துபாய் விமானநிலையத்தில் இமிக்ரேஷனுக்காக அமீரகவாசி ஒருவர் காத்திருக்கிறார். ஒரு கையில் ராஜாளி. இன்னொரு கையில் பாஸ்போர்ட். அருகில் இருந்த வெள்ளையர் `இதுவும் விமானத்தில் வருகிறதா?' என்று அமீரகவாசியிடம் கேட்கிறார். `ஆமாம், உங்களுக்கு என்ன சந்தேகம்... அதற்கான பாஸ்போர்ட்தான் இது' என்று கூலாகச் சொன்னார். `இதற்கும் பாஸ்போர்ட் இருக்கிறதா!' - வெள்ளையர் ஆச்சர்யத்துடனே நகர்ந்தார். உண்மைதான், அமீரகத்தில் ராஜாளிக்கு மவுசு அப்படி. இந்த நாட்டின் தேசிய விலங்கும் இதுதான். அதனால், பாஸ்போர்ட்டிலிருந்து எல்லா ராஜமரியாதையும் ராஜாளிக்குக் கிடைக்கும்.

நாகங்களில் ராஜநாகம்போல, பறவை இனத்தில் ராஜாளி. பறவைகளில் அதிவேகத்தில், அதாவது மணிக்கு 390 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன்கொண்டவை. ராஜாளி கழுகுகள்தான், அமீரகத்தில் உள்ள வீடுகளிலும் செல்லப்பிள்ளைபோல வளர்கின்றன. காலம்காலமாக இவற்றை வேட்டைக்கும் பயன்படுத்துகிறார்கள். இரையை 2 கிலோமீட்டர் தொலைவில் இருந்தே பார்க்கும் திறன், இதற்கு உண்டு. அடுத்த நிமிடத்தில் இரை இந்தப் பறவையின் அலகில் இருக்கும். அந்தளவுக்கு துல்லியமாகத் தாக்கும். வேட்டைக்குப் பயன்படுத்தும்போது, மற்ற பறவைகளை இவை கொல்லாது. இஸ்லாத்தில் `ஹலால்' முறை பின்பற்றப்படுவதால், வேட்டையாடும் பறவைகளை உயிருடன் கொண்டுவந்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும். ராஜாளிகளுக்கு அந்தளவுக்கு நேர்த்தியான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நம் ஊரில் எப்படி புறா பந்தயம் பிரபலமோ, அதைப்போலவே அமீரகத்தில் ராஜாளிப் பந்தயம் பாப்புலர். இந்தப் பறவைகளின் தலையில் தோலால் தயாரிக்கப்பட்ட பட்டை போன்ற ஒன்றை, பயிற்சியின்போது அணிவித்துவிடுகின்றனர். இதன் பெயர் `அல் புர்கா'. இரையைக் கண்டுபிடிக்க, முரட்டுத்தன்மையைக் குறைக்க ஆண் பறவையுடன் பெண் பறவை உறவை மேம்படுத்த `அல் புர்கா ' உதவுவதாக அமீரக மக்கள் நம்புகிறார்கள்.

துபாயில், ஹம்தான் அகமது என்பவர் சுமார் 200 ராஜாளிப் பறவைகளை வளர்த்துவருகிறார். பந்தயத்தில் கலந்துகொள்வதுதான் இவரின் ஹாபி.
ஹம்தான் அகமது கூறுகையில், ``இந்தப் பறவைகள், புத்திக்கூர்மை நிறைந்தவை; மின்னல் வேகத்தில் பறக்கக்கூடியவை; ஆக்ரோஷமானவை. காலம்காலமாக எங்கள் குடும்பம் இவற்றை வளர்த்துவருகிறது. தாத்தா, தந்தையை அடுத்து, இப்போது நான் வளர்க்கிறேன். எனக்குப் பிறகு என் மகன் வளர்ப்பான்.
அமீரகத்தில் ராஜாளிகளை, தலைமுறை தலைமுறையாக வளர்ப்பது வழக்கமானதுதான். 400 மீட்டர் தொலைவை 15 விநாடியில் இவை கடந்துவிடும். காலத்துக்கு ஏற்ப இப்போது பயிற்சி முறையை மாற்றியுள்ளோம். குட்டி விமானங்களைப் பறக்கவிட்டு அவற்றை ராஜாளிகள் விரட்டி, பயிற்சி பெறுகின்றன. இப்போதே என் மகன் ரஷீத் அவற்றுக்குப் பயிற்சியளிக்கிறான். அவனும் வருங்காலத்தில் பந்தயங்களில் பங்கேற்பான்'' என்கிறார்.
அமீரகத்தில் இந்தப் பறவைகள் 1000 டாலரிலிருந்து 20,000 டாலர் வரை அவற்றின் திறமை, அழகுக்கேற்ப கிடைக்கின்றன. ராஜாளிப் பறவைகளுக்கு என்றே இரு சிறப்பு மருத்துவமனைகள் உள்ளன. துபாயிலும் அபுதாபியிலும் இந்த மருத்துவமனைகள் செயல்படுகின்றன. அமீரகத்தில் விமானத்தில் பறக்க அனுமதிக்கப்பட்ட ஒரே பறவை, ராஜாளிதான். அதுவும் முதல் வகுப்பு அல்லது பிசினஸ் க்ளாஸில்தான் கூட்டிச்செல்ல வேண்டும். சாதாரண வகுப்புகளில் எல்லாம் பயணித்தால் அதன் மவுசு குறைந்துவிடுமாம். எமிரேட்ஸ், எதிஹாட், ராயல் ஜோர்டானியன், கத்தார் ஏர்வேஸ்களில் இவை பறந்தால், சிறப்பாகக் கவனிக்கப்பட வேண்டும். இதுவரை கிட்டத்தட்ட 32,000 ராஜாளிகளுக்கு அமீரகத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் ஒவ்வோர் ஆண்டும் ராஜாளிகளுக்கான அழகன், அழகி போட்டி நடைபெறுகிறது. அலகுகளின் அழகு, கால் அழகு, உடல் எடை ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு அழகன், அழகி தேர்வுசெய்யப்படுகின்றன. அமீரகத்தின் இளைய தலைமுறை, ராஜாளியின் மகிமைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
அமீரகத்தில் மனிதர்களைவிட ராஜாளிக்களே ராஜ வாழ்க்கையை வாழ்கின்றன!