Published:Updated:

ஈகோ உண்டு எனக்கு!

பானு பளிச்

ஈகோ உண்டு எனக்கு!

பானு பளிச்

Published:Updated:
##~##

ழு வருடங்களுக்கு முன்பு... ஒரு பகல் வேளை... வடபழனி சாரதா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி... பாவாடை சட்டையில் நாலைந்து மாணவிகள், அந்த வயதுக்கே உரிய குறும்புத்தனத்தோடு அரட்டைக் கச்சேரியில் இருந்தனர்.

 சூழ்நிலையின் சுகத்தைக் கெடுத்தாற்போல், இரைச்சலோடு ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய ஒரு பெண்மணி ''பானு...'' என்று சத்தமாகக் குரல் கொடுக்க, ஒரு சின்னப் பெண் திரும்பிப் பார்க்கிறாள். அடுத்த கணமே 'ஹை... அம்மா!'' என்று கன்றுக்குட்டியாகத் துள்ளி ஓடுகிறாள். சில நிமிடங்களில் திரும்பி வரும் பானு, தன் புத்தகப் பையை எடுத்துக்கொண்டு நிமிருகிறாள். முகத்தில் பெருமிதக் களை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தோழிகளிடம் ''டைரக்டர் பாக்யராஜ்என்னை சினிமாவிலே நடிக்கவைக்கப்போறாராம். அதுக்காக ஸ்டில்ஸ் எடுத்துப் பார்க்க என்னைக் கூப்பிட்டு இருக்கார்'' என்று குஷியோடு புறப்பட்டுச் செல்கிறாள்.

அன்றைய தேதி வரை பானு எந்த சினிமா ஷூட்டிங்கையும் நேரில் பார்த்தது கிடையாது. அவளுடைய உலகமே பள்ளிக்கூடமும் டான்ஸ் வகுப்புகளும்தான்.

மறு நாள் தோழிகளிடம் தான் கேமராவுக்கு முன் நின்று வசனம் பேசியதை உற்சாகமாகச் சொன்னாள் பானு.

ஈகோ உண்டு எனக்கு!

''பானு, நீ சினிமாவில் நடிச்சீன்னா, ஆம்பளைங்கள்லாம் உன்னைத் தொட்டுக் கட்டிப்புடிச்செல்லாம் நடிப்பாங்களே...'' என்று ஒரு தோழி வெறுப்பேற்ற... உற்சாகமாக இருந்த பானுவின் முகம் மாறுகிறது. ''அப்படி ஆம்பளைங்களைத் தொட்டு நடிக்கணும்னு சொன்னா, எனக்கு சினிமாவே வேண்டாம். எனக்கு டான்ஸ்தான் முக்கியம்...'' என்று உறுதியாகச் சொல்லிவிட்டு வந்த பானு, இன்று பல மொழிகளில் நம்பர் ஒன் ஹீரோயின் - பானுப்ரியா!

''அப்படிச் சொன்ன நானா இப்படி மாறி இருக்கேன்னு நினைச்சா, ஆச்சர்யமா இருக்கு. நிஜமாவே, சினிமால நடிப்பேன்னு நான் நினைச்சதே இல்லே. சினிமால நடிச்சா நிறையப் பணம் கிடைக்கும், வசதியா வாழலாம்னு நான் நினைக்கல. ஏன்னா, இப்ப இருக்கிற அளவுக்கு வசதி இல்லாட்டாலும், ஒரு அப்பர் மிடில் கிளாஸ் லெவல்ல அன்னிக்கே எங்க குடும்பம் இருந்தது. நான் நடிகையா மாறினதுக்கு முக்கியக் காரணமா நினைக்கறது சூழ்நிலை. வீட்லயும் சரி... சினிமாலயும் சரி... கிடைக்கிற புகழ், அந்தஸ்து இதைப் பத்தி எல்லாம் பேசின பேச்சுகள், சினிமா மேல எனக்கு ஒருவிதமான பிரேமையை உண்டுபண்ணிருச்சு'' என்றார் பானுப்ரியா. நல்ல உயரம். கழுத்துக்குக் கீழே தலைமுடி வெட்டப்பட்டு 'பாப்’ செய்யப்பட்டு இருந்தது. 'ஸ்லிம்’மாக - எளிமையாக - பார்க்கத் தூண்டும் அழகாகத் தெரிந்தார். முக்கியமாக அந்தக் கண்கள்...

''சினிமாவுல இன்ட்ரெஸ்ட் இல்லாம இருந்த நான், இன்னிக்கு ஒரு நடிகையானதுக்கு மூல காரணம் பிரவீணா அக்காதான். அவங்கதான், என் டான்ஸ் புரொகிராமைப் பார்த்துட்டு, அவங்க கணவர் - டைரக்டர் பாக்யராஜ் சார்கிட்ட என்னைப்பற்றி சொன்னாங்க. அவரோட 'தூறல் நின்னுபோச்சு’ படம் மூலமா நான் அறிமுகமாக இருந்தது. அப்போ எனக்கு வயசு பதினைஞ்சுதான். ரொம்ப ஒல்லியா இருப்பேன். அதனால பாக்யராஜ் சார், 'பொண்ணு ரொம்பச் சின்னவளா இருக்கா... அப்புறமாப் பார்க்கலாம்’னு சொல்லிட்டாரு. இந்த விஷயத்தை யார் மூலமோ கேள்விப்பட்டு, டைரக்டர்கள் பாரதிவாசு என்னை வந்து பார்த்தார்கள். அவர்களுக்கு என்னை ரொம்பப் புடிச்சுப்போச்சு. 'மெல்லப் பேசுங்கள்’ படத்துல, அதுவும் தமிழ்லதான் முதன்முதல்ல அறிமுகமானேன். அந்தப் படம் எதிர்பார்த்த அளவு சரியாப் போகலை!

ஈகோ உண்டு எனக்கு!

மிழ்ல சரியான பிரேக் கிடைக்காதபோது, தெலுங்குல டைரக்டர் வம்சி மூலம் 'சித்தாரா’ங்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. பரதநாட்டியம் ஆடற கேரக்டர். ரொம்ப ஈடுபாட்டோடு பண்ணினேன். சொல்லப்போனா, அந்தப் படத்துல நடிக்கும்போதுதான் நடிப்புன்னா என்னங்கிறதை முழுக்கப் புரிஞ்சுக்கிட்டேன். அந்தப் படம் மூலமா நிறைய அவார்ட்ஸ் கிடைச்சது!''

பேச்சு 'விசுவாமித்திரர்’ டி.வி. தொடரில் பானுப்ரியா நடித்ததுபற்றித் திரும்பியது. ''நான் மேனகையா நடிக்கிறதுக்கு முன்னால விசுவாமித்திரர் கதையே எனக்கு முழுசாத் தெரியாது. அந்த ரிஷியோட தவத்தை மேனகா டான்ஸ் ஆடிக் கலைச்சிடறாங்கனு மட்டும் தெரியும். முதல்ல என்.டி.ஆர். சாரோட 'விசுவாமித்திரர்’ படத்துலயே மேனகையா நடிக்கிறதுக்கு, ஸ்ரீதேவி, ராதா - என் பேர் எல்லாம் அடிபட்டுச்சு. கடைசியில லிஸ்ட்லயே இல்லாத மீனாட்சி சேஷாத்ரிக்கு அந்த கேரக்டர் கிடைச்சது. இந்த டி.வி. தொடர்ல மேனகா கேரக்டர்ல நடிச்சதே ரொம்ப சர்ப்ரைஸிங்கான விஷயம். டைரக்டர் தாசரி சார் ஒரு நாள் என்கிட்ட வந்து, 'டி.வி. தொடர்ல மேனகாவா நடிக்கிறியா? அடுத்த வாரம் ஷூட்டிங் இருக்கும்’னார். 'என்ன சார், அடுத்த வாரம் எப்படி முடியும்? என்கிட்ட டேட்ஸ் இல்லையே’ன்னேன். அவரு, 'உனக்கு நடிக்க இஷ்டமானு மட்டும் சொல்லு. என்னோட படத்துக்கு நீ கொடுத்திருக்கிற தேதிகளையே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்’னு சொன்னார். 'சரி’னு ஒப்புக்கிட்டேன்'' என்றவரை இடைமறித்தோம்.

''மேனகா ரோலில் நீங்கள் ரொம்ப செக்ஸியா நடித்ததாகச் சொல்கிறார்களே?''

''விசுவாமித்திரர் கதை புராண காலத்துக் கதை. அந்தக் காலத்துப் பெண்கள் ஜாக்கெட் எல்லாம் போடாமத்தான் இருப்பாங்க. அந்த மாதிரி கேரக்டர்களைப் பண்ணும்போது, அதுக்குரிய டிரெஸ்களைத்தான் போடணும். லாங் ஷாட்லதான் டான்ஸ் மூவ்மென்ட்ஸ் இருந்தது. டைரக்டர் என்னோட கண்கள், முகம் இதைத்தான் அதிகமா குளோஸ்-அப்ல எக்ஸ்பிரஷன் கொடுக்கச் சொல்லிக் காண்பிச்சாரே தவிர, கட்டிப்பிடிக்கறதுகூட அதிகமாக் காட்டலையே... அப்புறம் எப்படி நான் தாராளமா நடிச்சிருக்கேன்னு சொல்றாங்க?

ஆனா, இந்த டி.வி. சீரியல்ல எனக்கு ரொம்ப நல்ல பேரு. என் படம் ஒண்ணுகூடப் பார்க்காதவங்ககூட, போன் பண்ணி 'நல்லா நடிச்சிருக்கீங்க’னு சொன்னாங்க. அதுலயும் தன் மனைவியோடு வந்திருந்த ஒருத்தர் என்னை ஷூட்டிங்ல சந்திச்சு, 'விசுவாமித்திரர் தபஸ் பண்ற இடத்துக்கு நீங்க வந்து, உங்களை ஜெயிக்காமல் விட மாட்டேன்’னு சொல்லி, அவரை ஒரு மாதிரி செக்ஸியாப் பார்த்துட்டுப் போவீங்களே... அந்தப் பார்வை இருக்கே... ஐயோ, அன்னிக்குத் தூக்கமே போயிடுச்சுங்க’னு பக்கத்துல அவரோட மனைவியை வெச்சுக்கிட்டே சொல்லி, தர்மசங்கடத்தில் என்னை மாட்டிவிட்டதை மறக்கவே முடியாது!''

''தோற்றத்திலும் நடிப்பு, டான்ஸ் எல்லாவற்றிலும் நீங்கள் நடிகை ஸ்ரீதேவியை அப்படியே இமிடேட் செய்வதாகச் சொல்கிறார்களே?''

''ப்ளீஸ்... இந்த மாதிரி கேள்வி கேட்காதீங்க. 'சின்ன வயசுல இருந்தே நான் எதுலயும் முதலாவதா வரணும், எதுலயும் தனித்தன்மையோடு இருக்கணும்கிறதை லட்சியமாகக்கொண்டவ. வகுப்பில் மத்த மாணவிகளைவிட நான் உயரமா இருந்த காரணத்தால், டீச்சர் என்னைக் கடைசி பெஞ்ச்சுல உட்காரச் சொன்னதுக்கே அழுது, அப்செட் ஆனவ நான். அவ்வளவு ஈகோ உண்டு எனக்கு! அப்படிப்பட்டவ, மத்தவங்களைப் போய் இமிடேட் பண்ணி இரண்டாவதா வர விரும்புவேனா?''

''யாரையாவது நீங்கள் காதலித்திருக்கிறீர்களா... அட்லீஸ்ட் காதலிக்கலாம் என்று மனசுக்குள்ளாவது நினைத்திருக்கிறீர்களா?''

''ரொம்ப ஃபிராங்க்கா சொல்லணும்னா, யாரையும் காதலிக்கணும்னு தோணலை. ஒரு சிலரை அவங்களோட பெர்சனாலிட்டி, பழகற முறைவெச்சு அவங்க மேல ஒரு விதமான அட்ராக்ஷன் ஏற்பட்டுச்சு. ஆனா, அது காதல் லெவலுக்குப் போகலை'' என்ற பானுப்ரியா, எதையோ நினைத்துச் சிரித்தவராகத் தொடர்ந்தார்.

''எனக்குள் சின்னச் சின்ன லட்சியங்கள் உண்டு. ஆசைகள் கிடையாது. ஏனென்றால், இதுவரைக்கும் நான் நினைத்த ஆசைகள் ஒன்றுகூட நிறைவேறவில்லை. நான் நினைக்காததும் விரும்பாததும்தான் சுலபமாக நடக் குது. ஆனா, ஒரு விஷயத்துல மட்டும் தீர்மானமா இருக்கேன். சினிமாவில் இருந்து நான் ஓய்வுபெற்றதும் இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ பரபரப்பில்லாத, இயற்கையான சூழ்நிலையில் ஒரு டான்ஸ் ஸ்கூல் - கம் - ஆசிரமம்வெச்சு நடத்தணும். காரணம், எனக்கு எல்லாத்தையும்விட டான்ஸ்தான் ரொம்பப் பிடிக்கும்!''

- ந.சண்முகம்
வண்ணப் படம்: ஏ.ரவீந்திரன்