Published:Updated:

`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது!'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்

`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது!'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்
`இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது!'- உணவில்லாமல் தவித்த 4 குழந்தைகளுக்குக் குவியும் உதவிகள்

`பெற்றோர் இல்லை... உணவில்லாமல் தவிக்கும் 4 குழந்தைகள்! - சேலம் சோகம்'- என்ற தலைப்பில் தாய், தந்தையை இழந்து ஆதரவற்றவர்களாக அடுத்தவேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் வாடி நிற்கும் சோகக் கதையை மார்ச் 31-ம் தேதி விகடன் இணையதளத்தில் பதிவிட்டிருந்தோம்.  

இச்செய்தியைப் பார்த்த கரூர் இணைந்த கைகள் அமைப்பினர் 4 குழந்தைகளின் பசியைப் போக்கி கண் பார்வைக் குறைபாடு இருந்த பூபதிக்கு மருத்துவம் செய்தார்கள். பிறகு காது கேட்காமல் இருந்த ஹரிச்சந்திரன், கோபிக்கு 36,000 மதிப்புள்ள காது கேட்கும் மெஷின்கள் பொருத்தப்பட்டது. சைகை மூலமாகவே பேசியவர்கள் வாழ்க்கையில் முதன் முறையாகப் பேச்சின் ஒலியைக் கேட்டு மகிழ்ந்தார்கள். உடனே கேள்விக்குப் பதில் பேசத் தெரியாமல் சைகை செய்தார்கள். `பிறப்பிலிருந்து சைகை செய்ததால் உடனே பேச வராது. ஒரு வாரப் பயிற்சிக்குப் பிறகு நன்றாகப் பேசுவார்கள்' என்றார் மருத்துவர். `இத்தருணம் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது' என்கிறார் இணைந்த

கைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்.  

இதுபற்றி இணைந்த கைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலி, ``எங்களுடைய அமைப்பு முகநூல் நண்பர்களுக்கானது. மனிதாபிமானத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த அமைப்பை நான் 2016-ல் தொடங்கிச் செயல்படுத்தி வருகிறேன். நேரடியாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் இச்சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றி அறிந்துகொண்டு எங்கள் முகநூலில் பதிவிட்டு கொடையாளிகள் மூலம் உதவு செய்து வருகிறோம்.

விகடன் மனிதநேயத்தின் ஆலயமாகத் திகழ்கிறது. பெற்றோர்கள் இழந்து ஆதரவற்று அநாதைகளாக நிற்கும் குழந்தைகளையும், வறுமையின் கொடுமையால் மருத்துவம் பார்க்க முடியாத சிறார்களையும், கல்விக்காக ஏங்கும் மழலைச் செல்வங்களைப் பற்றியும் தாய்மையோடு அவர்களைச் சுமந்து வருகிறது. கடந்த மார்ச் 31-ம் தேதி  ``பெற்றோர் இல்லை... உணவில்லாமல் தவிக்கும் 4 குழந்தைகள்! - சேலம் சோகம்'' என்ற தலைப்பில் தாய், தந்தையை இழந்து ஆதரவற்றவர்களாக அடுத்தவேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் சேலம் இச்சமரத்துக்காடு பகுதியில் தவித்த 4 குழந்தைகளின் சோகக் கதையை குறிப்பிட்டிருந்தார்கள்.

இப்பதிவு எங்கள் மனதை கனமாக்கியது. இப்பதிவை எங்களுடைய முகநூல் பக்கத்தில் ஷேர் செய்தோம். அதையடுத்து பலரும் உதவ முன்வந்தார்கள். நேரடியாக அக்கிராமத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட பிரகாஷ், ஹரிச்சந்திரன், கோபி, பூபதி ஆகிய 4 குழந்தைகளையும் சந்தித்து அவர்களின் பசியைப் போக்க ரெண்டு சிப்பம் அரிசியும், மளிகைச் செலவுகளும் வாங்கிக் கொடுத்தோம். பிறகு கண் பார்வை குறைபாடு இருந்த பூபதியை சேலம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று 7,000 செலவு செய்து மருத்துவம் பார்த்தோம்.

காது கேட்காமல் இருந்த ஹரிச்சந்திரன், கோபி ஆகிய ரெண்டு பேருக்கும் சேலம் ரஜினி ரசிகர் மன்றத்தில் சார்பில் பிரபல இ.என்.டி மருத்துவர் சுதாகரிடம் பரிசோதனை செய்து இரண்டு பேருக்கும் 36,000 மதிப்புள்ள காது கேட்கும் மெஷின்கள் பொருத்தினோம். சைகை மூலமாகவே பேசியவர்கள் வாழ்க்கையில் முதன் முறையாகப் பேச்சின் ஒலியைக் கேட்டு மகிழ்ந்தார்கள். உடனே கேள்விக்குப் பதில் பேச தெரியாமல் சைகை செய்தார்கள். மருத்துவர், 'பிறப்பிலிருந்து சைகை செய்ததால் உடனே பேச வராது. ஒரு வாரப் பயிற்சிக்குப் பிறகு நன்றாகப் பேசுவார்கள்' என்றார். இத்தருணம் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கொண்டு அந்த 4 குழந்தைகளும் தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ வரை படிக்க வைக்க ஒருவர் முன்வந்திருக்கிறார். விகடன் மட்டும் இக்குழந்தைகளின் பற்றி தகவல் தெரிவிக்காமல் இருந்தால் பரிதாபமான நிலை ஏற்பட்டிருக்கும்'' என்றார்.
 

வாசகர்களின் கவனத்துக்கு...

இந்த குழந்தைகளுக்கு நீங்கள் நிதியுதவி அளிக்க விரும்பினால், கீழ்க்கண்ட வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தவும்..!

வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு `For Salem Kids’ என description-ல் குறிப்பிடுமாறு வேண்டிக்கொள்கிறோம்!

1. இந்தியாவில் இருக்கும் வாசகர்கள் வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட்டின் ஹெச்.டி.எஃப்.சி வங்கி சேமிப்பு கணக்கு எண் 00040330019032 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி கோட்:  HDFC 0000004, ஐடிசி மையம் கிளை, சென்னை-600002) மூலம் அனுப்பலாம்.

2. வெளிநாட்டு வாசகர்கள் வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட்டின் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ். கோட்:  IDIB000C032, ஸ்விப்ட் கோட்:  IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை - 600008) மூலம் அனுப்பலாம். 

3. நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 முகவரியில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.

4. மேலதிக தகவல் மற்றும் நிதி உதவிக்கான ரசீதுகளைப் பெற help@vikatan.com மின்னஞ்சலுக்கு தொடர்புகொள்ளவும்.

அடுத்த கட்டுரைக்கு