Published:Updated:

'21 பந்தி, 61 பரிவாரங்கள் கொண்டது குலதெய்வ வழிபாடு...' - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்! #WhatSpiritualityMeansToMe

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'21 பந்தி, 61 பரிவாரங்கள் கொண்டது குலதெய்வ வழிபாடு...' - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்! #WhatSpiritualityMeansToMe
'21 பந்தி, 61 பரிவாரங்கள் கொண்டது குலதெய்வ வழிபாடு...' - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்! #WhatSpiritualityMeansToMe

'21 பந்தி, 61 பரிவாரங்கள் கொண்டது குலதெய்வ வழிபாடு...' - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்! #WhatSpiritualityMeansToMe

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக நாட்டுப்புறக் கலைகள் மற்றும் பாடல்களின் புகழ் மங்கிக்கொண்டிருந்தபோது அதற்குப் புத்துயிர் கொடுத்து, பட்டிதொட்டியெங்கும் அவற்றைக் கொண்டு சேர்த்த பெருமை விஜயலட்சுமி - நவநீதகிருஷ்ணன் தம்பதியையே சேரும். மரபார்ந்த பழைமையான இசை, ஆடல், கூத்து உள்ளிட்ட கலைவடிவங்களைக் கண்டறிந்து ஆய்வு செய்யும் முயற்சியில் 1979 முதல் ஈடுபட்டுவரும் இவர்கள், ஏற்றப்பாட்டு, தாலாட்டு, பாவைக்கூத்து, இசைநாடகம், கோலாட்டம் என பல கலைவடிவங்களைத் தொகுத்து, 'கிராமிய ராமாயணம்' எனும் படைப்பை அரங்கேற்றிப் புகழ்பெற்றனர். இருவரும் முனைவர் பட்டம் பெற்றவர்கள். திருமதி. விஜயலட்சுமி அவர்களுக்கு மத்திய அரசு பத்மஶ்ரீ விருதையும், தமிழக அரசு கலைமாமணி விருதையும் வழங்கிக் கௌரவித்துள்ளன. 
தமிழர்களின் கிராமியப் பாரம்பர்யத்தின் மீது பெருமதிப்பு கொண்ட விஜயலட்சுமி - நவநீதகிருஷ்ணன் தம்பதியினர் ஆன்மிகம் குறித்த அவர்களின் கருத்துகளை நம்மோடு பகிர்ந்துகொண்டனர்.

'21 பந்தி, 61 பரிவாரங்கள் கொண்டது குலதெய்வ வழிபாடு...' - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்! #WhatSpiritualityMeansToMe

''தமிழர் தொடாத வாழ்வியல் சித்தாந்தங்களே கிடையாது. தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், தமிழர் வாழ்க்கைக்கும் சேர்த்தே இலக்கணம் தந்துள்ளார். மக்கள் வாழும் நிலங்களை ஐந்தாக வகைப்படுத்தினார். ஒவ்வொரு நிலத்துக்கும் உரியக் கருப்பொருள்களை பட்டியலிடும்போது தெய்வம் என்பதை முதலில் சுட்டுகிறார். ஒவ்வொரு நிலத்துக்கும் குறிப்பிட்ட தெய்வம் என்பது பின்னாட்களில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தெய்வம் என்று வளர்ச்சி பெற்றுவிட்டது. 

'ஊரானார் தேவகுலம்' என்று பாடினர் இலக்கண உரையாசிரியர்கள். தேவகுலம் என்பது தெய்வத்தைக் குறிக்கும். மரங்களைத் தெய்வமென்று வணங்கினர். காணுறைத் தெய்வமென, காடுகளை தெய்வமெனக் கருதினர். வீட்டுக்கொரு தெய்வத்தையும் வழிபட்டனர். பல குடும்பங்கள் சேர்ந்து ஒரே குலமாக ஒரு தெய்வத்தை வணங்கினர். இப்படியாகக் குலதெய்வம், வீட்டுத்தெய்வம், காவல் தெய்வம், வழிபடு தெய்வம், எல்லைத் தெய்வம் எனப் பலவிதங்களில் கடவுளை வழிபட்டு வந்தனர். 

'21 பந்தி, 61 பரிவாரங்கள் கொண்டது குலதெய்வ வழிபாடு...' - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்! #WhatSpiritualityMeansToMe

ஒரே குலதெய்வத்தை வணங்குபவர்கள் தங்களுக்குள் திருமண உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள். குலதெய்வம் 21 பந்திகளுடன், 61 பரிவாரங்களுடன் இருக்கும். குலதெய்வங்கள் குலத்தைக் காப்பதுடன், அவர்களின் செயல்களுக்கும் தொழிலுக்கும் உறுதுணையாக இருக்குமென்பது ஆழ்ந்த நம்பிக்கையாக இருந்து வருகிறது.

பெரும்பாலும் குலதெய்வம் என்பது பெண்கடவுளாகவே இருந்து வந்திருக்கிறது. ஆண்கள் தெய்வநிலை அடைந்தால் 'அண்ணன்' என்ற நிலையில் தெய்வமாக வழிபடப்பட்டு வந்தனர். கருப்பு, கருப்பண்ணன், பெரியசாமி, பாலகுருசாமி போன்ற ஆண்தெய்வங்களும் உண்டு. திருவிழாவின் போது கரகம் எடுத்தல் , தீச்சட்டி எடுத்தல், அலகு குத்தி ஆடி வருதல், பொங்கலிட்டுப் பூசையிடுவதெல்லாம் சீராகவும் நேர்த்தியாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன..." ..." என்கிறார்கள்.

நவநீதகிருஷ்ணனின் குலதெய்வம்  அங்காள ஈஸ்வரி. அந்தத் தெய்வம் பற்றி உணர்வுப்பூர்வமாகப் பேசுகிறார் அவர். 
"எங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், விஸ்வநாதசேரி.  நான் சிறுகுழந்தையாக இருந்தபோது என் பாட்டனார், அங்காள ஈஸ்வரி கோயிலின் விழாவுக்கு என்னை அழைத்துச் செல்வார். ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியின்போது விழா நடைபெறும். கோயில் பூசாரியான வேளார், பச்சைக் களிமண்ணில்  குடம் செய்து, அதில் தண்ணீர் எடுத்து வருவார். தெய்வத்தின் முன்னிலையில் அந்தக் குடத்தை இறக்கி வைத்து, உடைவாளால் அந்தக் குடத்தின் விலா பகுதியில் குத்திவைப்பார். அதன் பிறகு பூசைகள் தொடங்கும். இந்த வழிபாட்டில் பல சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பார்கள். ஒன்றரை நாழிகைக்குப் பிறகு அந்த உடைவாள் தன் தகுதியை இழக்கும். 

'21 பந்தி, 61 பரிவாரங்கள் கொண்டது குலதெய்வ வழிபாடு...' - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்! #WhatSpiritualityMeansToMe

அந்த நேரத்துக்குள்ளாக மக்கள் தங்களின் வேண்டுதல்களை வைப்பார்கள். அடுத்த ஆண்டே அவர்களின் வேண்டுதல் நிறைவேறிவிடும். அதற்குப் பிரதிபலனாக, கோயிலுக்குப் பொருளாகவும் பணமாகவும் காணிக்கைகளைச் செலுத்தி, மலர்களாலும் மாலைகளாலும் சுவாமியை அலங்கரித்து மகிழ்வார்கள். இதை 'அழகு சாத்தும் நிகழ்ச்சி' என்றழைப்பார்கள். 

ஒருமுறை கோயில் திருவிழாவுக்குக் குடும்பத்தினருடன் சென்றிருந்தோம். அப்போது கோயிலில் அழகுசாத்தும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. சாமியைக் கும்பிடுவதற்காக அத்தனைநேரம் தூக்கி வைத்திருந்த இரண்டரை வயதான எங்களின் மகனைக் கீழே இறக்கிவிட்டிருந்தோம். அருகிலேயே விளையாடிக்கொண்டிருந்தான். ஆனால், சாமியைக் கும்பிட்டுவிட்டுப் பார்த்தால் அவனைக் காணவில்லை. நானும் என் மனைவியும் பதற்றமாகிப் பல இடங்களிலும் தேடினோம். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மனம் ஒரு நிலையில் இல்லை. 

அப்போது கோயிலின் சனிமூலையில் (வடகிழக்கு மூலையில்) மங்களகரமான ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். அவளுக்கு அருகில் என் மகன் நின்றிருந்தான். ஓடிப்போய் மகனை அணைத்துக்கொண்டோம். அந்தப் பெண்ணுக்கு நன்றி சொல்லலாம் எனத் தலை நிமிர்ந்தால், அந்தப் பெண்ணைக் காணவில்லை. அந்த அங்காள ஈஸ்வரிதான் பிள்ளையைப்  பாதுகாத்து எங்களுக்குத் தந்திருக்கிறாள் என்று நம்பினோம். இப்படி அநேக சம்பவங்களுண்டு. அம்மன் அருளால், எங்கள் வாழ்க்கையில் இன்பம், துன்பம், புகழ், செல்வமென எந்தக்குறைவுமில்லை. 

தமிழ்நாட்டில், மேற்கத்திய நுகர்வுக் கலாசாரத்தால் நம் பண்பாட்டை மறந்துவிட்டோம். மீண்டும் தமிழர்கள், தங்களின் பெருமைகளை உணர்ந்து இயற்கையையும், நம் நாட்டுப்புற தெய்வங்களையும் மீட்டெடுத்து வழிபட்டால், மீண்டும் மண்வளமும், நீர்வளமும்  பெருகும். அதை நோக்கித் தமிழர்கள் வரவேண்டுமென்பதையே எங்களின் வேண்டுதலாக இறைவனிடம் அனுதினமும் வைக்கிறோம்'' என்று உணர்ச்சிப் பெருக்கோடு சொல்லி விடைகொடுத்தார் நவநீதகிருஷ்ணன்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு