Published:Updated:

ரமலான் நோன்பு... உடலில் நிகழும் வளர்சிதை மாற்றங்கள் என்னென்ன? - ஒரு மருத்துவ அலசல்!

ரமலான் நோன்பு... உடலில் நிகழும் வளர்சிதை மாற்றங்கள் என்னென்ன? - ஒரு மருத்துவ அலசல்!

பணம் படைத்தவனுக்கும் பசியை உணர்த்தக்கூடியது இந்த ரமலான் நோன்பு.

ரமலான் நோன்பு... உடலில் நிகழும் வளர்சிதை மாற்றங்கள் என்னென்ன? - ஒரு மருத்துவ அலசல்!

பணம் படைத்தவனுக்கும் பசியை உணர்த்தக்கூடியது இந்த ரமலான் நோன்பு.

Published:Updated:
ரமலான் நோன்பு... உடலில் நிகழும் வளர்சிதை மாற்றங்கள் என்னென்ன? - ஒரு மருத்துவ அலசல்!

ரமலான் என்றதும் நம் ஞாபகத்துக்கு வருவது, கோடை மாதம் முழுவதும், நீர் கூட அருந்தாமல் இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கும், உண்ணா நோன்புதான்..! பிறை தெரிந்தவுடன் தொடங்கப்பட்டு, மாதம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவது இந்த ரமலான் நோன்பு. 

தினமும் அதிகாலையிலேயே, ஒரு நாளுக்கான உணவை உட்கொண்டு, பகல் முழுவதும் தண்ணீர் கூடப் பருகாமல் நோன்பிருந்து, மாலையில் இறைவனைத் தொழுது, பிறகு புசித்து, உறங்கி, மறுநாள் மீண்டும் தொடரும் உபவாசம் என... இந்த ரமலான் நோன்பு வெறும் இறை நம்பிக்கைதானா..? இல்லை, இதில் அறிவியலும் ஆரோக்கியமும் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்னர், முதலில் ரமலான் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வோம்.

ரமலான் நோன்பு... உடலில் நிகழும் வளர்சிதை மாற்றங்கள் என்னென்ன? - ஒரு மருத்துவ அலசல்!

சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் அரபி மாதங்களில், ஒன்பதாவது மாதமான ரமலான், பல நன்மைகள் நிறைந்த புனிதமான மாதமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில்தான், திருக்குரான் என்ற திருமறை இறைவனால் மனிதருக்கு அருளப்பட்டது. 

மனிதன் தனது தேவைகளை மறந்து, இறைவனைத் துதித்திருப்பதற்கான மாதம்தான் ரமலான். 'ரமல்' என்றால், சுட்டெரிக்கும் சூரிய ஒளியால் தகிக்கும் கற்கள் என்ற பொருளாகும். மனிதர்கள் தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தையும் சுட்டுப் பொசுக்கி, இறைவனிடம் தங்களை அர்ப்பணித்து, சூரிய ஒளியைப்போல பிரகாசித்து நிற்கும் மாதம் ரமலான். அதனால்தான், இந்த மாதத்தைக் குறிப்பிடும்போது நபிகள் நாயகம் 'ஷஹ்ரே அஜீம்' என்றும் 'ஷஹ்ரே முபாரக்' அதாவது, 'கண்ணியம் நிறைந்த அல்லது அருள்வளம் நிறைந்த மாதம்' என்றும் குறிப்பிட்டுள்ளார். தானும் மக்களும் நோன்பிருக்க இந்த மாதத்தைத் தேர்ந்தெடுத்தார்.

ரமலான் நோன்பு என்பது உண்மையில் பசித்திருப்பதும் தகித்திருப்பதும், கட்டுப்பாட்டுடன் இருப்பதும் மட்டுமல்ல. இறைவன் ஒருவனுக்காகவே பசி மறந்து, தாகம் மறந்து உபவாசம் இருப்பதன் மூலம், `நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்..!' என்றும் `நீங்கள் நோன்புநோற்பது உங்களுக்கு நன்மைகளையே விளைவிக்கும்' என்றும் கூறும் திருமறை, மெய்ஞ்ஞானத்தை மட்டுமல்லாமல் உலக வாழ்க்கையையும் ஒவ்வொருவருக்கும் புரிய வைக்கிறது.

ரமலான் நோன்பு... உடலில் நிகழும் வளர்சிதை மாற்றங்கள் என்னென்ன? - ஒரு மருத்துவ அலசல்!

பணம் வர வரப் பசி என்ற ஒன்றே தெரியாமல் போய்விடும். பசியின் கொடுமையை ஒருவன், தானே உணர்ந்தால்தான், பிறரது பசியைத் தீர்க்க முனைவான் என்பதால், பணம் படைத்தவனுக்கும் பசியை உணர்த்தக்கூடியது இந்த ரமலான் நோன்பு. மேலும், இந்த நாள்களில் இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்து முக்கியமான கடமைகளில் நான்காவது கடமையான தானம் மிக முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது.

மண்ணிலிடும் ஒரு தானிய மணியிலிருந்து, நான்கு கதிர்கள் வெடித்து, ஒவ்வொரு கதிரிலும் பல நூறு தானிய மணிகள் விளைவதைப்போல, தம்மிடமுள்ள பொருளைச் செலவிடும் நல்லவர்களின் செல்வம் பல்கிப் பெருகும் என்று கூறுகிறது திருக்குரான். 

தான் உழைத்துத் தேடிய செல்வத்தில், நாற்பதில் ஒரு பங்கை, தனக்கு எந்த வகையிலும் அறிமுகமற்ற ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்பவரும், பெறுபவனின் தேவையறிந்து அவன் வாய் திறந்து கேட்பதற்கு முன்பே தருபவன் உதவ வேண்டும் என உதவுபவரும்தான் உண்மையான இஸ்லாமியராக இருக்க முடியும் என்று, தானத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது.

தானம் அளிப்பது மட்டுமன்றி, கூட்டுத் தொழுகையின் மூலம், அனைவரையும் ஒன்றிணைக்கிறது இந்த ரமலான் நோன்பு. பறவைகள் கூட்டமாகப் பறந்தாலும், ஒவ்வொரு பறவையும் தனது சிறகுகளை அசைத்தால் மட்டுமே, தான் பறக்க முடியும் என்பதுபோல, கூட்டுத் தொழுகையிலும், தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்பவன், மெய்ஞ்ஞானத்தை அடைவான் என்கிறது திருமறை. அன்பையே சிந்தித்து, அன்பையே சுவாசித்து, அன்பே கடவுள் என்பதை அன்பாக, அழகாக உணர்த்துகிறது ரமலான். நோன்பில் பசித்திருப்பது மெய்ஞ்ஞானத்தை அளிப்பதோடு, மிகச்சிறந்த மருந்தாகவும், பல்வேறு நோய்களுக்குத் தீர்வாகவும் திகழ்கிறது என்கிறது மருத்துவ விஞ்ஞானம்.

`Most effective Biological method of treatment' என்றும், `Operation without Surgery' என்று பொதுவாகவே நோன்பைக் கொண்டாடுகின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள். அதிலும் `இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) எனப்படும், இந்தப் பதினைந்து மணிநேர இடைவெளியுடன் உணவை உட்கொள்வது, பெரும்பலன்களை அளிக்கிறது என்பது அறிவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பல்வேறு ஆய்வுகளின் மூலம் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

நோன்பு தொடங்கிய நாள் முதலாக, புதியதொரு மாற்றத்துக்குத் தன்னைத்தானே சரி செய்துகொள்ளத் தொடங்குகிறது உடல். நோன்பின்போது, இன்சுலினின் தேவை மிகவும் குறைந்து, இன்சுலின் குறைவாகச் சுரப்பதுடன், கணையத்தின் மற்றுமொரு ஹார்மோனான `குளூக்கான்' (Glucagon) சற்று அதிகமாகச் சுரந்து நம் உடலுக்குத் தேவையான சக்தியை உடலிலுள்ள கொழுப்புகளிலிருந்து எடுக்கத்தொடங்குகிறது. இதனால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன், கல்லீரலின் `கிளைக்கோஜென்' (Glycogen) எனப்படும் சர்க்கரையும் எரிசக்தியாக (Glycogenolysis & Neoglucogenesis) மாறும். இதனால், முதலில் உடலின் கொழுப்பின் அளவும், சர்க்கரையின் அளவும் குறைவதுடன், உடல் பருமன் போன்ற பிரச்னைகளுக்கும் தீர்வுதரும். 

மேலும், உணவு உட்கொள்ள கொடுக்கும் இந்த இடைவெளியில், நம் உடலில் இடைவிடாமல் உழைக்கும் கல்லீரல், கணையம் ஆகியவற்றின் நொதி சுரப்பிகள் மற்றும் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடலுக்கு நல்ல ஓய்வையும் அளிக்கிறது. நமது உணவில் இருக்கும் சில உணவுச் சேர்க்கைகள், அவற்றை வெளியேற்ற முடியாதபடி, உடலின் கொழுப்புத் திசுக்களுடன் கலந்து உடலிலேயே தங்கிவிடும். இப்படிச் சேமிப்பில் இருக்கும் `அட்வான்ஸ்டு கிளைக்காசென் புராடக்ட்ஸ்' (Advanced Glycation Products) என்ற நச்சுகளை நோன்பின்போது கல்லீரல், நுரையீரல், தோல் மற்றும் சிறுநீரகங்கள் மூலம் வெளியேற்றும். இதன்மூலம் உடல் தன்னைத்தானே சுத்திகரிக்கிறது.

ஏறத்தாழ ஒரு வாரத்துக்குப் பிறகு, ரசாயன சமநிலையை அடையும் நோன்பின் வளர்சிதை மாற்றங்கள் மேலும் பல நற்பலன்களைத் தருகின்றன. செல்களின் வீக்கத்தைக் குறைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த உண்ணாநோன்பு, உடல்பருமன் மற்றும் வாழ்க்கைமுறை நோய்களான சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம், மாரடைப்பு, மனஅழுத்தம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். அத்துடன் மூட்டு நோய், சரவாங்கி, பெருங்குடல் அழற்சி, சொரியாசிஸ் ஆகியவற்றிலிருந்தும் பாதுகாப்பளிக்கும்.

ரமலான் நோன்பு... உடலில் நிகழும் வளர்சிதை மாற்றங்கள் என்னென்ன? - ஒரு மருத்துவ அலசல்!

நோன்புக்குப் பிறகு, இயற்கை உணவுகளான கனிகள், காய்கள் மற்றும் தண்ணீரை மட்டுமே மனம் தேடுவது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தடுத்து, ஆரோக்கியத்தைக் காக்கும் உண்ணாநோன்பு மது, புகையிலை, கபைன் ஆகியவற்றின் மீதான போதையைக் குறைக்கவும் பெரிதும் உதவும்.

உடல் வளர்ச்சிக்கான `குரோத் ஹார்மோன்' (Growth Hormone) அளவைச் சீராக சுரக்க வைப்பதுடன் எண்டார்பின் (Endorphins) எனப்படும் சுரப்பிகளையும் அதிகரிக்கும் இந்த `இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) மனிதனை இளமையுடன் வாழச்செய்யும். அத்துடன், ஆழ்ந்த உறக்கத்தைத் தந்து, கவனிக்கும் திறன் மற்றும் ஞாபகத்திறனை அதிகரித்து மனிதனின் ஆரோக்கியமான ஆயுட்காலத்தை அதிகப்படுத்தும். மேலும், நோன்புக் காலங்களில் ஏற்படும் புது நியூரான்களின் உற்பத்தி அல்சைமர், பார்க்கின்சன், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது என்பதையும் நிரூபித்துள்ளனர் மருத்துவ விஞ்ஞானிகள்.

இஸ்லாமைப் போலவே  எல்லா மதங்களும் வலியுறுத்தும் உண்ணா நோன்பு, மனிதனை இறைவனுடன் இணைப்பதுடன், உடலையும் அதன் இயக்கத்தையும், ஒட்டுமொத்த வாழ்வையும் வலிமைப்படுத்துகிறது என்பதே நிதர்சனம்..!

இவை அனைத்துக்கும் மேலாக, 2016-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்ற ஜப்பானிய மருத்துவர் `யோஷினோரி ஓசுமி' (Yoshinori Ohsumi) கூறும் `ஆட்டோஃபாகி'  (Autophagy) எனும் 'தன்னைத் தானுண்ணல்' தியரி, ஏன் எல்லா மதங்களும் உண்ணா நோன்பை வலியுறுத்துகின்றன என்பதற்கான ஒரு புதுப் பார்வையைத் தருகிறது.

`ஆட்டோஃபாகி'  என்ற தன்னைத் தானுண்ணல் நிகழ்வுகளால் நோயெதிர்ப்பு, வயோதிகத்தை எதிர்க்கும் ஆற்றல் கூடுவதுடன், புற்றுநோய்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும் உதவுகிறது என்று கூறும் இவரது ஆய்வுகள், ஒரு ஹாலிவுட் திரைப்படம்போல விளக்குகிறது.

ஆம், 'தன்னைத் தானுண்ணல்' முறையில் சேதமடைந்த உட்திசுக்கள், மாறுதலடைந்த புரதங்கள், அதீதமாக வளரும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் ஆகியவற்றை, ஒரு கார்கோ வண்டிபோலத் திகழும் லைசோசோம்களில் ஏற்றி, ரீசைக்கிளிங் என்ற மிகப்பெரும் திசுக்களின் சீரமைப்பை உடலுக்குள் நிகழ்த்துகிறது. மலைப்பாம்புபோல, பல்வேறு நச்சுகளை விழுங்கும் இந்த ஆட்டோலைசோசோம்கள், தன்னிடம் சுரக்கும் நொதிகளின் மூலம் அவற்றை அழித்துவிடுகின்றன அல்லது முற்றிலும் மாற்றியமைத்து விடுகின்றன.

இவற்றுள் புற்றுநோய்க் காரணிகளான டி.என்.ஏ கோடான்கள், ஆன்க்கோஜீன்ஸ் எனப்படும் புற்றுநோய் மரபணுக்கள், சிதைந்த புரதங்கள் ஆகியவற்றையும் இந்த 'தன்னைத் தானுண்ணல்' செல்கள் அறவே அழித்துவிடுவதால், புற்றுநோய் வருமுன் காக்கவும், நோய் வந்தபின், அதன் வளர்ச்சி மற்றும் பரவும் தன்மையை மட்டுப்படுத்தவும் என, பல நீண்டகால நன்மைகளுக்கு வழிவகுக்கிறது உண்ணா நோன்பு.

`நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி. மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி' என்பது நபிகளின் (ஸல்) மறைவாக்கு. அதில் ஆரோக்கியமும் அடங்கியிருப்பது மூன்றாவது மகிழ்ச்சி!