Published:Updated:

25 கிராம் கஞ்சா வைத்திருந்த ரூ.50,000 கோடி அதிபதி! - ஜப்பானில் நெஸ் வாடியாவுக்குச் சிறை

எம்.குமரேசன்
25 கிராம் கஞ்சா வைத்திருந்த ரூ.50,000 கோடி அதிபதி! - ஜப்பானில் நெஸ் வாடியாவுக்குச் சிறை
25 கிராம் கஞ்சா வைத்திருந்த ரூ.50,000 கோடி அதிபதி! - ஜப்பானில் நெஸ் வாடியாவுக்குச் சிறை

வாடியா குழுமத்தைச் சேர்ந்த நெஸ் வாடியா கஞ்சா வைத்திருந்ததாக ஜப்பானில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவர். பிரிட்டானியா பிஸ்கட்,  பாம்பே டையிங், கோ- ஏர் நிறுவனங்களும் இவருக்குச் சொந்தமானவைதான். வாடியா குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 13.1 பில்லியன் யுஎஸ் டாலர்கள் ஆகும். நெஸ் வாடியாவின் சொத்து மதிப்பு சுமார் 50,000 கோடி ஆகும்.

மார்ச் மாதத்தில் வடக்கு ஜப்பானில் உள்ள ஹோக்கிடோ தீவுக்குச் சுற்றுலா சென்றபோது, விமான நிலையத்தில் 25 கிராம் கஞ்சாவுடன் நெஸ் வாடியா பிடிபட்டுள்ளார்  தன் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக அதைக் கொண்டு வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்தார். கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக ஜப்பானில் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார். ஜப்பானுக்குத் தடை செய்யப்பட்ட போதை மருந்து கொண்டு வந்ததாக, சப்போரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து வாடியா குழுமம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. வாடியா குழுமத்தின் தவைவர் நுஸ்லி வாடியாவின் மூத்த மகன் நெஸ் வாடியா ஆவார். இவர், சர்ச்சையில் சிக்குவது ஒன்றும் புதிது அல்ல. பஞ்சாப் அணியின் மற்றொரு உரிமையாளராக ப்ரீத்தி ஜிந்தாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.