Published:Updated:

பறவைகள் மிமிக்ரி செய்து கேட்டிருக்கிறீர்களா? இதோ... இந்தச் சோலை பாடி செய்யும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பறவைகள் மிமிக்ரி செய்து கேட்டிருக்கிறீர்களா? இதோ... இந்தச் சோலை பாடி செய்யும்!
பறவைகள் மிமிக்ரி செய்து கேட்டிருக்கிறீர்களா? இதோ... இந்தச் சோலை பாடி செய்யும்!

சோலை பாடியின் இந்தக் குணத்தைத் தெரிந்துகொண்டபோது, காடு பற்றிப் பெரும்பாலும் கற்றுவிட்டோமென்ற கர்வம் உடைந்தது. அது நமக்காகப் புதிய புதிய அனுபவங்களைக் கொடுக்கக் காத்திருக்கும். ஒவ்வொரு முறையும் புதிய செய்திகளைக் கற்றுக்கொடுக்கும். 

பெரும்பாலும் நாம் காடுகளுக்குள் செல்லும்போதும் காட்டு வழியாகப் பயணிக்கும்போதும் நம் கண்கள் காணத்துடிப்பது விலங்குகளைத்தான். அதிலும் யானை, புலி, சிறுத்தை, காட்டு மாடு போன்ற உயிரினங்களுக்குத்தான் முன்னுரிமை. அவை மட்டுமே காடு இல்லை என்பதை நம் மனம் ஆரம்பத்திலேயே சிந்திப்பதில்லை. அதற்குக் காரணம் நாம் அப்படிப் பழக்கப்பட்டுவிட்டோம். நமக்குக் காட்டப்படும் காணொலிகளும் எழுதப்படும் எழுத்துகளும் பெரும்பாலும் புலி, யானை, காட்டுமாடு போன்றவற்றை வைத்தே என்பதால் நம் மனமும் காடுகளுக்குச் சென்றால் அவற்றையே தேடுகின்றன. இது மனித இயல்பு. அந்த இயல்புச் சிறையிலிருந்து விடுபட்டுப் பறவைகளையும் சிற்றுயிர்களையும் பார்க்கத் தொடங்கும்போதுதான் காடு எத்தனை விசாலமானது என்பதைப் புரிந்துகொள்வோம். காடு எத்தனை விதமான உயிரினங்களின் உலகம் என்பதை அந்தச் சிறையிலிருந்து விடுதலையடைந்த பிறகே நம் மனமும் அறிவும் ரசிக்கத் தொடங்கும். அந்த ரசனை பல தேடுதல்களுக்கு வித்திடும். அந்தத் தேடுதல் நமக்குப் பல புதிய கற்பிதங்களை வழங்கும். சமீபத்தில் மலையேற்றம் சென்ற சின்னார் காடும் அப்படிக் கற்றுக் கொடுப்பதில் சற்றும் சளைக்கவில்லை.

காடு. எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் இல்லாத சுதந்திரமான சொர்க்கம். ஒவ்வொரு பயணத்தின்போதும் புதிய புதிய விஷயங்களைக் கற்றுத் தரும் பள்ளிக்கூடம். விருந்தாளிகளுக்கு வஞ்சகமின்றிக் கச்சேரி செய்யும் பல்வேறு பறவையினங்களின் இசைமேடை. சமுதாயத்தில் சமத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் குரங்குக் கூட்டத்தின் பிரசார மேடை. தன் கால்தடங்களால் பல நீர்வழித் தடங்களை உருவாக்கி நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் யானைகளின் இயற்கைக் கூடம். 

பறவைகள் மிமிக்ரி செய்து கேட்டிருக்கிறீர்களா? இதோ... இந்தச் சோலை பாடி செய்யும்!

படம்: ஏ. சண்முகானந்தம்

காடு. மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய கற்றுக்கொள்ள மறுத்த பல பாடங்களின் புகலிடம். அதிலும் மலைக் காடுகளுக்குச் சிறப்பு கொஞ்சம் அதிகம். அவை தரும் அனுபவங்களும் பாடங்களும்கூடக் கொஞ்சம் அதிகம். அப்படியான ஓர் அனுபவமாகத்தான் அமைந்திருந்தது இந்தமுறையும். 

மேற்குத்தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் அமைந்திருக்கும் சின்னார் வனவிலங்கு சரணாலயக் காடு. சிறுத்தை, புள்ளி மான், யானை, காட்டுமாடு, புலி, கடமான், குரங்கு, குல்லாய் குரங்கு, சாம்பல் மந்தி என்று 28 வகையான பாலூட்டிகளின் வாழ்விடம். 225 வகையான பறவையினங்கள், 52 வகையான ஊர்வனங்கள், 29 வகையான பாம்புகள், நட்சத்திர ஆமை, கேரளாவின் அதிகமான மக்கர் முதலைகளின் வாழ்விடம், 15 வகையான நீர்நில வாழ்விகள் என்று சிறப்பான காட்டுயிர் வளத்தைத் தன்னகத்தே வைத்துக்கொண்டு கர்வமின்றி அமைதியாக நிற்கின்றது. இந்தமுறை அங்கு சென்றிருந்தபோது ஒரு புதிய அனுபவம். இத்தனை உயிரினங்களையும் ஒரே முறையில் பார்த்துவிட முடியாது. இருப்பினும் விலங்குகளைவிடப் பறவைகளுக்கு அதிக முக்கியத்துவமளிக்க முடிவுசெய்தேன். அதிலும் புதிய அனுபவமாகப் பறவைகளைப் பார்ப்பதைவிடக் கேட்டுத் தெரிந்துகொள்ள முயன்றேன். அவற்றின் குரலொலிகளை வைத்தே இனம் காணக் கற்றுக்கொடுத்தனர் உடன்வந்திருந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த வழிகாட்டிகள் ராஜதுறை மற்றும் கோபால்.

பறவைகள் மிமிக்ரி செய்து கேட்டிருக்கிறீர்களா? இதோ... இந்தச் சோலை பாடி செய்யும்!

படம்: Vinslin Vincent

சின்னார் காடு தொடங்கும் சாலையிலிருந்து உள்ளே நுழையும்போதே காட்டு நீலக்குருவி (Asian Fairy Blue bird) அழகான இசையோடு வரவேற்றது. வந்துசேர்ந்த அன்றே நாங்கள் தங்கியிருந்த அறைக்கு அருகில் அதைக் கண்களால் பார்த்திருந்தேன். அடர்நீல உடம்போடு கருநீல இறகோடு இருக்கும் அதன் ஓசையை இப்போது கேட்டுக்கொண்டே தொடர்ந்து காடேறினோம். க்யூக்... க்யூக் என்று தன் இணையை அழைத்துக்கொண்டிருந்தது தெற்கத்தி மின்சிட்டு (Orange Minivet). நாங்கள் உள்ளே நுழைவதை மொத்தக் காட்டுக்கும் எடுத்துரைத்துக் கொண்டிருந்தான் வெண்கன்னக் குக்குறுவான் (White cheeked Barbet). கூடுகட்டிக் கொண்டிருந்த தையல் சிட்டு, க்றீச்சிட்டுக் கொண்டிருந்த செதில் வயிற்று மரங்கொத்தி (Grey headed woodpecker or Scaly bellied woodpecker) என்று உள்நுழைந்த சில நேரங்களிலேயே எத்தனை பறவைகள். நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் கண்களால் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், கண்களன்றி காதில் கேட்டு மனதில் பார்த்துப் புரிந்துகொள்வது வேறுவிதமான அனுபவமாக இருந்தது.

பறவைகள் மிமிக்ரி செய்து கேட்டிருக்கிறீர்களா? இதோ... இந்தச் சோலை பாடி செய்யும்!

வழிகாட்டிகள் ராஜதுறை மற்றும் கோபால்

படம்: ஏ.சண்முகானந்தம்

சோலை பாடியுடைய (White rumped Shama) பாடல்தான் எத்தனை சுவாரஸ்யமானது. ஓரிடத்தில் முதன்முறையாகக் கேட்டபோதே அவள்தான் என்பதைப் புரிந்துகொண்டேன். இரைதேடி வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த காட்டுப் பாம்புண்ணிக் கழுகுடைய (Serpent Eagle) ஓசை கேட்டது. ஆனால், மரங்களுக்கு நடுவே மலையேறிக் கொண்டிருந்ததால் அதைப் பார்க்க முடியவில்லை. இதுவரை ஒரே முறைதான் அதைக் கண்களால் பார்த்துள்ளேன். ஏமாற்றமாகத்தான் இருந்தது. தொடர்ந்து சென்றுகொண்டிருந்தோம். பாதையின் நடுவே சிறுத்தையின் கால்தடங்களைப் பார்த்தோம். உடன்வந்திருந்த சிலருக்குச் சிறுத்தை இங்கிருக்கிறதோ என்ற பீதி தொற்றத் தொடங்கிவிட்டது. 

வழிகாட்டி கோபால் அந்த பயத்தைத் தெளியவைத்தார். கால்தடம் அவ்வளவு தெளிவாக இல்லாததால், அது சென்று ஒருநாள் ஆகியிருக்கலாமென்று விளக்கிக் கூறினார். தொடர்ந்து ஏற ஏற முள்ளம்பன்றிகளின் எச்சங்களைக் காணமுடிந்தது. கடைசியாக ராஜஸ்தான் சென்றிருந்த சமயம் ஆரவல்லி மலைத்தொடரின் ஒருபகுதியான ஆல்வாரில் பார்த்தது. எங்கேனும் கண்ணில் படுகிறதா என்று தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து செல்கையில் மீண்டும் ஒரு புதுவிதமான பறவையின் குரலொலி. ராஜதுறை பின்னால் வந்துகொண்டிருந்தார், கோபால் முன்னால் சென்றுகொண்டிருந்தார். இருவரில் யாராவது ஒருவரின் அருகே சென்று கேட்டாக வேண்டும். 

பறவைகள் மிமிக்ரி செய்து கேட்டிருக்கிறீர்களா? இதோ... இந்தச் சோலை பாடி செய்யும்!

இந்தக் குரல் புதுமையாக இருந்தது. இதுவரை கேட்டதே இல்லை. தொடக்கத்தில் க்யூ என்பதை இழுத்துக் கூறி இறுதியில் அதையே குறுக்கியது. க்யூயூயூ... க்யூயூயூ... க்யூ என்பது போலிருந்த அந்த ஒலியைப் பற்றிப் பின்னால் வந்துகொண்டிருந்த ராஜதுறையிடம் கேட்கவேண்டும். நின்று அனைவரும் கடக்கும்வரை காத்திருந்தேன். அவர் வருவதற்குள் மீண்டும் ஒரு பறவையின் ஒலி. இந்த முறையும் புதிதாகவே இருந்தது. ஆனால் முன்னர் கேட்ட ஒலி வந்த அதே திசையிலிருந்து. இரண்டு புதிய பறவைகளின் ஒலியைத் தெரிந்துகொள்ளப் போகிறேனென்ற ஆர்வத்தில் காத்திருந்தேன். வந்தவரிடம் இரண்டையும் பற்றிக் கேட்டேன். அவர்களும் கேட்டிருந்தார்கள். ராஜதுறையுடன் வந்துசேர்ந்த பேராசிரியர் பாபு அதைப் பற்றி விளக்கினார். அது ஆங்கிலத்தில் ஷாமா என்றழைக்கப்படும் சோலை பாடிதான். சோலை பாடியா!

சோலை பாடியின் குரலை மலையேற்றத்தின் தொடக்கத்திலேயே கேட்டிருந்ததால் அது இல்லையென்று மறுத்துக் கூறினேன். ``ஆம், அது சோலை பாடிதான். அவை பல குரல்களில் விகடம் செய்யும். சில சமயங்களில் மற்ற பறவைகளைப் போலவும்கூடக் குரல் எழுப்பும்" என்று விளக்கினார் பேராசிரியர் பாபு. சோலை பாடி பல்வேறு குரல்களில் விகடம் செய்யுமென்றும் அந்தக் குரல்களில் ஒருசிலவே முன்னர் கேட்ட இரண்டு ஒலிகளும் என்பதும் புரிந்தது. காடு பற்றிப் பெரும்பாலும் கற்றுவிட்டோமென்ற கர்வம் உடைந்தது. அது நமக்காகப் புதிய புதிய அனுபவங்களைக் கொடுக்கக் காத்திருக்கும். ஒவ்வொரு முறையும் புதிய செய்திகளைக் கற்றுக்கொடுக்கும். 

பறவைகள் மிமிக்ரி செய்து கேட்டிருக்கிறீர்களா? இதோ... இந்தச் சோலை பாடி செய்யும்!

அந்தக் கற்பிதம் நம் பார்வையை விசாலமாக்கும். ஆனால், காடேறுதல் எப்போதும் சுவாரஸ்யமாக மட்டுமே இருந்ததில்லை. அதில் ஆபத்துகளும் அதிகம். காடேறும்போது மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். கவனச் சிதறல் காடுகளில் ஆபத்துக்கு மட்டுமே வழிவகுக்கும். அப்படியோர் ஆபத்துதான் நாங்கள் ஜல்லிப்பாறையை அடைந்தபோது எதிர்நோக்கியிருந்தது. ஜல்லிப்பாறையின் இரண்டு பக்கமும் பள்ளம், மற்றொரு பக்கம் மலை மேற்கொண்டு மேலே செல்கிறது. நாங்கள் வந்த வழியில் யானையின் வாசம் வீசுகிறது. காட்டு யானை அருகில் வந்துகொண்டிருக்கிறது. மனித வாசம் தெரிந்திருந்தால் யானை இந்தப் பக்கமாக வந்திருக்காது. அப்படியென்றால் காற்று எங்களுக்கு ஆதரவாக இல்லையோ என்ற அச்சம் மேலோங்கியது. யானை வந்துவிட்டால் இரண்டு பக்கமும் ஆழமான சரிவு, இன்னொரு புறம் ஏற்றம். ஏற்றத்தில் மனிதர்கள் ஏறுவதைவிடப் பல மடங்கு வேகமாகக் காட்டு யானைகள் ஏறிவிடும். ஒருபக்கம் யானையைக் காட்டில் அதன் இயல்பிலேயே பார்த்துவிட வேண்டுமென்ற ஆவல். மறுபக்கம் யானையிடம் சிக்கிவிட்டால் என்ன ஆகப் போகிறோமோ என்ற அச்சம். ஆவலுக்கும் அச்சத்துக்கும் நடுவே நின்று மனம் ஊசலாடிக் கொண்டிருந்தது. வழிகாட்டி கோபால் யானையின் வாசத்தை வைத்துத் திசையையும் தூரத்தையும் கணக்கிடச் சிறிதுதூரம் காட்டுக்குள் சென்று மறைந்தார்.

- அந்த யானை என்ன ஆனது? மேலே பார்த்த பாம்புண்ணிக் கழுகு பயணத்தில் எப்போது வந்தது? பாறை மற்றும் பறக்கும் பல்லிகளை பார்த்த அனுபவம் போன்றவை நாளை அடுத்த பகுதியில்...

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு