Published:Updated:

``நிரோத்களுக்கு நடுவே கிளைத்திருக்கும் கனவுகள்!" - கூவாகம் திருவிழாக்களின் மறுபக்கம்

``நிரோத்களுக்கு நடுவே கிளைத்திருக்கும் கனவுகள்!" - கூவாகம் திருவிழாக்களின் மறுபக்கம்

பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் நூற்றாண்டுகள் பல கடந்துவிட்ட இந்தச் சமூகத்தில், மீண்டும் எப்படி முயன்றாலும் திருத்திக் கொள்ள முடியாத ஒரு முடிவினை பத்மநாபனும், சரவணனும் எத்தகைய சூழலில் எடுத்திருப்பார்கள்? - திருநங்கைகள் தினத்தில் கூவாகம் நோக்கிய ஒரு பயணம்...

``நிரோத்களுக்கு நடுவே கிளைத்திருக்கும் கனவுகள்!" - கூவாகம் திருவிழாக்களின் மறுபக்கம்

பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் நூற்றாண்டுகள் பல கடந்துவிட்ட இந்தச் சமூகத்தில், மீண்டும் எப்படி முயன்றாலும் திருத்திக் கொள்ள முடியாத ஒரு முடிவினை பத்மநாபனும், சரவணனும் எத்தகைய சூழலில் எடுத்திருப்பார்கள்? - திருநங்கைகள் தினத்தில் கூவாகம் நோக்கிய ஒரு பயணம்...

Published:Updated:
``நிரோத்களுக்கு நடுவே கிளைத்திருக்கும் கனவுகள்!" - கூவாகம் திருவிழாக்களின் மறுபக்கம்

சரவணன் (எ) பாப்பாத்தி முதன்முதலாகக் கூவாகம் கோயிலுக்கு வந்தபோது அவருக்கு வயது 14. அதன் பிறகு எத்தனையோமுறை அந்தக் கோயில் திருவிழாக்களில் தண்டைகள் அணிந்து கும்மியடித்து நடனம் ஆடியிருக்கிறார். இந்த முறையும் திருவிழாவுக்காக கோயிலுக்கு வந்திருந்த பாப்பாத்திக்கு முன்பு போல கும்மியடித்து நடனமாட கால்களில் வலு இல்லை. கூத்தாண்டவரை வணங்கிவிட்டு பூசாரியின் கரங்களால் தாலியைக் கட்டிக் கொள்கிறார். கோயிலை ஒருமுறை வலம்வந்துவிட்டு, அங்கிருந்த ஒரு பெரிய தூணின்கீழ் நிழல் பார்த்து அமர்ந்துகொள்கிறார். 14 வயதில் பெண்மையை உணர்ந்தவர், தற்போது நன்கு வளர்ந்துகொட்டிவிட்ட முடி, டைமண்ட் வடிவக் கல்மூக்குத்தி, சிவப்பும் பச்சையும் கலந்த கொசவம்வைத்த புடவை, சுருங்கிவிட்ட கன்னச்சருமம், வலதுகை அகலத்துக்கு  பச்சைகுத்தப்பட்ட வலதுகால் என 80 வயதில் முழுக்கிழவியாகவே மாறிவிட்டிருக்கிறார்.

கோயிலின் மற்றோர் ஓரத்தில்,

``ஆம்பள கட்டி அறுக்கும் தாலி இந்த அய்யன் திருநாளப்பாருங்கடி..

பொம்பள கட்டி அறுக்கும்தாலி இந்த பூலோகந்தன்னிலே வெங்கக்கொடி(?)…” 

என ஒருமித்த குரலில் பாடியபடியே ஐம்பது, அறுபது வயதுகளில் இருக்கும் திருநங்கைகள் வட்டமாக நின்று கும்மியடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தபடியே பெருமூச்சுவிடுகிறாள், ``என் கால்மூட்டு மட்டும் சரியா இருந்துச்சுன்னா, இந்நேரம் நான் என்ன ஆட்டம் ஆடியிருப்பேன் தெரியுமா? அதுக என் கால்தூசுக்கு வந்திருக்க முடியாது. தலநிமிர்ந்தமேனிக்கு வெறியாட்டம் ஆடியிருப்பேன். நான் முதன்முதலில் இந்தக் கோயில் திருவிழாவுக்கு வரும்போது இவ்வளவு கூட்டம் கிடையாது. இவ்வளவு கடைகளும் இருக்காது. ஆனா, எல்லாம் மாறிப்போச்சு” என்கிறார் பாப்பாத்தி. உறவுகள் பெரிதாக யாரும் இல்லாத பாப்பாத்தி, அவ்வப்போது தன்னுடைய தம்பிகள் வீட்டுக்கு மட்டும் சென்று வருகிறார். மற்ற நேரங்களில் வீடுகளில் வேலைசெய்து அதில் கிடைக்கும் பணம்தான் வருமானம்.

பாப்பாத்தி நம்மிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே அவரின் கால்களைத் தொட்டு, ”பாம்படத்தி ஆயி!” என்று கூறி வணங்குகிறார் 58 வயது மதிக்கத்தக்க ஒரு பெண். கூத்தாண்டவர் கோயிலுக்கு வரும் நாள்களில் மட்டும் அவர் பெயர் பத்மசுலோச்சனா. மற்ற நாள்களில் அவர் பெயர் பத்மநாபன். சேலத்தைச் சேர்ந்த பத்மநாபனுக்கு இரண்டு பிள்ளைகள் அடுத்த தலைமுறை பேரன், பேத்திவரை உண்டு. ஆனால், வருடம் தவறாமல் கூவாகம் திருவிழாக்கு வந்துவிடுகிறார். பொடி நிறப் புடவை, ஒரு ரூபாய் அளவுக்கு நெற்றிப் பொட்டு, கண்ணாடி வளையல், மஞ்சள் பூசிய முகத்தில் மின்னும் மூக்குத்தி, அன்று ஒருநாளைக்கு மட்டும் அணிந்துகொள்ளும் சவுரி முடிக் கொண்டையில் அடர்த்தியாகப் பூச்சரம் என ஒருநாள் முழுக்க, தான் இருக்க விரும்பிய பெண்ணாக அங்கே வலம்வருகிறார். ``நான் என்னுடைய 25 வயதிலிருந்து கூவாகத்திற்கு வருகிறேன். வருடாவருடம் இங்கே வருவேன். எங்க வீட்டில் என் மனைவி, பிள்ளைகளுக்கு நான் வருவது பிடிக்காது. ஆனால், அவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் ஒவ்வொரு முறையும் வருவேன். இங்கே வந்தால் நான் நானாக மூச்சுவிட முடியுது. என்றைக்கும் இல்லாத ஆரோக்கியம் அந்த ஒருநாள் கிடைச்ச உணர்வு” என்கிறார். வீட்டுக்குச் செல்லும்போது அவர் பத்மநாபனாகவே திரும்புகிறார்.

பத்மசுலோச்சனா, விஜயா போன்ற திருநங்கைகள் போகிறபோக்கில் தங்களின் சாதிய அடையாளத்தையும் காண்பித்துச் சென்றார்கள். ``இங்கிருக்கும் திருநங்கைகளில் என்னைத் தவிர யாருக்குமே சம்ஸ்கிருதம் தெரியாது. அதனால் ஒவ்வொரு வருடமும் இங்கு வரும்போது சம்ஸ்கிருதத்தில் எல்லோருக்கும் முந்தானை ஆசி செய்கிறேன்” என்கிறார் பத்மசுலோச்சனா. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா பேச்சின்போக்கிலேயே, ``மீரு நாயுடுகாரா? ரெட்டிகாரா?” என்கிறார். சிரித்தபடியே பேச்சைத் தவிர்த்து கோயிலின் வேறுபக்கங்களுக்கு நகர்ந்தோம். திருநங்கைகளில் வகுப்புவாரிப் பிரிவினைகள் மட்டுமே உண்டு, சாதியப் பிரிவினைகள் இல்லை என்று சொல்லப்பட்ட எங்களுக்கு அவர்களின் பேச்சுகள் ஒருவகையில் அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்தது. சாதியவிஷம் பரவும் இடங்களில் கனவுகள் நசுக்கப்பட்டுவிடும், எச்சரிக்கை!

``ஒரு பொண்ணா இருந்து பார்த்தாதான் உங்களுக்கு அந்தக் கஷ்டம் புரியும்!” என்கிற சொலவடை, ஊர்ப்புறங்களில் அதிகம். உண்மையில் ஒரு பெண்ணாக இருந்து பார்ப்பதற்கு இந்தச் சமூகத்து ஆண்களுக்கு எப்போதும் துணிவிருந்ததில்லை. அப்படித் துணிந்து தங்களைப் பெண்ணாக மாற்றிக்கொண்ட ஆண்களைப் பற்றிய உண்மைக் கதைகள்தான் மேலே சொன்னவை. பெண்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல் நூற்றாண்டுகள் பல கடந்துவிட்ட இந்தச் சமூகத்தில், மீண்டும் எப்படி முயன்றாலும் திருத்திக்கொள்ள முடியாத ஒரு முடிவினை பத்மநாபனும், சரவணனும் எத்தகைய சூழலில் எடுத்திருப்பார்கள்? 90-களின் தமிழ் சினிமாக்கள் அறிமுகப்படுத்திய திருநங்கைக் கதாபாத்திரங்கள் எல்லாம் பெண் வேடமிட்ட ஆண்கள், வேண்டுமென்றே தங்கள் மார்பகங்களை வலிந்து காட்டியதைத் தவிர திருநங்கைகளைப் பற்றிப் பெரிதாக அறிய எந்த வகையிலும் உதவியதில்லை.

ரயில் பயணங்களில் சந்தித்தவர்கள் பெரும்பாலும் கைதட்டி கலெக்‌ஷன் கேட்பவர்களாகவே இருந்தார்கள் அல்லது நள்ளிரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் தென்படுபவர்களாக இருந்தார்கள். இப்படி ஒரு சார்பாக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுவிட்ட திருநங்கைகள் வாழ்க்கையின் வெவ்வேறு பக்கங்களைப் பார்க்கச் செய்தது நடந்துமுடிந்த கூவாகம் திருவிழா.

திருவிழாவுக்காகப் பெங்களூருவிலிருந்து சென்னை வந்திருந்த சுந்தரிக்கு (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. அடையாளத்தை வெளியிடவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்) பாலியல் தொழில்தான் வருமானம். கூவாகம் கோயிலில் தாலிகட்டிக் கொண்டதும் அன்றிரவு அங்கே உடலுறவுக்காகவே வரும் ஆண்களுடன் சடங்குக்காகக் கூடியிருப்பாராம். பிறகு பெங்களூரு திரும்பியதும் மீண்டும் வயிற்றுப்பிழைப்புக்காக அதே வேலையைச் செய்ய வேண்டும்.

``100 ரூபாய்க்கு கூப்பிட்டா போகமாட்டேன். 200 ரூபா கொடுத்தாங்கன்னா போவேன். ஆபரேஷன் செய்துக்கணும்னா பணம் கட்டணும். இப்படி வசூல் செஞ்சாதான் முடியும். எங்க வீட்டில் என்னைத் தவிர அக்கா, தங்கச்சியெல்லாம் இருக்காங்க. அவங்களுக்குக் கல்யாணம் ஆகணும். அப்புறம்தான் நான் என்னைப் பத்திச் சொல்லமுடியும். இப்போது வரைக்கும் பெங்களூர்ல நான் வேற ஏதோ வேலை செய்யறதாத்தான் நினைச்சுட்டு இருக்காங்க. நாம நாமளா இருக்கமுடியாம ஒரு வாழ்க்கைதான் எதுக்கு?” என்றுவிட்டு தனது ஆண் குரலை இறுக்கிப்பிடித்துக்கொண்டு கீச்செனப் பெண் குரலில் பாடுகிறார்.

``என்ன மானமுள்ள பொண்ணுயின்னு மதுரையில கேட்டாக….” இயல்பாகப் பேசும் குரல் தடித்திருந்தாலும் அவ்வப்போது குரலை மென்மையாக்கிப் பாடுவது, திருநங்கையர்களில் பெரும்பாலானோருக்குப் பிடித்திருக்கிறது. பெண்ணாக இருப்பதன் அத்தனை  பரிணாமங்களையும் அவர்கள் உணர்ந்தவர்களாகவும் / உணர விரும்புபவர்களாகவும் இருக்கிறார்கள்.

இருபது வயதேயான ஷெர்லினுக்கு காலில் மெல்லியதாகக் கொலுசு அணிந்துகொண்டு, நீண்ட கூந்தலைப் பின்னி, நேர்த்தியாகப் புடவை அணிந்து காரில் ஊருக்குச் சென்று இறங்கவேண்டும் என்கிற ஆசை, கூடவே தான் திருநங்கையாக சி.ஏ. ஆடிட்டிங் படிப்பு முடிக்க வேண்டும் என்கிற கொள்ளைக்கனவும் இருக்கிறது. ``அம்மாதான் எனக்கு ஆதரவு. அக்கா, தங்கச்சிக்கு கல்யாணம் முடிச்சதுக்கு அப்புறம் வீட்டைவிட்டு வந்துட்டேன். நான் இப்படி இருக்கிறது எனக்குச் சரிதான். ஆனா, எங்க அம்மா, அப்பாவை ஊருக்காரங்க ஏதாச்சும் சொல்வாங்களே. என்னால எதுக்கு எங்கம்மாவுக்குக் கஷ்டம். எனக்குத் தெரியாம சோத்துல விஷம் வைச்சு என்னைக் கொன்னுடச் சொன்னேன். அப்புறம் மனசு மாறி அம்மாவுக்குக் கைப்பட கடிதம் எழுதிவைச்சுட்டு வீட்டைவிட்டுக் கிளம்பிட்டேன். ஊருக்குப் போனா ஆடிட்டர்காரியாத்தான் போவேன். படிக்கணும் அந்த ஆசை மட்டும்தான், இப்போதைக்கு இருக்கு” என்கிறார். கூவாகம் திருவிழாவையொட்டி, வருடாவருடம் நடக்கும் மிஸ்.கூவாகம் போட்டியைக் காண்பதற்காக வந்திருந்தார் ஷெர்லின்.  திருநங்கை அழகிகளை தேர்ந்தெடுக்கும் மிஸ்.கூவாகம் போட்டிகளில் ஷெர்லினைப் போன்று கனவுகள் நிரம்பப் பெற்ற பல திருநங்கைகளைக் காணமுடிந்தது.

மிஸ்.கூவாகம் போட்டி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திருநங்கை செயற்பாட்டாளர் கிரேஸ் பானு கூறுகையில், ``எப்போதும் அழகிப் போட்டி மட்டுமே நடக்கும் இந்த மேடையில் இளம் திருநங்கைச் சாதனையாளர்களுக்கு விருது கொடுத்து அங்கீகரித்திருக்கிறார்கள். திருநங்கைகளுக்கு இப்படியான சமூக அடையாளங்களைக் கொடுத்து, மற்ற எந்த விருது விழாக்களையும்போல அவர்களைச் சர்வதேச அளவில் அறியச் செய்ய வேண்டும் என்பதே எங்கள் அடுத்த இலக்கு” என்றார்.

சாதனையாளர் விருது பெற்றவர்களில் ஒருவர் சாரதா. விருதுநகர் பள்ளியில் சத்துணவுப் பொறுப்பாளர் பணியில் இருக்கிறார். கூடவே ஹோம்கார்டாகவும் பணியாற்றுகிறார், ``பள்ளியில் சேர்ந்த தொடக்கத்தில் அங்கிருக்கும் பிள்ளைகள் என்னிடம் போன் நம்பர் கேட்டு தொந்தரவு செய்வது போன்ற பிரச்னைகள் இருந்தன. ஆனால், இப்போது என்னை தங்களுடைய ஆசிரியர்களில் ஒருவராகவே பார்க்கிறார்கள். பள்ளியில் இருக்கும் சின்னப் பிள்ளைகள் தொடங்கி ``மிஸ்..மிஸ்..” எனச் சுற்றிக்கொள்வார்கள். எங்களைவிட உங்களிடம்தான் பிள்ளைகள் அன்பாக இருக்கிறார்கள்!” என்று மற்ற ஆசிரியர்களே என்னிடம் சொல்வார்கள். இதுதவிர பகுதிநேர ஹோம்கார்டாக வேலை பார்க்கிறேன். கிட்டத்தட்ட போலீஸ் உடையில்தான் வேலை பார்க்கவேண்டும். ஒரு திருநங்கையாக  மறுபிறப்பெடுத்த எனக்கு வாழ்க்கையின் மீது இருந்த அத்தனை பயத்தையும் என்னுடைய கனவுகளின் மீது இருந்த பிடிப்பு போக்கியிருக்கிறது” என்கிறார்.

மூன்று நாள்கள் நடைபெற்ற விழாவில் திருநங்கையர்கள் மட்டுமல்லாமல் சுற்றுப்பட்டு ஊர்மக்கள் அனைவருமே தாலி அணிந்து அறுக்கிறார்கள். சிலரிடம் பரம்பரை பரம்பரையாக அப்படிச் செய்யும் வழக்கம் இருக்கிறது. சிலர் வேண்டுதலுக்காகச் செய்கிறார்கள். ஊர்மக்கள் பெரும்பாலானவர்களின் பெயர்கள் கூத்தன் என்றே இருக்கிறது. இந்த முறைக் கூவாகம்விழா `திருநங்கையர்கள் தினம்' சேர வந்திருந்தது. விழா நடந்த அத்தனை நாள்களிலும் அரசு தனது `நிரோத்’ பெட்டிகளுடன் எய்ட்ஸ் பரிசோதனை செய்வதற்கான ஸ்டால் ஒன்றையும் அமைத்திருந்தது. ``ஆணுறை வழங்குவது, எய்ட்ஸ் பரிசோதனை செய்வதை நாங்கள் வேண்டாம் என மறுக்கவில்லை. ஆனால், அவற்றைக் கடந்து திருநங்கை தினத்தன்று எங்களுக்காக வேறு எதையுமே அரசு யோசிக்கவில்லையே. பாலியல் தொழிலாளிகள் மட்டும்தானா நாங்கள்?” என்கிறார் திருநங்கை ஒருவர்.

ஆணுறைகள் கடந்து அவர்களுக்காக அரசு யோசிக்க வேண்டும்! பத்மநாபன், பத்மசுலோச்சனாவாக சுவாசிக்க வேண்டும், சுந்தரியை அவளாகச் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும், சாரதா போன்று ஷெர்லினின் கனவும் நிறைவேற வேண்டும். தனது 80 வயதுவரை  திருநங்கையாகவே வைராக்கியத்துடன் கடந்துவிட்ட பாப்பாத்தி அம்மாக்களின் வலிமை அவர்களிடம் நிலைத்திருக்க வேண்டும்.