Published:Updated:

``செல்வி பாஸாயிட்டா... ஆனா, மேல படிக்க முடில..!" அரசுப் பள்ளி ஆசிரியையின் வருத்தம்

``செல்வி பாஸாயிட்டா... ஆனா, மேல படிக்க முடில..!" அரசுப் பள்ளி ஆசிரியையின் வருத்தம்
``செல்வி பாஸாயிட்டா... ஆனா, மேல படிக்க முடில..!" அரசுப் பள்ளி ஆசிரியையின் வருத்தம்

``செல்வி பாஸாயிட்டா! அது மட்டுமே எனக்குப் போதாது. அவ மேற்கொண்டு படிக்கணும்! ஆனா, அதுக்கான வாய்ப்பிருக்கிற மாதிரியே தெரியல!" என்று குரலில் பதற்றத்துடனே பேசத்தொடங்குகிறார் ஆசிரியை முத்தரசி. 

கோயம்புத்தூர் மாவட்டம், அரசூரிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ளது வாகராயன்பாளையம் கிராமம். அங்குள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் முத்தரசி. அவரிடம் படித்த பல மாணவிகளில் ஒருவர்தான் செல்வி என்றாலும், இப்போது செல்வியின் எதிர்காலம் குறித்து அக்கறையும் கவலையுடன் இருக்கிறார். அதற்கான காரணத்தை அவரிடமே கேட்கலாம். 

``பப்ளிக் எக்ஸாமில் தேர்ச்சி பெறுவது என்பது கடைசி நேர முயற்சி மட்டுமே போதாது என்பதால், சென்ற கல்வி ஆண்டின் தொடக்கத்தில் ப்ளஸ் டூ வில் நுழைந்த எல்லா மாணவர்களையும் பள்ளியின் முதல் நாளிலிருந்தே பாடங்களைக் கவனத்துடன் படிக்கச் சொல்லியிருந்தேன். செல்வி, 11 -ம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்திருந்தாள். அதனால், 12 -ம் வகுப்பிலும் அதிகமான மார்க் எடுப்பாள் என்று நினைத்தேன். ஆனால், ஜூன் மாதக் கடைசியிருந்து அவள் பள்ளிக்கே வரவில்லை. இன்று வந்துவிடுவாள், நாளை வந்துவிடுவாள் என்று எதிர்பார்த்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம். அவள் வீட்டுக்குப் போய் தேடலாம் என்று தேடியும் கிடைக்கவில்லை. அவள் அப்பா குடிப் பழக்கம் கொண்டவர். உடல்நலமில்லாத தம்பி, படித்துக்கொண்டிருக்கும் தங்கை. அம்மா, கீரை, காய்கறி விற்றுக்கொண்டு வரும் பணத்தில்தான் செல்வியின் குடும்பமே நடந்தது. 

``செல்வி பாஸாயிட்டா... ஆனா, மேல படிக்க முடில..!" அரசுப் பள்ளி ஆசிரியையின் வருத்தம்

திடீரென்று ஒருநாள், லேண்ட் லைனிலிருந்து போன் வந்தது. எடுத்துப்பேசினால், செல்வி. பதற்றமும் நடுக்கமுமாக இருந்த அவள் குரலில் சொன்ன செய்தி, பேரதிர்ச்சியைத் தந்தது. ``அப்பா, யார்கிட்டேயே ரெண்டு லட்சம் பணம் வாங்கிட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கொடுக்கப் பார்க்கிறார் மிஸ்... எனக்குப் பயமாயிருந்துச்சு. தங்கச்சியும் அம்மாவும் சேர்ந்து வீட்டை விட்டு வந்துட்டோம்" என்று அவள் சொன்னதும் எனக்கு என்ன செய்வதென்றே ஒருநிமிஷம் புரியவில்லை. அப்பறம் அந்தக் கொடூரத்திலிருந்து மீட்டு, இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப உதவினோம். ஆனாலும், அவள் பள்ளிக்கு வரவில்லை. 

நான்தான் செல்வியின் க்ளாஸ் டீச்சர். அதனால், ஒவ்வொரு நாளும் அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது, அவள் பெயரைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கும். வழக்கமான தேர்வுகள், டெஸ்ட் நடக்கும் நாள்களில் அவளை எப்படியாவது வர வழைத்துவிட வேண்டும் என நினைப்பேன். சில முயற்சிகளையும் எடுத்தேன். ஆனால், நான் நினைத்த அளவு அது பலனிக்கவில்லை. ஏதோ ஒரு கடையில் சொற்ப சம்பளத்துக்கு வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாள் செல்வி. 

இந்த வருஷம், ஜனவரி மாசம் ஒருநாள் திடீரென்று பள்ளிக்கு வந்தாள் செல்வி. அவளைப் பார்த்ததும் சந்தோஷப்படுவதா, படிப்பை நிறுத்தியதற்காகக் கோபப்படுவதா என்றுகூட தெரியவில்லை. அவள் டி.சி (மாற்றுச்சான்றிதழ்) வாங்க வந்திருப்பதாகச் சொன்னதும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 

``செல்வி இப்ப நீ நினைச்சாக்கூட ப்ளஸ் டூ எக்ஸாம் எழுதலாம்... எழுதுறியா?" என்று கேட்டேன். நான் இப்படிக் கேட்பேன் என்று அவள் எதிர்ப்பாக்கவில்லை. தேர்வுக்கு இன்னும் சில நாள்களே இருக்கின்றன எப்படி முடியும் என அவள் நினைத்திருக்கலாம். ஆனால், படிக்க வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் இருந்தது. அது எனக்கு நன்றாகத் தெரியும். நான் இன்னும் கேட்க, கேட்க ஒத்துக்கொண்டாள். அதற்கு அப்புறம்தான் பல சிக்கல்கள் வந்தன. அவள் இந்தக் கல்வியாண்டில் வந்ததே மொத்தம் 30 நாள்களுக்குள்தான். அதனால், கல்வித் துறை அதிகாரிகளிடம் விளக்கிக்கூறி அவள் தேர்வு எழுத சம்மதம் பெற்றோம். ஆமாம், எங்கள் பள்ளியின் எல்லா ஆசிரியர்களும் செல்வி படிப்புக்காக முன் வந்து உதவினார்கள். 

``செல்வி பாஸாயிட்டா... ஆனா, மேல படிக்க முடில..!" அரசுப் பள்ளி ஆசிரியையின் வருத்தம்

``நான் பாஸாயிடுவேனா மிஸ்?" என்று அடிக்கடி அவளுக்குச் சந்தேகம் வந்து கேட்பாள். அவளுக்கு நான் மட்டுமல்ல, மற்ற ஆசிரியர்களும் நம்பிக்கையான வார்த்தைகளைச் சொன்னோம். பல வழிகளிலும் படிக்க ஆலோசனை கொடுத்தோம், அவளும் வீட்டு வேலைகளுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு படித்தாள். நம்பிக்கையோடு தேர்வை எழுதி, முடித்து விட்டு, கடை வேலைக்குச் சென்றுவிட்டாள். அவளை விடப் பள்ளி ஆசிரியர்களுக்குத்தான் தேர்வு முடிவு பற்றி அவ்வளவு எதிர்பார்ப்பு இருந்தது. 

தேர்வு முடிவும் வந்தது. 50 சதவிகிதத்துக்கும் அதிகமான மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்திருந்தாள். அன்றைக்கு எல்லோருக்கும் அத்தனை சந்தோஷம். பெரும் பாரத்தை இறக்கி வைத்துபோல இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு இப்போது இன்னொரு சிக்கல் வந்துவிட்டது." என்றவரிடம் ``அது என்ன?" என்றோம். 

``இப்போது செல்வியை காலேஜில் சேர்க்க நினைக்கிறோம். ஆனால், வீட்டினருக்கு அவள் சம்பாதிக்கும் பணம் வேண்டும். மாதம் ஐந்தாயிரம் ரூபாய் என்பது அவர்களுக்குப் பெரிய பணம். அத்தியாவசியத் தேவைகளுக்கு அவசியம். குடிப் பழக்கத்தில் உள்ள அப்பாவிடம் பணத்தை எதிர்பார்க்க முடியாது. என் நண்பர்கள் சிலர் கூட, செல்வி வீட்டுக்கு மாதா மாதம் மளிகைப் பொருள்கள் வாங்கித்தருகிறேன் என்றும் சொன்னார்கள். படிப்பின் தேவையையும் அருமையையும் உணர வாய்ப்பில்லாத செல்வியின் அம்மா, மேல் படிப்புக்கு உறுதியாக மறுக்கிறார். அவர் மீது சின்ன வருத்தம்கூட எனக்கு இல்லை. ஏனென்றால், அவர்கள் வீட்டின் சூழ்நிலை அப்படி. குடும்பத்தை நடத்த உதவும் மகளின் வருமானமும் இல்லை என்றால் என்ன செய்வார்?" என்று கலங்கிய குரலில் சொன்னவர்,

``செல்வியை எப்படியாவது அஞ்சல் வழியிலாவது படிக்க வைக்க முயற்சி எடுக்கிறேன். அதுவும் எந்தளவுக்குச் சாத்தியம் என்றும் தெரியவில்லை." என்கிறார் ஆசிரியை முத்தரசி. 

பெண்களுக்கும் கல்வி வெளிச்சம் பரவி அரை நூற்றாண்டாகி விட்டது என்று கட்டுரைகளில் படிக்கலாம்; எழுதலாம். ஆனால், செல்விக்குக் கல்வி எனும் வெளிச்சம் ஒன்று இருப்பது மட்டுமே தெரிந்திருக்கிறது. செல்வி போன்றோர் மேல் கல்வி படித்து, அரசு அதிகாரங்களுக்கு வரும்போதுதான் உண்மையான வெளிச்சம் பரவியதாக நம்ப முடியும். 
 

Vikatan
பின் செல்ல