Published:Updated:

`மகனுக்கு கிஃப்ட் கொடுக்க வாங்கினேன்; ஆனால்....' - கடைமுன் செல்போனை எரித்த தந்தை 

எஸ்.மகேஷ்
`மகனுக்கு கிஃப்ட் கொடுக்க வாங்கினேன்; ஆனால்....' - கடைமுன் செல்போனை எரித்த தந்தை 
`மகனுக்கு கிஃப்ட் கொடுக்க வாங்கினேன்; ஆனால்....' - கடைமுன் செல்போனை எரித்த தந்தை 
`மகனுக்கு கிஃப்ட் கொடுக்க வாங்கினேன்; ஆனால்....' - கடைமுன் செல்போனை எரித்த தந்தை 

சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரபல செல்போன் கடைக்கு வந்த ஒருவர், ஊழியர்களிடம் பேசினார். பிறகு, அவசரமாக வெளியில் வந்த அவர், கடையின் மூன் செல்போன், பில் என எல்லாவற்றையும் தீ வைத்து கொளுத்தினார். மகனுக்காக ஆசையாக வாங்கிய செல்போனை ஆத்திரத்தில் தந்தை தலைமலையே எரித்த சம்பவம் வைரலாகிவருகிறது. 

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே கடப்பேரியைச் சேர்ந்தவர் தலைமலை. இவரின் மகன் ப்ளஸ் டூ தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த தலைமலை மகனிடம் என்ன கிஃப்ட் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் ஸ்மார்ட் போன் வேண்டும் என்று கூறியதும் 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போனை கடந்த சில வாரங்களுக்கு முன் குரோம்பேட்டையில் உள்ள செல்போன் கடையில் வாங்கினார் தலைமலை. 

சில நாள்களுக்குப் பிறகு செல்போனில் சிம்கார்டு போட்டபோது அது ஆன் ஆகவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்தார் தலைமலை. உடனே செல்போன் கடைக்கு, செல்போனை கொண்டு சென்றார். அப்போது, கடை ஊழியர் செல்போன் வாங்கும்போது நன்றாகத்தான் இருந்தது. அப்போது ஆன் ஆகவில்லை என்றால் சர்வீஸ் சென்டருக்குச் செல்லுங்கள் என்று பதிலளித்துள்ளார். அதைக்கேட்டு தலைமலை, இந்த போனுக்கு பதிலாக புதிய போனை கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு வாய்ப்பு இல்லை எனக் கடை ஊழியர் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

`மகனுக்கு கிஃப்ட் கொடுக்க வாங்கினேன்; ஆனால்....' - கடைமுன் செல்போனை எரித்த தந்தை 

இதையடுத்து ஆத்திரமடைந்த தலைமலை, புதிய செல்போன், பில் ஆகியவற்றை கடையின் வாசலில் வைத்தார். கையோடு கொண்டு வந்த பெட்ரோலை அதன்மீது ஊற்றினார். பிறகு தீ வைத்தார். இதனால் செல்போன் மற்றும் பில் கொளுந்துவிட்டு எரிந்தது. இந்தக் காட்சியை சிலர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவு செய்தனர்.

என்ன நடந்தது என்று தலைமலையிடம் நிருபர்கள் கேட்டதற்கு,`மகனுக்கு கிஃப்ட் கொடுக்க சேமித்து வைத்திருந்த பணத்தில் செல்போன் வாங்கினேன். சிம் கார்டு போட்டு பார்த்தபோது செல்போன் ஆன் ஆகவில்லை. கடையில் கேட்டால் அலட்சியமாக பதில் சொல்கின்றனர். அதனால்தான் செல்போனை அந்தக் கடையின் வாசலில் வைத்து எரித்தேன்' என்றார். 

சம்பந்தப்பட்ட கடையின் அக்கவுன்ட் மேலாளர் பானுவிடம் பேசினோம். ``வாடிக்கையாளர் செல்போனை வாங்கும்போது நன்றாகத்தான் இருந்தது. இந்தப் பிரச்னைக்கும் ஷோரூம்க்கும் எந்தவித தொடர்பும் இல்லை. செல்போனை வாங்கி அப்படியே வைத்துள்ளனர். இதனால்தான் செல்போனில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. செல்போனை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்லுங்கள் என்று வாடிக்கையாளரிடம் கூறினோம். ஆனால், அவர் கேட்கவில்லை. எங்கள் ஷோரூமில் வாடிக்கையாளர்களின் சேவைதான் முக்கியம். செல்போன் வாங்கிய 15 நாள்களுக்குள் பிரச்னை ஏற்பட்டிருந்தால் அதற்கு பதிலாக புதிய போன்களையும் கொடுத்திருக்கோம். செல்போனை பயன்படுத்திக் கொண்டிருந்தால் எந்தப் பிரச்னையும் ஏற்பட்டிருக்காது" என்றார். 

`மகனுக்கு கிஃப்ட் கொடுக்க வாங்கினேன்; ஆனால்....' - கடைமுன் செல்போனை எரித்த தந்தை 

தலைமலையிடம் என்ன நடந்தது என்று கேட்க அவரின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டபோது ராங் நம்பர் என்ற பதில் வந்தது. தொடர்ந்து அந்த நம்பரில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. 

தலைமலை குறித்து விசாரித்தபோது நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். ப்ளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லும் மகனுக்கு ஆசை, ஆசையாக அன்பு பரிசை அளிக்க தலைமலை புதிய செல்போனை வாங்கியுள்ளார். ஆனால் அந்த செல்போன், ரிப்பேரானதால் அவர் மட்டுமல்ல அவரின் குடும்பமும் அதிர்ச்சியடைந்தது. புதிய செல்போனோடு கல்லூரிக்குச் செல்லும் மகனின் ஆசையும் நிராசையானது. இதனால் செல்போன் கடையில் கேட்டு புதிய செல்போனை வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையோடு கடைக்குச் சென்ற தலைமலையிடம், செல்போனை ரிப்பேருக்குக் கொடுங்கள், ரெடியானதும் பதில் சொல்கிறோம் என்று ஊழியர்கள் கூறினர். இதனால்தான் தலைமலை இந்த முடிவை அவசரத்தில் எடுத்துவிட்டார். 

வாடிக்கையாளர்களுக்கு நேரிடும் இதுபோன்ற பிரச்னைகளுக்காகத்தான் நுகர்வோர் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. சேவை குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளை வாடிக்கையாளர்கள் நுகர்வோர் நீதிமன்றங்களில் முறையீட்டால் விரைவில் அவர்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். அதோடு வழக்கு செலவு, மன உளைச்சலுக்கான நிவாரணம் மற்றும் நஷ்ட ஈடு கிடைக்க வழிவகை உள்ளது. ஆனால், தலைமலை, ஆத்திரத்தில் செல்போனை கடையின் வாசலில் எரித்துவிட்டார். 

Vikatan