Published:Updated:

பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு!

பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு!
பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு!

நியூயார்க் நகரம் என்றதும், மாடமாளிகைள்கூட கோபுரங்களாக நிரம்பி நிற்கும் மன்ஹட்டன் பகுதிதான் பலருக்கும் நினைவு வரும். இரட்டைக் கோபுரங்கள் இங்கேதான் இருந்தன. பரந்துவிரிந்த நியூயார்க் நகரின் பென் ரயில்வே ஸ்டேஷன் அருகே கிறிஸ்டோபர் தெருவில் உள்ள சாதாரண தோசை கடையில் எப்போதும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கும். தமிழ் முகங்களுக்கு மத்தியில் வெள்ளையர்களின் முகங்களும் இங்கே தோசைகளுக்காகக் காத்துக் கிடப்பது வழக்கம். பர்கருக்காக 10 நிமிடம் காத்திருக்காத வெள்ளையர்கள், தமிழரின் கைப்பக்குவத்தில் தயாராகும் தோசைகளைச் சாப்பிட மணிக்கணக்கில் காத்திருப்பதைப் பார்க்கலாம். உலகின் பல நாட்டு மக்களும் வசிக்கும் நியூயார்க்கில் அமெரிக்கன், மெக்ஸிகன், ஐரோப்பியன், ஆப்கன் ஸ்ட்ரீட் ஃபுட்களுக்கு மத்தியில் நம் ஊர் தோசையையும் போட்டிபோடவைத்துள்ளார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பழனிச்சாமி திருக்குமார். நியூயார்க்கில் தோசை கடை வைத்த கதையை, திருக்குமாரே சொல்கிறார்...

``இலங்கையைச் சேர்ந்த எனக்கு, என் பாட்டிதான் விதவிதமான தோசை சுடும் வித்தையைக் கற்றுத்தந்தார். என் பாட்டியின் கைப்பக்குவத்தில் தயாராகும் தோசைகளை, இலங்கையில் மக்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள். இலங்கையில் பிரச்னை முற்றியபோது  நியூயார்க் நகருக்கு வந்தேன். ஆரம்பத்தில் இங்கே பெட்ரோல் பங்க்கில், வாட்ச்மேன் வேலை பார்த்தேன். தோசை கடை வைக்க வேண்டும் என்பது என் ஆசை. கையில் கொஞ்சம் சேமிப்பு இருந்தது. தெருவோரக் கடை வைக்க லைசென்ஸ் கிடைத்ததும் 13,000 டாலர் முதலீட்டில் இந்தக் கடையைத் தொடங்கினேன். வங்கியிலிருந்து லோன் வாங்கினேன். என் வெற்றிக்கு, கடின உழைப்புதான் காரணம். நியூயார்க்கில் பனி பெய்தாலும் குளிரடித்தாலும் என் கடையில் சுடச்சுட தோசை கிடைக்கும். ஒருநாள்கூட விடுமுறையில்லை. அமெரிக்கா வந்து 25 ஆண்டுகளாகிவிட்டது. என் தோசை கடை, தற்போது 18-வது ஆண்டில் பெருமையுடன் இயங்கிவருகிறது'' என்கிறார் 

பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு!

மும்பையைவிட நியூயார்க் நகரில் மக்கள்தொகை குறைவுதான் என்றாலும், மும்பைவாசிகள்போலவே நியூயார்க்வாசிகளும் படு பிஸியானவர்களே. நியூயார்க் பென் ரயில்வே ஸ்டேஷன் அருகே, ஓய்வுக்காகக்கூட ஒரு நிமிடம் நின்றுவிட முடியாது. அலை அலையாய் வரும் மக்கள் கூட்டம், உங்களை அடித்துக்கொண்டு போய்விடும். இதுபோன்ற பிஸியான பகுதியை உலகில் பார்ப்பது அரிது. அலுவலகம் போகும்போதும் சரி... வரும்போதும் சரி, கடும் நெரிசல் காணப்படும். இவ்வளவு பிஸியான மக்கள் நிறைந்த நகரில் பல நாட்டு ஸ்ட்ரீட் ஃபுட் கடைகளும் வளர்வதற்குக் காரணம் அவர்களின் நேரமின்மைதான். அதில், தமிழர் திருக்குமாரின் கடையும் முக்கிய அடையாளத்தைப் பெற்றுள்ளது.  

பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு!

 வெள்ளையர்கள், கறுப்பின மக்களும்கூட திருக்குமாரின் கடைக்கு வந்து மசாலா தோசையைச் சாப்பிட்டுவிட்டு `பேஷ் பேஷ்' என்று சொல்லிச் செல்வர். வெள்ளையர்கள், அதிகளவு பச்சைக் காய்கறிகளை விரும்பிச் சாப்பிடுவார்கள். அதனால், அவர்களுக்கு வழங்கும் தோசை மீது கூடுதலாக பச்சைக் காய்கறிகள் இருக்கும்.  

ஒரு தோசை, 8 அமெரிக்க டாலர். அமெரிக்காவில் பர்கர் விலை இதைவிட அதிகம். நியூயார்க்கில் நீங்கள் நல்ல உணவு சாப்பிட நினைத்தால், கிட்டத்தட்ட 40 டாலர் செலவு செய்ய நேரிடும். இதனால், அக்கம்பக்கத்தில் வாழும் தமிழர்களுக்கும் கேரள மக்களுக்கும் திருக்குமாரின்  கையேந்தி பவன் ஒரு வரப்பிரசாதம். ஊத்தப்பம், போண்டா, இட்லிகளும் இங்கே கிடைக்கும். நம்ம தமிழ் மக்களின் உணவுகளைப் பிரபலப்படுத்தும் வகையில் புதுச்சேரி ஸ்பெஷல், ஜாஃப்னா ஸ்பெஷல் போன்ற பெயரில் சிறப்பு உணவுகளையும் தயாரித்து விற்கிறார் திருக்குமார். இவரின் கைப்பக்குவத்தில் தயாராகும் சிங்கப்பூர் நூடுல்ஸும் நியூயார்க்வாசிகளை எச்சில் ஊறவைக்கும் ரகம். `நியூயார்க் சென்றால் எங்கே என்ன சாப்பிடுவது?' என்ற வழிகாட்டிப் புத்தகங்களில் 42 நாடுகளில் `தோசா மேன்' என் பெயரில் திருக்குமாரின்  கடையும் பெயரும் இடம்பிடித்துள்ளன. நியூயார்க் வரும் ஜப்பானியர்கள் பலரும், இவரின் கடைக்கு தவறாமல் வந்து தோசையை ஒரு பிடி பிடித்துவிட்டுச் செல்வதோடு, வீட்டுக்கு பார்சலும் கட்டிச் செல்கிறார்கள்.

பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு!

பஞ்சம் பிழைக்கப் போய், இன்று நியூயார்க் நகரின் அன்னமிடும் கையாக மாறியுள்ள திருக்குமார், நாள் ஒன்றுக்கு 14 மணி நேரம் உழைப்பதாகச் சொல்கிறார். ``என்னோட இந்த உழைப்பால்தான் வெள்ளையர்களைக்கூட நான் நம்ம ஊரு தோசையைச் சாப்பிட வெச்சிருக்கேன். கடைக்கு வரும் வெள்ளையர்கள், நம்ம ஊர் தோசையை ஆசை ஆசையாய்ச் சாப்பிடுவதைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கும். அப்போதெல்லாம் எனக்குள்ள `என்னோட பாட்டுக்கு இந்தப் பாண்டிய நாடே அடிமையப்பா! ' என்ற பாலையாவின் வசனம்தான் எனக்கு நினைவுக்கு வரும். இந்தத் தொழிலை விரும்பிச் செய்கிறேன். மக்கள் என்னோட கடையில் வயிறாரச் சாப்பிட வேண்டும் என்பதுதான் என் லட்சியம். நியூயார்க்கில் இருக்கும் தமிழ்நாட்டு ஹோட்டல்களைவிட, என் கடை தோசையில் அதிக ருசி இருக்கும். ஆனால், விலை அவற்றுடன் ஒப்பிடுகையில் வெகு குறைவு. ஏனென்றால், பணத்தைவிட வாடிக்கையாளர்களின் மனநிறைவுதான் எனக்கு முக்கியம்'' என்று கூறும் திருக்குமாரின்  கடைக்குப் போவது எப்படி? 

நியூயார்க், பென் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 15 நிமிடங்கள் நடந்தால், கிறிஸ்டோபர் தெரு வந்துவிடும். அங்கே போய் `நியூயார்க் தேசைக் கடை எங்கே?' எனக்  கேட்டால், குழந்தைகூட காட்டிவிடும். ஆமாங்க... கடையின் பெயரே... N.Y.Dosas-தான்!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு