Published:Updated:

'எல்லா நகரங்களிலும் வறுமைக்கோடு இருக்கிறது!' ட்ரோன் படங்கள் உணர்த்தும் நிஜம்

'எல்லா நகரங்களிலும் வறுமைக்கோடு இருக்கிறது!' ட்ரோன் படங்கள் உணர்த்தும் நிஜம்
'எல்லா நகரங்களிலும் வறுமைக்கோடு இருக்கிறது!' ட்ரோன் படங்கள் உணர்த்தும் நிஜம்

இந்த வேறுபாடுகள், இன்றைக்கு உலகின் வளர்ந்த நாடுகளாகச் சொல்லிக்கொள்ளும் எல்லா நாட்டின் நகரங்களிலும் உண்டு. இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும், இந்தளவுக்கு மனிதர்களுக்கிடையே வேறுபாடுகள் இருப்பது, மானுட சமூகம் நாகரிகத்தில் இன்னும் மெச்சும் அளவுக்கு முன்னேறிவிடவில்லை என்பதையே காட்டுகிறது.

மது கண்களால் நேரடியாகப் பார்க்க முடியாத பல விஷயங்கள் இன்றும் இந்தப் பூமியில் இருக்கின்றன. ஆனால் மனிதர்களாகிய நாம் புத்திசாலிகள், மைக்ரோஸ்கோப் கண்டுபிடித்து ஒற்றைச் செல் உயிரினங்களைக் கண்டோம். தொலைநோக்கியைக் கண்டுபிடித்து நட்சத்திரங்களைக் கண்டோம். இவை அனைத்துக்கும் உருவமுண்டு என்பதால் ஏதேனும் தொழில்நுட்பம் ஒன்றை வைத்து அதைப் பார்த்துவிடுகிறோம். ஆனால், உலகில் இருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நம்மால் வெளிப்படையாக என்றுமே பார்க்க முடியாது. புகைப்படக்கலைஞர்கள் ஏழ்மையைப் படம்பிடிக்க மனிதர்களின் முகங்களுக்கு குளோஸ்-அப் வைப்பர். அந்த முகம் வெளிப்படுத்தும் உணர்வுகள் அந்த ஏழ்மையை நம்முள் கடத்தும். சிலர் அவர்களின் வாழ்வியலைப் படம்பிடிப்பர். சில ஆங்கில கடி ஜோக் பிரியர்களிடம் சிக்கினால் "Which is the line you can never see?" (உங்களால் பார்க்கவே முடியாத கோடு எது?) என்று கேட்பார். உண்மையில் எத்தனையோ பதில்கள் இருக்கும், எதைச் சொல்வது என்று யோசிப்போம். `Poverty Line’ (வறுமைக்கோடு) என்று சொல்லி சிரிப்பர். ஆனால், உண்மையில் இந்த வறுமைக்கோடு என்பதைப் பார்க்க முடியாத என்ன. இன்றைய சமூக சூழலில் பெரும் நகரங்களில் அதை நிச்சயம் பார்க்க முடியும் என நிரூபித்திருக்கிறார் ஜானி மில்லர் என்னும் புகைப்படக் கலைஞர். இதற்குப் பெரிதாக எதுவும் தேவையில்லை, ஒரு ட்ரோன் கேமரா மட்டும் போதும்.

அவரது கதையின் வழியாக இது எப்படி சாத்தியம் என்பதைப் பார்ப்போம். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரைச் சேர்ந்த ஜானி மில்லர் தனக்கென ஒரு ஃபேஸ்புக் பக்கம், அதில் அவ்வப்போது தனது கேமராவில் பிடிக்கும் படங்களைப் பதிவேற்றுவது எனத்தான் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தார். அப்போதுதான் ட்ரோன் கேமரா ஒன்றை வாங்கியிருக்கிறார் அவர். கேப் டவுனின் பிரபல டேபிள் மலைக்கு (Table Mountain) சென்று வீடியோவும், புகைப்படங்களும் எடுத்தார். அந்த வீடியோவை பார்த்த அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர், "இப்படி ஒரு கோணத்தில் நான் டேபிள் மலையைப் பார்த்ததே இல்லை" என மெயில் அனுப்பியிருக்கிறார். இப்படி நண்பர்கள் பாராட்டுவது சாதாரணமாக நடக்கும் விஷயம்தான் என்றாலும், அந்தப் பாராட்டில் எதோ ஓர் உண்மை இருப்பதை உணர்ந்தார். வெறும் ஒரு ட்ரோன் கொண்டு இதுவரை அனைவரும் பார்த்து பழகிய ஒரு இடத்தை வேறு ஒரு கோணத்தில் மக்கள் பார்க்க முடிந்தது. அதற்கு ஒரு சக்தி இருக்கிறது என அவர் நம்பினார். தரையிலிருந்து மக்கள் பார்க்க முடியாததைப் படமெடுக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார். 

ஜானி மில்லர் 

முதலில் தனது சொந்த நகரமான கேப் டவுனில் ட்ரோன் மூலம் படங்கள் எடுத்தார். ஒருபுறம் ஒவ்வொரு வீட்டுக்கும் நடுவில் அவ்வளவு இடைவெளி, இன்னொரு புறம் ஒரே சுவரை பகிரும் சிறிய வீடுகள். இதைப் பிரிப்பது ஒரு சாலையாக இருக்கும். இப்படியான இடைவெளிகளை நகரமெங்கும் அவரது படங்களின் மூலம் கவனிக்க முடிந்தது. வெறும் 300 லைக்ஸ் இருந்த அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் இப்படி படம்பிடித்த முதல் படம் ஒரு இரவில் 40,000 பேரைச் சென்றடைந்தது. இந்த வரவேற்பு, தான் நினைத்ததை அப்படியே இந்தப் படங்கள் மக்களிடம் சென்று சேர்த்தது என்பது புரிந்தது. இதுபோக, அடுத்தடுத்த வாரங்களில் தென்னாப்பிரிக்கா மட்டுமன்றி உலகம் முழுவதிலுமிருந்து அவருக்கு ஊடகங்களில் இருந்து அழைப்புகள் வரத்தொடங்கின. இதன் முக்கியத்துவம் உணர்ந்த அவர் தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரங்களுக்குச் சென்று இதைப் போன்று படங்களை எடுக்க ஆரம்பித்தார். இது அப்படியே ஓர் இயக்கமாக மாறி இன்று உலகமெங்கும் இருக்கும் பெருநகரங்களில் இந்த ஏற்றத் தாழ்வுகளைப் படம்பிடித்துவருகிறது. கடந்த ஆண்டு மும்பைக்கும் இதற்காக வந்திருந்த ஜானி மில்லர். இவர் உலகமெங்கும் பெரிய நகரங்கள் பெரும்பாலும் இதே போன்றே கட்டமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

கவனம் பெற்ற முதல் புகைப்படம்

இவரது இந்தப் பணிக்கு பின் இருக்கும் உழைப்பு மிகப் பெரியது. சும்மா ஒரு பெரிய நகரத்துக்குச் சென்றோம் ஏதோ ஒரு இடத்தில் ட்ரோனை பறக்க வைத்தோம் என இல்லாமல் படமெடுப்பதற்கு முன்பே அந்த நகரை ஆராய்ந்து பல தகவல்களைப் பெற்று எங்கு ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கிறது என்பதைப் பார்த்து பின்புதான் அந்த இடத்துக்குச் சென்று புகைப்படம் எடுக்கிறார். 

எதற்காக இதைச் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு இவர், "நான் இந்த வேலைகளில் இருக்கும்போது 12 வயதே ஆன ஒரு சிறுமியைப் புகைப்படம் எடுத்தேன். கேப் டவுனில் உள்ள ஒரு சிறிய தகர வீட்டில் வாழ்கிறார் அவள். அரசுப் பள்ளியில் பயில்கிறார். அவளும் நம்மைப் போலவே படிக்கிறாள், வருங்காலத்தில் வேலைக்குச் செல்லப்போகிறாள், குழந்தைகள் பெறப்போகிறாள். அவள் வாழும் அந்தப் பகுதியில் எடுத்த ட்ரோன் படத்தில் ஒருபுறம் வீடுகளையும் சாலையின் மறுபுறத்தில் ஒரு சிறிய கட்டடத்தையும் பார்க்கலாம். அந்தக் கட்டடத்தில் மொத்தம் 10 கழிவறைகள் இருக்கின்றன. 20,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் அந்த மொத்த பகுதிக்குமே அவை மட்டும்தான் கழிவறைகள். இதனால் இதற்காக சாலையின் மறுபுறத்தில் இருக்கும் புதர்களுக்கு செல்வதுதான் அவர்களுக்கு ஒரே வழி. ஆனால், புதர்கள் ஆபத்தானது. சில வருடங்களுக்கு முன்பு இப்படிச் சென்ற இந்தச் சிறுமியின் தோழிகள் திரும்பி வரவே இல்லை.

தரையில் இருந்து எப்படிப் புகைப்படம் எடுத்தாலும் இந்த நிலையையும் ஏற்றத் தாழ்வுகளையும், மனிதர்களே அமைத்துக்கொள்ளும் வேலிகளையும் நம்மால் பார்க்கவே முடியாது. அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்கும் வகையிலாவது நகரங்கள் கட்டமைக்கப்பட வேண்டும். இப்படியான அவல நிலையில்தான் அருகில் இருக்கும் மக்கள் வாழ்கின்றனர் என்பதை மக்கள் அனைவரும் உணர வேண்டும். ஒன்றிணைந்து வாழ வேண்டும். அதன் முக்கியத்துவத்தின் இந்தப் படங்கள் மக்களுக்கு உணர்த்தும்." என்கிறார். ஐக்கிய நாடுகள் சபை இவரது பணிகளைப் பாராட்டி தங்களது Sustainable Development Goal Action விருதுகளில் 'Visualiser' பிரிவில் பரிந்துரைப் பட்டியலில் இவர் பெயரைச் சேர்த்துள்ளது. விருது இவருக்குக் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மேலே மில்லர் குறிப்பிட்ட பகுதி (மேலும் படங்களுக்கு படத்தை க்ளிக் செய்க)

இந்த நிலை நம்மூரிலும் இருக்கிறது. சில நேரங்களில் நமது பார்வைக்கு அவை தெரிவதில்லை, இல்லை அதைப் பார்க்க வேண்டாம் என்று நாமே நம் கண்களை மூடிக்கொள்கிறோம். நாமே கட்டமைத்துக்கொள்ளும் இந்தத் தடைகளையும் வேலிகளையும், பிரிவினைகளையும் கடந்து பார்க்கத் தொடங்குவோம். நமக்கு மிக அருகில் இருந்தும் மிகத் தொலைவில் இருக்கும் மக்களுடன் கைகோத்து குறைந்தபட்சம் அவர்களது சாதாரண பிரச்னைகளுக்காவது தீர்வுகள் காண்போம். ஏற்றத் தாழ்வுகளை புறந்தள்ளி மனிதத்துக்கான நல்ல எதிர்காலத்தை நோக்கி நகர்வோம். 

அடுத்த கட்டுரைக்கு