Published:Updated:

``கார் கழுவியிருக்கேன், மூட்டை தூக்கியிருக்கேன், சந்தேக கேஸ்ல சிக்கியிருக்கேன்!" - முனீஸ்காந்த் #LetsRelieveStress

அவர் தனக்கு ஏற்பட்ட தோல்விகள், பிரச்னைகள் அவை தந்த மனஅழுத்தம், அவற்றிலிருந்து வெளிவந்தவிதம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

``கார் கழுவியிருக்கேன், மூட்டை தூக்கியிருக்கேன், சந்தேக கேஸ்ல சிக்கியிருக்கேன்!" - முனீஸ்காந்த் #LetsRelieveStress
``கார் கழுவியிருக்கேன், மூட்டை தூக்கியிருக்கேன், சந்தேக கேஸ்ல சிக்கியிருக்கேன்!" - முனீஸ்காந்த் #LetsRelieveStress

முண்டாசுப்பட்டி' முனீஸ்காந்துக்கு மளமளவென படங்கள் குவிய, மனிதர் இரவு பகல் பாராமல் நடித்துக்கொண்டிருக்கிறார். முனிஸ்காந்த் என்றே அறியப்பட்டாலும், அவரது இயற்பெயர் ராம்தாஸ். இந்த நிலையை அடைய, வீட்டைவிட்டு கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் வனவாசப் போராட்டம் நடத்திக் கடந்து வந்திருக்கிறார்.

``எனக்கு சொந்த ஊர் வத்தலக்குண்டு பக்கத்துல நிலக்கோட்டை. 2002-ல சினிமா வாய்ப்புத் தேடி சென்னை வந்தேன். பெரும்பாலும் வடபழனி ஏரியாவுலதான் சுத்திக்கிட்டிருப்பேன். அப்போ நான் 'பங்க் க்ராப்' வச்சிருப்பேன், தலைநிறைய முடி இருக்கும். தங்குறதுக்கு இடம் கிடையாது. பலநாள் ராத்திரி அங்க இருக்கிற பூக்கடை, பிளாஸ்டிக் கடை வாசல்ல படுத்துத் தூங்கியிருக்கேன். ராத்திரி 12 மணிக்கு போலீஸ் லத்தியால தட்டி எழுப்பி, விருகம்பாக்கம் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போய் சந்தேக கேஸ் போடப்போறதா சொல்வாங்க. பாக்கிறதுக்கு அக்யூஸ்ட் மாதிரிதான் இருப்பேன். அப்புறம் 'இவன் தப்பான ஆள் இல்ல, விட்டுடுவோம்'னு சொல்லி காலையில விட்டுடுவாங்க. 

விருகம்பாக்கம் ஸ்டேஷனுக்கே நாலஞ்சுமுறை கூட்டிட்டுப் போயிருக்காங்க. ஒருநாள் ரைட்டர் ஒருவர், 'தம்பி இந்தமாதிரி அடிக்கடி வந்தீங்கன்னா, வேற ஏதாவது கேஸ் போட்டு கோத்துவிட்டுடுவாங்க, அப்புறம் யார் சொன்னாலும் காப்பாத்த முடியாது, ஏன்னா, ஒருவர் மாதிரியே இன்னொருவர் இருப்பாங்கனு சொல்ல முடியாது'னு சொன்னார். எனக்கு பகீர்னு ஆயிட்டு. அந்தமாதிரி நேரங்கள்ல `ஏண்டா இந்த ராத்திரி வருது. பகலாகவே இருந்துடக் கூடாதா'னு நினைப்பேன்.   

ஒவ்வொரு நாள் தூங்கப் போகும்போதும், 'இன்னிக்கு போலீஸ் தொல்லையில்லாம இருக்கணும்'னு நினைச்சுக்கிட்டே போவேன். அதெல்லாம் என் வாழ்க்கையில ரொம்ப கொடுமையான நாள்கள். அவற்றையெல்லாம் சினிமாமேல இருந்த ஒரு வெறியால தாங்கிக்கிட்டேன். அந்தமாதிரி தூக்கங்கெட்டுப்போன இரவுகள் எனக்கு ரொம்ப மனஅழுத்தத்தைத் தந்துச்சு. பகல் நேரத்துல ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டா எங்க கூப்பிட்டாலும் போய் நடிச்சிட்டு வருவேன். அப்போதான் டான்ஸரா இருந்த மைக்கேல் பாலுங்கிற ஃப்ரெண்ட் கிடைச்சார். அவரோட ரூம்ல கொஞ்ச நாள் தங்கியிருந்து வாய்ப்பு தேடினேன். சிலநேரம் வேலை கிடைக்கும், சிலநேரம் எதுவும் இருக்காது. பல நாள் பன் பட்டர் ஜாமும் டீயும் சாப்பிட்டுதான் காலத்தை ஓட்டியிருக்கேன்.

ஒருதடவை சினிமா ஸ்ட்ரைக் வந்துடுச்சு. அந்தமாதிரி நேரங்கள்ல கையில காசே இருக்காது. கேட்டரிங் வேலைக்குப் போய் சாம்பார் வாளி, தண்ணி ஜக்கை தூக்கிட்டுப்போய் சந்தோஷமாகப் பரிமாறுவேன். வேலை முடிஞ்சவுடனே காசு கொடுப்பாங்க. நாலுநாள் பொழுது நல்லா ஓடும், அவ்வளவுதான். அதேபோல கார் கழுவுறது எனக்குப் பிடிச்ச வேலை. காலைல 4 மணிக்குப் போனா 10 மணிக்குள்ள பத்து, பதினைஞ்சு கார் வரை கழுவிடுவேன். ஒரு காருக்கு 50 ரூபா பணம் தருவாங்க. கோயம்பேடு மார்க்கெட்டுல மூட்டை இறக்குறது, வீடுகளுக்குப் பெயின்ட் அடிக்கிறதுனு சீஸன் வேலைகளையும் செய்வேன். இவையெல்லாம் நிரந்தர வேலை இல்லைங்கிறதால திடீர்னு பட வாய்ப்பு கிடைச்சவுடனே நடிக்கப் போயிருவேன்.  

நான் எட்டாவது வரைக்கும்தான் படிச்சேன். அப்பா சின்ன வயசுல இறந்துட்டார். அம்மா, அண்ணன், தம்பினு நாலு பேர் கொண்டது என் குடும்பம். அண்ணனும் தம்பியும் நல்லா படிச்சு நல்ல வேலைக்குப் போய்ட்டாங்க. சினிமா வாய்ப்பு தேட ஆரம்பிச்சப்போ அப்பப்ப பணம் அனுப்புவாங்க. அப்புறம் அவங்களுக்குச் சிரமம் எதுக்குன்னு பணம் அனுப்ப வேண்டாம்னு சொல்லிட்டேன். ஊர்ப்பக்கம் அதிகம் போறதில்லை. என்னோட வாழ்க்கை ரொம்பவும் வலி நிறைஞ்சதுதான். ஆனா, தொடர் தோல்வி, நிச்சயமில்லாத தன்மை, ஏமாற்றம்னு எல்லாமே ஒரு கட்டத்துல பழகிப்போச்சு. 2014-ல 'முண்டாசுப்பட்டி'ங்கிற படத்துல வாய்ப்பு கிடைக்கிறவரைக்கும் வாழ்க்கை நிச்சயமில்லாம போராட்டமாதான் இருந்துச்சு. 

சென்னை, பல்லாவரம் பக்கத்துல உள்ள திருமுடிவாக்கத்துல ஒரு அமைப்பு சார்பா விபாசனாங்கிற பேர்ல பயிற்சி முகாம் நடந்துக்கிட்டிருக்கு. அங்கே நான் இரண்டுதடவை போய் வந்திருக்கேன். இந்தப் பயிற்சியில கலந்துக்கிடுறவங்க பத்து நாள் அங்க தங்கி இருக்கணும், யாரோடயும் பேசக்கூடாது. நமக்கு வெளியுலகத்தோட எந்தத் தொடர்பும் இருக்காது. அவங்க கொடுக்குற சாப்பாட்டைச் சாப்பிட்டு, தியானம் பண்ணணும். இந்த அனுபவம் எனக்கு எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையையும் எதிர்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தைத் தந்திருக்கு. வெற்றியில துள்ளிக்குதிக்காமலும் தோல்வியில துவண்டு போகாமலும் இருக்கிற மனசை எனக்குத் தந்திருக்கு'' என நிதானமாகச் சொல்கிறார் முனீஸ்காந்த் எனும் ராம்தாஸ். 

சினிமா எக்ஸ்க்ளூசிவ்,  சுவாரஸ்யமான பேட்டிகள் உள்ளிட்ட விகடனின் செய்திகளை உங்கள் டெலிகிராம் ஆப்பில் பெற இணைந்திடுங்கள்! https://t.me/vikatanconnect