Published:Updated:

`இங்கு வீட்டுப்பாடம் கிடையாது!'- மாணவர்களுக்காக இலவச சம்மர் கேம்ப் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை

கு.ஆனந்தராஜ்
`இங்கு வீட்டுப்பாடம் கிடையாது!'- மாணவர்களுக்காக இலவச சம்மர் கேம்ப் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை
`இங்கு வீட்டுப்பாடம் கிடையாது!'- மாணவர்களுக்காக இலவச சம்மர் கேம்ப் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை


 

கோடை விடுமுறையில், பெற்றோர்கள் பலரும் தங்கள் சொந்தச் செலவில் பிள்ளைகளைச் சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புவார்கள். ஆனால், தான் சுற்றுலா செல்வதற்குச் சேமித்து வைத்தப் பணத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகக் கோடை சிறப்பு வகுப்புகளை நடத்திவருகிறார், ஆசிரியை சசிகலா. இவர், கடலூர் மாவட்டம் கிள்ளை கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆசிரியை. இந்தச் சிறப்பு முயற்சி குறித்து, சசிலாவிடம் பேசினோம்.

``தற்போது கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை குறைந்துவிட்டது. அதனால், முந்தையக் காலங்களைப்போல கோடை விடுமுறையில் குழந்தைகளை தாத்தா-பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைப்பதும் குறைந்துவிட்டது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்களால் பணம் செலுத்திச் சிறப்பு வகுப்புகளில் கலந்துகொள்வது கஷ்டம்தான். எனவே, குழந்தைகளை நெறிப்படுத்தவும், மகிழ்ச்சிப்படுத்தவும் கோடை வகுப்புகளை எடுக்க முடிவெடுத்தேன். இதுகுறித்து தெரிந்தவர்களுக்கெல்லாம் சொன்னேன். பல மாணவர்கள் ஆர்வமாக வர ஆரம்பித்து, தற்போது 50-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் என்னுடைய கோடை சிறப்பு வகுப்பில் கலந்துகொள்கின்றனர். அனைவருமே,  3 முதல் 8-ம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள். 

இங்கு பாடப் புத்தகம் கிடையாது; வீட்டுப்பாடம் கிடையாது; மதிப்பெண் கிடையாது. விளையாட்டுப் பொருள்கள் மற்றும் கதைப் புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. ஓவியம் வரையலாம். எனக்குக் கைவினைப் பொருள்கள் செய்வதில் ஆர்வம் அதிகம். எனவே விருப்பப்பட்ட மாணவர்களுக்கு கைவினைப் பொருள்களைச் செய்யக் கற்றுக்கொடுக்கிறேன். இதில் அவரவர் தங்களுக்குப் பிடித்ததைத் தேர்வு செய்யலாம். இந்த வகுப்புக்காக வாடகைக்கு வீடு எடுத்திருக்கிறேன். காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை சிறப்பு வகுப்பு நடக்கும். தற்போது ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் 2-3 வாரத்துக்குக் கோடை வகுப்புகளை நடத்தவுள்ளேன். ஒவ்வொரு நாளும், குழந்தைகளுக்கு ஒவ்வொரு வகை சிற்றுண்டியையும் கொடுக்கிறோம். தற்போது என் பள்ளியைச் சேர்ந்த ஓர் ஆசிரியையும் தானே முன்வந்து, என்னுடன் இணைந்து பணியாற்றுகிறார். 

இது என் கனவுப் பள்ளியைப் போல. மாணவர்களுக்குக் கவலையை உண்டாக்காத, இதுபோன்ற மகிழ்ச்சியான பள்ளிச் சூழல்தான் ஆரோக்கியமானது. ஆனால், அவை நடைமுறைக்குச் சாத்தியமில்லை. எனவேதான், என்னால் இயன்ற வகையில் இந்தக் கோடை வகுப்பைச் செயல்படுத்தியிருக்கிறேன். குடும்பத்துடன் கோடைச் சுற்றுலாவுக்காகச் சேமித்து வைத்திருந்த பணத்தில்தான், இந்த வகுப்புகளைச் செயல்படுத்தியிருக்கிறேன். ஒருவேளை  சுற்றுலா சென்றிருந்தாலும், எங்கள் குடும்பத்தினர் மட்டுமே மகிழ்ச்சியடைந்திருப்போம். ஆனால், இப்போது 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுதானே பெரிய விஷயம்" என்று புன்னகைக்கிறார், சசிகலா.