Published:Updated:

`படங்கள் வந்துச்சு, பொருத்தமா இல்ல... நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கேன்!'- இசையமைப்பாளர் ஜனனி

வி.எஸ்.சரவணன்
`படங்கள் வந்துச்சு, பொருத்தமா இல்ல... நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கேன்!'- இசையமைப்பாளர் ஜனனி
`படங்கள் வந்துச்சு, பொருத்தமா இல்ல... நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கேன்!'- இசையமைப்பாளர் ஜனனி

 'பிரபா' எனும் திரைப்படத்தின் இசையமைப்பாளர், எஸ்.ஜெ.ஜனனி. புகழ்பெற்ற பாடகர் பாலமுரளி கிருஷ்ணா இறுதியாகப் பாடிய திரை இசைப் பாடலுக்கு இசையமைத்ததும் இவர்தான். அன்னையர் தினத்திற்காகப் பாடல் ஒன்றை வெளியிட  இருக்கும் ஜனனியிடம் பேசினேன். 

"அம்மான்னா எல்லோருக்கும் பிடிக்கும்தான். அன்னையர் தினத்திற்காக ஒரு பாட்டு கொண்டுவரலாம்னு மாமா சங்கர்-கணேஷ் அவங்களோடு பேசித் திட்டமிட்டேன். அதற்காக, ஸ்பெஷலா ஒரு ட்யூன் கம்போஸ் பண்ணினேன். வழக்கமா வர்ற வரிகள் மாதிரி இல்லாமல், கேட்கிறவர்களுக்கு நெருக்கமா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். பாடலாசிரியர் ரமேஷ் வைத்யா, நான் நினைச்ச மாதிரியே ரொம்ப அழகான வரிகளை எழுதித் தந்திருக்கிறார். முதல்ல, தமிழில் மட்டும் இந்தப் பாடலைக் கொண்டுவரலாம்னுதான் ப்ளான். ஆனா, திடீர்னு ஒருநாள் இதையே பல மொழிகளில் கொண்டுவந்தா என்னன்னு தோணுச்சு. பிறகு,  இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு ஐந்து மொழிகளில் அம்மாவைப் பற்றின பாட்டு வரப்போகுது. தெலுங்கில் பாரதி பாபு, கன்னடத்தில் சந்ரூ, மலையாளத்தில் விணு நாத், இந்தியில் அரவிந்த் தேஷ் பாண்டேயும் பாடல் வரிகளை எழுதியிருக்காங்க. தனி ஆல்பமாக இசையமைக்கும்போது சில குறிப்பிட்ட இசைக்கருவிகளைத்தான் அதிகம் பயன்படுத்துவாங்க. ஆனா, பல்வேறு இசைக்கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். பாடலை நானே பாடியிருக்கேன்.

"உலகின் பரம்பொருள் நீதானே; அதிலும் அரும்பொருள் நீ... என்ற வரி ரொம்பப் பிடிக்கும். "தாயைத் தேட, தனிச்சொல் தேட... " என்ற வரியில் அம்மாவை அழைக்கத் தனியான சொல்லைப் பயன்படுத்தும் குழந்தை என எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் உருவானபோது என் அம்மாதான் கண் முன்னாடி நின்னுட்டே இருந்தாங்க. ஏன்னா, அவங்கதான் என்னோட இசை வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் தியாகம்செய்துட்டு கூடவே இருக்காங்க. மாமா சரியாக வழிநடத்திட்டு இருக்கிறார். இந்தப் பாடலை அன்னையர் தினமான மே 12-ம் தேதி ரிலீஸ் பண்றோம். 

'பிரபா' படத்துக்குப் பிறகு சில படங்கள் வந்துச்சு. கதை உள்ளிட்ட விஷயங்கள் பொருத்தமா இல்ல. நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். தொடர்ந்து இண்டிபென்டெண்ட் ஆல்பங்களை வெளியிட்டிட்டு இருக்கேன். சென்ற ஆண்டுக்கான கலைமாமணி விருது அறிவிச்சாங்க. கலிஃபோர்னியா பீஸ் சாங் விருதில் நாமினேஷனில் என் பாட்டும் இருக்கு" என்கிறார் ஜனனி.