Published:Updated:

"சென்னை ஒரு கலைடாஸ்கோப்!"

"சென்னை ஒரு கலைடாஸ்கோப்!"

"சென்னை ஒரு கலைடாஸ்கோப்!"

"சென்னை ஒரு கலைடாஸ்கோப்!"

Published:Updated:
"சென்னை ஒரு கலைடாஸ்கோப்!"

''சிறுவனாக இருந்தபோது மாசேதுங், சூ யென் லாய், எலிசபெத் மகாராணி, புல்கானின், குருசேவ், தலாய்லாமா, பஞ்சன்லாமா, நேரு என சென்னையில் நான் பார்க்காத தலைவர்களே இல்லை என்பேன். அவர்கள் சென்னைக்குள் வருவது என்றால் அண்ணாசாலை வழியாக தேனாம்பேட்டையைக் கடந்துதான் வர வேண்டும். திறந்த காரில் கையசைத்தபடி பொதுமக்களை கடந்து செல்வார்கள். இன்று அதேசாலையில் குண்டு துளைக்காத கார்களில், முன்னால் இரண்டு பைலட் கார், பின்னால் கறுப்புப் பூனைப் பட்டாளம் எனப் பயந்து பயந்து பயணிக்கும் அவர்களைப் பார்க்கும்போது பரிதாபமே மேலோங்குகிறது. சென்னையில் பிறந்து வளர்ந்தவர்களுக்கே இன்று இந்த நகரம் அந்நியமாகிவிட்டதைப்போல், தலைவர்களும் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுவிட்டனர்!'' - தான் வளர்ந்த தேனாம்பேட்டை பற்றி ஆதங்கத்தோடு தொடங்கி, தொடர்ந்து நினைவுகளை பகிர்ந்துகொண்டார் கலை இலக்கிய விமர்சகர் இந்திரன்.

"சென்னை ஒரு கலைடாஸ்கோப்!"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''பாண்டிச்சேரி கடற்காற்றைச் சுவாசித்தபடி பிறந்த எனக்கு, டீசல் வாசம் வீசும் சென்னைத் தெருக்களோடு பிரிக்கமுடியாத பந்தம் ஏற்பட்டது தேனாம்பேட்டையில்தான். முதல்வர் ஜெயலலிதா வீடோ, ரஜினியின் வீடோ இல்லாத பழைய போயஸ் கார்டன்தான் என் பால்யத்தின் விளையாட்டு மைதானம். அன்று இதன் பெயர் பிஷப் கார்டன். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் பின் உள்ள எல்லைஅம்மன் காலனி இரண்டாவது தெருவில் அப்போது வசித்தோம்.

ஒரு பக்கம் அணணா சாலை, மறுபக்கம் கதீட்ரல் சாலை என பரபரப்பான சாலைகளுக்கு மத்தியில் இருந்தாலும் உள்ளடங்கிய அமைதியில் இருந்தது எங்கள் வீடு. சென்னையின் வடிவத்திலும் குணத்திலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தபோதும் இந்த வீடு இன்னும் மாறவில்லை. காலப்போக்கில் இந்த வீட்டை விற்றுக் கோடம்பாக்கத்துக்கு இடம்பெயர்ந்தோம். ஆனாலும் அந்த வீட்டைக் கடக்கும்போது எல்லாம், தேனாம்பேட்டை குறித்த பால்ய நினைவுகள், அங்கு சந்தித்த நபர்கள் என்னுள் வந்துபோகிறார்கள்.

"சென்னை ஒரு கலைடாஸ்கோப்!"

கோபாலபுரம் ஆண்கள் பள்ளியில்தான் படித்தேன். பள்ளிக்குச் செல்லும் வழியில் கடை வைத்திருந்த ஓவிய சிறுவர் இதழான 'அணில்’ பத்திரிகை நடத்திய வை.கோவிந்தன், பாரதியின் புகைப்படங்களைச் சேகரித்து வெளியிட்ட 'பாரதி புதையல்’ பத்மநாபன் என... தேனாம்பேட்டையில் நான் பார்த்து ரசித்தவர்களைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.

என் பள்ளி நாட்களில், குன்றிமணி சேகரித்து விளையாடிய பொட்டானிக்கல் கார்டன், உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஆகி, இன்று செம்மொழிப் பூங்காவாக மாறிவிட்டது. நினைத்தாலே நாவில் எச்சில் ஊறவைக்கும் புளியம் பழங்களையும் நெஞ்சில் பேய் பயத்தையும் படரச் செய்த பிஷப் கார்டன் இன்று இல்லை. நாங்கள் கிரிக்கெட் விளையாடிய அந்த இடம் இன்று ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி. 'பராசக்தி’ படம் பார்த்த சன் தியேட்டர் இன்று வணிக வளாகம். என் வாசிப்பின் ஜன்னல்களைத் திறந்த அமெரிக்கன் நூலகம் இயங்குவதாகத் தெரியவில்லை. அங்கு நான் வாசித்த 'பிளாக் புக்’ என்கிற புத்தகமே, என்னுடைய, 'அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ நூலுக்கான விதை. அங்கு நடந்த ஓவியக் கண்காட்சிகளே, என்னை கலை இலக்கிய விமர்சகனாகக் கூர் தீட்டியது.

அண்ணா சாலையில் மணியடித்தபடி விரையும் தீயணைப்பு வண்டிகள் நிறுத்தப்பட்டு இருந்த தீயணைப்பு நிலையம், என்னை எழுத்தாளனாக மாற்றிய சக்தி காரியாலயக் கட்டடம், ஒவ்வொரு முறை கடக்கும்போதும் தோப்புக்கரணம் போடவைத்த சாலையோரப் பிள்ளையார் கோயில் என, ஒரு சில இடங்கள் மட்டுமே பழைய தேனாம்பேட்டைக்கான அடையாளங்களாக எஞ்சி நிற்கின்றன.

அரைக்கால் சட்டை வயதில் நான் ரசித்த, ஊதல் ஊதும் ஜெமினி இரட்டையர்கள் இல்லாத அந்தச் சாலை ஏதோ வெறுமையாக என் மனதில் நிறைகிறது. நீள, அகல, உயரத்தில் பெரிதாகவே இருந்தாலும், என்னை அண்ணாந்து பார்க்கவைத்த ஜெமினி இரட்டையர்கள் தந்த பிரமிப்பை அண்ணா மேம்பாலத்தால் தர முடியவில்லை.

எல்லாமே கடந்துபோகின்றன; வெறும் நினைவுகளின் நிழல்களை மட்டுமே கைகளில் பற்றி நிற்கிறேன். சென்னை ஒரு கலைடாஸ்கோப்; இதில் உருமாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே உள்ளன. என் பள்ளி நாட்களில், வீட்டுத் தெரு மூலையில் ஒரு முனீஸ்வரன் கோயில் இருக்கும். மதியம் 12 மணிக்கு அந்தத் தெருவைக் கடப்பவர்களை 'முனி அடிப்பான்’ என்று எச்சரித்த நண்பர்களின் பேச்சைக் கேட்டு பயந்து அந்தச் சாலையைக் கடக்க நேர்கையில், ஓட்டமெடுப்பேன். இன்று அந்த முச்சந்தி முனீஸ்வரன், விநாயகராக நிற்கிறார். சிறு தெய்வம் பெருந்தெய்வமாக மாறி நிற்கிறது; சிறு நகரமும் அப்படித்தான். இதில் அழுது புலம்ப என்ன இருக்கிறது?''

"சென்னை ஒரு கலைடாஸ்கோப்!"
"சென்னை ஒரு கலைடாஸ்கோப்!"

- செந்தில் ராஜாமணி, 
படங்கள்: ப.சரவணகுமார்