Election bannerElection banner
Published:Updated:

"பலே பரமேஸ்வரனின் தருமபுரி தைரியம்!"

"பலே பரமேஸ்வரனின் தருமபுரி தைரியம்!"

ருமபுரி மாவட்டம் அரக்காசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுவனை ஊரே கொண்டாடுகிறது. ஆற்றில் குளிக்கச் சென்ற ஐந்து சிறுமிகள் நீரில் மூழ்கி தத்தளிக்க... தனக்கு நீச்சல் தெரியாது என்பதையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து மூன்று சிறுமிகளை உயிரோடு கரைசேர்த்திருக்கிறான் அவன்.    

"பலே பரமேஸ்வரனின் தருமபுரி தைரியம்!"
##~##

கூலித் தொழிலாளிகளான கோவிந்தன் - லட்சுமி தம்பதியினருக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். அதில் நான்காவதாகப் பிறந்த பரமேஸ்வரன்தான் சாவின் விளிம்புக்குச் சென்ற மூன்று சிறுமிகளை உயிருடன் மீட்ட சிறுவன். இதற்காக, 2012-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் வழங்கப்படும் வீரதீர செயலுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு,  பத்து தினங்களுக்கு முன்னதாகவே டெல்லிக்கு அழைக்கப்பட்டான். அவனை ஊர் மக்கள் ஒன்றுகூடி உச்சிமுகர்ந்து வழியனுப்பி வைத்திருக்கிறார்கள்.

விருது பெற காரணமான சம்பவம் பற்றி ஃப்ளாஷ் பேக்...

தருமபுரியின் நாகாவதி அணையின் ஆற்றுப்படுகைப் பகுதியில் 2010-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி உமா, பூஜா, சரண்யா, ஆர்த்தி, புவனேஸ்வரி என்ற ஐந்து சிறுமிகள் குளிக்கச் சென்றார்கள். அப்போது ஆற்றில் இருந்த ஆழமான பள்ளத்தில் ஐந்து சிறுமிகளும் சிக்கித் தவிக்க... கரை ஓரம் துணி துவைத்துக்கொண்டு இருந்த பரமேஸ்வரன் ஆற்றில் குதித்து, அந்த மூவரையும்  காப்பாற்றினான்.

"பலே பரமேஸ்வரனின் தருமபுரி தைரியம்!"
"பலே பரமேஸ்வரனின் தருமபுரி தைரியம்!"

டெல்லி சென்று இருக்கும் பரமேஸ்வரனிடம் தொலைபேசியில் பேசினோம். ''நான் ஏலகிரி கவர்மென்ட் ஸ்கூல்ல ஒன்பதாவது படிக்கிறேன். அன்னைக்கு நான் துணி துவைச்சிக்கிட்டு இருந்தேன். கொஞ்சதூரம் தள்ளி பொண்ணுங்க எல்லாம் குளிச்சுக்கிட்டு இருந்தாங்க. திடீர்னு கரையில துணி துவைச்ச ஒரு பாட்டிம்மா சத்தம் போட்டாங்க. ஓடிப் போய் பார்த்தப்போ... பொண்ணுங்க அஞ்சு பேரும் தண்ணீல மூழ்கித் தத்தளிச்சாங்க. எனக்கு நீச்சல் தெரியாதுதான். ஆனா, என் மனசுல  எப்படி ஒரு வேகம் வந்துச்சுன்னு தெரியலை. உடனே ஆத்துல குதிச்சு ஒவ்வொருத்தரா கரைக்கு இழுத்துட்டு வந்தேன். மூணு பேரை இழுத்துப் போட்டுட்டுப் பார்த்தப்போ ரெண்டு பேர் ஆழத்துக்குப் போயிட்டாங்க. அதுக்கு மேல என் கை ஓய்ஞ்சு போனதால, அழுதபடியே நின்னுட்டேன்.

பெரியவங்க ஓடியாந்து குதிச்சு தேடினப்போ அவங்க ரெண்டு பேரும் இறந்து போயிருந்தாங்க. மூணு பேரைக் காப்பாத்தினதுக்கு எனக்கு விருது அறிவிச்சிருப்பது சந்தோஷமா இருக்கு. அதேநேரம் மத்த ரெண்டு பேரைக் காப்பாத்த முடியாமப் போன வருத்தம் இன்னும் இருக்குங்ணா'' என்றவன்,  இடைவெளிவிட்டு தொடர்ந்தான்.  

''என் அப்பா கூலி வேலைக்குப் போறதால வீட்டில் பெருசா வசதி இல்லை. எங்க உறவுக்காரர் சிவக்குமாரும், ஆசிரியர்கள் சிலரும் கொடுத்த பணத்தில்தான் இப்போ டெல்லிக்கே வர முடிஞ்சுது. மத்த மாநிலத்தில இருந்து வந்த மாணவர்களுக்கு மாநில அரசு சார்பாவும் அவங்க படிக்கும் ஸ்கூல் சார்பாவும் பண உதவி செஞ்சிருக்காங்க. எனக்கு அப்படி எதுவும் கிடைக்கலை. இப்போகூட கையில் இருக்கும் காசெல்லாம் கரைஞ்சு சிரமப்பட்டுக்கிட்டு இருக்கோம். ஊருக்குத் திரும்ப கையில் காசு இருக்குமான்னே தெரியலை..'' என்றான் கரகரத்த குரலில்.

"பலே பரமேஸ்வரனின் தருமபுரி தைரியம்!"

சிறுவனின் சூழலை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி எம்.எல்.ஏ-வும் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். விஷயத்தைக் கேட்டுப் பதறிப்போனவர், உடனடியாகச் சிறுவனுடன் பாதுகாப்புக்குச் சென்றிருப்பவரின் வங்கிக் கணக்கில் 10 ஆயிரம் ரூபாயைச் செலுத்தினார். ''பணம் இல்லை என்ற கவலையை ஒதுக்கிவைத்துவிட்டு குடியரசு தின விழாவில் பரமேஸ்வரன் அந்த விருதைப் பெற்று வர 'என் விகடன்’ மூலமாகவே வாழ்த்துகிறேன். சரியான நேரத்தில் சிறுவனின் இக்கட்டான சூழலை எனக்கு விகடன் தெரியப்படுத்தியதால்தான் என்னால் இந்த உதவியைச் செய்ய முடிந்தது. சிறுவனுக்கு வேறு வகையில் உதவி செய்யும் வாய்ப்பு பற்றி மாவட்ட அதிகாரிகளிடமும் பேசுகிறேன். முதல்வரின் கவனத்துக்கும் இந்த விஷயத்தைத் தெரியப்படுத்தி உதவி பெற்றுத் தர முயற்சி செய்கிறேன்'' என்றார் அக்கறையுடன் நம்மிடம்.  

அரக்காசனஹள்ளி கிராம மக்களிடம் பேசினோம். ''பரமேஸை எங்க குலதெய்வமாத்தான் பார்க்குறோம். அவன் அப்பாவுக்கு வருமானம் குறைவு என்பதால், சின்னச் சின்ன செலவுகளுக்கே திண்டாடுறாங்க. அவங்க குடும்பத்துக்கு அரசாங்கம் ஏதாவது உதவி செஞ்சா... பரமேஸ் படிச்சு பெரிய ஆளா வருவான்'' என்கிறார்கள் ஒருமித்த குரலில்.

- எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு