Published:Updated:

`இது இந்திய வனங்களுக்கு நல்லதல்ல!' புலிகளின் இறப்பு உணர்த்தும் உண்மை

`இது இந்திய வனங்களுக்கு நல்லதல்ல!' புலிகளின் இறப்பு உணர்த்தும் உண்மை

புலிகள் பாதுகாப்பு வனத்தின் பெருவாரியான உயிரினங்களின் பாதுகாப்பிற்கு வழிவகுப்பதால் அதில்தான் வனத்துறை அதிக கவனம் செலுத்தும். ஆனால், சமீபகாலமாக புலிகள் பாதுகாப்பு பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

`இது இந்திய வனங்களுக்கு நல்லதல்ல!' புலிகளின் இறப்பு உணர்த்தும் உண்மை

புலிகள் பாதுகாப்பு வனத்தின் பெருவாரியான உயிரினங்களின் பாதுகாப்பிற்கு வழிவகுப்பதால் அதில்தான் வனத்துறை அதிக கவனம் செலுத்தும். ஆனால், சமீபகாலமாக புலிகள் பாதுகாப்பு பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

Published:Updated:
`இது இந்திய வனங்களுக்கு நல்லதல்ல!' புலிகளின் இறப்பு உணர்த்தும் உண்மை

காடுகளுக்குள் பயணிக்கும் காட்டுயிர் ஆர்வலர்கள் அனைவருக்கும் தாங்கள் பயணிக்கும் காடுகளிடம் பொதுவாக ஒரு வேண்டுதல் இருக்கும்; புலியைப் பார்க்கவேண்டும். அதன் கால்தடங்கள் அல்லது எச்சங்களையாவது பார்த்துவிடவேண்டும். ஒரு காட்டின் ராஜாவாக சிங்கத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாலும், அதைவிடப் புலிகளுக்கு எப்போதுமே மதிப்பு அதிகம். காட்டில் இயல்பான வாழிடத்தில் அதன் கம்பீரமான நடையைப் பார்க்க, பல கோணங்களில் ஒளிப்படங்களாகப் பதிவு செய்ய தவம் கிடப்பவர்கள் ஏராளம். இந்திய வரலாற்றில் வெகுவாகக் குறைந்துபோன இவற்றின் எண்ணிக்கை பல முயற்சிகளுக்குப்பின் அதிகமாகத் தொடங்கியது. புலிகள் பாதுகாப்பு வனத்தின் பெருவாரியான உயிரினங்களின் பாதுகாப்பிற்கு வழிவகுப்பதால் அதில்தான் வனத்துறை அதிகக் கவனம் செலுத்தும். ஆனால், சமீபகாலமாக இவற்றின் பாதுகாப்பு பின்னடைவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. 

வேட்டை, வனத்துறையே சுட்டுக் கொல்லுதல், வாழிடப் பிரச்னைகளால் புலிகளுக்குள் நிகழும் சண்டைகள் என்று இறப்பு விகிதம் அதிகமாகிக் கொண்டே போகின்றது. அப்படி இறந்த சில புலிகளைப் பற்றி இங்கே ஓரளவுக்கு அலசிப் பார்ப்போம். அதன்மூலம் அவற்றின் இருப்பு எந்த அளவுக்கு ஆபத்திலிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் முயல்வோம்.

இந்த மாதத் தொடக்கத்தில், ஏப்ரல் 5-ம் தேதி மேகமலை வனப்பகுதியில் ரோந்துப் பணியிலிருந்த வனக்காவலர்கள் ஓர் ஆண்புலி இறந்து கிடந்ததைப் பதிவுசெய்தனர். அதற்கு பத்து வயதிருக்கும். அடுத்தநாளே உடற்கூறாய்வு நடத்தப்பட்டது. எல்லையை நிர்மாணிக்க இரண்டு வயதுவந்த புலிகளுக்கு இடையே நடந்த சண்டையில் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலும் இதேபோன்ற எல்லைச் சண்டையில் சுமார் ஐந்து வயது நிரம்பிய ஆண் புலியொன்று கொல்லப்பட்டது. அதேபோல் மத்தியப் பிரதேசத்தின் கன்னா சரணாலயத்தில் எல்லைச் சண்டையில் பன்னிரண்டு வயது புலி ஒன்று கொல்லப்பட்டது. அந்தச் சரணாலயத்தில் கடந்த இரண்டே மாதங்களில் இது இரண்டாவது சம்பவம். அதற்குமுன் ஜனவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ஓர் ஆண்புலி பெண்புலியைக் கொன்று சாப்பிட்டிருக்கிறது. 2015-ம் ஆண்டு ஆட்கொல்லி என்று அறிவித்து முதுமலை சரணாலயத்தில் ஒரு புலியைச் சுட்டுக் கொன்றனர். 2014-ம் ஆண்டிலிருந்து வேட்டை, வாழிடச் சண்டை மற்றும் ஆட்கொல்லி என்று அறிவித்ததன் மூலமாக 34 புலிகள் தமிழகத்தில் கொல்லப்பட்டுள்ளன. தற்போது வயநாடு நீலகிரி வனப்பகுதிகளில் சுற்றித்திரியும் மற்றுமொரு புலியை ஆட்கொல்லி என்று அறிவித்து சுட்டுக்கொல்ல கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 15-ம் தேதி, தெலங்கானா மாநிலத்தின் கவால் சரணாலயத்தில் ஓர் ஆண் புலி வேட்டையாடப்பட்டது. அது அங்கிருப்பது பதிவு செய்யப்பட்ட நாற்பதே நாள்களில் இது நடந்தேறியது. அதே வனப்பகுதியில் புலிகளின் வாழ்வியலுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பல பிரச்னைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. காட்டுப் பன்றிகள், மான்களைப் பிடிப்பதற்காக வைக்கப்படும் கண்ணிகள், வேட்டைப் பொறிகளில் சிக்கிக்கொள்வது அங்கு வாடிக்கையாக நடக்கிறது. அதில் சிக்கிய ஒரு புலி சுமார் ஒருமாதகாலம் கழுத்தில் சிக்கிய கண்ணியோடே சுற்றித்திரிந்து கடைசியில் பரிதாபமாக உயிரிழந்தது. இதேபோல் தடோபா வனப்பகுதியிலிருந்து அங்கு வந்துசேர்ந்த ஆண்புலியொன்றும் வேட்டையாடப்பட்டது. அதன் தோல் மற்றும் சில உறுப்புகள் நவம்பர் மாதம் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு வனத்துறைப் புலிகள் பாதுகாப்பில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. 1996-ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை அங்கு மட்டுமே 20 புலிகள் காணாமல் போயுள்ளன. 

கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக புலிகளே இல்லாத நிலையில்தான் கவால் இருந்தது. கடைசியாக தடோபாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த புலிதான் சரணாலயத்திற்குப் புத்துணர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. அதுவும் வேட்டையாடப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி மீண்டும் ஒரு புலியின் தோல் பறிமுதல் செய்யப்பட்டது. இப்போது கவால் புலிகள் சரணாலயத்திற்குள் அவற்றுக்கு சுத்தமாக பாதுகாப்பே இல்லாத சூழல் நிலவுவதாகச் சூழலியலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. நாடு முழுக்கத் தொடர்ச்சியாகப் பல்வேறு பகுதிகளில் நிகழும் இவற்றின் மரணங்கள் வேதனையளிக்கிறது. 2018-ம் ஆண்டில் மட்டும் சுமார் 100 புலிகள் இந்தியாவில் இறந்துள்ளன. இப்படியே போனால், இவற்றின் இருப்பே இந்தியாவில் கேள்விக்குறியாகிவிடும். இந்த நூறு மரணங்களில் 49, புலிகள் காப்பகங்களுக்கு வெளியே நடந்துள்ளன. காப்பக வனப்பகுதிகளில் அவற்றுக்கான வாழ்விடம் போதுமான அளவுக்கு இல்லாததே அவை அதைவிட்டு வெளியேயுள்ள காடுகளுக்கு வருவதற்குக் காரணம். தற்போதைய கணக்குகளின்படி நாட்டின் மொத்த எண்ணிக்கையில் 40 சதவிகிதம் புலிகள் காப்பகங்களுக்கு வெளியேதான் வாழ்ந்துவருகின்றன.

சமீபத்தில் ஆட்கொல்லி என்று அறிவிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட அவ்னி என்ற புலியின் மரணம் மொத்த நாட்டையும் உலுக்கியது. கிழக்கு மகாராஷ்டிராவில் கொல்லப்பட்ட அவ்னியின் மரணத்தில் பல சந்தேகங்கள் இருக்கின்றன. அதனால் வேட்டையாடிக் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரின் மரணத்திற்கு அவ்னிதான் காரணமென்று இறுதிவரை நிரூபிக்கப்படவே இல்லை. இறந்தவர்களை உடற்கூறாய்வு செய்யும்போது அவர்களின் உடலில் அவ்னியால் கொல்லப்பட்டதற்கான மரபணு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. உண்மை இப்படியிருக்க, அதற்கு ஆட்கொல்லி என்று பெயர்சூட்டிச் சுட்டுக்கொல்ல உத்தரவிட்டது மகாராஷ்டிர மாநில வனத்துறை.

உச்சநீதிமன்றம் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வேண்டுமென்று கூறியும் அதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் நேரடியாகச் சுட்டுக் கொன்றார்கள். உடற்கூறாய்வுகள் மயக்க ஊசி செலுத்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று தெளிவாகக் காட்டியது. இரண்டு குட்டிகளுக்குத் தாயான அவ்னியை, அதிலும் புலிகளின் எண்ணிக்கை உயர்வில் முக்கியப் பங்கு வகிக்கும் பெண் புலியைச் சுட்டுக் கொன்றது தேசியளவில் காட்டுயிர் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காட்டுயிர்ப் பாதுகாப்பில் இந்தியாவிடமுள்ள குறைபாட்டை இந்தச் சம்பவம் மொத்த உலகத்திற்கும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியது.

அவ்னி இறக்கும்போது பிறந்து பத்து மாதங்களே ஆகியிருந்த அதன் இரண்டு குட்டிகளும் என்ன ஆனது என்ற தகவல்களை வனத்துறை இதுவரை தெரிவிக்கவில்லை. அவ்னி இறக்கும்போது அதனுடன் குட்டிகள் இல்லையென்று கூறிய வனத்துறை இதுவரை அவற்றைப் பற்றிய விவரங்களை கூறவுமில்லை. அவற்றைப் பிடித்ததற்கான எந்தவொரு சான்றையும் வெளியிடவுமில்லை. அவை வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டிருக்கவோ அல்லது கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டு சீனா, தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளின் கள்ளச்சந்தைகளில் விற்கப்பட்டிருக்கவோ வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. காடு மற்றும் காட்டுயிர் தொடர்பாக நாடு முழுவதுமிருக்கும் புரிதலின்மையே புலிகளின் இறப்புக்கும் அவற்றின் வாழிட அழிப்புக்கும் முக்கியக் காரணம். அவ்னி, அந்தப் புரிதலின்மையின் ஒரு வெளிப்பாடே.

திட்டமிடப்படாத நடவடிக்கைகள், அரசியல்ரீதியாக ஊக்குவிக்கப்பட்ட கட்டுமானங்கள் வனப்பகுதிகளில் வருவது, சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகள், வனத்தையொட்டிய தொழிற்சாலைகள், அவற்றின் விரிவாக்கம் என்று பல காரணங்களை மனித-காட்டுயிர் எதிர்நோக்குதலுக்குக் காரணங்களாகச் சொல்லலாம். இந்தப் பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்படுவது புலி, சிறுத்தை, சிங்கம், யானை போன்ற உயிரினங்களே. புலிகளுக்குப் போதுமான வாழிடங்களை நாம் விட்டுவைக்க வேண்டும். அதையும் செய்வதில்லை. ஒரு மொத்தக் காட்டுக்கும் சரணாலய அந்தஸ்தை நீக்கித் தொழிற்சாலைகளுக்குத் தாரைவார்க்க நினைக்கிறது உத்தரப்பிரதேச அரசாங்கம். இப்படியான அவலநிலையில்தான் நம் அரசுகள் இருக்கின்றன. மிகப்பெரிய பல்லுயிர்ச்சூழலைத் தன்னகத்தே கொண்டுள்ள நாடு இந்தியா. ஆனால், அதன் காட்டுயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள் உலகத் தரத்தோடு ஒப்பிடும் அளவுக்கு அவ்வளவு சிறப்பாக இல்லை.

விலங்குகளை இடம் மாற்றுவதில் இன்னமும் நம்மிடம் போதிய அறிவியல்பூர்வ அணுகுமுறைகள் இல்லை. விலங்கு வேட்டை மற்றும் கடத்தலில் புலிகளின் தோல், உடல் உறுப்புகள் பல இடங்களில் சமீபகாலமாகப் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. மிகக் குறைவான சம்பளம், போதுமான பயிற்சி இல்லாமை, வாகனக் குறைபாடு, ஆயுதக் குறைபாடு, தொழில்நுட்பக் குறைபாடு என்று பல சிக்கல்களோடு பணிபுரிந்துவரும் வேட்டைத்தடுப்பு மற்றும் வனக்காவலர்களால் இந்தக் குற்றங்களை எப்படி முற்றிலுமாகக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும். இந்த நிலை இப்படியே நீடித்தால் புலிகளின் இருப்பு மெல்ல மெல்ல பாதிக்கப்பட்டு விரைவில் முற்றிலும் அழிந்துவிடும். 

அந்த நிலை தோன்றுவதற்குள், அரசாங்கம் விழித்துக்கொண்டு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்கவேண்டும். இல்லையென்றால் இந்தியக் காடுகள் தெற்காசியப் புலிகளின் சவக்காடுகளாக மாறிவிடும்.