Published:Updated:

முதல்முறை காரில் ரோடு ட்ரிப் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

ஒருவேளை நீங்கள் உங்களது காரில் பயணம் (ரோடு ட்ரிப்) மேற்கொள்ளப்போகிறீர்கள் என்றால் செல்ல வேண்டிய பாதை, தங்குமிடம், தேவையான பொருள்கள் எனப் பக்காவாகக் கிளம்புவது முக்கியம்.

முதல்முறை காரில் ரோடு ட்ரிப் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
முதல்முறை காரில் ரோடு ட்ரிப் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

மக்குள் வாழும் வாண்டர்லஸ்ட்களைத் தண்ணீர் தெளித்து எழுப்பிவிடும் காலம்தான் கோடைக்காலம்! இந்நேரம் உங்களில் பலர் கோத்தகிரி, குளுமணாலி, வயநாடு எனச் சாலைப் பயணத்துக்கு நிச்சயமாக பிளான் போட்டு வைத்திருப்பீர்கள். ஏ.சி காரில் போகிறோமோ அல்லது ஜாலியாக எதிர்க்காற்று முகத்தில் அறையும்படி பைக்கில் போகிறோமோ, எப்படியிருந்தாலும் பாதுகாப்பாகவும் குதூகலமாகவும் பயணிப்பதே முக்கியம். முதல் முறை ரோடு ட்ரிப் போகிறவர்கள் கவனிக்கவேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்.

முதல்முறை காரில் ரோடு ட்ரிப் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

காரில் செக் செய்யவேண்டியவை

இரவு நேரத்தில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்திடுங்கள். தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் பயணம் செய்ய நேர்ந்தால், அப்போது நமக்குத் துணை நிற்பது ஹெட் லைட் மற்றும் பனிவிளக்குகள்தாம். ஹெட்லைட்டின் லோ பீம்/ஹை பீம், ஸ்பாய்லர் லைட்கள், பனிவிளக்குகள், Hazard இண்டிகேட்டர்கள், டெயில் லைட் என அனைத்தையுமே செக் செய்வது நல்லது. சிலர் ஆர்வத்தில் ஹை-பவர் லைட்களை வாகனத்தில் மாட்டுவார்கள். இது சாலையில் வரும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தானது. மேலும், கஸ்டம் லைட்டுகளை மாட்டும்போது சரியாகச் செய்யாவிட்டால், அது வாகனத்தின் எலெக்ட்ரிக்கல் சிஸ்டத்தையே கோளாறாக்கிவிடும். 

வெயிலில், ஏசி இயங்காத காரில் பயணிப்பது கும்பிபாகத்துக்குச் சமமானது. காரின் ஏசியில் கம்ப்ரஸர் - வாயு அளவு - Blower ஆகியவை பக்கா கண்டிஷனில் இருந்தால், ஜில் ஜில் கூல் கூல்தான். காரின் கண்ணாடிகளை இறக்கிவிட்டுக்கொண்டு சென்றால், ஏசியில் தூசி புகுவது ஈஸி. அடுமட்டுமல்ல, இது காரின் ஏரோடைனமிடஸை பாதித்து மைலேஜையும் குறைத்துவிடும். 

முதல்முறை காரில் ரோடு ட்ரிப் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

இன்ஜின் ஆயில், கூலன்ட், Viper Fluid, பிரேக் ஆயில், ஸ்டீயரிங் ஆயில் என காரில் இருக்கும் திரவங்களின் அளவு கச்சிதமாக இருக்கிறதா எனப் பாருங்கள். கோடைக்காலம் என்பதால், காரில் பெட்ரோல்/டீசலை டேங்க்கின் விளிம்பு வரை நிரப்பாமல் இருப்பது நல்லது. 

வெயில்/மழை/தூசி என அனைத்தும் காரின் விண்டுஷீல்டில் மட்டுமல்ல வைப்பரிலும் சேர்ந்தே படியும். இதனால் வைப்பரின் ஆயுள்காலம் குறைவுதான். எனவே, பயணத்துக்கு முன் வைப்பர் பிளேடுகளின் கண்டிஷனை செக் செய்யுங்கள். தேவைப்பட்டால் அவற்றை மாற்றிவிடவேண்டும். வாஷரில் போதுமான தண்ணீர் இருப்பதும் அவசியம்.

டயர்களின் Depth, Thread தவிர Sidewall பகுதியில் ஏதாவது வெடிப்பு இருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொள்ளவும். ஒரு டயர் சரியில்லை என்றாலும் அதைப் புதிதாக மாற்றிவிடுவது நல்லது. தொலைதூரப் பயணத்தின்போது வழக்கமான காற்றுக்குப் பதிலாக டயர்களில் நைட்ரஜன் நிரப்பினால் டயரின் ஆயுள் கூடுவதுடன், மைலேஜிலும் சிறிய முன்னேற்றம் கிடைக்கும். தயாரிப்பாளர் பரிந்துரைத்த டயர் பிரஷரைக் கடைப்பிடிப்பது முக்கியம். ஸ்டெப்னி வீல் சில வாகனங்களில் சிறிய சைஸில் அல்லது அலாய்க்கு பதிலாக சாதாரண வீலாகக் கொடுக்கப்படும். ஸ்டெப்னி வீலை வைத்துக்கொண்டே பயணத்தை முடிக்கலாம் எனும் எண்ணத்தைக் கைவிட்டுவிடுங்கள். 

முதல்முறை காரில் ரோடு ட்ரிப் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

காரை ரோடு ட்ரிப் கொண்டுசெல்வதற்கு முன், ஒருமுறை சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்று, சர்வீஸ் சென்டரில் அண்டர்பாடியை செக் செய்யச்சொல்லுங்கள். ஃப்யூல் லைனில் ஏதும் லீக் இருக்கிறதா, ஆயில் சம்ப் அடிப்பட்டிருக்கிறதா, எக்ஸாஸ்ட் பகுதியில் ஏதேனும் கோளாறு இருக்கிறதா என்பதை அப்போதுதான் பார்ப்பார்கள். சிலசமயம் Nut/Bolt லூஸாகவோ, ஏதேனும் பாகங்கள் துருப்பிடித்தோ இருக்கக்கூடும். காரை வாட்டர் வாஷ் செய்துவிட்டு, அடிப்பகுதியில் கோட்டிங் அடிப்பதால் இதைத் தவிர்க்கலாம்.

பயணத்தில் முக்கியமாக எடுத்துக்கொள்ளவேண்டிய பொருள்கள்

உங்கள் ட்ரிப் ஒரு மாதம் வரை நீடிக்கும் என்றால், சில உதிரிப்பாகங்களை கையில் வைத்துக்கொள்வது நல்லது. ஃப்யூஸ், ஸ்பார்க் ப்ளக், ஃபில்டர்கள், Fluids//ஆயில் போன்ற சிறிய, அதேசமயம் முக்கியமான பொருள்களை வாங்கி வைத்துக்கொள்ளலாம். காற்றடிக்கும் பம்ப் ஒன்றையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

கொஞ்சம் மஞ்சள் பொடி வைத்துக்கொள்ளுங்கள். சமையல் செய்ய அல்ல... ரேடியேட்டர் கூலன்ட் லீக் ஆகாமல் தடுக்க. கூலன்ட் கசியும் இடத்தில் மஞ்சள் பொடியை வைத்தால் கூலன்ட் கசிவை சில மணி நேரத்துக்குத் தடுக்கலாம்.

முதல்முறை காரில் ரோடு ட்ரிப் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

டூப்ளிகேட் சாவி வைத்துக்கொள்ளுங்கள். மலைகளிலும் நீர்வீழ்ச்சியிலும் மனத்தைத் தொலைத்துவிட்டு காரின் சாவியை டிக்கியில் வைத்து பூட்டிய அனுபவங்கள் பல டிரைவர்களுக்கு உண்டு. ஸ்பேர் கீ-யை பாக்கெட்டில் அல்லது கைப்பையில் வைத்துக்கொள்வது நல்லது.

20 அடி நைலான் கயிறு எப்போதும் காரில் இருக்கவேண்டும். கார் ஏதாவது பிரச்னை கொடுத்தால், லிஃப்ட் கேட்டு காரை `டோ' செய்துகொண்டு வருவதற்கு உதவும்.

எப்போதுமே முதலுதவி பெட்டி வைத்திருப்பது நல்லது. கார் வாங்கும்போதே இலவசமாக அதை வழங்குவார்கள். எனவே, நீங்கள் தனியாக முதலுதவி பெட்டியை வாங்காவிட்டாலும், காருடன் வழங்குவதையாவது பத்திரமாக வைத்துக்கொள்ளவும். Band Aid, Cotton Roll, Oinment போன்ற மருத்துவ உபகரணங்களுக்கு Expiry Date உண்டு என்பதால், அதை அவ்வப்போது செக் செய்துகொள்ளுங்கள். 

பயணத்தில் இந்த விஷயங்களை முக்கியமாகக் கடைப்பிடியுங்கள்

நீண்ட தூரப் பயணம் என்றாலே, சிப்ஸ் பாக்கெட், கோலா, சாக்லேட் என அள்ளிப் போட்டுக்கொண்டு கிளம்ப வேண்டாம். ஜன்க் ஃபுட்களை சாப்பிடும்போது, முதலில் உற்சாகம் தோன்றினாலும் இவை உடலை விரைவில் மந்தமாக்கி தூக்கத்தை வரவழைக்கும்.

`Redbull gives you wings' என்பார்கள். ஆனால், ரேஸ் உட்பட பல விளையாட்டுகளில் ரெட்புல், மான்ஸ்டர் போன்ற எனெர்ஜி டிரிங்க்குக்கு அனுமதியில்லை. இவை நமக்கு விரைவில் Dehydration கொடுப்பவை என்பதால்தான் இந்தக் கட்டுப்பாடு. பைக்/கார் பயணத்தின்போது நீண்ட நேரம் காரில் உட்கார்ந்துகொண்டே இருப்பதால், உடலில் வெப்பம் அதிகரிக்கும். வெப்பத்தைத் தணிக்க ஃப்ரெஷ் ஜூஸ், இளநீர் போன்றவை உதவும்.

முதல்முறை காரில் ரோடு ட்ரிப் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

இப்போது மொபைலிலேயே மேப்களை நெட் வசதி இல்லாமல் பார்க்க முடியும். காரில் சேட்டிலைட் ஜிபிஎஸ் பரவலாக வருகிறது. இதனால், நீங்கள் செல்லும் திசையில் போக்குவரத்து நெரிசல் எப்படி இருக்கிறது என்பதை முன்பே பார்த்து மாற்று வழியைப் பயன்படுத்த முடியும். 

எப்போதும் மேப்பை நம்பியிருக்காதீர்கள். அங்கு உள்ளவர்களிடம் வழி கேட்பது, அவர்களிடம் உரையாடுவதற்கான ஒரு வழி. மக்களிடம் உரையாடுங்கள், அங்குள்ள உணவு, கலாசாரம், மத நம்பிக்கைகள், கதைகள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

காரில் போகும்போது சீட் பெல்ட் கட்டாயம். உங்கள் கார் 7 ஏர்பேக் உள்ள பாதுகாப்பான காரக இருந்தாலும் சீட் பெல்ட் போட்டால்தான் காற்றுப்பை திறக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். பைக்கில் ஸ்டைலுக்காக விற்கப்படும ரைடிங் ஜாக்கெட்டுகளைப் பயன்படுத்தாமல் CE புரொடெக்டட் ஆர்மர்கொண்ட ரைடிங் கியர்களைப் பயன்படுத்தவும். கிளாவுஸ் மற்றும் ஷூ முக்கியம்.

ஹார்னை தேவையானபோது மட்டுமே பயன்படுத்துங்கள். இரவுநேரப் பயணம் என்றால் ஹார்னுக்குப் பதிலாக பாஸ் லைட்டை அல்லது ஹெட்லைட்டின் dim-dip வசதியைப் பயன்படுத்துவது நல்லது.

Vikatan