Published:Updated:

`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி!’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்

`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி!’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்

இப்போது மிகப்பெரும் நடிகராக தமிழ் சினிமாவைக் கலக்கிக்கொண்டிருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், 90`ஸ் கிட்ஸுக்கு எப்போதும் பட்டாபிதான்.

`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி!’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்

இப்போது மிகப்பெரும் நடிகராக தமிழ் சினிமாவைக் கலக்கிக்கொண்டிருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், 90`ஸ் கிட்ஸுக்கு எப்போதும் பட்டாபிதான்.

Published:Updated:
`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி!’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்

பகுதி - 8

`போனும் கையுமாவே திரி' என எக்குத்தப்பாய்த் திட்டினாலும் எருமைமாட்டின் மேல் மழை பெய்ததுபோல் இருக்கும் பக்குவம் 90'ஸ் கிட்ஸுக்கு எங்கிருந்து வந்தது? எல்லாம் `ரிமோட்டும் கையுமாவே திரி' என ஏற்கெனவே வண்டை வண்டையாய் வாங்கியதிலிருந்து வந்தது.

``There is no use of playing Violin, at the back of a Buffalo"

- தோழர் எம்.எஸ்.பாஸ்கர்

90`ஸ் கிட்ஸின் வாழ்க்கையில் தொலைக்காட்சிகளின் பங்கு மிகப்பெரியது. பலருடன் நண்பனாகவும் எதிரியாகவும் கூடவே அது பயணித்திருக்கிறது. எனக்கும்தான்! எனக்கு விவரம் தெரிந்திருந்தபோது, எங்கள் வீட்டில் பிளாக் அண்டு ஒயிட் டிவி ஒன்று இருந்தது. சாலிடர் மாடல் என நினைக்கிறேன். அந்த டிவி-யில்தான் முதன்முறையாக `சக்திமான்', `வயலும் வாழ்வும்', `ஒளியும் ஒலியும்', `சந்திர காந்தா’, `திப்பு சுல்தான்’, `சித்ரகார்’, `ஜானு’ எல்லாம் பார்த்தேன். ஒருநாள் மழை நேரம், டிவி-யில் ஏதோ சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. ஒருபக்கம் இடி, மின்னல் மழை. இன்னொரு பக்கம் சுவாரஸ்யமாய்ச் சென்றுகொண்டிருக்கும் சீரியல். அப்பாவுக்கு டிவியை ஆஃப் செய்ய மனம் வரவில்லை. ``ஏங்க, இடி இடிக்குது. டிவியை ஆஃப் பண்ணுங்க" என அம்மா சொல்லிப்பார்த்தார். ``ஆமா, அந்த இடி நேரா நம்ம ஆன்டனாவுல விழுறதுக்குதான் வருதோ, சும்மா இரு" என அப்பா சொல்லி முடிக்கவில்லை. இடி இறங்கி டிவி மர்கயா ஆனது. எல்லோரும் இடிந்துபோனோம்! 

``அவன் அடிச்சா அடி விழாது, இடி விழும்"

- தோழர் ஶ்ரீமன்

எங்கள் ஊரில் எத்தனையோ டிவி ரிப்பேர் கடைகள் இருக்கின்றன. ஆனால், யாரோ ஒருவரைத் தேடிப்பிடித்து அவரிடம் டிவியை ரிப்பேர் செய்ய ஒப்படைத்தார் அப்பா. டிவி இல்லாத ஒவ்வொரு நிமிடமும் வருடமாய்க் கழிந்தன. எல்லோர் முகங்களிலும் சோகக் களை தாண்டவமாடியது. இரண்டு வாரங்களாய்த் தாண்டவமாடிக்கொண்டிருந்த சோகக் களைக்கு, கடைசியாக ஓய்வு கிடைத்தது. பரிபூரண குணமடைந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தது டிவி. பொத்தினாற்போல் சைக்கிள் கேரியரிலிருந்து தூக்கிவந்து, டிவி டேபிளில் வைத்து, ஒயரை மாட்டி, ஸ்விட்ச் போட்டதுதான் தாமதம். டிவிக்குள் யாரோ சீனிவெடி வெடித்த சத்தம். மறுபடியும், டிவி மர்கயா! சில நிமிட ஓய்விலிருந்த இருந்த சோகக் களை, மறுபடியும் தாண்டவமாடத் தயாரானது. அந்த டிவி ரிப்பேர் காரரை பார்க்கும்போதெல்லாம் ஏதோ, ஜென்மப் பகையாளியைப் பார்ப்பதுபோல் அவ்வளவு கோபம் வரும். அவருடைய மகனைப் பார்க்கும்போதெல்லாம் அவனைப் பிடித்து, அண்டர்டேக்கர் ஸ்மாக் போடலாம் என்றிருக்கும்.

சரி, அண்டர்டேக்கர் எப்படி ஸ்மாக் போடுவார்? டிவியில் பார்த்தால்தானே தெரியும். வீட்டில்தான் டிவியே இல்லையே. பரவாயில்லை, பக்கத்து வீட்டில் டிவி இருக்கிறதே! அடுத்த நாளிலிருந்து பக்கத்து வீட்டில் டிவி பார்க்கும் பழக்கம் ஆரம்பித்தது. அது என் நண்பனின் வீடு, நானும் அவனும் ஒரே வகுப்பு. எல்லாம் நல்லபடியாய்ப் போய்க்கொண்டிருந்தது. அப்படியென்றால், ஏதாவது ஒன்று வில்லங்கமாய் நடக்கணுமே, நடந்தது.

ஒருநாள், எனக்கும் என் நண்பனுக்கும் அதிபயங்கரமான சண்டை. ``இனி உன் வீட்டுக்கு டிவி பார்க்க வந்தா என் பேரு சூரியா இல்லடா" என `அண்ணாமலை' ரஜினி கணக்காக வசனமும் பேசியாகிட்டது. கோபத்தில் முகம் கோவைப்பழம் கலரில் சிவக்க, ஆக்ரோஷ நடைபோட்டு அவன் வீட்டுக்குத் திரும்பினான். அன்று இரவு கரன்ட் கட்டாகி இருந்ததால், வீட்டில் எல்லோரும் மொட்டைமாடியில் உறங்கிவிட்டோம். மறுநாள், காலை வெயில் வருவதற்கு முன் ஏதோ கருகிய நாற்றம் வீசியது. `என்னடா இது?' என எட்டிப்பார்த்தால், அதோ என் நண்பனின் வீடு. அங்கிருந்துதான் கரும்புகை வெளியாகிக்கொண்டிருக்கிறது. அப்பா, பதறி அடித்து அங்கு ஓடினார். 

``இருள் நீடிக்கிறது"

- தோழர் தம்ராஜ் கில்விஷ்

நேற்று இரவு கரன்ட் கட்டானதும், வீட்டினுள் மெழுகுவத்தி ஏற்றிவிட்டு மொட்டைமாடிக்கு உறங்கச் சென்றிருக்கிறார்கள் நண்பனின் குடும்பத்தார். அவர்கள் மெழுகுவத்தி ஏற்றியது பிரச்னை இல்லை... எதில் ஏற்றினார்கள் என்பதுதான் பிரச்னை. டிவியின் மேல் இரண்டு மெழுகுவத்திகளை `ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' மிஷ்கினைப்போல் ஏற்றியிருக்கிறார்கள். மெழுகு எல்லாம் உருகி, பிறகு டிவியின் பிளாஸ்டிக் பாடி உருகி, கடைசியாக மதர்போர்டும் எரிந்துவிட்டது. குட்டி எரிமலையாய் எரிந்து, உருகி ஓடிக்கொண்டிருந்த அந்த டிவியின் காட்சி, இன்றும் கண்களில் அப்படியே இருக்கிறது! பாவம், இதுவரை எங்கள் முகத்தில் மட்டும் ஆடிக்கொண்டிருந்த சோகக் களைக்கு, பக்கத்து வீட்டிலேயே புதிதாய் நான்கு முகங்கள் கிடைத்தன. அன்றிலிருந்து டிவி பார்க்க அவன் வீட்டுக்குச் செல்லாததால், என் பெயரிலும் மாற்றம் ஏதும் நிகழவில்லை.

``உனக்கு உன் கஷ்டம்"

- தோழர் சூரி

இந்தச் சம்பவம் நடந்தது நான்கைந்து மாதத்தில் எங்கள் வீட்டுக்கு புது டிவி வந்தது. ரிமோட்டுடன்கூடிய கலர் டிவி! இந்த டிவிதான் பல விஷயங்களை எனக்குக் கற்றுத்தந்த கம்ப்யூட்டர் சாம்பிராணி! எத்தனை எத்தனையோ அருமையான நிகழ்ச்சிகளை, நினைவுகளை இந்த டிவிதான் எனக்குக் கொடுக்கத் தயாராய் இருந்தது. இந்திய அணி ரன்னர் அப்பாக வந்த 2003 கிரிக்கெட் வேர்ல்டு கப், என் தலைவி வீஜே பலோமா தொகுத்து வழங்கிய SS மியூசிக் நிகழ்ச்சிகள், `தில்லானா தில்லானா' நடன நிகழ்ச்சி, ஸ்வர்ணமால்யாவின் `இளமை புதுமை', விஜயசாரதி ரிவர்ஸிலேயே நடந்து தொகுத்து வழங்கும் `நீங்கள் கேட்ட பாடல்', பெப்ஸி உமாவின் `உங்கள் சாய்ஸ்', `ஜென்மம் எக்ஸ்', `மர்மதேசம்', `ருத்ரவீணை', `ஸ்ஸ்ஸ்... என்னமோ இருக்கு' போன்ற திகில் நாடகங்கள், `லொள்ளு சபா', `மீண்டும் மீண்டும் சிரிப்பு', `நையாண்டி தர்பார்' போன்ற காமெடி கலாட்டா நிகழ்ச்சிகள் எல்லாம் நினைத்துப் பார்க்கும்போதே, 90`ஸ் கிட்ஸின் பால்ய பருவம் எவ்வளவு நிறைவானது என்பது புரிகிறது.

இப்போது மிகப்பெரும் நடிகராக தமிழ் சினிமாவைக் கலக்கிக்கொண்டிருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், 90`ஸ் கிட்ஸுக்கு எப்போதும் பட்டாபிதான். `கலக்கப்போவது யார்' இல் காமெடி செய்ய `பால் வடியும் முகத்தோடு' வந்த சிவகார்த்திகேயன் அப்படியே நினைவில் இருக்கிறார். அவர் மட்டுமா... மதுரை முத்து, ரோபோ சங்கர், கோவை குணா, சுட்டி அரவிந்த், ராஜன், கோகுல், அருண்ராஜா காமராஜா, ஶ்ரீ, மணிகண்டன், தங்கதுரை, வெங்கடேஷ் என எத்தனை பேர் இருக்கிறார்கள் நம்மைச் சிரிக்கவைத்தவர்கள். `மைடியர் பூதம்' காலத்திலிருந்தே நிவேதா தாமாஸின் ரசிகன் நான். ஹிஹி... `மாயா மச்சிந்திரா' நினைவில் இருக்கிறதா?!

இது தவிர்த்து, `கார்ட்டூன் நெட்வொர்க்', `போகோ'வில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை எல்லாம் பட்டியல் போட்டால், பக்கம் தாங்காது. எத்தனை நிகழ்ச்சிகள் இருக்கின்றன, நம் ஃபேவரைட்டாக. ஏன் நிகழ்ச்சிகள் மட்டுமா இருக்கின்றன, விளம்பரங்களும் இருக்கின்றனவே! வெள்ளைத்தாடி வெச்சிருக்கும் தாத்தாவின் முகம், பாலகனின் பால் வடியும் முகமாக மாறி அப்படியே ஜிமிக்கி போட்ட அக்காவின் முகமாய் மாறும் `நிஜாம் பாக்கு' விளம்பரத்தை மறக்க முடியுமா..! பள்ளிக்கூடத்தில் படிச்ச ரைம்ஸைவிட அந்த விளம்பரத்தில் வரும் பாட்டு இன்னும் ஞாபகம் இருக்கே. `பெரியவர் சிறியவர் அனைவரும் சுவைத்திடும் நிஜாம் பாக்கு... அன்றும் இன்றும் என்றும் தரமே நிஜாம் பாக்கு'. எல்லோருக்கும் ஃபேவரைட் இந்த விளம்பரம். ஒண்டர் கேக்கின் வெவ்வேறு சுவைகளை ஒரே பாட்டில் சொன்ன `ஓ ஓ ஓ ஓண்டர் கேக்' விளம்பரம். `பைனாப்பிள்' எனச் சொல்லும்போது மஞ்சள் கலர் டி-ஷர்டும், `சாக்லேட்' எனச் சொல்லும்போது பிரவுன் கலர் டி-ஷர்டும் அணிந்து கெத்துகாட்டும் அந்தச் சின்னப் பையன் இப்போது பெரிய பையன் ஆகியிருப்பான்ல? நீர்வீழ்ச்சி, காடு எனச் சுற்றித் திரியும் அந்தக் காதல் ஜோடிதானே, ஆப்பிள் மரத்தில் காய்க்கும் என்பதை நமக்கு கண் முன்னே காட்டியது.

`ஆயுர்வேத மூலிகைகளாலே உள்நாட்டிலே தயாரானது' என்ற வரி முடிந்தவுடன் ஒரு தாத்தா பல்லைக் காட்டிச் சிரிப்பாரே ஞாபகம் வந்துவிட்டதா என்ன விளம்பரம் என? வாஷிங்பவுடர் நிர்மா...! `கலக்குறே சந்துரு... புது வீடு, புது வண்டி, புது மனைவி... ஹ்ம்ம்ம் பிரமாதம்'. விளம்பரம் ஒளிபரப்பாகும்போதெல்லாம் நாமும் இந்த வசனத்தை கூடவே சொல்வோம். நம் நண்பர்கள் ஏதேனும் புது பொருள்கள் வைத்திருந்தால் `கலக்குறே சந்துரு...' என்பதை மறுக்க முடியுமா! எங்கே இருக்க சந்துரு? இன்னும் ஹட்ச் டாக், எம்.டி.ஆர் குலோப் ஜாமூன் விளம்பரம், ராணி முகர்ஜியின் `டன்கு', ஹூடிபாபா, ஏ.ஆர்.ரஹ்மானின் ஏர்டெல் விளம்பரம் என எத்தனை எத்தனை அற்புதமான நினைவுகள் 90`ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையிலே... ஆனால், அதையெல்லாம் 90`ஸ் கிட்ஸ் வெளியில் சொல்லிக்கொள்வதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு டிவி விளம்பரம்தான் பிடிக்கும், வீண் விளம்பரம் பிடிக்காது!

முந்தைய பகுதிகள் :