Published:Updated:

``தம்பி படிப்பு, வீட்டுச் செலவு, கார், ரோடு... எல்லாமே சித்ராவாலதான்!’’ - தோஹா சாம்பியன் சித்ராவின் பெற்றோர்

``தம்பி படிப்பு, வீட்டுச் செலவு, கார், ரோடு... எல்லாமே சித்ராவாலதான்!’’ - தோஹா சாம்பியன் சித்ராவின் பெற்றோர்
``தம்பி படிப்பு, வீட்டுச் செலவு, கார், ரோடு... எல்லாமே சித்ராவாலதான்!’’ - தோஹா சாம்பியன் சித்ராவின் பெற்றோர்

சித்ரா மெட்ரோ சிட்டியில் பிறக்கவில்லை. அவரது பெற்றோர் செல்வந்தர்கள் இல்லை. அவர் சி.பி.எஸ்.இ, மெட்ரிக் பள்ளியிலும் படிக்கவில்லை. ஆனால், அவரிடம் வைராக்கியம் இருந்தது. தடகளத்தில் தடம் பதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது. அந்த வெறிதான், இன்று தங்கப்பதக்கமாக அறுவடையாகி உள்ளது.

ஆசிய தடகளப் போட்டியில் 1,500 மீட்டர் தொலைவை, சித்ரா கடந்தது 4.14 நிமிடங்கள். இந்த வெற்றிக்குப் பின்னால் அசுரத்தனமான உழைப்பு இருக்கிறது. ஏழ்மை போர்த்திய அவருடைய குடும்பத்தின் துணை இருக்கிறது. ஏழ்மையைக் கடந்து, மேல் மட்ட அரசியலை முறியடித்து, காயத்தில் இருந்து மீண்டு தோஹாவில் வியர்வை சிந்த வெறித்தனமாக ஓடுகிறார் பி.யூ.சித்ரா. கடந்த ஆண்டு யாரால் வெற்றி வாய்ப்பு தவறியதோ... அதே பக்ரைன் வீராங்கனை சித்ராவை மிகவும் குறைந்த இடைவெளியில் துரத்திக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருந்தவர் எல்லைக் கோட்டை கடந்து வெற்றி வாகை சூடினார்.

ஒரே வெற்றியில் அத்தனை வலிகளுக்கும், வேதனைகளுக்கும் மருந்து கிடைத்துவிட்டது. இந்த வெற்றிதான் செப்டம்பரில் நடக்கவுள்ள ஐ.ஏ.ஏ.எஃப் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் சித்ராவை நேரடியாகத் தகுதி பெறவைத்துள்ளது. இந்த வெற்றிதான் 130 கோடி இந்திய மக்களைப் பெருமையடைய வைத்திருக்கிறது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், முண்டூர்தான் சித்ராவின் கிராமம். வானம் பார்த்த பூமி. உலக அளவில் ஒரு வீராங்கனையை உருவாக்க எந்தத் தொழில்நுட்ப வசதியும் அங்கு இல்லை. முண்டூர் அரசுப் பள்ளியில்தான் சித்ரா படித்தார். தந்தை, தாய் கூலித் தொழிலாளிகள். அவர்களுக்கு மொத்தம் 4 குழந்தைகள். மூன்று பெண்கள், ஒரு ஆண். சித்ரா மூன்றாவது குழந்தை. 

சிறு வயதில் இருந்தே ஓட்டப்பந்தயம்தான் சித்ராவின் மூச்சுக் காற்று. பள்ளியில் படு சுட்டியாக இருந்தவரைப் பட்டை தீட்டி பயிற்சி கொடுத்தார் சிஜின் என்ற பயிற்சியாளர். பள்ளியிலிருந்து மாவட்டம். மாவட்டத்திலிருந்து மாநிலம். மாநிலத்திலிருந்து தேசியம். தேசிய போட்டிகளில் இருந்து ஆசிய அளவிலான போட்டி. அதிலும் தடம் பதித்து, தற்போது உலகச் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறார்.

கிரிக்கெட்டை மட்டுமே பிரதானமாகப் பார்க்கும் நமது நாட்டில், மற்ற விளையாட்டுகளைப் பற்றியோ, அதில் நடக்கும் அரசியல்களைப் பற்றியோ தெரிவது சற்று கடினமே. பி.யூ, சித்ரா ஏற்கெனவே ஆசிய போட்டிகளில் இரண்டு முறை பதக்கம் வென்றுள்ளார். அதில் ஒரு முறை (2017) தங்கமும் வென்றிருக்கிறார். அப்படி வெற்றி பெற்றும், அவரால் உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை.

உலகச் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொள்ள அனைத்துத் தகுதிகள் இருந்தும், தேர்வுக் குழுவில் இருந்தவர்கள் செய்த அரசியலால் சித்ராவுக்கு முதலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பல்வேறு தரப்பில் இருந்து இவருக்கு ஆதரவு கிடைத்தது. கேரள உயர் நீதிமன்றம் வரை சென்ற பிறகுதான், தனக்கான நீதியைப் பெற்றார். நீதி கிடைத்தும், அந்த ஆண்டு சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. அதேபோல, நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் ரயில்வே துறையில் வேலையும் கிடைத்திருக்கிறது. கடந்த சில மாதங்களாகக் காயத்தால் அவதிப்பட்டு வந்திருக்கிறார் என்பது தனிக்கதை.  

அந்த வைராக்கியக்காரியின் கிராமமான முண்டூருக்குச் சென்றோம். அங்கு அவருடைய வீட்டுக்கு வழி கேட்டாலே உற்சாகமாக வழி சொல்கிறார்கள். வீட்டை அடைந்தபோது சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. ஆசிய சாம்பியனின் தாயும், தந்தையும் கூலி வேலைக்குச் சென்று, உணவு இடைவேளைக்காக வீட்டுக்கு வந்திருந்தனர். அந்த வீட்டின் வரவேற்பு அறையை சித்ராவின் பதக்கங்களும், கோப்பைகளும், படங்களும் நிறைத்திருந்தன. நம்மிடம் பேசினார் சித்ராவின் தந்தை உன்னிகிருஷ்ணன்.

``சின்ன வயதில் இருந்தே அவளுக்கு விளையாட்டு மேலதான் ஆர்வம். காலையில் 5.30 மணிக்கு எழுந்து பயிற்சிக்கு போயிடுவா. மீண்டும் 8 மணிக்கு வீட்டுக்கு வந்துவிட்டு, 9 மணிக்குப் பள்ளிக்குக் கிளம்பினால் 4 மணி வரை பள்ளியிலதான் இருப்பா. பிறகு, வீட்டுக்கு வந்து இரவு 8 மணி வரை பயிற்சியில ஈடுபடுவா. வீட்ல சாப்பாடு இல்லைனாலும், மழை அடிச்சு கொட்டினாலும்... சித்ரா தன்னோட பயிற்சியை மட்டும் என்னிக்கும் நிறுத்தினதில்லை. எப்படியும் சாதிச்சிருவானு தெரியும். ஆனா, இந்த அளவுக்குச் சாதிப்பானு நாங்க எதிர்பார்க்கலை. அவ நினைச்சது மாதிரியே உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில கலந்துகிட்டு ஜெயிச்சுட்டா... அரசு வேலையும் கிடைச்சிருச்சு. போதும்பா... மனசு நிறைவா இருக்கு. நாங்க ரெண்டு பேரும் எங்க போனாலும் நீங்க சித்ராவோட அப்பாவானு கேட்குறப்ப அவளோ பெருமையா இருக்கு. 

பயிற்சி, போட்டினு பம்பரமா சுழன்றுட்டு இருக்கிறதுனால ஒருநாள் பெங்களூரு, ஒருநாள் ஊட்டில இருப்பா. எப்போவாவது விடுமுறை கிடைச்சா எங்களைப் பார்க்க வருவா. அதுவும் ஒருநாள் அல்லது ரெண்டு நாள்தான். மறுபடியும் கிளம்பிடுவா. ஆனா, எங்க இருந்தாலும் எங்ககிட்ட பேசாம இருக்க மாட்டா. தோஹால இருந்துகூட கூப்பிட்டா. `பதற்றமா இருக்குப்பானு சொன்னா... தைரியமாக இறங்கு. `உன்னால் முடியும் மோளே'னு தைரியப்படுத்தினேன். போட்டி முடிஞ்சதும் மறுபடியும் கூப்பிட்டப்ப அவளோ குரல்ல அவளோ உற்சாகம். இந்த மகிழ்ச்சி தொடரணும்'' என்றார் தந்தை

சித்ராவின் தாய் வசந்த குமாரிக்கு வார்த்தைகளே வரவில்லை. ``எங்களால் முடிந்தவரை அவளுக்குத் துணையாக இருந்தோம். அரசாங்கமும் நல்லா சப்போர்ட் பண்ணுச்சு. இப்ப இருக்கிற என் மனநிலையை வார்த்தையால சொல்ல முடியலை. அவளோ சந்தோஷமா இருக்கேன். எங்க மூத்த பொண்ணு கல்யாணம் பண்ணி வைச்சு, இப்ப நாங்க குடியிருக்கிற இந்த வீட்டைக் கட்ட மட்டும்தான் எங்களால முடிஞ்சது. ஆனா தன்னோட கூடப்பிறந்த அக்காவுக்குத் திருமணமும், தம்பியைப் படிக்க வைக்க எல்லாம் சித்ரா மட்டும்தான் உதவுறா.

நாங்க உட்கார்ந்திருக்கிற சோஃபா, வீட்டுக்கு மேல கூடுதலா கட்டிட்டு வர்ற அறை, கார் எல்லாமே சித்ரா தன் உழைப்பால சம்பாதிச்சது. கேரள அரசும், உ.பி முலாயம் சிங் யாதவும் சித்ராவுக்கு தலா ஒரு நானோ கார் பரிசா கொடுத்தாங்க. அதை இங்க கொண்டுட்டு வர்றது சரியான சாலை வசதியில்லை. அதை தெரிஞ்சுகிட்டு அரசாங்கம் சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்தாங்க. இப்படி தனக்கானதை தன் உழைப்பாலேயே கொண்டு வந்தவ என் மக.

தன் வயசுக்கு மீறின கஷ்டத்தை அனுபவிச்சுட்டா. இனியாவது அவ நிம்மதியா இருக்கணும்னு அவளுக்கு கல்யாணத்தை பண்ணிப் பார்க்க ஆசைப்படுறோம். ஆனா, இப்ப வேண்டாம்னு மழுப்பிட்டே இருக்கா. 6-ம் வகுப்புல இருந்து ஓடிட்டு இருக்கிற அவளுக்கு நிம்மதி வேணும் இல்லியா?'' என்கிறவருக்கு பேச முடியாமல் கண்ணீர் பெருகுகிறது.

மிகச் சந்தோஷம் சித்ரா. உங்கள் உழைப்புக்கான பலன் இந்த வெற்றி... தொடர்ந்து கிடைக்கட்டும்.

அடுத்த கட்டுரைக்கு