Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : சரண்யா - பொன்வண்ணன்படங்கள் : பொன்.காசிராஜன்

நானும் விகடனும்!

இந்த வாரம் : சரண்யா - பொன்வண்ணன்படங்கள் : பொன்.காசிராஜன்

Published:Updated:

பிரபலங்கள் விகடனுடனான  தங்களின்  இறுக்கத்தை,  நெருக்கத்தை, 
விருப்பத்தைப்  பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

''அப்பா, அம்மா ரெண்டு பேருமே கிராமத்து விவசாயிங்க. படிப்புன்னா என்னன்னுகூட அவங்களுக்குத் தெரியாது. ஏதோ தப்பிப் பிழைச்சு நான் பள்ளிக்கூடம் போயிட்டு வந்துக்கிட்டு இருந்தேன். நான் அஞ்சாப்பு படிச்சுட்டு இருக்கும்போது, சும்மா பொழுது போகாம ஒரு காளை மாடு வரைஞ்சேன். வரைஞ்சு முடிச்சுப் பார்த்தா, அது காளை மாடு மாதிரியே இருந்தது. எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனக்கு வரைய வரும்னு அன்னைக்குத்தான் தெரிஞ்சது.  பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்துல ஒரு நூலகம். ஸ்புட்னிக், சோவியத் நாடு, மஞ்சரி, அமுதசுரபினு பல புத்தகங்கள் படிக்கக் கிடைக்கும். அதுல எல்லாம் படம் பார்த்து அதே மாதிரியே வரைஞ்சுட்டு இருந்தேன். ஆனா, எவ்வளவு நேரம் காத்திருந்தாலும், ஒரே ஒரு புத்தகம் மட்டும் கைக்கே வராது. ஆள் மாத்தி ஆள் அதைப் படிச்சுக்கிட்டே இருப்பாங்க. படிக்கிறவர் நாற்காலிக்குப் பின்னாடியே நின்னு காத்துட்டு இருந்தாலும், ஏற்கெனவே இன்னொருத்தர் அந்தப் புத்தகத்துக்குச் சொல்லிவெச்சிருப்பாரு. அது... ஆனந்த விகடன்!

ஜெயகாந்தன், ஜெயராஜ் எல்லாம் உள்ளே நுழைஞ்ச சமயம் அது. எனக்கு ஜெயராஜ் ஓவியங்கள் ரொம்பப் பிடிக்கும். உடனே 'விகடகவி’னு ஒரு கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பிச்சேன். அப்படியே விகடனை உல்டா பண்ணி, கதை, கவிதை, ஓவியம்னு தயாரிச்சேன். அதை நூலகத்தில் விகடன் கிடைக்கும் வெள்ளிக்கிழமை அன்னைக்கே வெளியிட்டேன். எனக்கு என்னா ஒரு ஏத்தம் பார்த்தீங்களா?

நானும் விகடனும்!

பின்னாடி சினிமாவில் கிடைச்ச வரவேற்பு, பாராட்டுக்கு எல்லாம் ஆரம்பம்... அந்த நூலகத்துல வாசகர்கள் ஆனந்த விகடனோட என் விகடகவி யையும் அப்பப்போ எடுத்துப் புரட்டிப் பார்த்த தருணங்கள்தான். அப்புறம் விகடன்ல மாணவப் பத்திரிகையாளர் ஆக முயற்சி பண்ணினேன். ஆனா, எனக்குக் கொடுத்துவைக்கலை. வேற வழி இல்லாம விகடனின் அதி தீவிர ரசிகனா மட்டுமே தொடர்ந்தேன்.

ஓவியத்தையும் புகைப்படத்தையும் கொலாஜா இணைச்சு வெளியான 'மடிசார் மாமி’ தொடர்கதை என்னை ஏகமா ஆச்சர்யத்துக்கு உள்ளாக்குச்சு. 'எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க’னு நண்பர்களிடம் கேட்டுட்டே இருப்பேன். சுஜாதாவின் பெஸ்ட் எல்லாமே விகடனில்தான் வந்திருக்கு. அதிலும் விகடனில் வெளியான அவரோட விஞ்ஞானத் தொடர்கள் ஒவ்வொண்ணும் ஒரு ஹாலிவுட் சினிமா கணக்கா மிரட்டலா இருக்கும்.  

ஓவியர்களுக்கு ஆகப் பெரிய அங்கீகாரம் கொடுத்தது விகடன்தான். 'மாடர்ன் ஆர்ட்’க்கு வெகுஜனப் பத்திரிகைகளில் முதன்முதலா கேன்வாஸ் கொடுத்தது விகடன்தான். கி.ரா-வின் கதைகள் நவீன ஓவியர் ஆதிமூலத்தின் ஓவியங்களோடு விகடனில் வெளியா னது. கதைக்கு அவ்வளவு பொருத்தமா இருக்கும் அந்த ஓவியம், ஆதிமூலத்தின் ஒரிஜினல் ஸ்ட்ரோக்ஸோட பின்னும். அது ஒரு அரிதான காம்பினேஷன். அதே போல டிராட்ஸ்கி மருது எனும் அரிய கலைஞனையும் விகடன் மூலமாகத் தான் நான் தெரிந்துகொண்டேன். ஓவியத்தில் இத்தனை வண்ணங்களும் வெரைட்டிகளும் இருக்குனு எனக்குப் புரியவெச்சது விகடன்.    

நானும் விகடனும்!

இப்படித் தூரத்துல இருந்து ரசிச்சுட்டு இருந்த எனக்கு விகடன்ல எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'கேள்விக் குறி’ தொடருக்கு ஓவியங்கள் வரையும் வாய்ப்பு கிடைச்சது ஒரு கொண்டாட்டமா இன்னும் மனசுக்குள் இருக்கு. விகடன்ல ஒரு படைப்பு வெளியானா, அதன் மீது எந்த அளவுக்கு வெளிச்சம் கிடைக்கும்னு எனக்குப் பொளேர்னு புரிஞ்ச நாட்கள் அவை.  

அரசியலைப் பொறுத்தவரை விகடன் சொல்தான் எனக்கு வேதவாக்கு. யாரா இருந்தாலும் தப்புன்னா விகடன் நறுக்குனு குட்டும். அதுவே நல்லது பண்ணா, ஊர் உலகத்துக்கு முன்னாடி பாராட்டும். விகடனின் பொக்கிஷத்தைப் பார்த்தால் ஆச்சர்யமா இருக்கு. ஆயுள் முழுக்க பிராமணீ யத்தைச் சாடிய பெரியார்பத்தி அவ்வளவு உயர்வா எழுதி இருக்காங்க. ஈழத் தமிழர்களின் துயரத்தை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட விகடன் மெனக்கெட்டதைப் பத்தி நான் சொல்லித்தான் தெரியணும்னு இல்லை. 'சினிமா நட்சத்திரங்கள்’ என்ற கவர்ச்சியான பிம்பத்துக்குப் பின்னாடி இருக்கும் வலி, வேதனை, சோகம், அழுத்தம் ஆகியவற்றைப் பளிச்சுனு வெளிச்சம் போட்டுக் காட்டியது இயக்குநர்கள் சேரன், பாலா, பிரகாஷ்ராஜ் ஆகியோரின் வாழ்க்கை அனுபவத் தொடர்கள். வாசகர்களைத் தாண்டி சினிமாக்காரங்களே அதில் இருந்து புரிஞ்சுக் கிட்டது நிறைய. ரொம்ப நேரமா நானே பேசிட்டு இருக்கேன்ல! இப்போ திருமதி. சரண்யா பேசுவாங்க!''

''அதான் எல்லாம் நீங்களே சொல்லிட்டீங்களே! விகடனோட கிண்டல் கூடப் பாராட்டுற மாதிரி இருக்கும். லூஸுப் பையன் அதுக்கு நல்ல உதாரணம். பிரபலங்கள் கோமாளித்தனமா ஏதாவது செஞ்சா, அவங்களைக் கிண்டல் அடிக்கிறதுக்குன்னே ஒரு லூஸுப் பையனை நிறுத்திவெச்சிருக்காங்க. யாரா இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், அவன்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது. சம்பந்தப்பட்டவங்களே சிரிச்சுக்கிட்டுப் படிக்கிறதுதான் லூஸுப் பையனோட ஹிட்!

நானும் விகடனும்!

பெர்சனலா எனக்கு, சினிமாவில் நடக்கப்போற எல்லா நல்லதுகளுக்கும் விகடன்தான் முதல் ஆளா சிக்னல் கொடுக்கும். 2011-ம் வருஷம் 'களவாணி’ படத்துக்காக சிறந்த குணச்சித்திர நடிகை விருது கொடுத்தது விகடன். அதுதான் ஆரம்பம். தொடர்ந்து 'களவாணி’க்காகப் பாராட்டுகளும் விருதுகளும் தொடர்ந்தன. 'தென்மேற்குப் பருவக்காற்று’ பட விமர்சனத்தில் 'வாழ்த்துக்கள் ஆத்தா’னு விகடனின் முதல் வாழ்த்துதான் தேசிய விருது வரை எதிரொலிச்சது. தேசிய விருது கௌரவத்துக்கு அங்கீகாரம் சேர்க்கும் விதமா 2012-ம் வருஷம் 'தமிழகத்தின் சிறந்த 10 மனிதர்களில்’ ஒரே பெண்ணாக என்னைத் தேர்வுசெய்திருந்தது விகடன். அது நான் செய்த பாக்கியம். மன்னிச்சுக்கங்க... எனக்கு அதைத் தவிர வேற வார்த்தை எதுவும் எனக்குப் பொருத்தமாத் தெரியலை! 'அம்மா, அக்காவாக ஒப்புக்கு அழுதுவிட்டுப் போகும் நடிகைகளுக்கான சாபத்தை உடைத்ததும் பெரும் சாதனை’னு விகடன் என்னைப்பத்தி எழுதினதுக்கு நான் என்னை இன்னும் தகுதிப்படுத்திக்கணும்!  

'ஆடி போயி ஆவணி வந்தா டாப்பா வந்துருவான்’னு 'களவாணி’ படத்துல நான் சொல்லிட்டே இருப்பேன். அது உண்மையோ இல்லையோ... ஆனா, விகடன் பக்கங்கள்ல வந்தா... நிச்சயம் அவங்க டாப்பா வந்திரு வாங்க!''