Published:Updated:

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

Published:Updated:
##~##

டிந்து உட்கார்ந்திருந்த சின்னப்பாண்டியின் தோள் தொட்டு நிமிர்த்தினான் இஷிமுரா. அவன் தலையில் கைவைத்துத் தாய்மையோடு கோதினாள் எமிலி. அந்த ஸ்பரிசத்தின் ஆறுதல் கபாலம் புகுந்து கால் தொட்டது. ஏதோ ஒரு முடிவெடுத்த பெருமூச்சில் அவன் நிமிர்ந்தான். சின்னப்பாண்டியை இஷிமுரா கண்ணோடு கண் பார்த்தான்; சொன்னான்:

 ''சின்னப்பாண்டி... தோல்வி கண்டு கலங்காதே. நீ விதைத்திருக்கிறாய். தோல்வியின் விதையில் இருக்கிறது வெற்றியின் விளைச்சல். நீ மனம் கிழிந்துகிடக்கிறாய். விதையின் கிழிசல் என்பது அழிவல்ல; முளைப்பின் முதல் முயற்சி. கடவுள் என் முன் பிரசன்னமானால் நான் வெற்றிகளை யாசிக்க மாட்டேன். கை நிறையத் தோல்விகளையும் அவற்றில் இருந்து மீண்டு வரும் வழி களையும் தந்தருளும் என்று மன்றாடுவேன். தோல்வியை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் மனிதர்கள். கன்னம் கிள்ளிச் சொல்லிக்கொடுப்பது வெற்றி; கன்னத்தில் அடித்துச் சொல்லிக்கொடுப்பது தோல்வி. தோல்வியும் ஆசான். சர்க்கரைநோய் எல்லா உறுப்புகளையும் உறுப்புகளின் பொறுப்புகளையும் எப்படிச் சொல்லிக்கொடுக்க வருகிறதோ, அப்படித்தான் ஒவ்வொரு தோல்வியும் தன் சொந்தச் செலவில் வாழ்க்கையைச் சொல்லிக்கொடுத்துவிட்டுப்போகிறது. பொதுப் பணிக்கு வருகிறவனுக்கு அவமானம்தான் முதல் வெகுமானம்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தன் தலை மீது கைவைத்திருக்கும் எமிலியின் பக்கம் இப்போது தலை திருப் பினான் சின்னப்பாண்டி.

''நீங்கள் ஏற்றிய தீபம் அணைந்ததென்று இருட்டில் இருக்காதீர்கள். உங்கள் மெழுகுவத்திகளும் உருகிவிடவில்லை; தீக்குச்சிகளும் தீர்ந்துவிடவில்லை.''

மூன்றாம் உலகப் போர்

''இன்னொன்றும் சொல் எமிலி. சின்னப்பாண்டியின் ஆசை சரி; அணுகுமுறை தவறு'' என்றான் இஷி.

''எப்படி?'' என்றாள் எமிலி.

''ஒரு தனி மனிதனால் முடியாது ஊரைத் துடைத்துவைக்க. ஒரு புலிக்குட்டி தன் நாக்கால் தன்னை நக்கித் தூய்மைப்படுத்திக்கொள்வதைப் போல ஓர் ஊர் தன்னைத்தானே சுத்திகரித்துக்கொள்ள வேண்டும்.''

''அது எப்படி முடியும் இஷி?''

''வேட்டைச் சமூகத்தில் இருந்து சற்றே விடுபட்ட வேளாண்மைச் சமூகம், கல்வியாலும் பொருளாதாரத்தாலும் நிராகரிக்கப்பட்ட நிலையில், எப்படி அது தன்னைத்தானே சுத்திகரித்துக்கொள்ள முடியும்? குடிக்கத் தண்ணீர் இல்லாத யானை குளிக்க முடியுமா?'' என்றாள் எமிலி.

''யானைக்குத் தெரியாது எமிலி, தன் காலடியின் கீழேயே ஒரு நதி ஓடிக்கிடக்கிறதென்று. நதியைத் தோண்டிக்கொடுத்தால், யானையே குடித்துக்கொள்ளும்.''

''நதி தோண்ட நிதி?''

''இந்தக் கேள்வி சின்னப்பாண்டிக்கும் எழுந்திருக்கிறது. அதிலும் ஒரு தவறு நேர்ந்திருக்கிறது.''

''என்ன தவறு?'' என்றான் சற்றே சினந்து சின்னப்பாண்டி.

''நண்பர்கள் கூடி ஆளுக்குக் கொஞ்சம் நிதி போட்டிருக்கிறீர்கள் பொதுப் பணிக்கு. அதுதான் தவறு.''

''அது எப்படித் தவறாகும்?'' என்றாள் எமிலி.

''பொதுப் பணிக்குத் தன் பொருளைக் கொடுப்பவன் முட்டாள். பொதுப் பணத்தைத் தனக்கு எடுத்துக்கொள்கிறவன் அயோக்கியன்.''

''வேறென்ன செய்ய வேண்டும்?''

''மக்களின் பங்களிப்பு இல்லாத எந்தப் பணியும் மக்களைச் சேருவதில்லை. அரசு நிதியே மக்கள் நிதிதான். பூமியில் இருந்து புறப்பட்ட மேகம் பூமிக்கே மழையாகி வருவது மாதிரி மக்களுக்கே திரும்ப வேண்டும் மக்கள் பணம். அதற்கு மக்களைத் திரட்டு; பொது மானம் காக்கத் தனி மானம் தியாகம் செய்.''

மூன்றாம் உலகப் போர்

இருவருக்கும் தன்னிலை விளக்கம் சொன்னான் சின்னப்பாண்டி:

''என்னை மன்னித்துவிடுங்கள் இருவரும். கல்லெறி தாங்கும் உடம்புள்ள எனக்குச் சொல்லெறி தாங்கும் மனமில்லை. தவிரவும் நான் தொடுகிற தூரத்தில் மக்கள் இல்லை. எல்லா மனிதர்களும் தனித் தனி நட்சத்திரங்களில் தங்களுக்கான உலகங்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்காகத் தூரத்தில் நின்று அழலாம்; தொட்டுப் பார்க்கப்போனால் சுட்டுவிடுகிறார்கள்.''

''அடுப்பில் வைத்த பாத்திரம் அஞ்சக் கூடாது நெருப்புக்கு'' என்றாள் எமிலி.

''நான் தீயைக் கண்டு அஞ்சவில்லை; தீமை கண்டே அஞ்சுகிறேன்'' என்றான் சின்னப்பாண்டி.

எமிலி எழுந்தாள்; சற்றே தள்ளி நின்று சிரித்தாள்; தீர்க்கமாய்ப் பேசலானாள்:

''கழிவுறுப்புக்குப் பக்கத்தில் கரு வளருவதைப் போல தீமைக்குப் பக்கத்தில்தான் சமூகம் வளர்ந்து வந்திருக்கிறது. ஆனால், தீமையைக் களைகிறவர்களின் கணக்கு ஓரிரு சதவிகிதத்திற்குள்ளேதான் எப்போதும் இருந்துவந்திருக்கிறது.

ஐந்து அடுக்குகள்கொண்டது தீமையின் சமூகம்.

•  தீமையைத் தீமை என்றே அறியாத பாமரன்.

•  தீமையைத் தீமை என்று மட்டும் தெரிந்து சொல்லும் அறிவுஜீவி.

•  தீமையைத் தீமை என்று கண்டும் அஞ்சி ஓடும் கோழை.

•  தீமையைத் தீமை என்று கண்டு அதைச் சந்தைப்படுத்தும் வஞ்சகன்.

இந்த நான்கு அடுக்குகள் தாண்டி, தீமை கண்டு அதைத் தீ வைத்துக்கொளுத்தும் ஐந்தாம் அடுக்கு மனிதனாய் நீ இரு.''

- ஒரு தேவதை தன் காதில் மந்திரம் ஓதுவதுபோல் உணர்ந்தான்.

''வெளிநாட்டு மண்ணில் பிறந்த இந்த இரண்டு பேருக்கும் இருக்கிற அக்கறை அட்டணம்பட்டித் தண்ணீர் குடித்து வளர்ந்த எனக்கு ஏன் இருக்கக் கூடாது?''

கண் மூடி யோசித்துத் தலையாட்டிக்கொண்டே இருந்தான் சற்று நேரம்.

எழுந்தான்; துவண்ட நெஞ்சைத் தூக்கி நிறுத்தினான். சுருண்டுகிடந்த நம்பிக்கைக்குச் சுளுக்கெடுத்தான். ''சொல்லுங்கள்; செய்கிறேன்; நான் என்ன செய்ய வேண்டும்?''

''மக்களே மாணவர்கள்; மக்களே ஆசான் கள்; ஞானபோதம் கொளுத்து!

மக்களே வறியர்கள்; மக்களே செல்வர் கள்; சமத்துவம் நடத்து!

மக்களே எதிரிகள்; மக்களே நண்பர்கள்; உடன்பாடு படுத்து!

உன் பின்னால் யாமிருப்போம்; போ. அங்கங்கே தோல்வி கண்டால் வா.''

பட்டாம்பூச்சியாய்ப் பறந்தது தரையில் கிடந்த சருகொன்று.

ஊராட்சி ஒரு கட்சி; மக்களெல்லாம் வேறு கட்சி என்பதுதான் உள்ளாட்சி. ஊர் மக்களை ஒன்றுதிரட்ட யாது வழி என்று யோசித்தான். குழந்தைகளை நயந்து பேசி அவர்கள் வழியே பெற்றோர்களைப் பிடித் தான். முற்றும் கெட்டுப்போகாத, கொஞ்சம் நாணயமானவர்களைத் துணைக்கு அழைத் துக்கொண்டான். பல்வேறு கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டவர்களை ஓர் அணியில் குவித்து ஒன்றுகூட்டினான். நல்லவர்களை வணங்கினான். பிடிவாதக்காரர்களைக் கெஞ்சினான். இடையூறு செய்த போக்கிரி களைச் சிரித்த முகத்தோடு கொல்லும் மொழியில் மிரட்டினான். இப்போது பல கட்சிகளில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்; ஒரே கட்சியில் மக்கள். ஊரைப் பகைத்து இனி ஊராட்சி இயங்க முடியாது என்ற நெருக்கடி உண்டாக்கினான்.

ஊராட்சித் தலைவர் மட்டும் அப்படியும் இப்படியும் அசைந்து பார்த்தார். ''நீங்கள் வாக்குக்குக் கொடுத்த காசை எல்லாம் ஊராட்சி மன்ற வாசலில் மக்களே வீசியெறிந்துவிட்டால்... பிறகு அந்தக் காசைப் போல் உங்களையும் வீசியெறிய அதிக நேரம் ஆகாது'' என்று குழைந்து கும்பிட்டான். நிர்ப்பந்தத்தில் அவர் நல்லவரானார்.

''அம்மா தாயே... குப்பைப் பிச்சை போடுங்கம்மா குப்பைப் பிச்சை...''

''அம்மா தாயே... குப்பைப் பிச்சை போடுங்கம்மா குப்பைப் பிச்சை...''

பள்ளிப் பிள்ளைகள் கூடி ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கையில் வாளிகளோடு கேளாத பிச்சை கேட்டதும் வீட்டுக்குள் இருந்த ஊர் திடுக்கிட்டு வெளியே வந்தது.

''யாத்தே... இது என்ன கூத்தும் கொடுமையுமா இருக்கு?''

சளார்... மளார்...

சதக்... பதக்...

கடக்.... மடக்...

மூன்றாம் உலகப் போர்

பெரும்பாலான வீடுகளில் குப்பைகள் வந்து விழுந்தன வாசல்களில்.

குப்பைத் தொட்டிகளோடு ஊர்வலம் போகும் பூந்தொட்டிகளைப் போலப் பள்ளிப் பிள்ளைகள் தெரு கடந்து முனை திரும்பும்போது திடீரென்று ஒரு பிள்ளையின் கையில் இருந்த வாளி பறித்து ஓடினான் ஒரு பைத்தியக்காரன். பிள்ளைகள் பயந்து நடுங்கி நிற்கையில் ஓர் ஓரம் ஒதுங்கிக் குப்பை வாளியில் உள்ள கழிவு களைப் பிரித்துப் பிரித்துத் தின்னத் தொடங்கினான். ஓர் இலையில் எச்சில் இட்டிலி, ஓர் இலையில் மிச்சப்பட்ட மீன் துண்டு, அழுகிப்போன தக்காளிப் பழம் என்று தின்று முடித்தவன், பசி தீராமல் ரப்பர் கயிறு சுற்றிய ஒரு பாலித்தீன் பை பிரித்தான். அவன் உள்ளே கைவிட்டதும் ஊருக்கே கெட்ட வீச்சம் வீசியது. வாசனை நரம்புகள் தூர்ந்துபோனவன் அருவருப்பு ஏதுமற்று அதை அருந்தத் துணிந்தபோது, ஓடி வந்து சின்னப்பாண்டி அவன் கையில் இருந்து பை பிடுங்கி மீண்டும் அதைக் குப்பை வாளியில் இட்டான். அது யாரோ ஒருத்தி வீசி எறிந்த பிள்ளை மலம்.

''அய்யய்யோ... என் பிள்ளையக் கேவலப்படுத்திட்டாகளே'' - வாயிலும் நெஞ்சிலும் மாறிமாறி அடித்துத் தெருவே திடுக்கிடத் தீப்பிடித்தது மாதிரி ஓடி வந்தாள் பைத்தியக்காரனின் தாய் நாச்சம்மா.

ஓடி வந்தவள் தன் பைத்தியக்கார மகனைக் கட்டியணைத்துக் கதறினாள். மலம் எடுத்த கையெடுத்துத் தன் தலைமுடியில் துடைத்துவிட்டாள்; முந்தானைஎடுத்து முகம் துடைத்து வாய் துடைத்தாள்.

''நீ போ... நான் சாப்பிட்டுட்டுத்தான் வருவேன். நீ போ... நான் சாப்பிட்டுட்டுத்தான் வருவேன்.''

அவளைத் தள்ளி அடம்பிடித்த மகனை இறுக்கி மார்பணைத்து இருத்திக்கொண்டாள். அழுதுகொண்டே கதறுகிறாள்:

''அய்யோ... என் குடும்பத்த அசிங்கப்படுத்திட்டீகளே... நான் பீ ஒட்டாம ஈ ஒட்டாம வளத்த எம் பிள்ளய அதையே திங்கவிட்டுட்டீகளே... ஏலே பைத்தியக்காரா... போடா... போய்ச் செத்துப்போடா...'' அவனை நெஞ்சிலும் கன்னத்திலும் ஓங்கி ஓங்கி அடிக்க ஆரம்பித்துவிட்டாள்.

''உங்க பிள்ளை ஒண்ணு இப்பிடித் திங்குமுன்னா, குப்பைக் கூடையில இதப் போட்டிருப்பீகளா?''

கடைசியாக அவள் ஊரை நோக்கி எறிந்த கேள்வியில், கண்ணகி திருகி எறிந்த முலையில் தீப்பற்றி எரிந்த மாதிரி ஊரே வடுப்பட்டது.

ஒரு துளிக் கேள்வி - ஒரு துளி அவமானம் - ஒரு துளிக் கண்ணீர் - ஒரு துளி ரத்தம் - இவற்றுள் ஏதேனும் ஒன்றால் உரிக்கப்பட்ட பிறகுதான் உலகத்தின் தோல் மாறிஇருக்கிறது.

அன்று மாறியது அட்டணம்பட்டி.

குப்பை கொட்டுவதற்கும் ஒரு நாகரிகம் வேண்டும். குப்பை சொல்லும் ஒரு வீட்டின் பொருளாதாரத்தை - கலா சாரத்தை.

குப்பையில் சேரும் பொருள் எது? சேராப் பொருள் எது? மக்கும் பொருள் எது? மக்காப் பொருள் எது? ஒவ்வொரு வீட்டிலும் இனங்காணப்பட்டது; இரண்டாய்ப் பிரித்துக் கொட்டப்பட்டது.

''முதல் வெற்றி'' என்றாள் எமிலி.

''இல்லை; முதல் எட்டு'' என்றான் இஷிமுரா.

''பாலித்தீன் இல்லாத கிராமம் என் குறைந்தபட்ச லட்சியம்; கார்பன் இல்லாத கிராமம் என் உயர்ந்தபட்ச லட்சியம்'' -அழுத்தமாய்ச் சொல்லி அடக்கமாய்ச் சிரித்துக்கொண்டான் சின்னப்பாண்டி.

''மலைபோல் குவிந்திருக்கும் இந்தக் குப்பைகளை என்ன செய்வது?'' எமிலியும் சின்னப்பாண்டியும் இஷிமுராவைப் பார்த்தார்கள்.

''இந்த உலகின் எரியும் பிரச்னைகளுக்கு மத்தியில் எரிக்க முடியாத பிரச்னை குப்பை. வானத்தில் குப்பை கொட்டுகின்றன வளர்ந்த நாடுகள். பூமியில் குப்பை கொட்டுகின்றன வளரும் நாடுகள். தினக் கழிவுகளையும் திடக் கழிவுகளையும் ஜீரணிக்க முடியாமல் பூமியின் வயிறு புடைக்கிறது. வானக் கழிவுகளால் காற்று தொடும் தூரம் அழுக்காகப்போகிறது.

நுகர்வுக் கலாசாரம் கண்டறிந்தவன், ஒரு கழிவுக் கலாசாரம் கண்டறியத் தவறிவிட்டான். மனிதன் கிழங்குகளும் கனிகளும் உண்டு, வேட்டை இறைச்சியை வெயிலில் வாட்டித் தின்று, புல்வெளியிலும் இலைகளிலும் கை துடைத்துக்கொண்ட காலம் வரை கழிவு மேலாண்மை தேவைப்படவில்லை. பிளாஸ்டிக்கையும் பெட்ரோலிய இழைகளையும் கண்டறிந்தவர்கள் கருதி இருக்க மாட்டார்கள், மண்ணுக்கும்நெருப் புக்கும் எதிரான ஓர் உலகம் உண்டாகப் போகிறதென்று. விஞ்ஞான மனிதன் வல்லவன். ஆனால் கொடியவன். மண்ணில் மக்கப்போகும் மனிதன், மண்ணில் மக்காத பொருளைக் கண்டறிந்துவிட்டான்.

உங்கள் நாட்டை எங்கள் நாட்டின் குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்திக்கொள்ளலாமா என்று வளர்ந்த நாடுகளை வாடகைக்குக் கேட்கின்றன வளரும் நாடு கள். இன்று உலக நாடுகளுக்கு எல்லாம் திடக் கழிவு மேலாண்மை ஒரு தீராத சவால். அதற்குத் தீர்வு காணாவிடில், மக்காத பொருள்களின் படையெடுப்பு மக்கள் மீது நிகழ்ந்துவிடும். பிரியுங்கள் தோழர்களே... மக்கும் பொருள் மக்காப் பொருள் பிரியுங்கள். சாவிலிருந்து வாழ்வைப் பிரிப்பதுபோல...''

''இதோ பிரித்துவிட்டோம். இனி என்ன செய்வாய்?''

''மக்காத கழிவுகளை ஒதுக்கி வை; மக்காத கழிவுகளைக் கடவுள் என்று கும்பிடு.''

''கடவுளா?''

''இல்லை. கடவுளைவிடவும் ஒரு படி உயர்ந்தது. கடவுளைக்கூடக் கடத்திவிட முடியும்; குப்பைகளைக் கடத்திவிட முடியாது.''

''அப்படியானால் எரிக்கப் போகிறாயா?''

''எரித்தால் காற்று நோயுறும்; புதைத்தால் நீர் மாசுறும். இப்படியேவிட்டால் ஊர் நாறும். இந்தக் குப்பைகளுக்கு இன்னோர் அவதாரம் கொடுப் போம்.''

''எப்படி?''

''உங்கள் பிள்ளையார் பொம்மையின் களிமண்கொண்டு முருகன் பொம்மை செய்வது மாதிரி.''

''எங்கே செய்து காட்டு.''

கருத்தமாயி தோட்டத்தின் குடும்ப மரத்து நிழலடியில் ஐந்து சென்ட் நிலம் கேட்டான் இஷிமுரா. பதினைந்தடி நீளம் நான்கடி அகலத்திற்கு அகத்திக் கழிகள் ஐந்தாறு கேட்டான். அந்தக் கழிகளை நட்டு அதில் மக்கத்தக்க பாலித்தீன் பை ஒன்றைத் தொட்டில் போல் கட்டித் தொட்டி ஒன்று தயாரித்தான். அதில் மக்கும் குப்பைகள் கொட்டினான். ஒவ்வோர் அடுக்கையும் சாணத்தால் மெழுகி மெழுகி ஆறு அடுக்குகள் தயாரித்தான். ஒரு டன்னுக்கு ஒரு கிலோ மண் புழு வீதம் கழிவுகளில் கலந்து பரப்பினான். வெயில் படாத நிழல் காத்து அதில் எப்போதும் ஈரப்பதம் இருக்குமாறு நீர் தெளித்தான். ''கொஞ்ச நாள் பொறுங்கள். மனிதன் செய்யாததை இந்த மண் புழு செய்யும்; மக்கும் குப்பைகள் மண்ணுக்கு உரமாகும்'' என்றான். ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்தது.

''பாரப்பா... சப்பான்காரன் மூளையே மூளை'' என்றான் ஒருவன்.

''இந்தக் கம்ப சூத்திரம் எங்களுக்குத் தெரியாதாக்கும்?'' என்றான் இன்னொருவன்.

''ஏண்டா வெண்ணெ... கம்ப சூத்திரம் தெரிஞ்சிருந்தாக் காமிச்சிருக்க வேண்டியதுதான... நொட்டத் தெரியாதவனுக்கு நொட்டைச் சொல்லு மட்டும் கொறச்சலில்ல.''

கலைந்தது கூட்டம் கசகசவென்று பேசிக்கொண்டே.

சின்னப்பாண்டியும் எமிலியும் இஷிமுராவும் தெருவலம் போனபோது, வாசல் பெருக்கி, நீர் தெளித்து ஒருத்தி கோலமிட்டுக்கொண்டிருந்தாள். கோலப் புள்ளியில் மனம் குவித்து அதையே வேடிக்கை பார்த்து நின்றுவிட்டாள் எமிலி.

''இது கோலம். ஒவ்வொரு வீட்டின் கலாசாரம். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் ஓர் ஓவியரை எழுப்பும் முயற்சி. ஒருவிளக்குமாறைத் தூரிகையாக்குவதற்கான பயிற்சி. முதுகுத்தண்டு வளைத்து மூளைக்கு ரத்தம் பரப்பும் யோகாசனமும் இது. வீட்டு வாசலை அழகு செய்வதன் மூலம் தெருவையே சுத்திகரிக்கும் கூட்டு நடவடிக்கை.''

சின்னப்பாண்டி விளக்க விளக்க... 'ஓ’ என்று ஒலிக் குறிப்பு நான்கு மாத்திரை நெடிலாயிற்று எமிலியின் வாயில்.

வீட்டுக்குள் போன சிறுவன் ஒருவன் கோலத்தை மிதித்துப் போனதில் காட்டமாகிப்போனாள் கோலக்காரி.

''ஏண்டா எடுபட்ட பயலே... உன் கால வெட்டி அடுப்புல வைக்க... கோலத்த மிதிச்சிட்டா போற... கொலப் பட்டினி போடறேன் ஒன்னிய.''

''கோலம் என்பது புனிதம்; மற்றும் கலைப் படைப்பு. அதை அவமதித்தல் ஆகாது''- சின்னப்பாண்டியின் விளக்கம் கேட்டு வியந்துபோனாள் எமிலி.

ஊர் சுத்தமாகத் தொடங்கிவிட்டது - ஊர்ப்புறம் சுத்தமாகவில்லை. அது பழையபடியே நிற்கிறது பல்லிளித்து. ஊர் நுழை வாயிலில் 'உட்கார்ந்த’படியே வரவேற்கிற வர்கள் குறையவேயில்லை. மூக்கையும் கண்ணையும் மூடாமல் ஊருக்குள் நுழையவே முடியவில்லை. ஊராட்சியை அழைத்தார்கள். இரு பக்கப் பள்ளங்களை யும் சமன்செய்யச் செய்தார்கள். பள்ளம் நிறைந்ததில் சாலை விரிந்தது. மீண்டும் எரியலாயின உடைந்த விளக்குகள். அன்று இருட்டியதும் வழக்கம்போல் வந்த 'வாடிக்கை’யாளர்கள் அதிர்ந்துபோனார் கள். அவர்களின் அனுபோகத்திற்குப் பாத்தியப்பட்ட இடங்களில் எல்லாம் செம்மண் நிரப்பி, அரிசி மாக்கோலம் இட ஏற்பாடு செய்துவிட்டாள் எமிலி. கோல மிட்ட பெண் பிள்ளைகள் அங்கங்கே தட்டாமாலை விளையாடிக்கொண்டு இருந்தார்கள். வேறென்ன செய்வது? ஊர் தாண்டி ஓடியே போனார்கள் ஒதுக்கீட்டாளர்கள்.

''கோலம் வாசலை மட்டுமல்ல; ஊரையும் சுத்தம் செய்கிறது'' என்றாள் எமிலி.

கடைசியில் அட்டணம்பட்டியில் அந்த அதிசயம் நடந்தேவிட்டது. ஊராட்சி மன்ற உறுப்பினர்களோடு வீடு வீடாக ஏறி இறங்கினார்கள் சின்னப்பாண்டியும் எமிலியும் இஷிமுராவும்.

''அய்யா... அம்மா... நீங்கள் கொடுத்த குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்டது இந்த உரம். உங்களுக்கே திரும்பி வருகிறது உங்கள் சொத்து; வாங்கிக்கொள்ளுங்கள்''- சின்னப்பாண்டி முன்மொழிய... ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கிலோ மண் புழு உரத்தை எடுத்து வழங்கினான் இஷிமுரா.

''இதோ இதுவும் உங்களுக்கு...''

இரு கையில் தாங்கி எமிலி எடுத்து நீட்டினாள் அந்த உரம்போட்டு வளர்க்க ஒரு ரோஜாச் செடியை.

''இனி ரோஜாவின் வாசம் பேசும் உங்கள் வீட்டுக் குப்பைகள்.''

சந்தோஷப் பிரமை பிடித்து ஊரே அவர்களை அண்ணாந்து பார்க்கிறது.

''யார் பெத்த பயலோ அந்த மஞ்சப்பய, யார் காட்டுச் சிறுக்கியோ இந்த வெள்ளைக்காரி. ஊர் பொழைச்ச பொழைப்பையே மாத்திப்புட்டாகளே ரெண்டு பேரும். சின்னப்பாண்டி... நீ செயிச்சுட்டடா'' - அவுகள முன்னவிட்டுப் பின்ன நின்னு அவராப் பொலம்புறாரு பொறணி பேசிப் பேசியே புத்துவச்சுப் போன காட்டுக் கருப்பன்.

புறம் பேசறான் பாருங்க... அவன வார்த்தையால அடிக்கிறது வருடிக்குடுக்கிற மாதிரி. செயலால அடிக்கிறதுதான் செருப்பால அடிக்கிற மாதிரி. சின்னப்பாண்டி செயலால அடிச்சுட்டான்.

- மூளும்...