Published:Updated:

"சொந்த நாடே சொர்க்கம்!"

"சொந்த நாடே சொர்க்கம்!"

'குருஷேத்ரா’- பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான இந்தத் தொழில்நுட்பத் திருவிழா, பிப்ரவரி முதல் வாரத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதைப் பிரபலப்படுத்தும் நோக்கில் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் சமீபத்தில் மாணவர்கள் நடத்திய நிகழ்ச்சியே 'அல்லசோ!’.

"சொந்த நாடே சொர்க்கம்!"
##~##

'அல்லசோ’ என்றால் கிரேக்க மொழியில் 'மாற்றம்’ என்று அர்த்தமாம். 'வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும், வெளிநாடுகளில் படிக்கும் நம் மாணவர்கள் படிப்பு முடிந்ததும் தாயகம் திரும்பி சேவை செய்ய வேண்டும்’ என்பதை வலியுறுத்துவதே 'அல்லசோ’வின் நோக்கம். சென்னை மேயர் சைதை துரைசாமி, ஜெமினி கணேசனின் மகள்கள் கமலா செல்வராஜ், ரேவதி சுவாமிநாதன், விஜய சாமுண்டீஸ்வரி, பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்ட பிரபலங்களின் வருகை, மாணவர்களின் பாட்டு, நடனம் என அசத்தியது 'அல்லசோ!’

''என் சகோதரிகள் எத்தனையோ முறை கூப்பிட்டும் நான் வெளிநாடு போகலை. நீங்க வெளிநாடு போய்ப் படிச்சாலும் உங்க அறிவை நாட்டுக்கும் அதோட வளர்ச்சிக்கும் பயன்படுத்துங்க'' என்றார் கமலா செல்வராஜ். அடுத்து பேசிய ரேவதி சுவாமிநாதன், ''கலிஃபோர்னியாவில் செட்டில் ஆகிவிட்ட நான் நாட்டுப்பற்றுப் பற்றி எப்படி பேசலாம்னு நீங்க நினைக்கலாம். நான் தமிழ்நாட்டை, ரொம்பவே மிஸ் பண்றேன். நம்ம நாடு மாதிரியான சொர்க்கம் வேறு எங்கேயும் இல்லை!'' என்றவர் மேற்கொண்டு பேச முடியாமல் அழுதபடி இருக்கையில் அமர்ந்தார்.

"சொந்த நாடே சொர்க்கம்!"

''ஏழு வருஷம் ஆஸ்திரேலியாவில் படிச்சேன். அங்க குப்பை இல்லை. சாலைகள் சுத்தமா இருக்கும். ஆனாலும் நான் படிச்ச கல்லூரியிலேயே பணிபுரியணும்னு சத்தம் நிறைஞ்ச சென்னைக்கு வந்தேன். இத்தனைக்கும் நான் இங்கே வாங்குற சம்பளம், ஆஸ்திரேலிய ஹோட்டல்ல வெயிட்டரா வேலைபார்த்து வாங்குன சம்பளத்துல பாதிக்கும் குறைவுதான். நான் இந்தியா திரும்பாம இருந்திருந்தா 'இரும்பிலே ஒரு இதயம்’ வந்திருக்காது. தொழில்நுட்ப அறிவை மொழியின் வளர்ச்சிக்கு பயன்படுத்திஇருக்க முடியாது'' என்ற பாடலாசிரியர் மதன் கார்க்கிக்கு அமோக வரவேற்பு.

திடீர் குபீர் எனக் கூட்டம் கூட்டமாக ஆடும் ஃப்ளாஷ் மாப் டைப்பில் சிம்புவின் காதல் கீதத்துக்கு ஆடியபடி 'அல்லசோ’வை நிறைவு செய்தனர்.

"சொந்த நாடே சொர்க்கம்!"

- பூ.கொ.சரவணன்
படங்கள்: பா.காயத்ரி அகல்யா

அடுத்த கட்டுரைக்கு