Published:Updated:

``இரட்டை அர்த்தமோ ஆபாசமோ கிடையாது!" - திருநங்கைக் கலைஞர்களுடன் ஓர் ஆடல் பாடல் உரையாடல்!

பாலியல் ரீதியான பிரன்னைகளால் ஒடுக்கப்பட்டவர்கள், கலைகளால் மீண்டுவருகிறார்கள். கைகொடுக்கவேண்டிய சமூகம், இன்னும் கைகொட்டிக் கெக்கலித்துச் சிரிக்கின்றது.

``இரட்டை அர்த்தமோ ஆபாசமோ கிடையாது!" - திருநங்கைக் கலைஞர்களுடன் ஓர் ஆடல் பாடல் உரையாடல்!
``இரட்டை அர்த்தமோ ஆபாசமோ கிடையாது!" - திருநங்கைக் கலைஞர்களுடன் ஓர் ஆடல் பாடல் உரையாடல்!

கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடல்பாடல் களைகட்டும். மேடைக்கு முன்னால் அமர்ந்து ரசித்திருப்போம். மேடைக்குப்பின்னால் நடப்பதென்ன? திருநங்கைகள் இடம்பெறும் கலைக்குழுக்கள் பற்றிய பொதுவான எண்ணம் சரிதானா? அந்தக் குழுக்களில் இடம்பெறும் திருநங்கைகளின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கின்றது என்பதை அறிய முற்பட்டோம். 

திண்டுக்கல் பக்கம் ஓர் ஆடல்பாடல் நிகழ்ச்சி. மதுரையைச் சேர்ந்த ஆட்டக்கலைஞர் வெங்கடேஷுடன் பயணப்பட்டோம். ஒரு டான்சர், திருநங்கைகள் வர்ஷா, ஹரீனா, ஜமுனா, குழுத்தலைவர் கருப்பையா என ஐந்து பேர் உடன் வந்தனர். ஆளுக்கு இரண்டு பெரிய டிராவல் பைகள். அவற்றில் முழுவதுமாக அரிதாரப்பொருள்கள். நம்மிடம் பேசத் தயாராகினர் திருநங்கைகள். கம்ஃபோர்ட்டான கேஷுவல் ஆடைகள், எதையும் பொருட்படுத்தாத நிம்மதியான பார்வை, சகஜமான உரையாடல் என ஜாலியாகத் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர். 

நாங்கள் சென்ற மினிவேன், செம்பட்டி அருகே ஒரு சிறிய கிராமத்தை அடைந்தது. மாலை 6 மணிக்குக் கோயிலை அடைந்து மேடையின் பின்புறம் சென்றோம். அரசுப்பள்ளி வராண்டாப் பகுதி. தகர மறைவுகளுக்குள் மேக்-அப் பணிகள். ஆட்டத்துக்குத் தேவையானவற்றை, கிராமத்தின் சார்பில் நிகழ்ச்சிப்பொறுப்பேற்ற இளைஞர்கள் ஏற்பாடு செய்து தந்தனர். அப்போது மேக்-அப் இடத்திற்குள் இரண்டு குழந்தைகள் நுழைந்தன. `வர்ஷா க்கா’....என்ற குழந்தைமொழிகேட்டுத் திரும்பிய வர்ஷா,  ‘அடடே வாங்க.. வாங்க..’ என, தன்னுடைய அவசரத் தயாரிப்புகளுக்கு இடையேயும் அவர்களை அள்ளித்தூக்கிக் கொஞ்சினார். 

``இரட்டை அர்த்தமோ ஆபாசமோ கிடையாது!" - திருநங்கைக் கலைஞர்களுடன் ஓர் ஆடல் பாடல் உரையாடல்!

``உங்களை எங்கே, எங்கேன்னு கேட்டுக்கொண்டே இருந்துச்சுங்க” என்றார், பிள்ளைகளின் தாய். வர்ஷாவின் ஃபேஸ்புக் பிரியங்கள் இவர்கள். இதுபோன்ற கலைநிகழ்ச்சிகளில் வர்ஷாதான் பாப்புலர். ஊரில் எங்குச் சென்றாலும் அடையாளம்கண்டு கூட்டம் சேர்கின்றனர். கட்டைக்கால் ஆட்டம் ஆடிய முதல் திருநங்கை. ``முதல் ஆட்டத்தை கூவாகத்திலதான் ஆடினேன்” என்றபோது முகத்தில் அத்தனை ஜொலிப்பு. கடவுளரில் அம்மன், சக்தி எனத் தேவியர் வேஷம் அனைத்தும் அத்துப்படி. எம்.பி.ஏ பட்டதாரி. தன்னிடம் உரிமையாய்ப் பழகும் எல்லோரிடத்திலும் அன்பைப் பொழிவதாலேயே இவரது முகமும் குணமும் பாசாங்கற்று மிளிர்கின்றது. இரண்டரை மணிநேர மேக்-அப் ஆகி முடித்ததும், எட்டரை மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. கேஷுவல் டிரஸ்ஸிலிருந்து ஸ்ப்ரிச்சுவல் காஸ்ட்யூமுக்கு பக்கா மேக்-அப். 

``பக்தி, பல்சுவைக் கலைநிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. எந்தவிதமான இரட்டை அர்த்தங்களும், ஆபாசங்களும் இங்கே கிடையாது” என்ற அறிவிப்புடன் ஆட்டம் தொடங்கியது. அறிவிப்பு பொய்யல்ல; துளியும் ஆபாசமில்லை. விநாயகர், சிவசக்தி, ஆண்டாள் என தெய்வகடாட்சமாகக் கூட்டத்தை ஈர்த்தனர். வெரைட்டி டான்ஸ் டீம், சினிமா டான்ஸ் டீம் என வெவ்வேறு டீம்கள் தனித்தனியாக வந்து இணைந்துகொள்ள, மூன்று குழுக்களும் மாறிமாறி கலக்கின. `மார்கழித் திங்களல்லவா’ பாடலுக்கு ஜமுனாவின் அபிநயமும், நளினமும் கண்களில் நிழலாடின. பி.ஏ. கிளாசிக்கல் படித்துள்ளார் ஜமுனா. அவரின் பாட்டும், பரதமும் `சபாஷ்’ போட வைக்கிறது. ``பரதம் ஆட, திருவிழா மேடை ஏறுவேன். சைடுல நின்னுக்கிட்டு `என்னடா சரியாவே தெரியலை’ன்னு கத்துவான். எரிச்சலா இருக்கும்” என்று கொதிக்கிறார். பேசுவோரின் தன்மையறிந்து அவர்களுக்கேற்ற மறுமொழி தருவதில் கில்லாடி. விருப்பப்பட்டதைத் தேடித்தேடிக் கற்கிறார். தற்காப்புக்கலை வித்தையில் மரணமாஸ் பண்ணுகிறார். 

நிறைய கருத்துவேறுபாடுகள் இருப்பினும், கலை விஷயத்தில் இந்தத் திருநங்கைக் கலைஞர்களின் கருத்துகள் ஒருமித்த கருத்துகளாகவே இருக்கின்றன. ``இந்த வாழ்க்கை எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நல்ல மனிதர்களோட பழக்கம் கிடைக்கிறது. சில அசௌகரியங்களை நீக்கிட்டுப் பார்த்தா, சுகமான தருணங்கள்தான், இவை” என்று சொல்லும் இவர்கள், திருநங்கையராய் வாழ்வை எதிர்கொள்வதில் உள்ள பெருந்துயரை முடிந்தவரை இயல்பாகக் கூறிவிட முற்படுகின்றனர். ``இன்னும் என் தம்பி, என்னை `அண்ணே’ன்னுதான் கூப்பிடுறான். நான் எனக்காக எல்லாத்தையுமே மாத்திக்கிட்டேன். உறவுகள்தான் அதை உணரவேண்டும்!” எனக் கலங்குகிறார், வர்ஷா. ``தூரமா வச்சுத்தான் என்னைப் பார்ப்பாங்க. என் குடும்பம்கூட என்னை முழுசாப் புரிஞ்சிக்காதபோதுதான், மனசு பாரமா இருக்கும்” என்கிறார், ஹரீனா. இவர் டிப்ளோமா படித்துள்ளார். அம்மன் உள்ளிட்ட வேஷங்கள் போடுகிறார். அதிகம் பேசுவதில்லை. முகம் அறைந்தாற்போல் நறுக்காய்க் கருத்துகளைச் சொல்லிவிடுகிறார். 

``இரட்டை அர்த்தமோ ஆபாசமோ கிடையாது!" - திருநங்கைக் கலைஞர்களுடன் ஓர் ஆடல் பாடல் உரையாடல்!

குழுத்தலைவர் கருப்பையா காளி, சிவன் என வேஷம்போட்டு பார்வையாளர்களைப் பக்திப் பரவசப்படுத்துகிறார். கருப்பையா - வர்ஷாவின் சிவசக்தி நடனம், நிறைவாய் கருப்பையாவின் காளி ஆட்டம் எல்லாமே கலைக்கான அர்ப்பணிப்பின் உச்சம். அம்மன் வேஷத்தோடு மேடையிலிருந்து இறங்கி தகர மறைவுக்குச் சென்ற வர்ஷா, அடுத்த டீமின் ஆட்டத்துக்காக ஒலித்துக்கொண்டிருந்த `மஸ்காரா போட்டு மயக்குறியே’ பாடலுக்கு ரிலாக்ஸாய் ஸ்டெப் போட்டார். `ஆத்தாவா இப்படி?’ எனக் கொஞ்சம் அதிர்ந்தே போனேன். நள்ளிரவு 12 மணி. எல்லாப் பக்கமும் `மது மணம்’! மற்ற டீம்கள் `அளவு’களில் ஆழம்பார்க்க, திருநங்கை டீம் மட்டும், `நோ தாங்க்ஸ்’ சொல்லியது. முடிந்து மூட்டைகட்டிக் கிளம்பியதும் தொடர்ந்து பேசினேன்.

``இன்றைக்கு நிகழ்ச்சியோட அனுபவம்?” என்றேன். ``மேடைக்கு வரும்போது ஒருத்தன், கைகொடுக்கிறேன்னு சொல்லிட்டு வந்து கையைப் போட்டு பிசைஞ்சிட்டான். ஏன்தான் இப்படிப் பண்றானுங்களோ?” என அரங்கு ஏறிய அவஸ்தையைச் சொல்லி நொந்துகொண்டார், ஜமுனா. இன்னும்கூட, வாக்கியங்களில் சொல்லமுடியாத வதைகளை விவரித்தார்கள். வேஷம், ஆட்டம் தவிர மற்ற எல்லாமே அவர்களுக்கு இங்கே மோசமான அனுபவம்தான். `மழை வர இருந்துச்சே, வந்திருந்தா கஷ்டம்தானே.’ என்றேன். ``ஒண்ணுமில்லை. ஊர்க்காரங்ககிட்ட தேங்காய் வாங்கிச் சாமி கும்பிட்டு, கோயிலையோ மேடையையோ சுத்தி, முன்னாடி வச்சிருவோம், அல்லாட்டி பின்னாடி போட்ருவோம். பெய்ய ஆரம்பிச்ச மழை சட்டுன்னு நின்னுடும். ஊருகள்ல இப்படி நிறைய நடந்திருக்கு!” என மழையை நிறுத்திய அனுபவத்தைச் சலனமேதுமின்றி சாதாரணமாகச் சொன்னார்கள், திருநங்கைகள். ``அதுமட்டுமா. எங்களுக்கு சில நம்பிக்கைகள் இருக்கு. நிகழ்ச்சிக்குப் போயிட்டு வர்ற வரைக்கும் பழங்கள் எதுவும் சாப்பிட மாட்டோம். சாப்பிட்டா ப்ரோகிராம் சரிப்படாம ஆகிடும்னு நினைப்போம்” என்றனர்.

``இரட்டை அர்த்தமோ ஆபாசமோ கிடையாது!" - திருநங்கைக் கலைஞர்களுடன் ஓர் ஆடல் பாடல் உரையாடல்!

``இங்கேயெல்லாம் வழக்கமாய் இரட்டை அர்த்தப் பேச்சு, ஆபாசம், மதுமயக்கம் இருக்கும்தானே. தவிர்ப்பது ஏன்?" என்றேன். “எங்க டீம்ல இது எதுவும் கிடையாது. ஜனங்களை மகிழ்விக்கவேண்டும். அதைப் பார்த்து நாமளும் சிரிக்கணும். அவ்வளவுதான்” என்றார் கருப்பையா. ``எல்லா வயசுக்காரங்களும் ஆசையா ஆட்டம் பார்க்க வர்றாங்க. ஒரே ஒருத்தர், முகம் சுளிச்சிட்டாலும் எங்களோட அத்தனை வருஷ கலைவாழ்வும் வீண்தானே?” என்றார், வர்ஷா. திண்டுக்கல் பேருந்துநிலையம். வழியிலேயே, பணம் பிரித்துக் கொடுத்தாகிவிட்டது. ``உரிய சம்பளம்கூட யாருக்கும் முழுசாக் கிடைக்கலையே, என்னத்தச் சொல்றது!” எனத் தவித்தபடியே விடைபெற்றார், கருப்பையா. ‘நாளைக்குத் தேனி, அடுத்து எங்க?’ என நாள்கள் சரிபார்த்துக்கொண்டு புறப்பட்டனர், திருநங்கைக் கலைஞர்கள்.

பாலியல் ரீதியான பிரன்னைகளால் ஒடுக்கப்பட்டவர்கள், கலைகளால் மீண்டுவருகிறார்கள். கைகொடுக்கவேண்டிய சமூகம், இன்னும் கைகொட்டிக் கெக்கலித்துச் சிரிக்கின்றது. அடிகள் வாங்கினாலும் அன்பை வாரித்தருகின்ற இந்தத் திருநங்கைக் கலைஞர்கள் முன் சமூகம் ஒருநாள் மண்டியிடும்!

Vikatan