சைகையில் தொடங்கிய பயணம், தற்போது எமோஜியில் வந்து நிற்கிறது! #WorldTelecommunicationDay

மன்னராட்சிக் காலத்திலிருந்து தற்போதைய மக்களாட்சிக் காலம் வரை, அரசியலில் மட்டுமல்ல. தகவல்தொடர்பு வசதிகளிலும் நிறைய மைல்கல்களைத் தொட்டிருக்கிறோம். உலக தகவல்தொடர்பு தினமான இன்று அவற்றை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.
தகவல் பரிமாற்றம் என்பது அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாதது. உணர்ச்சிகளை, கூறவிரும்பும் செய்திகளை பெரும்பாலான உயிரினங்கள் ஒலிகள் மூலம் வெளிக்காட்டும். எறும்பு தன் சக எறும்பிடம் உணர்ச்சிக் கொம்பு (Antenna) மூலமாகத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும். ஆனால், மனிதன் மட்டும் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, முதலில் சைகைகள் மற்றும் ஏற்ற இறக்கங்கள்கூடிய சத்தங்கள் மூலம் உரையாடினான். பிறகு, தன் வாழ்வியல் முறைகளைக் குகைகளில் படமாக வரைந்து வெளிக்காட்டினான். இறுதியாக ஒலிகளுக்கு ஒரு கட்டமைப்பு கொடுத்து அதை மொழியாக மாற்றினான். மொழிக்கு ஒரு வடிவம் கொடுத்து எழுத்தாக மாற்றினான். அதன் பின்னர், நடந்தது நாம் அறிந்ததே. அச்சு எந்திரம், தபால் எனத் தகவல்தொடர்பு ஊடகத்தை மேம்படுத்த ஆரம்பித்து, இன்றைக்கு அதன் அடுத்தகட்டத்துக்கே சென்றுவிட்டான். அப்படி மனிதன் கடந்துவந்த பாதையை இந்தக் கட்டுரையில் காண்போம்.

தபால்:
இது மன்னர் ஆட்சிக்காலத்திலிருந்தே இருப்பதுதான். ஆனால் நவீனமயமாகி, பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தத் தொடங்கியது 17-ம் நூற்றாண்டிலிருந்துதான். அக்காலத்தில் அரசாங்க மற்றும் ராணுவக் கோப்புகளைப் பரிமாறிக்கொள்ள மற்றும் முக்கிய செய்திகளை ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்தில் கொண்டுசேர்க்க ஒரு துறை தேவைப்பட்டது. அதற்காக உருவாக்கப்பட்டதுதான் Postal system. ஆனால், காலம் செல்லச் செல்ல சாதாரண மக்களும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். உலக அளவில் கிட்டத்தட்ட 400 வருடங்களைக் கடந்தும் செயலாற்றும், ஒரு தகவல் தொடர்புசேவை தபால் சேவை மட்டுமே. இந்தியாவில் 18-ம் நூற்றாண்டில் நவீன அஞ்சல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. பிற நாடுகளைப்போல் முதலில் இங்கும் அரசு அலுவல்களுக்கு மட்டுமே பயன்பட்டது. ஆனால், பின்னர் இந்தியாவின் தகவல் தொடர்பு மேம்பாட்டுக்காகப் பிரிட்டிஷ் அரசாங்கம் சில வருடங்களிலே மக்களும் பயன்படுத்தலாம் என அறிவித்தது. இன்று மக்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போய்விட்டது.
தந்தி:
தொழில்நுட்பத்தை அடிப்படை கட்டமைப்பாகப் பயன்படுத்தி வந்த முதல் தகவல்தொடர்பு சாதனம் என தந்தியைக் குறிப்பிடலாம்.19-ம் நூற்றாண்டில் சாமுவேல் மோர்ஸ் என்பவரால் கண்டறியப்பட்ட இது, மின்சாரத் தந்தி, கம்பித் தந்தி எனப் பல கட்டங்களாக மேம்பட்டுள்ளது. 1850-களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட தந்தி, கிட்டத்தட்ட 160 ஆண்டுகள் செயல்பட்டது. இறுதியாக 2013-ம் ஆண்டு தந்திச் சேவை இந்தியாவில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

தொலைபேசி:
தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தின் மைல்கல் என இதைக் கூறலாம். இதற்கு முன்பு பார்த்த தபால் மற்றும் தந்தி ஆகியவற்றில் செய்தி அனுப்புவரிடமிருந்து செய்தி நேரடியாக வந்தடையாது. இடையில் வேறொரு ஊடகம் இருப்பது அவசியமானது. இதைச் சரிசெய்ய பலர் முயன்றனர். கம்பியில்லா செய்தித்தொடர்புமுறை, மின்சார கட்டமைப்பைக் கொண்டு தகவல் பரிமாற முயற்சி செய்வது எனப் பல முயற்சிகள் செய்தும் தோல்வியே கிடைத்தது. இறுதியாக தொலைபேசிதான் அந்தக் குறையை சரிசெய்தது. உலகின் சிறந்த கண்டுபிடிப்புகளில் தொலைபேசிக்கென்று ஒரு தனியிடம் உண்டு. இன்று தொலைபேசி இல்லாத நபர்களே இல்லை என்றாகிவிட்டது. இதைக் கண்டுபிடித்து கிரகாம் பெல் என்றாலும் இதற்கு முன்வடிவம் கொடுத்தது அதனை மேம்படுத்தியது என ஆன்டோனியோ மெயிஸி, தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் இன்னும் சிலரைக் கூறலாம். மனித குலத்தின் தகவல் பரிமாற்றத்தின் மிக முக்கிய மைல்கல் தொலைபேசிதான்.
இமெயில்:
இதை வெறும் சாதாரண இணைய சேவை எனக் கடந்துவிட முடியாது. ஏனென்றால், இன்று உலகை ஆட்டிப் படைக்கும் சமூகவலைதளங்களுக்கு அச்சாரமிட்டதே இமெயில்தான். இணைய வசதி வருவதற்கு முன்னர் ஒரே இணைப்பில் உள்ள கணினிகளுக்கு செய்தி மற்றும் குறிப்புகள் அனுப்பவே இந்த மின்னஞ்சல் தொழில்நுட்பம் பயன்பட்டது. அதன் பிறகு இணையம் பரவலாக உபயோகிக்கத் தொடங்கிய பின்னர், இதை ஏன் இன்டர்நெட் உடன் இணைத்து செய்திகளை, எல்லை கடந்து அனுப்பக்கூடாது என யோசித்து அதைச் செயல்படுத்தினர். அனைத்து தகவல்தொடர்பு கண்டுபிடிப்புகளைப்போல் இதுவும் முதலில் ராணுவ அலுவல்களுக்குப் பயன்பட்டது. பின்னர், இணையம் பரவலாகவே உலகம் முழுக்க மக்களிடமும் சென்று சேர்ந்தது.

சமூக வலைதளங்கள்:
அறிமுகமே தேவைப்படாத அளவுக்கு இதன் வீச்சு இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. வெறும் எழுத்துகளாக மட்டுமே இருந்த தகவல் பரிமாற்றத்தைப் படங்கள், வீடியோ, எமோஜி என வண்ணமயமாக மாற்றியது இவையே. வெறுமனே சைகைகளில் பேசிக்கொண்டிருந்த மனிதனை இன்றைக்கு இத்தனை வடிவங்களில் பேசவைத்தது இவற்றின் வெற்றி. 30 வருடங்களுக்கு முன், ஃபேஸ்புக் போன்ற ஒரு சமூக வலைதளம் மொத்த உலகத்தையும் ஆட்டிப்படைக்கும் என்றால் யாருமே நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், இன்று நிலைமையே வேறு. அன்றாட வாழ்க்கையிலிருந்து, அரசியல் முடிவுகள் வரை இந்தச் சமூக வலைதளங்கள் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றன. தொழில்நுட்பத்தின் அசாதாரண பாய்ச்சலால் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. இன்னும் 5 ஆண்டுகளில் இவற்றின் வளர்ச்சி இன்னும் பன்மடங்கு அதிகரித்திருக்கும் என்பது மட்டும் உறுதி.