Published:Updated:

50 வருடம், ஒன்றரை லட்சம் மாணவர்கள்... சமையல்கலை நிபுணர் மெனுராணி செல்லம்!

50 வருடம், ஒன்றரை லட்சம் மாணவர்கள்... சமையல்கலை நிபுணர் மெனுராணி செல்லம்!
50 வருடம், ஒன்றரை லட்சம் மாணவர்கள்... சமையல்கலை நிபுணர் மெனுராணி செல்லம்!

''பிளாக் ஆரம்பிக்கிறது கஷ்டமில்லம்மா. தனக்குத் தெரிஞ்சதை அதுல எழுதிட்டுப் போயிடலாம். ரெசிப்பி சரியா வரலைன்னா, கடையில வாங்கிக்கூட போட்டோ எடுத்து வைச்சிடலாம்.''

கொஞ்ச நேரம் அடுப்படியில நின்னாலே வேர்த்துக் கொட்டுற நமக்கெல்லாம் ருசியா சாப்பிடுறதுக்கு எப்பவும் பிடிக்கும். அப்படிப்பட்ட ருசியான சமையலைக் கடந்த 50 வருஷமா ஒன்றரை லட்சம் பேருக்கும் மேல சலிக்காம சொல்லிக்கொடுத்துட்டு வர்றாங்க செல்லம்.  பத்திரிகைகளுக்கு இவங்க மெனுராணி செல்லம். யூடியூப், பிளாக்னு வந்தாலும் பாரம்பர்ய சமையலை அழியாம பாதுகாக்கிற அவங்களோட சின்ன சாட்டிங்... 

50 வருடம், ஒன்றரை லட்சம் மாணவர்கள்... சமையல்கலை நிபுணர் மெனுராணி செல்லம்!

``உங்களுக்குக் கல்யாணத்துக்கு முன்னாடி சமைக்கத் தெரியாதுதானே..?''

''நோ நோ... என்னோட டீன் ஏஜ் காலத்துல அம்மா அடுப்படியில சமையல் செஞ்சிகிட்டிருந்தா பொண்ணுங்க மேல் காரியங்களுக்கு ஒத்தாசைப் பண்ணணும். அதனால, எனக்கு நல்லாவே சமைக்கத் தெரியும்.'' 

``கல்யாணத்துக்குப் பிறகு உங்க புகுந்த வீட்ல உங்களுக்கு நல்ல பேர் வாங்கிக்கொடுத்த முதல் சமையல்... ஞாபகமிருக்கா?'' 

''நல்லா நினைவிருக்கு. ஆனா, அது 100 சதவிகிதம் எனக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்துச்சான்னு தெரியாது. அப்ப எனக்கு கல்யாணமாகி நாலைஞ்சு நாள்தான் இருக்கும். வீடு நிறைய கெஸ்ட். எல்லாருக்கும் நான்தான் சமையல். முருங்கைக்காய் சாம்பார் வைச்சு, உருளைக்கிழங்கு கறி பண்ணி, தக்காளி ரசம் வைச்சு, கூட்டு, பொரியல், பச்சடின்னு விதவிதமா சமைச்சேன். சாதம் மட்டும் சூடாக இருக்கணும்னு கடைசியா குக்கர் வைச்சேன். என்னோட சமையல் வாசனையிலேயே எல்லாருக்கும் பசி வந்துடுச்சு. இலை போடற நேரத்துல குக்கரைத் திறந்துப் பார்த்தா வெறும் தண்ணி மட்டும்தான் இருக்கு. சாதத்தைக் காணலை. அரிசியே போடாம குக்கரை மட்டும் அடுப்பில வைச்சிருக்கேன். இதுல மூணு விசில் வேற வந்துச்சு. என்ன பண்றதுன்னு தெரியாம வெலவெலத்துப் போய் நான் கிச்சனுக்குள் நின்னுக்கிட்டிருக்கேன். என் ஹஸ்பண்டு வந்திருந்த கெஸ்ட் எல்லார்கிட்டேயும் 'என் ஆத்துக்காரி ரொம்ப நன்னா சமைப்பா'ன்னு பெருமையடிச்சிட்டு இருந்தார். வேற வழியில்லாம சாதம் ரெடியாகாததைச் சொல்ல, மொத்த வீடும் கொல்லுனு சிரிச்சது.''  

50 வருடம், ஒன்றரை லட்சம் மாணவர்கள்... சமையல்கலை நிபுணர் மெனுராணி செல்லம்!

``மத்தவங்களுக்கு சமையல் கலையைக் கத்துத்தரணும்னு எப்படித் தோணுச்சு?'' 

''உண்மையைச் சொல்லணும்னா எனக்கு அப்படி எதுவுமே தோணலை. ஆனா, நான் முறைப்படி சமையற்கலையைப் படிச்சவங்கிறதால நிறைய பேர் என்கிட்ட நேரங்காலம் இல்லாம சமையல் சந்தேகம் கேட்பாங்க. இதைப் பார்த்த என் மாமனார், 'ஏன் இதையே நீ ஒரு கரியரா மாத்திக்கக் கூடாது'ன்னு கேட்டார். அந்தக் கேள்விதான், கடந்த 50 வருஷமா ஒன்றரை லட்சம் பேருக்கு மேல சமையல் சொல்லிக் கொடுக்க காரணமா அமைஞ்சது. அம்மா, பொண்ணு, பேத்தின்னு மூணு தலைமுறைக்கு சமையல் சொல்லிக் கொடுத்த பெருமையெல்லாம் இந்த சமையல்கலைதான் எனக்குக் கொடுத்துச்சு.''

`எத்தனை வகை சமையல் உங்களுக்குத் தெரியும்?''

''இந்தியாவுல இருக்கிற அத்தனை மாநில சமையல்களும் தெரியும். அப்புறம், சைனீஸ், பர்மீஸ், சிலோனீஸ், மிடில் ஈஸ்ட், வெஸ்டர்ன், இத்தாலியன், பிரிட்டிஷ், அமெரிக்கன் குக்கிங், மெக்சிகன், ஹவாய்னு பெரிய லிஸ்ட்டே இருக்கு. நான் நிறைய பயணம் செஞ்சிருக்கேன். அது எனக்கு நிறைய சமையல்களை சொல்லிக் கொடுத்திருக்கு.''

50 வருடம், ஒன்றரை லட்சம் மாணவர்கள்... சமையல்கலை நிபுணர் மெனுராணி செல்லம்!

`உங்ககிட்டே சமையல் கத்துக்கிட்டு ஜெயிச்சவங்களைத் திடீர்னு சந்திச்ச தருணம்...''

''ம்... நடந்திருக்கு. நாங்க குடும்பத்தோட ஹவாய் தீவுக்குப் போயிருந்தப்போ, தொடர்ந்து நாலு நாள் இந்திய சாப்பாடே கிடைக்காம நாக்கு செத்துப்போயிட்டோம். அப்புறம் என் பொண்ணுதான் ஆன்லைன்ல பார்த்துட்டு 'நாதன்ஸ் தோசா'ங்கிற ஒரு கேஃபிடேரியாவுக்கு அழைச்சிட்டு போனா. உள்ளே நுழையும்போதே 'செல்லம் ஆன்ட்டி'ன்னு கத்திக்கிட்டே ஓடி வந்து ஒரு லேடி என்னைக் கட்டிக்கிட்டா. அவ 1985 பேட்ச்சில் என்கிட்டே சமையல் கத்துக்கிட்டவளாம். 'ஆன்லைனில் என் கடைக்குக் கொடுத்திருக்கிற 5 ஸ்டாரும் செல்லம் ஆன்ட்டிக்குத்தான் சொந்தம்'னு  நெகிழ்ந்துபோய் பேசினா.'' 

``ஆன்லைன், பிளாக்னு நீங்க ஏன் உங்க சமையல் குறிப்புகளை எழுதலை?''

''பிளாக் ஆரம்பிக்கிறது கஷ்டமில்லம்மா. தனக்குத் தெரிஞ்சதை அதுல எழுதிட்டுப் போயிடலாம். ரெசிப்பி சரியா வரலைன்னா, கடையில வாங்கிக்கூட போட்டோ எடுத்து வைச்சிடலாம். அவங்களுக்கு மத்தவங்களுக்கு கத்துக்கொடுத்து அவங்களை வாழ்க்கையில உயர வைக்கணும்கிற எண்ணம் இருக்காது. தனக்கு ஒரு பெயர் கிடைக்கணும்னு இதைச் செய்றாங்க. பிளாக் வைச்சிருக்கிற எல்லோரையுமே நான் சொல்லலை. சிலர் இப்படியும் இருக்காங்க. ஆனா, என்னை மாதிரி சமையல் சொல்லித் தர்றவங்களுக்கு இது தினசரி சேலஞ்ச். 30 பேர் முன்னாடி கொழுக்கட்டை உடைஞ்சு வந்துச்சின்னா அசிங்கம். அதிரசம் சரியா வரலைன்னா மானம் போயிடும். நாங்க மேடைப் பாடகர்கள் மாதிரி. நேரடி ஒளிபரப்பு. ஆன் த ஸ்பாட் சரியா செய்யணும். தவிர, மனிதர்களை இதுல நேரா சந்திக்கிறேன். பேசுறேன். அவங்க பிசினஸ்க்கு வழிகாட்டுறேன். என் வாழ்க்கையை சமையல் கிளாஸ்தான் அர்த்தமுள்ளதாக்கி இருக்கு.''

50 வருடம், ஒன்றரை லட்சம் மாணவர்கள்... சமையல்கலை நிபுணர் மெனுராணி செல்லம்!

`தினமும் சமையல் ருசியா வரணும்னா என்ன செய்யணும்?''

''வீட்ல இருக்கிறவங்களை நேசிச்சு சமைச்சாலே போதும்.''

`உங்ககிட்டே ஆண்களும் சமையல் கத்துக்க வர்றாங்களா?''

''முன்னாடியெல்லாம் கிடையாது. இப்ப சில வருஷமா வர்றாங்க. வேலைபார்க்கிற மனைவிக்கு சப்போர்ட் பண்றதுக்கு சமையல் கத்துக்க வர்றாங்க. பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கும்.''

`ஆன்லைனில் உணவு ஆர்டர் பண்ணி வாங்கி சாப்பிடுறதைப்பத்தி...''

''வேலைக்குப் போயி அலுத்து களைச்சு வர்றப்போ இப்படி வாங்கி சாப்பிடுறது நல்லாதான் இருக்கும். ஆனா, ஆரோக்கியம் இல்லையேம்மா. ஏதோ, முடியாதப்போ மட்டும் இப்படி ஆர்டர் பண்ணி சாப்பிடுங்கோ. மத்தபடி வீட்டு சாப்பாடுதான் பெஸ்ட்.''

Vikatan
அடுத்த கட்டுரைக்கு