Published:Updated:

குழந்தைகள், ஆன்மிக பிரியர்களைக் குஷிப்படுத்தும் ரங்கமலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குழந்தைகள், ஆன்மிக பிரியர்களைக் குஷிப்படுத்தும் ரங்கமலை!
குழந்தைகள், ஆன்மிக பிரியர்களைக் குஷிப்படுத்தும் ரங்கமலை!

குழந்தைகள், ஆன்மிக பிரியர்களைக் குஷிப்படுத்தும் ரங்கமலை!

குழந்தைகள், ஆன்மிக பிரியர்களைக் குஷிப்படுத்தும் ரங்கமலை!

'கொலம்பஸ்... கொலம்பஸ்...விட்டாச்சு லீவு..' என்ற பள்ளி குழந்தைகளை சினிமா பாட்டு பாடவைக்கும் கோடைகாலம் நிலவுகிறது. 'காசும் செலவாகக்கூடாது; காட்சிகளும் நல்லா இருக்கணும். அப்படி ஒரு இடமிருக்கா மக்கா' என்று பெற்றோர்கள் கூடவே 'பட்ஜெட்'டும் போடத்தொடங்கி இருப்பார்கள். குறைந்த செலவில் அவர்களுக்கு நிறைவான 'சுற்றுலா சுகத்தை' தரும் ஸ்பாட்தான் ரங்கமலை.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்காவில் இருக்கிறது இந்த மலை. கரூர் சுட்டிகளுக்கு மட்டுமின்றி, அனைத்து மாவட்ட குழந்தைகளும், ஆன்மீகம், மலையேற்றம் மற்றும் மயில், புறாக்கள் என பறவைகளின் காட்சி, மனதுக்கும், உடம்புக்கும் தெம்பு தரக்கூடிய மூலிகை காற்று என்று அத்தனை விஷயங்களையும்;சுகந்தங்களையும் ஒரே பயணத்தில் அடைய வேண்டுமென்றால், தயங்காமல் கரூர் டு திண்டுக்கல் சாலையில், இரண்டு மாவட்ட எல்லையில் உள்ள ஆலமரத்துப்பட்டி அருகே இருக்கும் இந்த ரங்கமலைக்கு ஒரு எட்டு போய் வரலாம். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரங்கமலை 3,500 மீட்டர் உயரம் கொண்டது. 


 

குழந்தைகள், ஆன்மிக பிரியர்களைக் குஷிப்படுத்தும் ரங்கமலை!

குழந்தைகளை, மாணவர்களை அழைத்துக் கொண்டு குடும்பங்களோடு சுற்றுலா செல்ல சரியான இடம். அடிவாரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அனுமதி வாங்க வேண்டும். காலை எட்டு மணியில் இருந்து மதியம் ஒரு மணி வரை மலையேற அனுமதிக்கிறார்கள். ரங்கமலை அடிவாரத்தில் மருந்தீஸ்வரர் கோயில் இருக்கிறது. மலையில் கல்லிலேயே செதுக்கி செதுக்கி படிகள் அமைத்திருக்கிறார்கள். இரண்டாயிரம் மீட்டர் உயரத்தில் மல்லீஸ்வரர் கோயில் இருக்கிறது. அதை தொடர்ந்து, 3500 மீட்டரில் உள்ள மலை உச்சி பகுதியில் முனீஸ்வர சாமி வீற்றிருக்கிறார். பத்து மீட்டர் ஏற ஆரம்பித்த உடனேயே, மூலிகை வாசம் காற்றில் கரைந்தபடி கைகோத்து வந்து, நம் நாசிக்குள் புகுந்து, இதமான வாசத்தையும், புத்துணர்ச்சியையும் தருகிறது. மலை ஏற ஏற இன்னும் நம்மை மலை சூழல் தரும் ஏகாந்தம் ஆலோலம் பாடவைக்கிறது.

குழந்தைகள், ஆன்மிக பிரியர்களைக் குஷிப்படுத்தும் ரங்கமலை!

அதோடு, மயில், புறாக்கள், புல்புல் பறவை, சிட்டுக்குருவி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட பறவைகள் நம் தலையை தட்டியபடி பறந்து போவது, அந்த மலையேற்ற அனுபவத்தில் கூடுதல் சுகம் சேர்க்கிறது. முக்கால் மணி நேரம் மலையேறினால், மல்லீஸ்வரர் கோயில் வருகிறது. அங்கே கொஞ்ச நேரம் அமர்ந்து இளைப்பாறலாம். அங்கிருந்து கீழே பார்த்தால், கண்ணுக்கெட்டும் தூரம் வரை பார்வையில் படுகின்றன பசுமை போர்த்திய வயல்வெளிகள். அங்கே அமர்ந்து கையோடு கொண்டு போகும் சாப்பாடுகளையோ, பதார்த்தங்களையோ, பானங்களை, கட்டுச்சோறையோ சாப்பிட்டால், 'சொர்க்கம் என்பது நமக்கு, இந்த ரெங்கமலை மலைதான்' என்று முணுமுணுக்கத் தோன்றும்.


 

குழந்தைகள், ஆன்மிக பிரியர்களைக் குஷிப்படுத்தும் ரங்கமலை!

அதன்பிறகு, தொடர்ந்து மலை ஏறத் தொடங்கினால், அடுத்த முக்கால் மணி நேரத்தில் மலை உச்சியில் உள்ள முனீஸ்வரன் கோயில் வருகிறது. அங்கே இருந்து பார்க்கையில், தலையில் இடிக்கும் மேகம், சிலுசிலு காற்று, கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை என்று விரியும் காட்சிகள் நம்மை ஹோவென கத்த வைக்கும். வார்த்தையில் வடிக்க இயலாத சுகாபனுபவங்களை அள்ளித் தரும். இதைத்தவிர, அங்கிருந்து திண்டுக்கல் மாவட்டத்தை பார்த்த திசையில் ஒரு கிலோமீட்டர் தூரம் கீழே இறங்கினால் தீபக்கும்பம் இருக்கிறது. திருவண்னாமலையில் தீபம் ஏற்றுவதுபோல், இங்கே கார்த்திகை மாதங்களில் தீபம் ஏற்றுவார்கள். அந்த இடத்தில் இருந்து கீழே பார்ப்பது அவ்வளவு ஆனந்தத்தை தருகிறது. 

 மல்லீஸ்வரர் கோயில் நிர்வாகம் தரப்பில் பேசினோம்.


 

குழந்தைகள், ஆன்மிக பிரியர்களைக் குஷிப்படுத்தும் ரங்கமலை!

"பள்ளி குழந்தைகள் குடும்பத்தோடு சுற்றுலா வர இது நல்ல இடம். சும்மா பூங்கா, பார்க், பீச்சுன்னு அழைச்சுட்டு போறதைவிட, இதுபோல் இயற்கை வழியும் இடங்களுக்கு அழைத்து வந்தால், இயற்கையோடு இயைந்த சுற்றுலாவாக அது அமையும். ஆன்மீக பயணமாகவும் அமையும். மலையேற்ற அனுபவத்தையும் தரும். மூலிகைக் காற்றை சுவாசிக்கும் சுகமும் கிடைக்கும். எல்லாவற்றையும் விட, உடம்புக்கும், மனதுக்கும் புது தெம்பு கிடைக்கிற பயணமாக இது அமையும்.

ஊட்டி, கொடைக்கானலுக்கு பிள்ளைகளை அழைச்சுட்டுப் போனா, ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனா, இங்கே சுற்றுலா வர சில நூறுகள் செலவழிச்சாலே போதும். கீழே உள்ள கோயிலுக்கு எதிரே செயற்கையா ஒரு குளத்தை உருவாக்கி, தாமரை வளர்க்கிறோம். அதைப் பார்ப்பது ரம்மியமாக இருக்கும். இதுதவிர, கீழே அடிவாரத்தில் அரிய வகை மூலிகை பண்ணையும் அமைச்சுருக்கோம். அதையும் சுத்தி பார்க்கலாம்.

நகரங்களில் உள்ள பூங்காக்களில் செயற்கையா ஒரு சுற்றுலா போறதைவிட, ரங்கமலைக்கு இயற்கையா ஒரு பயணம் வரலாம். செலவும் கம்மி. பலனும் அதிகம். தொடர்ந்து, இந்த மலைக்கு வந்தால், இங்குள்ள மூலிகைகளின் தன்மையால் பல வியாதிகள் குணமாகும். அதோட, இந்த மலையில் காலம் காலமாக சித்தர்கள் வசிக்கிறதா சொல்றாங்க. அவர்களை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தாலும் கிடைக்கலாம்" என்றார்.

என்ன பாஸூ, ரங்கமலைக்கு ஒரு எட்டு குடும்பத்தோடு போய்வருகிறீர்களா?!

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு