Published:Updated:

"எடைய குறைன்னு அப்பா சொல்லும்போது கோபம் வரும்!" - ரம்யா

"எடைய குறைன்னு அப்பா சொல்லும்போது கோபம் வரும்!" - ரம்யா
"எடைய குறைன்னு அப்பா சொல்லும்போது கோபம் வரும்!" - ரம்யா

"எனக்கு ஏற்ற உணவு முறை எது, உடற்பயிற்சி எது என்று தேர்வுசெய்து பின்பற்றுவதற்குச் சில வருஷம் பிடித்தது. பல நாள் தேடலுக்குப் பின் க்ராஸ் ஃபிட்னஸ் (Cross Fitness) தான், எனக்கு ஏற்ற உடற்பயிற்சி முறை என்று கண்டுபிடித்து, அதைப் பின்பற்றினேன்."

சின்னத்திரை தொகுப்பாளர்கள் பலர் இருந்தாலும், ஒரு சிலரே மனதில் சட்டென்று இடம்பிடிப்பார்கள். அப்படி ஒரு தொகுப்பாளர்தான், ரம்யா சுப்பிரமணியன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகள், திரைப்பட நிகழ்ச்சிகள் எனப் பல மேடைகளில் தன் திறமையால் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறார் ரம்யா. 13 ஆண்டுகள் முறைப்படி பரதம் கற்று அரங்கேற்றமும் செய்திருக்கிறார். இவருக்கு 'ஃபிட்னஸ் ஃப்ரீக்' என்ற இன்னொரு முகமும் இருக்கிறது. கடுமையான உடற்பயிற்சியின் மூலம் தன் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அலாதி பிரியம் இவருக்கு. தன் ஃபிட்னெஸ் ரகசியங்களைப் பற்றிப் பகிர்கிறார் ரம்யா...

"எடைய குறைன்னு அப்பா சொல்லும்போது கோபம் வரும்!" - ரம்யா

"சிறு வயதிலிருந்து எந்த விதமான உணவுக் கட்டுப்பாடும் இல்லாமல்,  நன்றாகச் சாப்பிட்டு உடல்பருமனாக இருந்தேன். என் அப்பா மட்டும், எப்போதும் உடல் எடையைக் குறைக்கச் சொல்லிக் கொண்டேயிருப்பார். அப்படி அவர் சொல்லும்போதெல்லாம் எனக்குக் கோபம்தான் வரும். ஒருமுறை தேர்வு விடுமுறையில் மஞ்சள் காமாலை என்னைப் பாதித்தது. அந்தச் சமயத்தில் மூன்று, நான்கு கிலோ எடை குறைந்து, ஒல்லியாகத் தோற்றமளித்தேன். இந்த மாற்றம், நண்பர்கள் மத்தியில் எனக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்தது. 

அதற்குப் பிறகுதான் உடல் எடையைக் குறைத்து ஃபிட்டாக இருக்கவேண்டும் என்ற ஆர்வம் உருவானது. அடுத்தபடியாக, என் வசதிக்கேற்ற ஜிம் ஒன்றில் சேர்ந்தேன். ஜிம்மில் எப்படி உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற முறை தெரியாததால், 'வியர்வை வந்தால் போதும்' என்று மிகக் கடினமாக உடற்பயிற்சி செய்வேன். சில முறையற்ற உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தேன். உதாரணத்திற்கு ஒரு நாள் பழச்சாறு மட்டும் குடிப்பது, இல்லாவிட்டால் பழ வகைகள் அல்லது காய்கறிகள் மட்டும் சாப்பிடுவது என்று தவறான உணவு முறையைப் பின்பற்றிக்கொண்டு இருந்தேன். இதுபோன்ற தவறான உணவு முறையினால் முடி உதிர்தல்,  உடல் சோர்வு எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. 

"எடைய குறைன்னு அப்பா சொல்லும்போது கோபம் வரும்!" - ரம்யா

எனக்கு ஏற்ற உணவு முறை எது, உடற்பயிற்சி எது என்று தேர்வுசெய்து பின்பற்றுவதற்குச் சில வருஷம் பிடித்தது. பல நாள் தேடலுக்குப் பின் க்ராஸ் ஃபிட்னஸ் (Cross Fitness) தான், எனக்கு ஏற்ற உடற்பயிற்சி முறை என்று கண்டுபிடித்து, அதைப் பின்பற்றினேன். தற்போது, உடலில் கொழுப்பு குறைக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி உடற்பயிற்சி செய்கிறேன். இத்தகைய உடற்பயிற்சி மற்றும் உணவு முறையால் உடலில் உள்ள நீரின் அளவு குறையத்தொடங்கும். அதற்குப் போதுமான அளவு தண்ணீர் அருந்தவேண்டும். அதேபோலத் தொடர்ந்து 6 நாள்கள் உடற்பயிற்சி செய்தால் கட்டாயம் ஒரு நாள் ஓய்வு எடுக்க வேண்டும்" என்றார். 

உடலை ஆரோக்கியமா வைத்துக்கொள்ள உங்கள் டிப்ஸ் என்ன, என்று கேட்டதற்கு, "உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளைப் பெற்று உடல் ஆரோக்கியமாக இருக்க, நம்முடைய பாரம்பர்ய உணவு வகைகளைச் சாப்பிட்டாலே போதுமானது. நாம் இருக்கும் இடத்தில் என்ன மாதிரியான உணவுகள் கிடைக்கிறதோ அதையே சாப்பிடவேண்டும். மாறாக, உடலுக்கு ஒத்துக்கொள்ளாத புதிய புதிய உணவுகளைத் தவிர்த்துவிடவேண்டும்" என்கிறார் ரம்யா.  

"எடைய குறைன்னு அப்பா சொல்லும்போது கோபம் வரும்!" - ரம்யா

உங்களைப் போல உடற்பயிற்சியில் கவனம் செலுத்தும் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க என்றதற்கு, "பெண்கள் அவங்க உடல்நிலைக்கு ஏற்றாற்போல் உடற்பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்து செய்யவேண்டும். எந்த உடற்பயிற்சியையும் முறையாகச் செய்தால், எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படாது. உடல் சற்று சோர்வாக இருப்பதாகக் கருதினால், அன்றைக்கு எந்த உடற்பயிற்சியிலும் ஈடுபடாதீங்க. உடற்பயிற்சி உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும்" என்கிறார் ரம்யா.

Vikatan
பின் செல்ல