக்கும் இடையில் பெரும் இடைவெளி இருக்கிறது. இந்த இடைவெளியைக் குறைத்து, நுகர்வோருக்கு இயற்கை விளைபொருள்கள் கிடைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள், திண்டுக்கல் விவசாயிகள்.

திண்டுக்கல் மாவட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்கிறார்கள். தனித்தனியாக இயங்கி வந்த இவர்கள், தற்போது சங்கமாகச் சேர்ந்திருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்ட இயற்கை விவசாய உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் என்பது இவர்களது சங்கத்தின் பெயர். இவர்களுக்கான பிரத்யேக வாட்ஸ்-அப் குழு இருக்கிறது. சாகுபடி முறைகளில் உள்ள சந்தேகங்கள், பிரச்னைகளுக்கான தீர்வுகள் போன்றவற்றை  வாட்ஸ்-அப் குழுவில் விவாதித்துக்கொள்கிறார்கள்.  

நீர் மேலாண்மை வல்லுநர் பிரிட்டோராஜ் மற்றும் முன்னோடி இயற்கை விவசாயிகளின் ஆலோசனையுடன் சங்கம் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இயற்கை வழி வேளாண்மையில் விளையும் விளைபொருள்களை நுகர்வோரிடம் சேர்க்கும் விதமாக, நடைபாதைக் கடையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

கடந்த நான்கு வாரங்களாக வியாபாரம் நடைபெற்றுவருகிறது. திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில், சாலையோரமாக விற்பனை செய்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு மேல் தொடங்கும் வியாபாரம், இரவு 9 மணிக்கு மேலும் தொடர்கிறது. இன்றும் வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. விவசாயிகளே வியாபாரிகளாக மாறி, காய்கறிகள்மூலம் ஆரோக்கியத்தை விற்பனை செய்துகொண்டிருந்தார்கள்.

சங்கத்தின் தலைவர் கண்ணனிடம் பேசினோம். ‘’ திண்டுக்கல் மாவட்டத்தில், இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் சங்கமாக இணைஞ்சிருக்கோம்.  ஒருத்தருக்கு ஒருத்தர் ஆலோசனை சொல்லிக்கிறோம். இயற்கை விவசாய சான்றிதழ் வாங்குவதற்கான முயற்சியில இருக்கோம். இயற்கை விவசாயத்துல விளையிற பொருள்கள் சென்னை, கோயம்புத்தூர் மாதிரியான வெளிமாவட்டங்களுக்குதான் பெரும்பாலும் போகுது. ஆனா, உள்ளூர் மக்களுக்கு சரியா கிடைக்கிறதில்லை. நாங்க அதை மாத்த நினைச்சோம். உள்ளூர் மக்களுக்கும் இந்த ஆரோக்கியமான பொருள்கள் கிடைக்கணும்னு  நினைச்சோம். அதுக்காக திண்டுக்கல்ல விற்பனையைத் தொடங்க முடிவுபண்ணினோம்.

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில், ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் கொஞ்சம் பொருள்களை வெச்சு வியாபாரத்தைத் தொடங்கினோம். ஒவ்வொரு காயும்  உழவர் சந்தையில் என்ன விலைக்கு விக்குதோ, அந்த விலைக்குத்தான் இங்கேயும் விற்பனை செய்றோம். இங்க காய்கறிகளைக் கொண்டு வர்ற விவசாயிகள், என்ன காய் கொண்டு வர்றோம்னு முன்னாடியே சொல்லிடுவாங்க. அப்படி காய்களைக் கொண்டு வர்ற விவசாயிகளோட நிலத்துக்கு, சங்கத்துல இருந்து சில விவசாயிகள் போய் பார்வையிடுவாங்க. அவங்க முழுக்க இயற்கை விவசாயத்துலதான் விவசாயம் செய்றாங்களான்னு உறுதிப்படுத்திகிட்டுதான் காய்களைக் கொண்டு வர அனுமதிப்போம்.

முதல் வாரம்,  6,000 ரூபாய்க்கு விற்பனையாச்சு. அடுத்த வாரம்  14,000 ரூபாய் விற்பனையாச்சு. இப்ப வாரா வாரம் விற்பனை அதிகமாகிட்டுதான் இருக்கு. இயற்கையா விளையிற பொருள்களை வாங்குறதுக்கு மக்கள் ரொம்ப ஆர்வமா இருக்காங்க.  நியாயமான விலையில, இயற்கை விளைபொருள்கள் கிடைக்கிறதை வரவேற்கிறாங்க. எங்க கடைக்கும் வாடிக்கையாளர்கள் அதிகமாகிட்டு இருக்காங்க. வாரா வாரம் கடை திறந்ததும் தேடிவந்து வாங்கிட்டுப் போறாங்க. இந்த விற்பனை மூலமா, எங்க விவசாயிகளுக்குப் பெரிய லாபம் இல்லை. ஆனாலும், இயற்கை விவசாயத்தில விளையுற பொருள்களை எங்க மாவட்ட மக்களுக்குக் கொடுக்குறோம்ங்கிற திருப்தி இருக்கு. அதுவே பெரிய சந்தோஷம்.

சங்க உறுப்பினர்கள் எல்லோரும் இணைஞ்சு இதை செஞ்சிகிட்டு இருக்கோம். கூடிய விரைவில் பெரிய அளவுல விற்பனை செய்ற எண்ணமும் இருக்கு’’ என்றார்.

திண்டுக்கல் மாவட்ட இயற்கை விவசாய உற்பத்தியாளர்கள் நலச்சங்க விவசாயிகள் முயற்சிக்கு வாழ்த்துகள்.