ஃபானி புயலால் லட்சக்கணக்கான மரங்கள் அழிவு! - இப்போது எப்படி இருக்கிறது பூரி?

ஃபானி புயலால் லட்சக்கணக்கான மரங்கள் அழிவு! - இப்போது எப்படி இருக்கிறது பூரி?
கடந்த 3-ம் தேதி ஒடிசாவின் பூரி நகரை ஃபானி புயல் தாக்கியது. ஒடிசா அரசின் துரித நடவடிக்கையால் உயிர்ப்பலி எண்ணிக்கை குறைந்தது. ஃபானி புயலுக்கு 64 பேர் பலியாகியிருந்தனர். பூரி மாவட்டம்தான் கடும் பாதிப்புக்குள்ளானது. ஒடிசாவில் 18,168 கிராமங்கள், 52 நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

pic courtesy : Sarthak Pradhan
இங்கே 220 கிலோவாட் சக்தி கொண்ட 75 மின்சார உயர் அழுத்த டவர்கள், 132 கிலோவாட் கொண்ட 32 மின்சார உயர் அழுத்த டவர்கள் முறிந்து கிடக்கின்றன. இவற்றைச் சரி செய்யும் பணியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 1.4 கோடி மரங்களை ஃபானி புயல் காவு கொண்டது. பச்சை பசேல் என்று காணப்பட்ட பகுதிகள் மொட்டையாக மாறியுள்ளது மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒடிசாவின் 14 மாவட்டங்களில் 1,00,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களில் 30 சதவிகிதம் நாசமடைந்துள்ளன. ஒடிசாவின் தற்போதைய நிலையை சர்தான் பத்ரான் என்ற பிளாக்கர் தன் இன்ஸ்டாகிராமில் பழைய புகைப்படங்களுடன் ஒப்பிட்டு வெளியிட்டுள்ளார்.

அதில், ''நான் அடிக்கடி கட்டாக், புவனேஷ்வர், பூரி செல்வேன். பூரி கோனார்க் கடற்கரை சாலை எனக்குப் பிடித்தமானது. புயலுக்குப் பிறகு, அந்தச் சாலையைப் பார்த்து என் மனம் உடைந்தே போய்விட்டது. அப்பப்பா என்ன ஒரு அழிவு. பூரி மக்கள் சந்தித்த அழிவுகளை நாட்டின் பிற பகுதி மக்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே பழைய மற்றும் புதிய புகைப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டேன். என் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஃபானி புயலால் பூரி அடைந்த சேதத்தை என் புகைப்படங்கள் உணர்த்தும். இந்த இடங்கள் மீண்டும் தன் பழைய அழகைப் பெற வேண்டுமென்பதுதான் என் ஆசை'' என்கிறார்.

பழம் பெருமை வாய்ந்த கோனார்க் கோயிலை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பூரி கடற்கரைப் பகுதி சிதிலமடைந்து கிடக்கிறது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். பூரியில் மின்சாரக் கம்பங்களை புனரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. எனினும், 11 நாள்களாக மக்கள் மின்சாரம் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.